இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 6, 2015

கறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள, கறவை மாடுகள் வாங்கும் விவசாயிகள் சில வழிமுறைகளை பின்பற்றி வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 விவசாயத்தில் கால்நடை விவசாயமும் இன்றிமையாதது. புதிதாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கும்போது, அதை வளர்க்க ஏற்ற இட வசதி, மேய்ச்சலுக்கான வசதி ஆகியவற்றை உறுதி செய்த பின்னர் வாங்க வேண்டும்.
 மேலும், நமது தட்பவெட்ப நிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ற மாடுகளைக் கேட்டறிந்து வாங்க வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.
 சிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
 பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு தோல் செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
 கண்கள் பளிச்சென்று துறுதுறுப்பாகவும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.
 மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். 
Image result for கறவை மாடு

 முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.
 பால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்.
 பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் சரிசமமான அளவில் இருக்க வேண்டும். பால் காம்புகள் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும். 
 எல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
Image result for கறவை மாடு

 மடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.
 கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும். 
 மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி கறவை மாடுகளை வாங்கினால், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் நல்ல வளம் பெற முடியும் என கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். 

2 comments:

தங்கள் வருகைக்கு நன்றி ..

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites