இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 14, 2013

கீரை சாகுபடி

தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு.. என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டு மென்றால், புதிய தொழில் நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும், மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும் பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் 
ஒன்றுதான், தெளிப்புநீர் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம் என்று கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்வார்கள். அந்தளவிற்கு வளமான பகுதி. ஆனால், அதே தாலுகாவோட தெற்கு பக்கம் இருக்கும் எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்கே இல்லை. முழுக்க முழுக்க கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல், போர் போட்டு கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்கிறோம். போதுமான தண்ணீர் இல்லாததால் கிடைக்கும் தண்ணீரை வைத்து பிஞ்சு வெள்ளாமையாக கீரையை சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் வாய்க்கால் பாசனம்தான் செய்தேன். வாய்க்காலில் ஓடி, வயலை அடையவதற்குள்ளே போதும் போதும் என்று ஆகிவிடும். அந்த மாதிரி சமயத்தில்தான் ஒரு நாள் உழவர் சந்தையில் ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பற்றி சொன்னார்.
வாய்க்கால் பாசனத்தில் ஒரு ஏக்கர் பயிருக்கு போகும் தண்ணீரை… சொட்டுநீர்ப்பாசனம் மூலமாக மூன்று ஏக்கருக்குப் பாய்ச்சிவிடலாம் என்றார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் கம்பெனியுடைய முகவரியை வாங்கிகொண்டு, அடுத்த நாளே மகனுடன் அங்கே சென்று விவரம் கேட்டேன்.
என்னுடைய வயல், கிடைக்கும் தண்ணீர், வெள்ளாமை எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு உங்களுக்கு தெளிப்பு நீர்ப் பாசனம்தான் ஏற்றதாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்தக் கருவியை அமைத்திருக்கும் சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினார்கள்.
எங்களுக்கும் அது திருப்தியாக தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏற்ற அளவிற்குத் தேவையான கருவிகளை வாங்கிகொண்டு வந்து நாங்களே போட்டுக் கொண்டோம். 15 அடி இடைவெளியில் 4 அடி உயரத்திற்கு மரக்குச்சிகளை நட்டு, அதில் இரண்டரை உயரமுள்ள குழாய்களை அசையாமல் இருக்கும் மாதிரி கட்டிவிட்டோம்.
குழாய் முனையில் பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணீரைப் பீச்சி அடிக்கும் இந்த நாசில் பட்டாம் பூச்சியோட இறக்கை மாதிரியே இருக்கும். அதனால், பட்டாம்பூச்சிப் பாசனம் தான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதற்கு அரசு மானியம் கிடையாது. 15 அடி இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் பட்டாம்பூச்சிப் பாசனம் அமைப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்.
பூச்சிகளை விரட்டும் தெளிப்பு நீர்!
5 ஹெச்.பி.போர்வெல் மோட்டார் மூலமாகத்தான் பாசனம் செய்து கொண்டிருந்தோம். அதில் ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவிற்கு பாசனம் செய்வதற்கு  எங்கள் கிணற்றில் தண்ணீரும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனால், பட்டாம்பூச்சிப் பாசனம் அமைத்தபிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரை என்று ஐந்து வகையான கீரைகளைப் பயிர் செய்கிறோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டாக பிரித்து, அதில் தனித்தனியாக சாகுபடி செய்வதால் சுழற்சி முறையில் தினமும் கீரையை அறுவடை செய்கிறோம். இந்தக் கீரையை சிறு கீரையைத் தவிர மற்ற நான்கு கீரைகளும் மறுதழைவு ரக கீரைகள். வெட்ட வெட்ட தழைந்து கொண்டே இருக்கும். அடியுரமாக கோழி எரு, தொழுவுரம் இரண்டையும் போடுகிறோம். மேலுரமாக யூரியா கொடுப்போம். ஆனால், பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதே இல்லை. அதற்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல் பத்தடி சுற்றளவிற்கு தண்ணீர் பீச்சி அடிப்பதால், இலைகள் எல்லாம் கழுவிட்ட மாதிரியாகிவிடுகிறது.
இலைவழியாக  செடியைத் தாக்கும் பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள் என்று எல்லாவற்றையும் பீச்சி அடிக்கும் பாசன தண்ணீர் கழுவிடுவதால் செடிகளில் பூச்சிகளே இருப்பதில்லை. அதனால் பளபளவென்று தரமான கீரை கிடைக்கிறது என்றார்.
கட்டு இரண்டு ரூபாய்!
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ”கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் கொண்டு போய்  அப்பா விற்றுவிட்டு வந்துவிடுவார். ஆரம்பத்தில் டவுன் பஸ்சில்தான் கீரைக் கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்திற்கு மாறிய பிறகு, அதிக மகசூல் கிடைக்கிறது. சுழற்சி முறையில் அறுவடை செய்வதால் தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
இப்போது சொந்தமாக மூன்று சக்கர டெம்போ வாங்கி, அதில்தான் கொண்டு போகிறார். ஒரு சின்னக்கட்டு இரண்டு ரூபாய் என்ற விற்கிறோம். நேரடியாக விற்பதால் கூடுதலான லாபம்” என்றார்.
தினமும் 2600 ரூபாய்
இந்த தெளிப்பு நீர்ப் பாசனம் மட்டும் இல்லையென்றால், நாங்கள் இந்த மண்ணை விட்டே போயிருப்போம் என்கிறார் பொன்னுசாமியின் மனைவி சிவகாமி.
எங்க நான்கு ஏக்கர் நிலத்தில் மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனால், எதிலுமே சரியான தண்ணீர் கிடைக்கவில்லை. பத்து லட்சம் ரூபாய் கடனாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையயை விடாமல் கடைசியாக  தோண்டிய கிணற்றில் ஓரளவு தண்ணீர் வந்தது. அதை வைத்து பெரிதாக  வெள்ளாமை செய்ய முடியாது. கீரை போட்டால் ஜெயிக்கலாம் என்று சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னார். அதன்படியே செய்தோம். ஓரளவிற்கு பிழைப்பு ஓடியது.
அதன்பிறகு தெளிப்புநீருக்கு மாறிய பிறகுதான். மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவெல்லாம் போக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். இதை வைத்தே பழையக் கடனையும் கட்டிவிட்டோம். நாங்க இந்த அளவிற்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம் தான் என்றார்.
தொடர்புக்கு
சதீஷ்குமார், செல்போன் : 98658 – 37804
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.04.13 http://www.vikatan.com

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites