இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, September 13, 2012

வாழ்த்து அட்டைகள்

'கையிலே கலைவண்ணம் கண்டார்!’ என்று பாட்டுப் பாடவைக்கிறார் ஜோதி. பேனா ஸ்டாண்ட், வாழ்த்து அட்டைகள், போட்டோ ஃபிரேம்கள், கோப்புகள், பரிசுப் பெட்டிகள் என்று அழகழகாய் கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் 'லட்சுமி கிராஃப்ட்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஜோதி.
''கைவினைப் பொருள்கள் மீது சிறு வயதிலேயே இருந்துவந்த ஈடுபாடுதான், இப்போது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு என்னை உயர்த்தி இருக்கு. வாழ்த்து அட்டைகள்தான் எங்கள் கைவினைப் பொருள்களிலேயே ரொம்பவும் ஸ்பெஷல். காரணம், அட்டையில் பயன்படுத்தப்படும் இயற்கையான மலர்களும், இலைகளும்! இதற்கு என்றே அலுவலக மாடியில் மலர்ச் செடிகளை வளர்த்துவருகிறோம்.

நான் பிறந்தது நாசிக். ஆனா படிச்சது, வளர்ந்தது எல்லாமே புதுச்சேரிதான். நாசிக்கில் கைவினைப் பொருள்கள் செய்யும் கலைஞர்கள் அதிகம். அப்படி ஒரு சூழலில் வளர்ந்ததால், சிறு வயதிலேயே எனக்குக் கலைப் பொருள்கள் மீது ஆர்வம் அதிகம்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆரோவில்லில் 10 வருடங்கள் கணித ஆசிரியராகவும் மாணவர்களுக்குக் கைவினை கலைப் பொருள்களைப் பற்றி கற்பிக்கும் ஆசிரியையாகவும் இருந்தேன். பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே நானும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நண்பர்களுக்கு என் கைகளாலேயே செய்த கலைப் பொருள்களைப் பரிசளிப்பது வழக்கம். அதற்குக் குவிந்த பாராட்டுக்கள், மேலும் கலைப் பொருள்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தது.
கையில் இருந்த சிறு தொகையை முதலீடு செய்து, 2005-ல் ஆரம்பித்ததுதான் இந்த 'லட்சுமி கிராஃப்ட்ஸ்’. 'இதுதான் பட்ஜெட், இந்த கலர் பேப்பர், இதுதான் டிசைன், எதை எல்லாம் வைத்து அழகுபடுத்தலாம்’னு வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப ஒவ்வொரு பொருளையும் தயாரித்துக் கொடுப்போம்.
'அவங்க சொன்ன நேரத்துக்குள்ள பொருளைத் தயாரிக்க முடியுமா’னு ஊழியர்களோடு கலந்து ஆலோசித்த பிறகுதான் ஒவ்வொரு ஆர்டரையும் ஏற்றுக்கொள்வோம். ஏன்னா மற்றத் தொழில் மாதிரி இல்லை இது. இதில் கற்பனைத் திறனுக்குத்தான் முக்கிய இடம்கிறதால் ஊழியர்களையும் கலைப் பொருள் களையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.
எங்க தகுதிக்கு மீறி எந்த வேலையையும் எடுத்து செய்ய மாட்டோம். பொருள்களை டிசைன் செய்ய ஜோதித்னு புரொஃபஷனல் டிசைனர் இருக்கார்!
எங்க தயாரிப்புகள் எல்லாமே எளிதில் மடிக்கப்படும் வகையில்தான் அமைந்து இருக்கும். மக்கக்கூடிய தன்மை கொண்டதால், சுற்றுச் சூழலுக்கும் கெடுதி கிடையாது.
இதை லாபகரமான தொழில்னு சொல்ல முடியாது. நலிவடைந்த தொழில் என்றும் சொல்ல முடியாது. ரெண்டுமே கலந்தது தான். தீபாவளி, பொங்கல் நேரங்களில் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவியும். பண்டிகைகள் முடிஞ்ச பிறகு கொஞ்சம் சிரமமா இருக்கும். சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லினு எங்க தயாரிப்புகள் பாண்டிச்சேரி எல்லைத் தாண்டி யும் விற்பனை ஆகுது. வெளிநாட்டு ஏற்றுமதிதான் அடுத்த ஆசை.
நாம செய்யற பொருள்கள் வாடிக்கையாளருக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலே போதும். லாபம் எல்லாம் அப்புறம்தான்!'' என்று புன்னகைக்கிறார் ஜோதி.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites