இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 17, 2014

யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் புதுமைப் பெண்கள்

எங்களாலும் சுயமாக உழைத்து வாழ முடியும்; 

“வீட்டுக் கஷ்டத்தால்தானே அம்மா ஆட்டோ ஓட்டி உழைக்கிறா. நாங்கள் படிச்சு உழைக்க தொடங்கிட்டால் அம்மா கஷ்டப்படமாட்டாதானே…” என்று கூறுகின்றாள் யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்துவரும் பெண் ஒருவரின் பிள்ளை.
சமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.
பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணின் வளர்ச்சி காலத்திற்குக்   காலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதை காண முடிகின்றது. 1970 களின் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆணுடன் சைக்கிளில் செல்வதையும் சைக்கிள் ஓட்டிச் செல்வதையும் விரும்பத்தகாததாகவும் வேடிக்கையாகவும் பார்த்த சமூகம் 1990 களில் நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின்போது  ஆணுக்கு நிகராகப் பெண்கள் செயற்படத் தொடக்கியதும் தன் பார்வையை மாற்றிக்கொள்ள தொடங்கியது.
அவ்வாறே யுத்தத்திற்குப் பின்னரான இக்காலகட்டத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக பெண்கள் சுயதொழில் முயற்சிகளில் இறங்குவதாக இருந்தால்  வீட்டிலிருந்தோ அல்லது தொழிற்சாலைகளிலிருந்தோ செய்யும் தொழில்களைத்தான் தெரிவு செய்வார்கள்.
பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புக்களுக்கான பயிற்சிகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களும் தையல், கைவேலைப்பாடுகள் போன்ற பயிற்சிகளைத்தான் வழங்கும். ஆனால் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் சற்று மாறுதலாக பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்து சுயமாக வாழ்க்கையில் முன்னேறிக்கொள்ளும் வழிவகையை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட குடும்பப் பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச்  சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு செய்து இப்புதிய தொழில் முயற்சியை வழங்கியுள்ளனர். இவர்களுக்கு இவ் உதவி கிடைப்பதற்கு    வழிகாட்டியாக நின்று செயற்பட்டவர் யாழ். பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மாவட்ட இணைப்பாளருமான செல்வி. உதயனி. அவரிடம் இத்திட்டம் தொடர்பாக வினவினோம்.
யாழ். மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், குடும்ப வறுமையால் தமது தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாமல் பரிதவிக்கும் பெண்களும் நிறையவே உள்ளனர். இப்படியானவர்கள் எமது பிரதேச செயலகங்களை அணுகி தமது வாழ்வை மேம்படுத்துவதற்கேற்ப ஏதாவது உதவிகளைப் பெற்றுத்தாருங்கள் எனக்கேட்டார்கள்.
நாம் இவர்களை ஒரு தடவை சந்தித்துப் பேசும்போது உங்களுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் சுயமாக நின்று உழைக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்டார்கள்.
அப்போது நாம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டோம். ஆரம்பத்தில் பலர் அதற்குத் தயக்கம் காட்டினார்கள். இறுதியாக 15 பேர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
தெரிந்தெடுக்கப்பட்ட  15 பேருக்கும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் 6 மாதப் பயிற்சிகளை வழங்கினோம். இதில் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் முறை, மகளிர் உரிமை, பகல் நிலை சமத்துவம், முதலுதவி போன்ற பயிற்சிகளை வழங்கினோம்.
அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சியையும் பெறுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தோம். 10 பெண்கள் முழுமையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களைத் தாண்டி பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணைப் போல் முன்வந்தார்கள்.
அதன் பின்னர் அந் நிறுவனத்தினால் கடனடிப்படையில் இவர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இன்று வரை அவர்கள் அனைவருமே ஆட்டோ மூலம் தொழில்செய்து தமது குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் பார்த்து வருகிறார்கள்.
எமது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஊழியரே அவர்களில் ஒருவர் வாடிக்கையாக ஆட்டோவில் ஏற்றிவந்து விடுகிறார். இதனால் பெண்களுக்கும் பாதுகாப்புக் கிடைக்கிறது என்றவர் ஆட்டோ ஓட்டும் அந்த பெண்மணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கோமலேஸ்வரி செல்லக்குமார் என்ற அப்பெண்ணிடம் இதன் பிறகு எப்படியுள்ளது உங்களின் வாழ்க்கை நிலை என வினவினோம்.
மிகவும் சந்தோசமாக இருக்கு. சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தை தந்திருக்கு. யாரிடமும் கையேந்தி வாழ ண்டிய தேவை ஏற்படவில்லை. ஐந்து பிள்ளைகளுடன் வாழும் எனக்கு கணவரால் எந்த உதவியும் கிடைப்பதில்லை. அவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியதால் அவர் உழைப்பது அதுக்கு மட்டுமே போகிறது. இந்த உதவி எனக்குக் கிடைக்கும் முன்னர் நான் 5 பிள்ளைகளுடன் நாளாந்தம் சாப்பிடுவதற்கே கஸ்ரப்பட்டுக் ண்டிருந்தேன். இப்போது யாருக்கும் பயப்படாமல் யாரிடமும் மண்டியிடாமல் வாழ முடியுது.
நான் கிழமை நாட்களில் பாடசாலைப் பிள்ளைகளைகளையும் இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணையும் ஏற்றி இறக்குகிறேன். இதனால் கணிசமான் அளவு மாத வருமானம் கிடைக்கிறது. இடையிடையே தனியான ஓட்டங்களும் வரும். அவற்றையும் செய்து வருகிறேன். கஸ்ரமில்லாமல் என் குடும்பத்தைப் பார்த்து வருகிறேன் என்றார் தன்னம்பிக்கையுடன்.
இவரைப் போலவே ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வரும் திருமதி. சுயாந்தினி இந்திரகுமாரையும் சந்தித்துப் பேசினோம்.
நான் நல்லூரைச் சேர்ந்தனான். எனக்கு மூன்று பிள்ளைகள். பல வருடங்களுக்கு முன்பே கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். வீட்டில் சரியான கஷ்டம். நான் ஏதாவதொரு வேலை செய்து தான் குடும்பத்தைப்  பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் இதைச் செய்வதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
சொந்தக் காலில் நிற்கவேணும். சுயமாக உழைக்க வேண்டும் என்ற தற்துணிவு வந்ததால் சந்தோஷமாக இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். என்ர பிள்ளைகளுக்கு நான் ஆட்டோ ஓட்டுவது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அம்மா வீட்டுக் கஷ்டத்தால்தானே ஆட்டோ ஓட்டுறா. நாங்கள் படிச்சு உழைக்க தொடங்கிட்டால் அம்மா கஷ்டப்படத் தேவையில்லைத் தானே என்று பின்னர் புரிந்து கொண்டனர். மற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓட்டம் வருவதுபோல் எனக்கும் வரும். இப்ப குடும்பம் கஷ்ரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.
எங்களாலும் எல்லாம் முடியும். ஆண்களுக்கு நிகராக எங்களாலும் ஆட்டோ ஓட்டித் தொழில் செய்ய முடியும் என்கிறார் செல்வி. தர்மினி விஸ்வநாதன்.  யுத்தத்தால் தாய் தந்தையரை இழந்து தனிமையில் வாழும் இவருக்கு இப்படியானதொரு வாழ்வாதார உதவி கிடைத்தமை புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் ஆட்டோ ஓட்டுவதைப் புதுமையாகப் பார்த்தவர்களின் பார்வை இப்போது மாறி வருகிறது. ஆண் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து ஆரம்பத்தில் பிரச்சினை வரும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை. அவர்களால் எங்களுக்கு பூரண ஒத்துழைப்புக் கிடைக்கிறது. எங்களுக்கென்று யாழ்.ந கரின் மத்தியில் தனியாக ஆட்டோத் தரிப்பிடமும் இருக்கு. எங்களோடு பயணிப்பதையே அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்.
முதல் சவாரி ஓடிக் கிடைத்த வருவாயை கையில் வாங்கும் போது சந்தோஷமாக இருந்தது. விதண்டாவாதம் பேசி குழப்பம் விளைவிக்கும் நோக்குடன் வருபவர்களை நாங்கள் ஏற்றுவதில்லை. இரவு நேர ஓட்டங்களுக்கு போவதில்லை. பெண்களிடத்தில் புரட்சிகரமாக நாங்கள் செய்து வரும் இத்தொழில் ஏனைய பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்வதற்குப் பெண்கள் வெட்கப்படத் தேவையில்லை. இதுவும் ஒரு சுயதொழில் தான். இதையும் பயமில்லாமல் செய்ய முடியும் என்று பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திடமான மன உறுதியுடன் கூறினார் செல்வி தர்மினி.
சமூகத்தில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வாழும் இப்பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் வாழ்க்கையில் புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படும் இவர்களைப் போன்றவர்களுக்கு இதுவும் ஒரு முன்மாதிரியான, எடுத்துக்காட்டான சுயதொழில் முயற்சியாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites