இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, December 2, 2013

உங்களின் உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?



வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த, பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறார்கள். திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆனால், காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே, எந்த விஷயத்திலும், சாமர்த்தியமாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும். அதற்கான சில ஆலோசனைகளைப் பற்றி இங்கே அலசுவோம்,
நோக்கத்தைப் பற்றி தெளிவான புரிதல்
ஒருவருக்கு தனது இலக்கைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். பலர், தான் எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலேயே, தேவையின்றி கடினமாக உழைத்து, தங்களின் ஆற்றலையும், நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். எனவே, இந்த விரயத்தை தவிர்க்க, நோக்கத்தை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்.
எதற்கு முக்கியத்துவம்?
ஒரு காரியத்தை மேற்கொள்கையில், முதலில் எதை செய்தால் வேலை விரைவாக முடியும் மற்றும் பலன் அதிகமாக கிடைக்கும் என்பதை தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மதுரையிலிருந்து, சென்னைக்கு சாலை வழியாக பயணம் செய்யும் ஒருவர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்தால் விரைவாக வந்து விடலாம். சிறந்த சாலை வசதியும் உண்டு. மாறாக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து, கரூர் சென்று, சேலம் சென்று, விருத்தாச்சலம் வந்து, பிறகு விழுப்புரம் சென்று, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் வழியாக சென்றால் எவ்வளவு தேவையில்லாத ஒன்றோ, அதுபோலத்தான் அம்சங்களை அலசி ஆராயாத உழைப்பும்.
ஒரு இலட்சியத்திற்காக உழைக்கையில், எந்த காரியத்தை முதலில் செய்தால், விரைவாகவும், எளிதாகவும் வேலை முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, கடைசியில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்சத்திற்கு, ஆரம்பத்திலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
குழப்பிக் கொள்ளாதீர்...
உங்களின் லட்சியத்தை அடையும் முயற்சியில், வேலைகளை பிரித்து செய்யும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை, ஒரேநேரத்தில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க வேண்டும். அதைவிடுத்து, பல வேலைகளை ஒரேநேரத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு, குழப்பிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக்கூடாது.
அனைத்தும் தயாராக இருத்தல்
ஒரு வேலையை துவங்கும்போது, அதற்கு தேவையான உதவி உபகரணங்கள் அனைத்தையும் முதலிலேயே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு வேலையானது தொடங்கப்பட்டு விட்டால், விரைவாக சென்று கொண்டே இருக்க வேண்டும். தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருந்தால்தான் தடையின்றி செல்ல முடியும். வேலையின்போது, தேவையானவற்றை அங்குமிங்கும் தேடினால், மனஉளைச்சல் ஏற்படுவதுடன், பல்வேறான தீங்குகள் ஏற்படும்.
சரியான சூழல்
முக்கியமான ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதற்கான புறச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தொந்தரவற்ற, தேவையானால் அமைதியான, நிம்மதியான சூழலை அமைத்துக் கொண்டால், உங்களின் வேலை விரைவாக, வெற்றிகரமாக முடிவதை உறுதி செய்யலாம்.
உதவி கேட்கலாமா?
பொதுவாக, ஒருவர் தனது வேலையை பிறரின் உதவியின்றி, யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தானே செய்து முடிக்க வேண்டும் என்று இயல்பாக நினைப்பார். அது ஒரு நல்ல கொள்கையும்கூட. ஆனால் சில சமயங்களில் பிறரின் உதவியை கேட்டே ஆக வேண்டிய நிலையேற்படும்.
அந்த நேரத்தில், பிடிவாதம், வரட்டு கவுரவம் பார்க்காமல் பிறரிடம் உதவி கேட்பதில் தவறில்லை. இதன்மூலம், உங்களின் லட்சியம் எளிதாக அடையப்படலாம்.
ஒதுக்கி விடவும்...
வாழ்க்கையில் தெளிவான இலக்கின்றி நாம் இருக்கையில், எது முக்கியம், எது முக்கியமற்றது என்பது நமக்குப் புரியாது. எனவே, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செயல்படுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தப் பின்பாக, தேவையற்றதை ஒதுக்குவதற்கு தயங்கக்கூடாது.
மதிப்பாய்வு செய்க...
ஒரு நீண்ட செயல்பாட்டில் நீங்கள் ஈடுபடுகையில், அதன் தொடர் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் அவசியம். எந்த செயல் அதிக பலனைத் தந்தது, எந்த செயல் நேரத்தை வீணடித்தது என்பதை மதிப்பிடுவது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. இதன்மூலம் தேவையற்றதை ஒதுக்கி, நமது பணியை விரைந்து முடிக்கலாம்.
முடிவே முக்கியம்
வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்றில்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவு வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு ஆகும் நேரத்தைவிட, அதனால் கிடைக்கும் நன்மைதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites