இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, September 13, 2015

கண்வலி' கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து, விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.
அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க "கண்வலி' கிழங்கு சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார்.Image result for கண்வலி' கிழங்கு சாகுபடி

எப்படி சாதித்தார் அவர். இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மாதம் ஆடி, ஆவணி, புரட்டாசி தான். அந்த சமயத்தில் கிழங்குகளை நட்டால் தான் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் நன்றாக கிடைக்கும். நான் மூன்று ஏக்கரில் நடவு செய்ய ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ ரூ.250 வீதம் 500 கிலோ "கண்வலி' கிழங்குகள் வாங்கினேன்.
சாகுபடிக்கு, நிலத்தில் சிறிய குழிதோண்டி கிழங்குகளை வரிசையாக புதைக்க வேண்டும். கம்பி, பந்தல் அமைக்க வேண்டும். நிறைய தண்ணீர் தேவை இல்லை. சொட்டுநீர் பாசனமுறை சிறந்தது.
மண்ணில் புதைத்த கிழங்குகள் 20 நாட்களில் துளிர்விட்டு, செடி பந்தலுக்கு வந்துவிடும். நான்கு மாதங்களில் பூத்து, காய்க்க துவங்கும், கோவைப் பழம் போல காய்கள் இருக்கும். அவற்றை பறித்து தட்டி விதைகளை எடுத்து நன்றாக காயவைக்க வேண்டும். 500 கிலோ கிழங்கில் 300 கிலோ விதை கிடைக்கும்.
மருத்துவத்திற்காக கண்வலி கிழங்கு விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் திருப்பூர் மாவட்டம் மூலனூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.2000 வரை விலைகிடைக்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆண்டிற்கு 100கிலோ கூடுதல் என மூன்று ஆண்டுகள் கண்வலி கிழங்கு செடி மூலம் ரூ.பல லட்சம் வருமானம் ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு கிழங்கு கொள்முதல் செலவு போக மருந்து, உரம், காய்பறிப்பு கூலி என ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.
முதல் ஆண்டு ஓர் அளவிற்கு தான் லாபம் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருந்து, உரமிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தால் ரூ.பல லட்சம் லாபம் ஈட்டலாம். கண்வலி கிழங்குக்கு கரிசல் மண் ஆகாது. கச்சமண், செம்மண், மலமண் ஏற்றது. மேற்சொன்ன பருவத்தே கண்வலி கிழங்கு "கரெக்டா' சாகுபடி செய்தால் கைநிறைய பணம் அள்ளலாம், 
என்றார். இவரை தொடர்பு கொள்ள 97867 99763.

மருத்துவ மூலிகை விவசாயம்

புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படும் கண்வலி கிழங்கு, மானாவாரி நிலங்களில் தானாக முளைத்துள்ளது. இந்த செடிகளை தோண்டி விவசாய தொழிலாளர்கள் தினமும் குறைந்தது 500 ரூபாய் சம்பாதிக்கின்றனர். கண்வலி கிழங்கு என்று அழைக்கப்படும் "செங்காந்தள்" என்னும் செடியில் இருந்து கிடைக்கும் விதை புற்றுநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. ஒரு கிலோ விதை ரூ.1,700க்கு விற்கப்படுகிறது.




இந்திய தேவை போக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் விதை ஏற்றுமதியாகிறது. இச் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்தால் ஆண்டுக்கு ரூ.5.10 லட்சத்திற்கு மகசூல் பெறலாம். ஒரு முறை நடவு செய்தால் ஐந்து ஆண்டு வரை பலன் கிடைக்கும். சாகுபடிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள "நேஷனல் மெடிசனல் பிளாண்ட்ஸ் போர்டு' (என்.எம்.பி.பி.) 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. விருதுநகர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் 8,000 ஏக்கர் சாகுபடி செய்துள்ளர்.




கரிசல் மண், மணல் கலந்த செவல் நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். வறட்சி பகுதிகளிலும் சிறப்பாக வளரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண் விதை கிழங்கு சிவகாசி பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லாத தரிசு நிலங்கள், முள்வேலி காடுகளில் தானாக முளைத்துள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை கண்வலி கிழங்கு செடிகள் தானாக முளைக்கும். இந்த காலங்களில் விவசாய தொழிலாளர்கள் பலரும் காட்டு பகுதிகளில் கம்பியுடன் சென்று மண்ணில் புதைந்துள்ள கிழங்குகளை தோண்டி எடுக்கின்றனர். தற்போது ஒரு கிலோ விதை ரூ.180 முதல் ரூ.220 வரை விலை போகிறது. ஒரு தொழிலாளி தினமும் 5 முதல் 10 கிலோ வரை தோண்டி எடுக்கின்றனர். இவற்றை வியாபாரிகளிடம் கொடுத்து பணம்
பெறுகின்றனர்.




ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.1800 வரை சம்பாதிக்கின்றனர். மேலாண்மறை நாட்டை சேர்ந்த 20 பேர் தினமும் கண்வலி கிழக்கு தோண்டுவதற்கே கிளம்பி விடுகின்றனர். மூலிகை செடி வியாபாரிகள் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு ஒரு கிலோ கண்வலி கிழங்கு ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர். கண்வலி கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் வெளிமாவட்ட விவசாயிகள் பலரும் சிவகாசிக்கு வந்து விதை கிழங்குகளை வாங்கி செல்கின்றனர்.




சிவகாசி ஏற்றுமதியாளர் மனோகரன் கூறியதாவது:


கண்வலி கிழங்கு விதையின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சாகுபடி செய்தாலும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதை கிழங்கு அதிகளவில் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் கண்வலி கிழங்கு விதை 3 டன் ரூ. 51 லட்சத்திற்கு கொள்முதல் செய்தேன். வரும் ஆண்டில் கண்வலி கிழங்கு சாகுபடியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து ஒரு விதை கிலோ ரூ.1700க்கு குறையாமல் எடுத்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். வரும் 5 ஆண்டுகளுக்கு கிலோ ரூ.1700க்கு விலை குறையாது. ஐந்து ஆண்டுக்கு முன் ஒரு கிலோ விதை ரூ.350 ஆக இருந்தது. 2 ஆண்டிற்கு முன் ஒரு கிலோ ரூ.800 ஆக உயர்ந்தது. தற்போது கிலோ ரூ.1700க்கு உயர்ந்துள்ளது. இச்சாகுபடி செய்ய விரும்புவோர் தொழில் நுட்ப விபரங்கள் அறிய 94437 36794 தொடர்பு கொள்ளலாம்

மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம்

பருவமழை தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பழ மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பது சுற்றுச்சூழல் மாசையும் நீக்கி, சுவையான சத்தான கனிகளையும் தருகின்றன. இப்போது மழை பெய்து வருவதால் பழ மரங்களை நடவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள பழ மரங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதற்கும் இதுவே உகந்த தருணம்.
மா நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 7-10 மீ., செடிக்குச் செடி 7- 10 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
மா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இருமுறையாகப் பிரித்து இடலாம்.
நெல்லி நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். 2 அடி ஆழம், 2 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
நெல்லி உர நிர்வாகம்:
நான்காமாண்டு காய்க்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், ஒன்றரை கிலோ யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறம் கலந்து காணப்படுவது போரான்சத்து பற்றாக்குறையாகும். 100 லிட்டர் நீரில் 600 கிராம் போராக்ஸ் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளித்து இந்தக் குறைபாட்டை நீக்கலாம்.
சப்போட்டா நடவு:
வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 8 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 4 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
சப்போட்டா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இரு முறையாகப் பிரித்து இடலாம்.
எலுமிச்சை நடவு:
வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலம் என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, இட்டு நடவு செய்ய வேண்டும்.
எலுமிச்சை உர அளவு:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாகச் சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 30 கிலோ தொழு உரம், 1350 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
இவ்வாறு இடும் உரங்களில் யூரியாவை மட்டும் மார்ச்சிலும், அக்டோபரிலும் பாதிப்பாதியாக பிரித்து வைக்க வேண்டும். எஞ்சிய உரங்களான தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை அக்டோபரில் மட்டும் வைக்க வேண்டும்.
கொய்யா நடவு:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ., இடைவெளியில் நடவு செய்யலாம்.
ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, கொய்யா பதியன் கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
கொய்யா உர நிர்வாகம்:
காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒன்றே முக்கால் கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
கொய்யாவில் மகசூலை மேம்படுத்த ஒரு சதவீதம் யூரியா (ஒரு லிட்டர் நீருக்கும் 10 கிராம் யூரியா) மற்றும் அரை சதம் துத்தநாக சல்பேட் (ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கலந்த கரைசலை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.
பழ மரக்கன்றுகளை ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி ஒன்று நட்டு தளர்வாகக் கட்டிவிட வேண்டும். உரங்களை மரத்தில் இருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப் பரப்புக்குள் அரைவட்டமாக ஒரு அடி ஆழக்குழி எடுத்து வைத்து மூடலாம் என்றார் அவர்.
தினமணி தகவல் :

கொய்யா..!

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால் இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான். மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று பாசனம் மூலம் நெல், வாழை போன்ற பாரம்பரிய விவசாயம் நடக்கிறது. "பாரம்பரிய விவசாயத்தில் எதிர்பார்த்த லாபத்தை எதிர்பார்க்க இயலாது. "வந்தால் வரவு; போனால் செலவு' என்ற நிலையிலேயே நெல், வாழை சாகுபடியில் ஈடுபட முடியும்,' என்கின்றனர் அனுபவம் வாய்ந்த விவசாயிகள். இந்த வரிசையில் மதுரை நெடுமதுரையை சேர்ந்த விவசாயி மொக்கச்சாமி,60, விவசாயத்தில் புதுமையை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார்.Image result for கொய்யா..!
மதுரையின் வறட்சி பகுதிகளில் நெடுமதுரை, வலையங்குளம், சோளங்குருணி, குரண்டி, திருமங்கலம் பகுதிகள் முதலிடம் வகிக்கிறது. இவற்றில் 99 சதவீத விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் மல்லிகை விளைவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் நெல், வாழை, மா போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளனர். துணிச்சல் மிக்க மொக்கச்சாமி, மூன்று ஏக்கர் நிலத்தில் கொய்யாவை விளைவித்து விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளார். தவிர மா, தேக்கு தோட்டங்களையும் வைத்துள்ளார்.
மொக்கச்சாமி கூறியதாவது: ஒட்டு வகை, குட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 49' மற்றும் ஒட்டு வகை, நெட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 47' ஆகிய கொய்யா நாற்றுகளை தேனி மாவட்டம் பெரியகுளம் தனியார் பண்ணையில் இருந்து வாங்கினேன். முதலில் சோதனை அடிப்படையில் வளர்த்தேன். மரத்தில் காய்கள் பூத்து குலுங்கின. அடுத்ததாக மூன்று ஏக்கரில் கொய்யா தோட்டம் அமைத்தேன். மருந்து செலவு தவிர்த்து மாதம் சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
நெல், வாழை போல் அதிகபடியான பராமரிப்பு கொய்யாவில் இல்லை. அடிஉரம், மேல்உரம் மற்றும் பூ பூக்கும்போது ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதுமானது. போர்வெல் மூலம் கிணற்றிற்குள் தண்ணீர் பாய்ச்சி மீண்டும் மோட்டார் வைத்து உறிஞ்சி தோட்டத்துக்கு பாய்ச்சுகிறேன். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண் நிலம் என்பதால் விளைச்சல் அமோகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 கிலோ காய்கள் கிடைக்கிறது. முறையாக பராமரித்தால் பத்து முதல் 13 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். தோட்டத்துக்கே வந்து சீசனுக்கு ஏற்ப கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்று 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். மதுரையின் தெற்குப்பகுதியில் கொய்யா விவசாயத்தை லாபகரமாக நான் மட்டுமே மாற்றியுள்ளேன். அடுத்ததாக சொட்டு நீர் பாசனம் மூலம், கொய்யா விவசாயத்தை விரிவாக்கவுள்ளேன் என்றார். தொடர்புக்கு 95432 34975.
-கா.சுப்பிரமணியன், மதுரை.திண்டுக்கல் : ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் "லக்னோ 49' கொய்யாவை சாகுபடி செய்வதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த கொய்யா உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. எந்த காலத்திலும் சாகுபடி செய்யலாம். இவை 3 மாதத்தில் காய்க்க துவங்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும். அதிகபட்சம் 3 அடி வளரும். ஒரே செடியில் ஆண்டிற்கு 500 காய்கள் காய்க்கும். ஒரு பழம் 750 கிராம் வரை இருக்கும். அடர்வு முறையில் ஒரு ஏக்கருக்கு 800 செடிகள் வரை நடலாம். ஏக்கருக்கு மூன்று லட்சம் கிலோ கிடைக்கும். அதிக லாபம் கிடைப்பதால் "லக்னோ 49' கொய்யாக்களை சாகுபடி செய்வதில் திண்டுக்கல், பழநி, ரெட்டியார்சத்திரம், பலக்கனூத்து விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பலக்கனூத்து விவசாயி எம்.மனோஜ் கூறியதாவது: பழம் சுவையாக இருக்கும். கிலோ ரூ.60 க்கு விற்கலாம். இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும். பராமரிப்பு செலவு குறைவு. கொய்யா கன்றுகளை ஒட்டு முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தருகிறோம். ஒரு செடி ரூ.50 விற்கிறோம், என்றார்.

சுரைக்காய்

குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில் பெறலாம் என்றவுடன் செலவு அதிகமாகுமே என்று ஏங்க வேண்டாம். இதற்கு வங்கிகளின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் தப்பே இல்லை. சுரைக்காய்க்கு உள்ள சிறப்பே அது ஓராண்டு தாவரமாக, வேகமாக படர்ந்து செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம். மாட்டுக் கொட்டகை, பம்ப் ஹவுஸ், சேமிப்பு கூடம் இப்படி எங்கெல்லாம் கொடியை ஏற்ற முடியுமோ அங்கு கூட பந்தல் இன்றி சமாளித்து சற்று சம்பாதிக்க உதவும். இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும்.
சுரைக்காய்க்கு உப்பில்லை என்பது தவறு. அதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் புரதம் 0.2 சதமும் கொழுப்புச்சத்து 0.1 சதம் கார்போ ஹைட்ரேட் 2.5 சதமும் தாது உப்புக்கள் 0.5 சதம் உள்ளன. சுரைக்காயில் பல ரகங்கள் உள்ளன. கோ.1, அர்கா பஹார், புசா சம்மர், புராலிபிக் நீளம் புசா சம்மர், புராலிக் உருண்டை மெகதூத் மற்றும் பூசா மன்ஞரி முதலியன குறிப்பிடத்தக்கவை.
நேரடியாக விதைப்பதை விட ஒரு ஏக்கருக்கு 1.200 கிலோவை பாலிதீன் பைகளில் நாற்று விட்டு வளர்த்தல் அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடுதல் நன்று. விதைக்கு முன்பு அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் ஆறின அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம். நடவு வயலுக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது தரமான மண்புழு உரம் 5 டன் மற்றும் 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடவேண்டும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (800 கிலோ) 4 பாக்கெட் மற்றும் சூடோமோனாஸ் 5 பாக்கெட் (ஒரு கிலோ) என்ற அளவில் நன்கு மட்கிய தொழு உரத்துடன் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கும் சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவும். செடிக்கு செடி 2 .5 மீட்டர் வீதம் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழிகள் எடுத்து 7-10 நாட்கள் அந்த குழிகள் ஆற விட வேண்டும். ஒருஅடி நீளம், ஒருஅடி அகலம், ஒருஅடி ஆழம் உள்ள இக்குழிகள் தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட்டால் நன்று.
பெண் பூக்கள் தோன்றிட எத்ரல் பயிர் வளர்ச்சி ஊக்கியை 2.5 மிலி எடுத்து அதனை சுத்தமான நீர் 10 லிட்டரில் கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் பின் வாரம் ஒருமுறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். உயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணி சத்து, சாம்பல் சத்து 40 கிலோ இட வேண்டும். 30 நாள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இடவும். வண்டுகள் வந்தால் மீதைல் டெமடான் ஒரு மில்லியை 1 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை தெளிக்கக் கூடாது. மோனோக்ரோட்டா பாஸ் பயன்படுத்தக் கூடாது. மேலும் விபரங்களுக்கு 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
டாக்டர் பா.இளங்கோவன்
தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை.

மாதுளை

ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம்…இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்
குறைந்த தண்ணீர், நிறைவான மகசூல்
திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல் கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இந்த வரிசையில் இணைகிறார் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான இலாபம் ஈட்டி வருகிறார்.
Image result for மாதுளை

தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதை மேடு பகுதியில், பொட்டல் காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார். குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார் குரியன்.

தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமளி தேசிய நெடுஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சை நிற நிழல் வலை சுற்றப்பட்ட ‘ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.
Image result for மாதுளை
அன்று மானாவாரிக் கரடு, இன்று மாதுளைத் தோட்டம்
குரியன் எர்ணாகுளத்தில் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கிறார். விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறு என்று கேரளாவை ஒட்டிய பகுதியாக இருப்பதால் தேடி அலைந்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றியலும் மலைப்பகுதியாக இருப்பதால் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கும்பொழுது பொட்டல்வெளி. இந்த இடத்தை வாங்கியதும் இயற்கை விவசாயம்தான் என்று முடிவெடுத்திருக்கிறார். மொத்தம் இருப்பது 35 ஏக்கர். இதில் கிட்டத்தட்ட 30 ஏக்கரில் 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கின்றன. இதில், 7 ஆயிரத்து 500 செடிகள் மகசூல் வந்துகொண்டு இருக்கிறது. மற்ற இடங்களில் பண்ணைக் குட்டை, மாட்டுக்கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகைகள் இருக்கிறது. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையாக வடிவமைத்திருக்கிறார் என்றபடி மாதுளை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.

பராமரிப்பு தருமே பணம்
முழுக்க இயற்கை முறையில்தான் விளைவிக்கிறார்கள். அதனால் பழங்கள் வெடித்து கிழே விழுந்துவிடுகிறது. காய்களோட தோல் சொறி சொறியாக இருக்கிறது. நம்ம ஆட்கள் கடைக்குப் போனதும் பளபள என்று இருக்கும் பழங்களைத்தான் முதலில் எடுக்கிறார்கள். ஆனால் அது இரசாயத்தில் விளைந்தது என்று யாரும் எண்ணுவதில்லை. இவர் பழங்களை ஆரம்பத்தில் வாங்க தயங்கியவர்கள் உரித்துப் பார்த்தவுடன் தெளிவான முத்துக்களோடு இரத்தச் சிவப்பிலிருப்பதைப் பார்த்து வாங்கத் தொடங்கினார்கள். ருசியும் நன்றாக இருக்கிறது. இதை அறிந்துகொண்டதால் கேரளாவில் இருக்கின்ற கடைகளில் இவர் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு ஆர்டரும் கிடைத்திருக்கிறது என்கிறார் குரியன்.
இந்த இரகத்திற்குப் பெயர் பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடி என்று ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில் நடவு செய்திருக்கிறார். உலகளவில் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்யும் நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி இரண்டுமே பராமரிப்பில் தான் இருக்கிறது.
இயற்கை முறை மாதுளை சாகுடி
பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். இவர் மாதுளை சாகுபடி பற்றி விவரித்தார். இவர்களது பண்ணையில் கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் என்று நாட்டு மாடுகள் பத்து இருக்கிறது. இந்த மாடுகளின் சிறுநீர், சாணத்தை வைத்து ஜீவாமிர்தத்தை இவர்களே தயார் செய்கிறார்கள். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வைத்து கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கிறார்கள். தொழுவுரத்தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் சாகுபடிச் செலவு குறைகிறது. இவர்களது பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழ் இருக்கிறது என்கிறார் ஜான் தாமஸ். மாதுளை சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.

மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்திற்குக் குழியெடுத்து ஆறவைத்து ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வர வேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடியில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்த பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்த சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை கவாத்து செய்து (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.

ஒரு மாதம் ஓய்வு
பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். டிசம்பர் மாத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் இருக்கும்போது, ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாட விட்டு தண்ணீர் கொடுப்பதால், செடிகள் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்தபிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜீலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

மாதுளையை அதிகம் தாக்குவது பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்பு நிறத் துளைகள் இருக்கும். “ஃப்ரூட் போரல்” எனப்படும் இத்தாக்குதலை சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம் என்றார், ஜான் தாமஸ்.

ஒருங்கிணைந்த பண்ணை
பண்ணையில் நாட்டுக் கோழிகள், கூஸ்வாத்துகள், கினியா கோழிகள், முயல், மீன் என அனைத்தையும் தனித்தனியாக கூண்டுகளில் பராமரிக்கிறார்கள். இங்குள்ள காசர்காடு என்ற குட்டை ரக மாடுகள், நம் ஊர் கன்றுக் குட்டிகள் அளவுக்குதான் இருக்கின்றன. இந்த சிறிய ரக மாடுகளின் சிறுநீர், சாணத்தில் ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கும்போது, பயிர்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாகச் சொல்கிறார் குரியன்.

உர மேலாண்மை
தொழுவுரம், மண்புழு உரம், தென்னைநார்க் கழிவு உரம் ஆகியவற்றை சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்தாகக் கொடுத்து வர வேண்டும். தொழுவுரமாக இருந்தால், ஒவ்வொரு செடிக்கும் 10 கிலோவும், மற்ற உரங்களாக இருந்தால், 5 கிலோவும் வைத்தால் போதுமானது.

பாசனத்தில் இருக்கிறது வெற்றி
மாதுளைக்கு அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. காய்ச்சலும், பாய்ச்சலும் தான் மாதுளைக்கு உகந்தது. ஒரு முறைக்கு ஒரு செடிக்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த ஈரம் காய்ந்த பிறகே அடுத்த பாசனம் செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் கொடுத்தால், செடி நன்றாக வளரும் என நினைத்து, அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. அந்த பகுதியின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால், பூக்கள் உதிர்ந்து விடும்.

செடிக்கு 10 கிலோ
தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்தால் மட்டும் போதாது, எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். இவர் இதை சரியாக செய்ததால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. ஒரு செடிக்கு வருடத்திற்கு 200 ரூபாய் செலவாகிறது. ஒரு செடியிலிருந்து 10 கிலோ பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ சராசரியாக 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமாக வருடத்திற்கு 1000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமாக 75 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்குக் குறையாமல் லாபம் வருகிறது என்கிறார் குரியன் ஜோஸ்.

தொடர்புக்கு
குரியன் ஜோஸ்
செல்போன் – 093886-10249
ஜான் தாமஸ் (மேலாளர்)
செல்போன் – 95780-72722
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.10.14 www.vikatan.com

குறும்புடலை


குதூகலமூட்டும் குறும்புடலை!
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
‘வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்…’
-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்… பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்… திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!
திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில், பதினெட்டாவது கிலோ மீட்டரில் வருகிறது, மங்கலம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் ஆர்ப்பாக்கம். இங்கேதான் இருக்கிறது… சுரேஷ்குமாரின் தோட்டம்! நெல், கரும்பு, நிலக்கடலை… என பல வகைப் பயிர்களோடு, குறும்புடலையும் நம் கவனத்தை ஈர்க்கிறது.
புடலை அறுவடையில் ஈடுபட்டிருந்த சுரேஷ்குமார், ”பிறந்து, வளர்ந்தது எல்லாமே திருவண்ணாமலையிலதான். டிப்ளமோ இன்ஜினீயரிங் படிச்சேன். வேலை கிடைக்காததால, ஃபிரண்ட்ஸோட சேர்ந்து, அரிசி வியாபாரம் செஞ்சேன். மூட்டை கணக்குல நெல் வாங்கி, அரைச்சு விப்போம். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சுது. ஆனா, ஒரு கட்டத்துல பணத்தை வசூல் பண்றதுல தொய்வு வந்துடுச்சு. பல பேர் திருப்பிக் கொடுக்காம போனதால, பெரிய நஷ்டம். அதனால… அப்பா வாங்கிப் போட்டிருந்த நிலத்துல விவசாயத்தைப் பாக்கறதுக்கு வந்தேன்.
எங்க பாட்டி மூலமா, சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயம் அறிமுகம்தான். அந்த தைரியத்துல முதல் போகத்துலேயே கரும்பு போட்டேன். ஏக்கருக்கு 40 டன் மகசூல் கிடைச்சுது. செலவு போக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயைத்தான் லாபமா பாக்க முடிஞ்சுது. ‘இந்த லாபத்துக்கு விவசாயம் பண்ணினா… கட்டுப்படியாகாது’னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஆட்கள் தேவையைக் குறைத்த பந்தல்!
‘நல்ல லாபம் கிடைக்கறதுக்கு எதைப் பயிரிடலாம்’ங்கற தேடல்லயே இருந்தேன். அப்ப ஒரு நாள், நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்சதுல… ‘காய்கறி சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் வரும்’னு தெரிஞ்சுக்கிட்டு… 40 சென்ட்ல சுரைக்காய் போட்டேன். செலவுபோக 40 ஆயிரம் கிடைச்சுது. பிறகு… 3 ஏக்கர்ல வெண்டை, கத்திரி, மிளகாய்னு சாகுபடியில இறங்கினேன். நல்ல வருமானம். ஆனா… வேலையாட்கள் அதிகமா தேவைப்பட்டாங்க. சிலர்கிட்ட யோசனை கேட்டப்போதான், பந்தல் காய்கறியை முயற்சி பண்ணச் சொன்னாங்க. பாகல், பீர்க்கன், புடலை மூணையும் தனித்தனியா சாகுபடி செஞ்சேன். ஒரு ஏக்கர்ல 15 டன் பாகல், 18 டன் பீர்க்கன், 23 டன் புடலைங்கற கணக்குல மகசூல் கிடைச்சுது. மூணுலயும் புடலை சாகுபடிதான் வசதியா இருந்துச்சு. அதனால, குறும்புடலையை மட்டும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்னுரை கொடுத்த சுரேஷ்குமார்,
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
”மொத்தம் 12 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 9 ஏக்கர்ல நெல், 3 ஏக்கர்ல குறும்புடலை இருக்கு. ஆரம்பத்துல முழுக்க முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும்தான் பயன்படுத்தினேன். ‘பசுமை விகடன்’, ‘கேத்தனூர்’ பழனிச்சாமி’ ரெண்டு பேரும் தந்த தைரியத்துல… இயற்கை விவசாயத்துல கால் வெச்சேன். கோழி எரு, மாட்டு எரு, சூடோமோனஸ், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கொஞ்சம் கொஞ்சமா இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறேன். இன்னும் கொஞ்ச நாள்ல முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்று சந்தோஷ குரலில் சொன்னார்!
10 மாத வயது!
அவர் சொன்ன சாகுபடி முறைகளைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
”குறும்புடலையின் சாகுபடி காலம் 10 மாதங்கள். இதற்கு ஆடிப்பட்டம் ஏற்றது. செம்மண் கலந்த, மணற்பாங்கான பூமியில் நன்கு விளையும். ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் ஒரு டிப்பர் மாட்டு எரு, தலா அரை டிப்பர் ஆட்டு எரு மற்றும் கோழி எரு ஆகியவற்றைக் கலந்து கொட்டி கலைத்து… மண் பொலபொலப்பாக மாறும் அளவுக்கு மூன்று சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 12 அடி நீளம் கொண்ட மூங்கிலை, எட்டு அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் நட்டு, தரையில் இருந்து ஐந்தடி உயரத்தில் ‘ஸ்டே’ கம்பியில் இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கம்பிகளுக்கிடையில் அரையடி இடைவெளியில், தடிமனான ‘நைலான் ஒயர்’களால் பின்னி, பந்தல் தயார் செய்ய வேண்டும். இந்த முறையில் பந்தல் அமைக்க, ஏக்கருக்கு 800 மூங்கில், 120 கிலோ ஸ்டே கம்பி, 35 கிலோ நைலான் ஒயர் தேவைபடும். பந்தலை ஐந்தாண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு 600 கிராம் விதை!
வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளியும் (ஒரு மூங்கில் தூண் விட்டு, ஒரு மூங்கில் தூண் அருகில்), செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளியும் கொடுத்துச் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்துக்கு பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி, 2 அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு புடலை விதை வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஆயிரத்து 200 விதைகளை நடவு செய்யலாம் (ஏக்கருக்கு 600 கிராம் விதை தேவைப்படும்). நடவு செய்யும்போதே தனியாக நாற்று உற்பத்தித் தட்டில் 100 நாற்றுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இடை உழவுக்கு மினி டிராக்டர்!
நடவு செய்த 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும். சரியாக முளைக்காத இடங்களில், தனியாக உற்பத்தி செய்திருக்கும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 6 கிலோ கடலைப் பிண்ணாக்கை, 60 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து, 15-ம் நாளில் செடிக்கு 50 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 20-ம் நாள் முதல் மாதம் ஒரு முறை வீதம், மூன்று மாதங்களுக்கு… செடிகளைச் சுற்றிலும் கைகள் மூலமாகவும், இடைவெளிப் பகுதிகளில் மினி டிராக்டர் மூலமாகவும் களைகளை அகற்ற வேண்டும். அதற்கு மேல், கொடியானது பந்தலில் அடர்ந்து மூடிக்கொள்வதால், களை எடுக்க வேண்டியிருக்காது.
ஊட்டம் கொடுக்கும் கோழி எரு!
மண்ணின் தன்மையைப் பொருத்துப் பாசனம் செய்தால் போதுமானது. 20-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா (ஏக்கருக்கு 3 லிட்டர்) அல்லது ஜீவாமிர்த கரைசல் (ஏக்கருக்கு 10 லிட்டர்) என மாற்றி மாற்றி சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். 30, 60 மற்றும் 90-ம் நாளில் 19:19:19 நீரில் கரையும் உரத்தை, டேங்குக்கு 100 கிராம் வீதம் கலந்து இலை வழி உரமாகத் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 8 டேங்குகள் தேவைப்படும். 35-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்கு ஒரு கிலோ வீதம் கோழி எருவை வேர் பகுதியில் வைக்க வேண்டும். 40-ம் நாளில் தலா 50 கிலோ வீதம் புங்கன் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து… ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் வைக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், இயற்கைப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கலாம்.
20-ம் நாளில் இருந்து செடிகளில் பக்கக் கிளைகள் வரும். அதில் நேராக செல்லும் கொடியை மட்டும் ‘ஒற்றைப்பிரி’ சணலால் கட்டி பந்தலில் ஏற்றிவிட வேண்டும். மற்றக் கிளைகளை அகற்றிவிட வேண்டும். 45-ம் நாளில் பூ வைத்து, 50 முதல் 60-ம் நாளில் பிஞ்சாக மாறி, 70-ம் நாளிலிருந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.’
ஒரு ஏக்கரில் 34,500 கிலோ!
நிறைவாக பேசிய சுரேஷ்குமார், ”இங்க விளையுற புடலையை சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுலதான் விற்பனை செய்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு அறுவடை செய்யலாம். மொத்தம் 115 அறுவடை வரும். ஒரு ஏக்கர் நிலத்துல அறுவடைக்கு 250 கிலோவில் இருந்து 350 கிலோ அளவுக்கு புடலங்காய் கிடைக்குது. சராசரியா, 300 கிலோனு கணக்குப் போட் டாலே… 34,500 கிலோ மகசூல் கிடைச்சுடும். கிலோ சராசரியா 8 ரூபாய்னு விற்பனை யாகுது. இதன்படி கணக்குப் போட்டா… ரெண்டு லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் வருமானம். பந்தல் செலவு, மத்த செலவுகள்னு எல்லா செலவுகளும் போக ஒரு லட்சம் ரூபாய் லாபம். பந்தல் செலவு முதல் வருஷம் மட்டும்தான். அடுத்த நாலு வருஷத்துக்கு… அந்த 68 ஆயிரமும் லாபத்துல சேர்ந்துடும்” என்று வெற்றிக் களிப்புடன் சொன்னார்!
தொடர்புக்கு, சுரேஷ்குமார், செல்போன்: 99447-42928.

மல்லிகை

ஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்குமா? என கேட்கலாம். மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி ரெங்கநாதன் தனது நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்து பணியாளர்கள் 150 பேருக்கு தினமும் சம்பளம் வழங்குவதோடு மாதம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். தேசிய அளவில் சிறந்த விவசாயிக்கான விருது பெற்றுள்ளார்.

மல்லிகை விவசாயத்தை மணக்கச் செய்யும் ரெங்கநாதன் கூறுகையில், ""சொட்டுநீர் பாசனம் மூலம் ஐந்து ஏக்கரில் மல்லிகை விவசாயம் செய்கிறேன். செடியை நடவு செய்து ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் பறிக்கலாம். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் கூட மல்லிகை கிடைக்கும். உதாரணத்துக்கு எனது மகன் அழகர்சாமி பிறந்த போது, அவரது பெயரில் மல்லிகை செடி ஒன்றை நட்டேன். அவருக்கு இப்போது வயது 15. ஐந்து ஏக்கரில் நடவு செய்த செடியில் இருந்து அதிகளவு பூக்கள் பூக்கிறது. இயற்கை அடிஉரம் மட்டுமே பயன்படுத்துகிறேன். நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சராசரியாக கிலோ ரூ.200க்கும், முகூர்த்த நேரங்களில் கிலோ ரூ.1500க்கும் அதிகமாக விலை கிடைக்கும். Image result for மல்லிகை விவசாயத்தில்
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் விலைக்கே வியாபாரிகள் பூக்களை எடுத்து கொள்கின்றனர். மஞ்சம்பட்டி குண்டு மல்லிகைக்கு மணம் அதிகம் என்பதால் ஏற்றுமதியும் செய்கின்றனர். வயல் பராமரிப்பு, களை எடுப்பு, பூக்கள் பறிப்பு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை என 150 பேருக்கு வேலை கொடுக்கிறேன். மாதம் வருவாய் சராசரியாக ரூ.2 லட்சத்துக்கு குறையாது. மல்லிகை விவசாயத்தில் முறையான பராமரிப்பு, உழைப்பு, இயற்கை அடிஉரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றை முறையாக கடைப்பிடித்தால் மல்லிகை விவசாயம் மணக்கும். எனது தொழில்நுட்ப ரகசியத்தை பிறருக்கும் கற்றுத்தருகிறேன்,'' என்றார்.
தொடர்புக்கு: 90957 28851

மல்லிகை பூ


மழையை நம்பி பயிர் செய்யும் ராமநாதபுரம் விவசாயிகள், கத்திரி வெயிலுக்கு தாக்கு பிடிக்கும் மல்லிகை பூவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூத்துக்குலுங்கும் மல்லிகை தங்களின் வாழ்க்கைதரத்தை மாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

குண்டு குண்டான இதழ்கள், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது போன்றவை ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை, கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தரும் மானாவாரி இனமாகும். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகை விவசாயம் லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

ஒரு ஏக்கர் இடத்தில், மல்லிகை பூச்செடி வளர்த்தால் ஆண்டு முழுவதும் தினசரி வருமானம் கிடைக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கிலோ பூக்கள் கிடைக்கிறது. மூன்று மாத கால பராமரிக்கும் மல்லிகை நாற்றுகள் வெளிமாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்படுவதுடன், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மண்ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை விவசாயிக்கு பலன் தருகிறது. இந்த மல்லிகைப்பூ செடிகள் 5 முதல் 6 மாதங்கள் வரை பூ கொடுக்கிறது. இப்பகுதி விவசாயிகள் இயற்கை உரங்களான சாணம், ஆட்டுச் சாணம், பஞ்சகாவியம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் மல்லிகைப் பூக்கள் பெரியதாகவும், எடை அதிகமானதாகவும் இருக்கிறது

காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும், அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைப்பதாக கூறும் விவசாயிகள், மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Read more: http://www.ns7.tv/

மல்லிகை

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.
நீர் சிக்கனம்
இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.
அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.
குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்
தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.
காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது.
ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம்.
தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.
அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.
அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites