இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 6, 2015

பட்டுப் புழு வளர்ப்பு

பட்டுத் தொழில் நமது நாட்டில் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. வளமான மல்பெரி தோட்டம், பட்டுப் புழு இனங்கள், எளிய, ஆனால் உயரிய முறை பட்டு வளர்ப்புத் தொழில்நுட்பம் ஆகியன பட்டுத் தொழில் வளர்ச்சியின் முக்கிய காரணிகளாகும். விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட பல புதிய பட்டுப்புழுவின் வீரிய இனங்களால் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பருவ காலத்திற்கு ஏற்ப மல்பெரியை உணவாக கொள்ளும் இனத்தின் தரமும்,திறனும் மேம்படுத்தப்பட்டது. இந்த வீரிய இனங்கள் பல சுழற்சி இன பெண் தாய் அந்துப் பூச்சியையும், இரு சுழற்சி இன் ஆண் அந்துப் பூச்சியையும் சேர்த்துக் கலப்பினமாக்கி உருவாக்கப்படுகின்றது.
பட்டு கூடுகளில் மஞ்சள் நிறமும், வெண்மை நிறமும் உடைய இனங்கள் உள்ளன. பல்வேறு வண்ணங்களை உடைய பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் ஆய்வுகள் இன்னமும் தொடர்கின்றது. ஆனாலும், அவை இன்னமும் வர்த்தக ரீதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.
பட்டு வளர்ப்பு தொழிலின் அடிப்படை தரமான மல்பெரி தோட்டம். அடுத்து வருவது தரமான பட்டுக் கூடு உற்பத்தி. பட்டுக் கூடு உற்பத்திக்கு பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவது திட்டமிடல். புழு வளர்ப்பில் சரியான முறையில் திட்டமிட்டாலே 50% பணி பூர்த்தியாகும். மல்பெரி செடியின் வளர்ச்சி, பட்டுப் புழு வளர்ப்பு, வளர்ப்பிற்ஆன உபகரணங்கள் ஆகியவற்றை அவதானித்து ஒருங்கிணைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் மல்பெரி வளர்வதால் ஆண்டிற்கு 5 முதல் 6 அறுவடை செய்ய இயலும். தோட்டத்தை இரு பகுதியாக பிரித்து ‘புழு வளர்ப்பினை’ மேற்கொள்ளும்படி திட்டமிட்டால் ஆண்டிற்கு 10 முதல் 12 குலை பட்டுப்புழு வளர்க்க தேவையான இலை அறுவடை செய்யலாம்.

பட்டுப் புழுக்களின் முட்டை பருவம் 10 முதல் 12 நாட்களாகும். பட்டுப் புழு முட்டையிலிருந்து பொரித்து வெளிவந்து 4 வாரங்கள் இலை உட்கொள்கின்றன. இந்த கால இடைவெளியில் நான்கு முறை தோல் உரிப்பு செய்து கொள்கின்றன. இறுதியில் கூடு கட்ட ஆரம்பிக்கின்றன. இந்தப் பட்டு கூடுகளிலிருந்துதான் பட்டுநூல் எடுக்கப்படுகின்றன. கூடு கட்டியதும் கூட்டினுள் இருக்கும் புழு உருமாறி கூட்டுப் புழுக்களாக மாற்றமடைகின்றது. 10 நாட்களுக்கு பின்னர் கூட்டுப் புழுக்கள் முதிர்ச்சியடைந்து பட்டுப் பூச்சிகளாக (அந்துப் பூச்சி) கூடுகளை துளைத்து அதிகாலையில் வெளிவருகின்றன. பிறகு இனப்பெருக்கம் செய்து முட்டைகளிட்டு 4 அல்லது 5 நாட்கள் அதன் வாழ்க்கை பருவம் முடிவடைகின்றன.
பட்டுப் பூச்சிகளின் முட்டைகள் இரண்டு வகைப் படும். முதலாவது முட்டை பருவத்தில் ஒருவருடம் இருந்து பின்னர் வாழ்க்கை சூழற்சிக்கு வருதல். இரண்டாவது முட்டையிட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பொரித்து பிறகு வாழ்க்கை சுழற்சி நிலைக்கு வருதல். இவைகளில் முதல் வகையை ஒரு சுழற்சி இனம் எனவும், இரண்டாவதை பல சுழற்சியினம் எனவும் கூறலாம். நூற்புழுக்கான பட்டு கூடுகள் உற்பத்தி செய்ய பல சுழற்சியின புழுக்கள் தான் விவசாயிகளுக்கு ஏற்றது.
பட்டுப்புழு தன்னுடைய 28 நாட்கள் வாழ்நாளில் முட்டை பொரித்த நிலையிலிருந்து கூட்டுப் புழுவாக மாற உள்ள முதிர்வடைந்த புழுவாக மாறுவதற்குள் தனது உடல் எடையை ’10,000’ மடங்கு அதிகரிக்கின்றது. பட்டுப் புழுவின் உடல் வளர்ச்சியில் பட்டுப் புழு உட்கொள்ளும் உணவும், தட்பவெட்ப நிலையும் பெரும்பங்கு வகிக்கின்றன. அதிக வெப்பம் நிலவும் காலங்களில் புழு வளர்ப்பு காலம் குறைகின்றது. குளிர் அதிகமாக உள்ள காலத்தில் புழு வளர்ப்புக் காலம் நீடிக்கின்றது. ஆகவே பட்டுப்புழு வளர்ப்பில் பட்டுப் புழு வளர்ப்பு மனையின் வெப்பம் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும். புழு வளர்ப்பு மனையில் உள்ள ஈரப்பதமானது இலைகளை நன்கு உட்கொள்ள தூண்டுவதாகவும் இலைகள் வாடிவிடாமல் பாதுகாக்கவும் சரியாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும். இளம் பட்டுப்புழுக்கள் அதிகமான ஈரப்பதத்தை தாங்கும் சக்தி கொண்டிருப்பினும் தரமற்ற மல்பெரி இலை, நோய்கள், அதிக குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. ஆகவே புழு வளர்ப்பு துவங்கும் முன் புழு வளர்ப்பு மனையில் மருந்தடிப்பு செய்வது மிகவும் முக்கிய வேலையாகும்.

இதற்கு மாறாக முதிர் பருவ புழுக்கள் நோய் மற்றும் சத்துக்குறைபாடு போன்றவற்றை தாங்கி வளரக் கூடியவை. ஆனாலும் அதிக வெப்பம், அதிக குளிர், குறைவான காற்றோட்டம் ஆகியன புழு வளர்ப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே வெப்பமான காலத்தில் அறையின் ஈரப்பதத்தினை அதிகரித்து நல்ல காற்றோட்டம் பரவும்படி செய்வது அவசியம்.
பட்டுப்புழுவின் வளர்ச்சி எடையில்
பருவம்           எடை
பொரித்த புழுக்கள் 1
இரண்டாவது நிலை 10 – 15 மடங்கு
மூன்றாவது நிலை 75 – 100 மடங்கு
நான்காவது நிலை 350 – 500 மடங்கு
ஐந்தாவது நிலை 1800 – 2200 மடங்கு
முதிர்வடைந்த புழு 8000 – 10000 மட்டும்
பட்டுப் புழுக்களின் உடல் நீண்டு மெலிந்து 13 கண்டங்களைக் கொண்டது. ஐந்தாம் பருவத்தின் இறுதியில் புழு வேகமாக இலைகளை உட்கொண்டு தனது உச்ச வளர்ச்சியான 5 செ.மீ வரை வளர்ச்சியடைகிறது. புழுவின் கழுத்துப் பகுதியிலுள்ள கால்கள் பிடிப்பிற்கும், வயிற்றுப்பகுதியிலுள்ள கால்கள் புழு நகர்ந்து செல்லவும் பயன்படுகின்றது. பொரித்த பட்டுப்புழுக்களின் கருப்பு நிறத்திலும் உடல் மீது சிறிய மயிரிழைகள் கொண்டும் இருக்கும். புழுவின் வாய்ப் பகுதியில் இரு புறமும் கத்திரிக்கோல் போல பயன்படும் ‘மேன்டிபுல்’ எனும் உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு மல்பெரி இலையினை துண்டித்து உட்கொள்ள உதவி செய்கின்றது.

தனி புழு வளர்ப்பு மனையானது புழு வளர்க்க போதிய இடவசதி, காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம் கொண்ட வளர்ப்பு மனையாக இருத்தல் அவசியம். இந்த அமைப்பு முழுமையாக கிருமி நீக்கம் செய்வதற்கும், தேவையான ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுகாதாரத்தினை பராமரிக்க உதவியாக இருக்க வேண்டும். நல்ல புழு வளர்ப்பு மனை நல்ல பட்டு கூடு அறுவடைக்கு காரணம். புழு வளர்ப்பு மனையானது குடியிருப்பு பகுதிக்கு சற்று தூரமாகவும், தோட்டத்தில் மையப் பகுதியிலமைப்பதால் எளிதாக கண்காணிக்கவும், எளிதாக தீவன இலைகள் கொண்டு செல்லவும், நோய் தொற்றுதலை தவிர்க்கவும் இயலும்.
மனையின் உயரம் 12 அடி இருக்க வேண்டும். இது போதுமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினை பராமரிக்க உதவும். புழு வளர்ப்பு மனையினுள் எலி, அணில், ஊசி ஈ போன்றவை புகாத வண்ணம் கம்பி வலை, கொசுவலை கொண்டு ஜன்னல்கள் மூடப்பட வேண்டும். சுவரானது வழுவழுப்பாகவும், தரைத்தளம் சமமானதாகவும் இருக்க வேண்டும். பெரிய புழுவளர்ப்பு கூடம், இலை சேமிப்பு அறை மற்றும் முகப்பு அறை கொண்டதாகவும் இருக்க வேண்டும். புழு வளர்ப்பு மனை உயரமான பகுதியில் நல்ல காற்றோட்டமும், சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் உடையதாகவும் இருத்தல் அவசியம்.
புழு வளர்ப்பு மனையில் இட வசதிக்கு ஏற்ப தகுந்த அளவில் ‘ரேக்குகள்’ தயார் செய்து புழு வளர்ப்பு செய்யலாம். 100 முட்டை தொகுதிகள் வளர்க்க பைவோல்டின் இனம் என்றால் 450 சதுர அடியும், மல்டிவோல்டின் கலப்பினம் என்றால் 350 சதுர அடியும் புழு வளர்ப்பு படுக்கை அளவு தேவைப்படும். நமது வளர்ப்பு மனையில் யூகலிப்டஸ், சவுக்கு, மூங்கில் போன்றவற்றை பயன்படுத்தி புழு வளர்ப்பு ரேக்குகளை தயார் செய்து கொள்ளலாம்.
முன்பெல்லாம் இளம் புழு வளர்க்க தனி மனையும், வளர்புழுவிற்கு தனி மனையும் தேவைப்பட்டது. இப்போது ஆங்காங்கே இளம்புழு வளர்ப்பு நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் இளம் புழு வளர்ப்பை மட்டும் தனி தொழிலாகச் செய்து வருகின்றனர். நமது தேவைக்கு அளவான முட்டை தொகுதியின் எண்ணிக்கையை முன்கூட்டியே சொல்லிவிட்டால் இரண்டாம் தோல் உரிப்பு நிலையில் நமக்கு புழுக்களை கொடுத்து விடுகின்றனர். இந்த பத்து நாட்களும் இளம் புழு வளர்ப்பிற்கு உகந்த சூழ்நிலையினையும், செழுமையான, சத்தான, இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மல்பெரி இலைகளை உணவாக கொடுத்து வளர்க்கும் போது இளம் புழுக்கள் ஆரோக்கியமாக வளர்ச்சியடைந்து முதிர் புழுப்பருவத்தில் நோய் எதிர்ப்பு திறனையும் பெருகின்றது.
பட்டுப் புழு வளர்ப்பு துவங்குவதற்கு முன் புழு வளர்ப்பு மனை அதன் சுற்றுப்புறம், உபகரணங்கள், தளவாடப் பொருட்களை மருந்தடிப்பது நோய் கிருமிகளின் இரண்டாம் நிலை மற்றும் ஆரம்ப நிலை நோய் தாக்குதல்களை அழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். ஏனெனில் நோய் கிருமிகள் இரண்டு வழியாக பட்டுப்புழுக்களை தாக்குகின்றன. தாய்ப்பூச்சி இடும் முட்டை வழியாக பரவும். அல்லது மல்பெரி இலை, புழு வளர்ப்பு மனை தளவாடம், உபகரணங்களிலுள்ள தொற்றின் மூலம் பரவும்.

பட்டுப் புழுக்களின் இளம் பருவத்தில் நன்கு விரிந்துள்ள மல்பெரி இலைகளிலிருந்து 4 மற்றும் 5 இலைகள் வரையிலும், இரண்டாம் பருவத்தில் 6-7 ம் இலைகளும் மூன்றாம் பருவத்தில் 7-8 ம் இலைகளும் தீவனமாக கொடுக்க வேண்டும். நான்காம், ஐந்தாம் பருவப் புழுக்கள் பெருந்தீனி திண்பவைகளாகும். இவை தனக்கு தேவையான மொத்த இலைகளில் 90-94 விழுக்காடு இலைகளை இப்பருவத்தில்தான் உணவாக எடுத்துக் கொள்கின்றன. இலை பறித்தல் முறையில் இலைகளைப் பறித்து ஒவ்வொரு முறையும் உணவளிக்கும் போது வேலைப் பளு அதிகரிப்பதோடு, அதிக பணம் விரயமாகிறது. இந்த பிரச்னையை நிவர்த்தி செய்ய தற்போது இலைகளை தண்டுடன் அறுவடை செய்து முதிர்ந்த புழுக்களுக்கு உணவளிக்கும் தொழில் அறிமுகப்படுத்தப்பட்டு பெருவாரியான பட்டு விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தண்டுடன் இலை அறுவடை செய்து உணவு அளிக்கும் போது புழு வளர்ப்பு மனையின் பரப்பளவு 30% அதிகமாக தேவைப்பட்டாலும் 15-20% இலை மற்றும் 50-60% மனித உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகின்றது. 15-20% இலைகள் மிச்சப்படுவதால் இலை கூடு விகிதம் குறைகிறது. புழுக்களை கைகளால் கையாள்வது குறைவதால் நோய் தொற்றிலிருந்து புழுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இலைகள் நீண்ட நேரம் வாடாமல் பசுமையாக இருப்பதால் புழுக்கள் முழு அளவில் உணவினை உட்கொள்கிறது. படுக்கையில் நல்ல காற்றோட்ட வசதியும் ஏற்படுகின்றது. புழு வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள் குறைக்கப்படுகின்றது. புழுக்கள் இலைகளை உண்டபின் மீதியான தண்டுகளை உபயோகித்து எரு தயாரிக்கலாம். பட்டுக் கூடு மகசூலும், கூடுகளின் தன்மையும் அதிகரிக்கின்றன.
கவாத்து செய்த 55-60 நாட்களிலிருந்து தண்டுகளை அறுவடை செய்யலாம். அறுவடைக்கு தயாரான தண்டுகள் சுமார் 3-4 அடி உயரம் உள்ளதாக இருக்கும். தண்டுகள் 2’-3 அங்குலம் விட்டு அறுவடை செய்யவேண்டும். அதிகாலை அல்லது மாலை போன்ற குளிர்ந்த நேரங்களில் தண்டு அறுவடை செய்து இருட்டான, காற்றோட்டம் குறைந்த குளுமையான இடங்களில் அடிப்பகுதியில் 2 அங்குலம் தண்ணீர் நிறுத்தி அதில் வெட்டிய பகுதி இருக்குமாறு தண்டுகளை நேராக வைக்க வேண்டும்.
மூன்றாவது தோலுரிப்பு செய்து புழுக்கள் நான்காம் பருவம் வந்தவுடன் ரேக்குகளுக்கு மாற்றி விடவேண்டும். ரேக்குகளின் மேல் செய்தித் தாள்கள் விரித்து தேவையான அளவு பட்டு மருந்து தூவி தண்டுகளை அகல வரிசையில் தண்டுகளின் அடிபாகம் மற்றும் நுனி பாகம் அடுத்தடுத்து வருமாறு சீராக வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பலதரமான இலைகளை கலந்து புழுக்கள் உண்பதற்கு ஏதுவாகிறது. தண்டு அறுவடை முறையில் குளிர் காலங்களில் இரண்டு முறையும், கோடைக் காலங்களில் மூன்று முறையும் உணவளிக்க வேண்டும்.
நான்காம் பருவத்தில் நான்காவது நாளிற்குப்பின் தீனி எடுப்பது குறைந்து புழுக்கள் தோலுரிப்புக்கு தயாராகும். இந்த சமயங்களில் தண்டுகளை குறைந்த அளவு உணவாக கொடுத்து 90% புழுக்கள் தோலுரிப்பு சென்றுவிட்டால் உணவு கொடுப்பது நிறுத்தி சுண்ணாம்பு தூள் தெளித்து அறையின் ஈரப்பதத்தை குறைத்து நல்ல காற்றோட்ட வசதி இருக்கும்படி செய்ய வேண்டும். 95% புழுக்கள் தோலுரித்துவிட்டு வந்தவுடன் விஜிதா தூவி, 30 நிமிடம் கழித்து புழுக்களுக்கு முதல் தீனி கொடுக்க வேண்டும்.
பட்டுக் கூடுகளின் தரமானது கூடு கட்டத் துவங்கும் முதிர்ந்த புழுக்களின் பராமரிப்பிற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் முதிர்ந்த புழுக்கள் நெட்ரிகாவிலோ அல்லது சுழல் சந்திரிகையிலோ கூடுகட்டி முடிக்க 3 முதல் 4 தினங்கள் ஆகிறது. முதிர்ந்த புழுக்கள் கூடுகட்டி முடிக்கும் வரை 23 C முதல் 24 C வரை வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். Rh எனும் காற்றில் ஈரப்பதம் 70% இருக்கவேண்டும். புழுக்கள் கூடுகட்டும் அறை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
100 முட்டை தொகுதிக்கான புழுக்களிலிருந்து கூடுகட்டும் சமயத்தில் வெளியேறும் கழிவு நீர்.
கூடுகட்டுதலின் போது படு 40.4 லி
நூலிருந்து வெளியேற்றப்படும் நீர் 19.2 லி
சுவாச துளைகளின் மூலம் 8.0 லி
சிறுநீராக வெளியேற்றப்படுவது 13.8 லி
                                     ------------
மொத்தம்                        81.4 லி
                                     =======
அறுவடை செய்யப்பட்ட பட்டு கூடுகளிலிருந்து தரமான கூடுகளை தேர்வு செய்வது மற்றும் நலிவடைந்த கூடுகளை நீக்குவது மிக முக்கியமானது. சந்தையில் நல்ல விலை பெறுவதற்கு கூடுகளை தரம் பிரித்தல் மிகவும் அவசியம்.
1. மெலிந்த கூடுகள் – இவற்றில் பட்டு நூலிழைகள் குறைவாக இருப்பதோடு மெலிந்த நிலையில் காணப்படும்.குறைந்த அறுவடை ஏற்படும் கூடுகளில் இவை அதிகம் காணப்படும்.
2. நலிந்த முனை கூடுகள் – புழு வளர்ப்பின் போது வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நலித்த முனை கூடுகள் உண்டாகிறது.
3. கறைபடிந்த கூடுகள் – பிற பட்டுப்புழுக்களின் சிறுநீர்க் கழிவுகளாலும், இறந்த புழுக்களிலிருந்து கசியும் திரவத்தாலும் இவை ஏற்படுகின்றன.
4. உட்புறம் கறைபடிந்த கூடுகள் – கூட்டுப் புழு உருமாறுவதற்கு முன் அறுவடை செய்வதாலும், உள்ளே இருக்கும் புழுக்கள் இறப்பதாலும் இவ்வகை கூடுகள் உண்டாகிறது.
5. இரட்டை கூடுகள் – பட்டுப்புழுக்கள் அதிக நெருக்கடியாக இருப்பதாலும், அதிக காற்று வீசுவதாலும் மிக அதிகமான முதிர்ச்சி அடைந்த புழுக்களாலும் இதுபோன்ற கூடுகள் ஏற்படுகின்றன.
6. துளையிடப்பட்ட கூடுகள் – பட்டுக் கூடுகளின் முனையில் துளையிடப்பட்டிருக்கும். ஊசி ஈ தாக்குதல்களால் இந்த கூடுகள் ஏற்படுகின்றன.
7. உருமாறி கூடுகள் – ஆரோக்கிய மற்ற புழுக்களினால் கட்டப்படும் கூடுகள் இவை

கூடுகளை கோடை காலத்தில் ஐந்தாவது நாளிலும், குளிர் காலங்களில் ஆறாவது நாளும் அறுவடைச்ய்ய வேண்டும். பட்டுக் கூடுகளை அறுவடை செய்து அதில் ஒட்டியுள்ள இலை துணுக்குகள், புழுக்கைகள், இரட்டை கூடுகள், மெலிந்த இதர வகை தரம் குறைந்த கூடுகளை பிரித்தெடுத்துவிட்டு தரமான கூடுகளை மட்டும் மெல்லிய சணல் கோணிப்பை அல்லது துணிப்பைகளில் தளர்வாக கட்டி குளிர்ந்த நேரங்களில் பட்டுக் கூடு அங்காடிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பட்டு வளர்ப்பு தொழில்நுட்பம் மிகவும் பெரியது. ஆழ்ந்த கவனமும், நேரத்தில் செய்வதம் மிகவும் முக்கியமானது. ஆயிரம் படித்தாலும் அனுபவ விவசாயிகளின் வழிநடத்தல், பட்டு வளர்ச்சி துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே புதியவர்கள் ஈடுபட இயலும். பட்டு வளர்ப்பு தொழிலை குறித்தவரை அனுபவமே சிறந்த ஆசான். கற்றறிவு என்பது ஒரு துணை மட்டுமே.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites