சென்னை ‘ஆக்ஸி கிரீன் நர்சரி’ உரிமையாளரான உமா ஆனந், செடிகள் மீதான ஆர்வத்தில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு நர்சரி தொழிலுக்கு வந்தவர். இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்.
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கறிகளும் உணவுப்பொருள்களும் ரசாயன உரங்கள் பயன்படுத்தியே விளைவிக்கப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு பலதரப்பட்ட மக்களுக்கும் ஓரளவுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, பலரும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து முடிந்த அளவில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ள விரும்புகின்றனர். இடவசதி இல்லாதோர், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பால்கனியில் சில தொட்டிகளில் அவுட்டோர் செடிகளையும், வீட்டுக்குள் இண்டோர் செடிகளையும் வளர்க்கின்றனர். திருமணங்களில் மரக்கன்றுகள், விதைகளை ரிட்டர்ன் கிஃப்டாகக் கொடுப்பது அதிகரித்துவிட்டதால், நர்சரி தொழில் செய்வோருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
எந்த இடம் சரியானது?
கிராமத்தில் இருப்பவர்களுக்கு இடவசதி அதிகமிருக்கும். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தங்களின் வீடுகளிலேயே சில செடிகளையாவது வளர்ப்பார்கள். எனவே, அங்கு நமக்கான விற்பனை குறைவாக இருக்கும். ஆனால், சுற்றுவட்டாரத்திலுள்ள நகரப் பகுதியினரை இலக்காகக்கொண்டு வீட்டிலேயே குறைந்த இடத்திலும் செலவிலும் நர்சரி அமைக்கலாம்.
அதேபோல, நகரப் பகுதியினருக்கு இடவசதி குறைவாக இருந்தாலும் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும். குறைந்த இடத்தில் செடிகள் வளர்க்கும் அனுபவம் பெற்றால் சிறப்பான லாபம் ஈட்டலாம். அதிகம் வெயில் படாத, அதேநேரம் வெளிச்சம் நன்றாக இருக்கும் பகுதிகளில் நர்சரி அமைக்கலாம். மொட்டைமாடி அல்லது நிழல் இல்லாத பகுதியில் நர்சரி அமைப்போர் நிழல் வலை அமைத்துச் செடிகளை வளர்க்கலாம்.
எங்கு வாங்கலாம்?
தேவையான செடிகள், நாற்றுகள், விதைகளை விவசாயிகள், அருகிலுள்ள நர்சரிகளில் வாங்கலாம். சில செடிகளைச் சோதனை முறையில் சில மாதங்கள் வளர்க்கலாம். நம் பகுதியில் நன்றாக வளரும் செடிகள் எவை என்பதைக் கணித்து அவற்றை மட்டும் அதிக அளவில் வளர்க்கலாம். செடிகள் பற்றிய அடிப்படையான விஷயங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு மாதிரியான வளர்ச்சித் தன்மையைக் கொண்டது. செடியின் இலைகளைப் பார்த்தே அதன் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணிக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
நாள்கள் கூட மதிப்பு உயரும்!
விதைகள், நாற்றுகள், சில வாரம், சில மாதம் வரை வளர்ந்த செடிகள் என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். செடிகளைப் பொறுத்தவரை அவை வளர வளரத்தான் மதிப்பும் கூடும். அவை விற்பனையாகவில்லையே எனக் கவலைப் பட வேண்டியதில்லை. மல்லிகை உள்ளிட்ட சில செடிகளைப் பதியம் வைத்து குறைந்த செலவில் அதிகமான செடிகளை உருவாக்கலாம்.
முதலீடு: 100 சதுர அடியில் பாலித்தீன் கவர், மண் தொட்டியில் சில செடிகளை வளர்த்து, சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்து கொண்டு நம்பிக்கை கிடைத்த பிறகு, அதையே விற்பனை வாய்ப்பாக மாற்றலாம். தொடக்கத்தில் 5,000 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.
பயிற்சி: அருகிலுள்ள நர்சரிகள், விவசாயிகள், செடி வளர்ப்பில் அனுபவம் கொண்டோர், வேளாண் பல்கலைக்கழகங்களிலும் பயிற்சி பெறலாம்.
விற்பனை வாய்ப்பு: சுற்றுவட்டாரத்தில் வசிப்போர், நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம். வாட்ஸ்அப் குழுக்களில் செடிகளின் படங்களைப் பகிரலாம். பூ, காய்கறி, மூலிகை, வாஸ்து, அழகு செடிகள், காற்றைச் சுத்தப்படுத்தும் செடிகள் எனப் பலதரப்பட்ட செடிகளையும் விற்பனை செய்தால் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் ஈர்க்கலாம். செடி வளர்ப்பில் முறையான அனுபவம் கொண்டோர், அதைச் செடி வளர்ப் போருக்குக் கற்றுக்கொடுப்பதும் சிறந்த பிசினஸ்தான். பலரின் வீடுகளுக்கும் சென்று செடி வளர்ப்புக்கான ஆலோசனைகள் வழங்கி நிலையான வருமானம் ஈட்டுவோரும் உண்டு.
நோட் பண்ணுங்க!
அதிக உப்புத் தன்மை கொண்ட நீர், நர்சரி பயன்பாட்டுக்கு பலன் கொடுக்காது. கிணற்றுத் தண்ணீர் சிறந்தது. உப்புத் தன்மை அதிகம் இல்லாத நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாம். செடி வளர்ப்புக்கு களிமண் பயன்படுத்தக் கூடாது. சிமென்ட், மெட்டல், பிளாஸ்டிக் தொட்டிகளைத் தவிர்த்து மண் தொட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தொட்டியோ, பாலித்தீன் கவரோ... தண்ணீர் வெளியேறும் வகையில் அவற்றில் துளைகள் இருக்க வேண்டும். தண்ணீரில் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலை எல்லாச் செடிகள் மீதும் வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்துவிட்டால், பூச்சித் தொந்தரவுகள் ஏற்படாது. மழைக்காலம், கோடைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் செடி களைப் பராமரிக்க வேண்டும்.
* அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார அளவிலான தோட்டக் கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோரில் ஒருவரை அணுகி, நர்சரி தொழிலுக்கான ஆலோசனைகள் பெறலாம் அல்லது அருகில் உள்ள நர்சரிக்குச் சென்றும் ஆலோசனைகள் பெறலாம்.
0 comments:
Post a Comment