வழக்கத்தைவிடவும் கொரோனாவுக்குப் பிறகு மூலிகைப் பொருள்களுக்கான தேவையும் வரவேற்பும் அதிகரித்துவிட்டது. இன்றைய அவசர உலகில், தினமும் பொறுமையுடனும் பக்குவத்துடனும் குழம்பு வைக்கப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. குழம்பு செய்வதற்குத் தேவையான அடிப்படை மசாலா மற்றும் இதர உணவுப் பொருள்களைச் சேர்ந்து பவுடராகச் செய்து விற்பனை செய்யலாம். இதனால் பத்தே நிமிடங்களில் குழம்பு தயாரித்துவிடலாம். இதுபோன்ற காரணங்களால் மூலிகை, சிறுதானிய தயாரிப்புகளுக்கு
அதிக வரவேற்பு உள்ளது. இந்தத் தொழிலில் பெரு நிறுவனங்களைவிடவும், குடிசைத் தொழிலாக நேர்த்தியுடன் தயாரிப்பவர்களையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்.
பாரம்பர்யத்தில் பலவித தொழில் வாய்ப்புகள்!
பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் கீரை உட்பட பல்வேறு மூலிகைகளையும் பவுடர் செய்து அவற்றைச் சிறுதானிய மாவில் கலந்து தோசை மிக்ஸ் வடிவில் விற்பனை செய்யலாம். அவற்றில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துத் தோசையாகச் செய்து சாப்பிடலாம். இதேபோல, சூப் மிக்ஸ், அடை மிக்ஸ், புட்டு மிக்ஸ், மூலிகை சாதப்பொடி, ஊறுகாய், அப்பளம், வற்றல், தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் உட்பட பல்வேறு தயாரிப்புகளைச் செய்யலாம். சிறுதானியங்களை அரைத்து மாவாகத் தனியாகவும், பல தானியங்களைக் கலந்து ஊட்டச்சத்து மாவாகவும் விற்பனை செய்யலாம். இதனால், பாரம்பர்ய மூலிகைகள், சிறுதானியங்களின் பயன்பாட்டை மக்களிடம் கொண்டுசேர்ப்பதுடன், மக்களின் உடல்நலனையும் உறுதிசெய்யலாம். மக்களின் ஆரோக்கியம்தான், இந்தத் தொழிலுக்கான அடிப்படை மூலதனம்.
பக்குவமே முக்கியம்!
அடிப்படையில் பக்குவத்துடன் சமையல் செய்யத் தெரிந்திருந்தால் போதும். தவிர, உணவுப் பொருள்கள் குறித்த அடிப்படை விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும். மிக்ஸி, மாவு அரைக்கும் இயந்திரங்களில் மசாலாக்களை அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். திருகைக்கல் போன்ற பாரம்பர்ய கருவிகளில் அரைப்பது நல்லது. மாவில் இருக்கும் வெப்பம் தணிந்ததும் சில மணி நேரத்தில் பாக்கெட் செய்துவிட்டால் அவை விரைவில் கெட்டுப்போகாது. அரைத்து ஒருநாள் கழித்து பாக்கெட் செய்தால் விரைவில் வண்டு வந்துவிடும். தரமான தயாரிப்புகள் கொடுத்தால், மக்கள் நம்மைவிட்டு வேறு ஒரு விற்பனையாளரை நாடிச் செல்ல மாட்டார்கள்.
அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க...
கிராமங்களிலும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களிலும் பல்வேறு மூலிகைகள் இயற்கையாகவே விளையும். தவிர, விவசாயிகளிடம் நேரடியாக மூலிகைகள், சிறுதானியங்கள், உணவுப் பொருள்களைக் குறைவான விலையில் கொள்முதல் செய்யலாம். ஒரு தயாரிப்புடன் இல்லாமல், புதுப்புது உணவுப் பொருள்களையும் அறிமுகப்படுத்தலாம். மேலும், மூலிகைகளைப் பயன்படுத்தி சோப்புகள், குழந்தைகளுக்கான குளியல் பொடிகள், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் வகைகளையும் தயாரித்துப் பயன்பெறலாம்.
முதலீடு: வீட்டில் இருக்கும் சமையலுக்கான உணவுப்பொருள்களைக் கொண்டே பல்வேறு உணவுகளையும் தயாரித்து அனுபவம் பெறலாம். அதையே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து நல்ல வரவேற்பு கிடைத்ததும், சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய தொழிலாகத் தொடங்கலாம்.
மூலப்பொருள்கள்: மூலிகைகள், சிறுதானியங்கள், சமையல் பாத்திரங்கள், அடிப்படை உணவுப் பொருள்கள்.
பயிற்சி: உணவுப்பொருள்கள் தயாரிக்கும் நபர்களிடமும், வேளாண் கல்லூரிப் பயிற்சி வகுப்புகளிலும் பயிற்சி பெறலாம்.
விற்பனை வாய்ப்பு: மக்கள் அதிகம் கூடும் சந்தை, பேருந்து நிலையம், திருவிழாக்களில் நேரடியாக விற்பனை செய்யலாம். இயற்கை அங்காடிகள், மளிகைக்கடைகளிலும் விற்பனை செய்யலாம். ஆர்டர்கள் அதிகரித்ததும் பலர் குழுவாகச் சேர்ந்தும் இந்தத் தொழிலைச் செய்து முன்னேறலாம்.
நோட் பண்ணுங்க!
நம் முன்னோர் காலத்தில் ரசாயன உரப் பயன்பாடு இல்லை. இயற்கையாக விளைந்த உணவுப் பொருள்களைக் கொண்டு அவர்கள் தயாரித்த பல்வேறு சமையல் பொருள்களும் உணவுப் பொருள்களும் நீண்டகாலத்துக்குக் கெடாமல் இருந்தன. தற்போது ரசாயன உரப் பயன்பாடு அதிகரித்திருக்கும் காலத்தில், அந்த உணவுப் பொருள்களில் தயாரிக்கும் தயாரிப்புகள் விரைவில் கெட்டுப் போய்விடுகின்றன. அதைத் தடுக்கவும் மேற்கொண்டு சில ரசாயனங்களே சேர்க்கப்படுகின்றன. அதனால், இதுபோன்ற ரெடிமேடு பவுடர், மிக்ஸ் மீது எதிர்மறையான கண்ணோட்டமும் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, இயற்கையாக விளைந்த உணவுப் பொருள்களில் எந்த ரசாயனமும் சேர்க்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளைச் செய்து, அதுகுறித்து மக்களிடம் விளக்குவது அவசியம். நம் மீதான நம்பிக்கை உறுதியானால், நிரந்தர வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.
* ஹோம்மேடு தயாரிப்புத் தொழிலுக்கான ஆலோசனைகள் பெற, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
0 comments:
Post a Comment