இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 11, 2013

உன்னத வருமானத்துக்கு ‘உஜாலா’..



ணவகங்களுக்கான சமையல் பட்டியலாக இருந்தாலும் சரி... திருமணம், திருவிழா உள்ளிட்ட விசேஷங்களுக்கான பட்டியலானாலும் சரி... அதில் கட்டாயம் கத்திரிக்காய் இடம் பெற்றிருக்கும். சாம்பார், காரக்குழம்பு, வற்றல், பொரியல், கூட்டு... என கத்திரிக்காயை வைத்து, விதம்விதமாக உணவுகளைத் தயாரிக்க முடியும் என்பதால்தான், அந்தக் காய்க்குக்கு மட்டும் சந்தையில் எப்போதுமே தனி மவுசு!
அதனால்தான் அதிகப்படியான பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல்... எனப் பற்பல இடையூறுகள் இருந்தாலும், விடாமல் கத்திரிக்காய் சாகுபடியைச் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள் பலரும். கத்திரியில் விதம் விதமான நாட்டு ரகங்கள் நம்நாட்டில் உண்டு. அந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டம், சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன், 'உஜாலா கத்திரி’ என்கிற நாட்டுரக கத்திரியை சாகுபடி செய்து, நல்ல லாபம் பார்த்து வருகிறார்!
'தளதள’வென நீல வண்ண கத்திரிக்காய்கள் தொங்கிக் கொண்டிருந்த தோட்டத்தில், பராமரிப்புப் பணியில் தீவிரமாக இருந்த திருநீலகண்டன், ''அப்பா ராணுவத்துல இருந்ததால, எங்களை ரொம்ப கட்டுப்பாட்டோட வளர்த்தாரு.
அவரோட கெடுபிடி தாங்க முடியாம... எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதும், சென்னையில ஒரு ஹோட்டல்ல வேலைக்குச் சேந்துட்டேன். அப்பறம் பெங்களூரு காய்கறி மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போனேன். அப்படியே தொழிலைக் கத்துக்கிட்டு... இப்போ, பெங்களூரு மார்க்கெட்ல கறிவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்றேன். பெங்களூருல நிறைய ஹோட்டல்களுக்கு கீரை சப்ளை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஊருக்கு போய் அப்பப்ப விவசாயத்தையும் பார்த்துட்டிருக்கேன்.
ரெண்டு வருஷத்துக்கு முன்ன அப்பா இறந்து போகவே... குடும்பத்துக்கு சொந்தமா இருந்த 5 ஏக்கர் நிலத்துல நானும், தம்பி குணசீலனும் சேந்து விவசாயம் பாக்குறோம். ஆரம்பத்துல நெல் சாகுபடி செஞ்சதுல, பெருசா லாபம் இல்லை.
அந்த சமயத்துலதான், 'பசுமை விகடன்’ வாங்கிட்டு வந்த தம்பி, 'இயற்கை முறையில சாகுபடி செஞ்சா செலவு குறைவா இருக்கறதா இந்தப் புத்தகத்துல விரிவா சொல்லி இருக்குறாங்க. நாமளும் முயற்சி பண்ணலாமா’னு கேட்டு, என்னையும் படிக்கச் சொன்னான். தொடர்ந்து ரெண்டுபேருமே படிக்க ஆரம்பிச்சோம். அதன் மூலமா நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம்'' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
''எங்க ஊர்ல 'பசுமை உழவர் மன்றம்’னு ஆரம்பிச்சு, மத்த விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம். பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டிகளைத் தயாரிச்சுப் பயன்படுத்தி, போன போகத்துல அவரைக்காய் போட்டோம். அதுல விளைச்சல் அமோகமா இருந்துச்சு. நல்ல லாபமும் கிடைச்சது. அரை ஏக்கர்ல உஜாலா கத்திரி சாகுபடி செஞ்சுருக்கேன்.
இதை பெங்களூருல பிரியாணி, சாம்பார், சான்ட்விச்னு நிறைய பதார்த்தங்களுக்குப் பயன்படுத்துறாங்க. அதனால பெங்களூருல நல்ல விலை கிடைக்குது. தமிழ்நாட்டுல இதுக்கு தேவை இருந்தாலும், பெங்களூரு அளவுக்கு விலை கிடைக்கறதில்லை'' என்ற திருநீலகண்டன், அரை ஏக்கர் நிலத்தில் உஜாலா கத்திரியை சாகுபடி செய்யும் விதத்தை சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
அடியுரமாக பசுந்தாள் உரம்!
'உஜாலா ரக கத்திரியின் வயது 6 மாதங்கள். நன்கு பராமரித்தால் எட்டு மாதங்கள் வரைகூட காய்க்கும். இதை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். களர் மற்றும் உவர் மண் நீங்கலாக அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில் சணப்பு, அவுரி, தக்கைப்பூண்டு ஆகிய மூன்றிலும் தலா 3 கிலோ விதையை எடுத்து ஒன்றாகக் கலந்து விதைத்து... 35-ம் நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும். உஜாலா ரகத்தை, நாற்றாகத்தான் நடவு செய்ய வேண்டும். அதனால், பசுந்தாள் உர விதைப்பு செய்த 10 நாட்களுக்குப் பிறகு, நாற்று உற்பத்தியைத் தொடங்கிவிட வேண்டும்.
அரை ஏக்கர்...20 கிராம் விதை!
அரை ஏக்கர் நிலத்தில் நடவு செய்வதற்கு... 20 அடி நீளம், 10 அடி அகல நாற்றங்கால் தேவைப்படும். இந்த நிலத்தைக் கொத்தி களைகளை நீக்கி, ஓர் அடி உயரத்துக்கு மண்ணை நிரப்பி, மேட்டுப்பாத்தி போல நாற்றங்கால் அமைக்க வேண்டும். பிறகு,
20 கிலோ தொழுவுரம், 3 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாத்தியின் மீது தூவ வேண்டும்.
ஒரு கிலோ மணலில், 20 கிராம் விதைகளைக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, லேசாக விரலால் கிளறிவிட்டு, பூவாளியால் தண்ணீர் தெளித்து, பாலிதீன் கவர் மூலம் இரண்டு நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் பாலிதீன் கவரை எடுத்துவிட்டு, தினமும் பூவாளியால் தண்ணீர் தெளித்து வந்தால்... 8-ம் நாளில் விதைகள் முளைப்புவிடும். 15 மற்றும் 22-ம் நாளில் 2 கிலோ அளவுக்கு சாம்பலைத் தூவ வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.
நோய்த் தாக்குதலுக்கு சூடோமோனஸ்!
பசுந்தாள்களை மடக்கி உழவு செய்த நிலத்தை, ஒரு வார இடைவெளி கொடுத்து குறுக்கு-நெடுக்காக இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒன்றரை டன் எருவோடு 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து இறைத்துவிட்டு, உழவு ஓட்ட வேண்டும். மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொண்டு... 3 அடி இடைவெளியில், ஒரு அடி அகலத்துக்கு பார் பிடிக்க வேண்டும். பிறகு, நிலத்தில், தண்ணீர் கட்டவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சூடோமோனஸை கலந்து, கத்திரி நாற்றுகளின் வேர்களை அதில் நனைத்து, 2 அடி இடைவெளியில் பாரில் நடவு செய்ய வேண்டும். சூடோமோனஸ் கரைசலில் நாற்றுகளை நனைப்பதால் நோய்கள் தாக்குவதில்லை.
நடவு செய்த 3-ம் நாளில் உயிர் தண்ணீரும், அதற்குப் பிறகு வாரம் ஒரு தண்ணீரும் கொடுக்க வேண்டும். 15-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை, டேங்குக்கு (15 லிட்டர்) 450 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 5 டேங்க்குகள் தேவைப்படும்.
45-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ எரு, 8 கிலோ இயற்கை நுண்ணூட்டக்கலவை (கடைகளில் கிடைக்கும்), 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து செடிக்கு 50 கிராம் வீதம் வைத்து மண் அணைக்க வேண்டும்.
காய்புழுக்களுக்கு வேப்பெண்ணெய்!
60-ம் நாளில் ஏதாவதொரு இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்க வேண்டும். 75-ம் நாளில் காய்ப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் குறைக்க... டேங்குக்கு 30 மில்லி வேப்பெண்ணெய், 15 கிராம் மஞ்சள் தூள், கொஞ்சம் காதி சோப் கரைசல், ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
65-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 80-ம் நாளுக்கு மேல் காய் காய்க்கும். 85-ம் நாளில் வளர்ச்சி ஊக்கியாக கடல் பாசி திரவத்தை டேங்குக்கு 45 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். காய்ப்பு துவங்கிய பிறகு, 10 நாட்களுக்கு ஒரு முறை மூலிகைப் பூச்சிவிரட்டியை டேங்குக்கு 500 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். காய்களின் வளர்ச்சியைப் பொருத்து அறுவடையைத் தொடங்கலாம்.'
அரை ஏக்கரில் 4,200 கிலோ!
சாகுபடிப் பாடத்தை முடித்த திருநீலகண்டன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார். ''3 நாளைக்கு ஒரு பறிப்புனு, மொத்தம் 35 தடவை பறிக்கலாம். ஒவ்வொரு பறிப்புக்கும் நூறுல இருந்து, நூத்தம்பது கிலோ வரைக்கும் கிடைக்கும்.
சராசரியா ஒரு பறிப்புக்கு 120 கிலோனு வெச்சுக்கிட்டா... 35 பறிப்புக்கும் சேர்த்து 4 ஆயிரத்து 200 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ கத்திரி, 6 ரூபாய்ல இருந்து 22 ரூபாய் வரைக்கும் விலைபோகுது. சராசரி விலை 12 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 4 ஆயிரத்து 200 கிலோவுக்கு 50 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக 28 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்றார் தெம்பாக.
தொடர்புக்கு,
திருநீலகண்டன்,
செல்போன்: 94426-82669, 093438-31929.

பளீர் 'உஜாலா'!
'உஜாலா’ என்கிற அடைமொழி இருப்பதால், இது, 'நாட்டு ரகமா அல்லது வீரிய ரகமா?’ என்கிற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. அதைப் பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத்துறைப் பேராசிரியர் புகழேந்தியிடம் கேட்டபோது, ''தமிழ்நாடு முழுவதும் வெள்ளைக் கத்திரி, பூனைக் கத்திரி, மணப்பாறை கத்திரி, இலவம்பாடி கத்திரி இப்படி பலவிதமான நாட்டு ரகங்கள் இருக்கின்றன. அவற்றைப் போன்று 'உஜாலா’வும் நாட்டுக் கத்திரி ரகம்தான். இது, வடஇந்தியாவில் இருந்து வந்திருக்கலாம். ஹிந்தி வார்த்தையான 'உஜாலா’வுக்கு 'பளீர்’ என்பது பொருள். பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பதால், இந்தக் கத்திரிக்கு இப்படி பெயர் வந்திருக்கலாம்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த ரகத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதால்... திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகமான அளவில் விரும்பி சாகுபடி செய்கின்றனர். இந்த ரகத்தின் விதைகளை மேம்படுத்தி, பலவிதமான பெயர்களில் தனியார் நிறுவனங்கள் பலவும் விதைகளை விற்பனை செய்கின்றன'' என்று சொன்னார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites