இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, September 24, 2012

இட்லி வியாபாரம்

‘இட்லி வியாபாரமா?- தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான்! இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல்! பிரபலங்கள் வீட்டு விசேஷ விருந்துகளில் இனியவனின் இட்லிக்கே முதலிடம்!

‘‘பெரிசா படிக்கலை. எட்டாவது படிச்சிட்டு தொழிலதிபராகியிருக்கிறவன் நான். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு பெரிய குடும்பம். இட்லி, தோசை, பூரிங்கிறதெல்லாம் அப்ப தினசரி கிடைக்காது. அந்தளவு வறுமை. கோயம்புத்தூர்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்தேன். அங்க இட்லி வியாபாரம் பண்ணிட்டிருந்த சந்திராம்மாவோட அறிமுகம் கிடைச்சது. அவங்க பண்ற இட்லியை ஓட்டல்களுக்கு சப்ளை பண்ற பொறுப்பு வந்தது. அந்த நேரத்துல சென்னைலயும் அதே மாதிரி இட்லி வியாபாரம் பண்ண ஒரு வாய்ப்பு அவங்களுக்கு வந்தது.

சந்திராம்மாவோட கணவர்தான் முதல்ல சென்னைக்கு சப்ளை பண்ணிட்டிருந்தார். அவருக்கு முடியாத ஒரு கட்டத்துல, அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுத்தார். கொஞ்ச நாள் அதைக் கவனிச்சுக்கிட்ட அனுபவத்தோடயும், சந்திராம்மாவோட ஆசிர்வாதத்தோடயும், சென்னைல தனியாவே இட்லி வியாபாரத்தைத் தொடங்கினேன். இன்னிக்கு என் குடும்பத்துல மட்டுமில்லாம, என்கிட்ட வேலை பார்க்கிற நூற்றுக்கணக்கான ஆட்களோட குடும்பங்களுக்கும் அதுதான் ஆதாரம்’’ என்கிற இனியவன், இந்த இட்லி வியாபாரத்தை வித்தியாசமாக செய்கிறார். எப்படி?

‘‘முதல்ல எங்க இடத்துலேருந்தே இட்லி செய்து, கேட்கற இடங்களுக்கு அனுப்பிட்டிருந்தேன். நடுராத்திரி 2-3 மணிக்கே மாவு ரெடி பண்ணி, இட்லி செய்யணும். அப்புறம் அதை வண்டியில ஏத்தி, சம்பந்தப்பட்ட மண்டபங்களுக்கு அனுப்புவோம். அவங்க அதை மறுபடி சூடு பண்ணி, சாப்பாட்டு நேரத்துல பரிமாறும் போது, இட்லியில சூடோ, சுவையோ இருக்காது. அப்பதான், ஸ்பாட்லயே மாவை எடுத்துட்டுப் போய், அவங்க எதிர்லயே சூடா தயாரிச்சுக் கொடுக்கிற ஐடியா வந்தது. முதல்ல ஒரு கல்யாணத்துல அதை ட்ரை பண்ணிப் பார்த்தப்ப, நல்ல வரவேற்பு. ஆனாலும், அடுத்தடுத்த ஆர்டர் பிடிக்கிறது ஆரம்ப காலத்துல பெரிய சவாலாகத்தான் இருந்தது.

ஹோட்டல், ஆஸ்பத்திரி, கல்யாண கான்டிராக்டர் ஆபீஸ்னு எல்லாரையும் நேர்ல சந்திச்சு, என்னோட கான்செப்ட் பத்திச் சொல்லுவேன். அரைகுறையா காதுல வாங்கிட்டு, சொல்லியனுப்பறோம்பாங்க. மறுபடி போன் பண்ணினா, வேற வேலையில சரியா பதில் சொல்ல மாட்டாங்க. எல்லாருக்கும் கடிதம் எழுத ஆரம்பிச்சேன். அது எனக்குத் திருப்புமுனையா அமைஞ்சது. பொறுமையா படிச்சுப் பார்த்து, புரிஞ்சுக்கிட்டு, ஆர்டர் கொடுக்கத் தொடங்கினாங்க. இன்னிக்கு நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன்னா என்னோட இட்லி வியாபாரம்தாங்க காரணம்’’ என்கிறார்.

இட்லிக்கான மாவு இவரது முன்னிலையில், இவரது இடத்திலேயே சுத்தமாக, ஆரோக்கியமாக தயாரிக்கப்படுகிறது. பிறகு அது கல்யாண மண்டபம், விழா அரங்கு போன்ற இடங்களுக்குக் கொண்டுவரப் பட்டு, மக்கள் முன்னிலையில் சுடச்சுட ஆவி பறக்கும் இட்லியாக தயார் செய்யப்பட்டுப் பரிமாறப் படுகிறது.  இவர் தயாரிக்கிற மிருதுவான, வெள்ளை நிற இட்லியைப் பார்க்கும் யாருக்கும் அந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியாது. நமக்கும்...
‘மாவுல கெமிக்கல் ஏதாவது சேர்க்கறீங்களா?’

‘‘முதல் விஷயம்... இந்த இட்லி, சென்னைல உள்ள குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கும் போகுது. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுது. அதனால கெமிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி மிருதுவான, வெள்ளையான இட்லிங்கிறது ஒண்ணும் சிதம்பர ரகசியமில்லை. சரியான அரிசி, உளுந்து, அரைக்கிற விதம், புளிக்கிற நேரம்னு பலதையும் பொறுத்தது அது. ஐ.ஆர்.20 பெருமணி அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு ரொம்ப நைசா அரைக்கணும். உளுந்து ரொம்ப நேரம் ஊறக்கூடாது. இன்னும் சொல்லப் போனா, அரிசியை அரைச்சு வச்சிட்டு, அடுத்த நாள் காலைல இட்லி வேக வைக்கிறதுக்கு முன்னாடி உளுந்து அரைச்சு சேர்த்தாலே போதும். மிருதுவா வர்றதுக்கு ஆமணக்கு விதை சேர்க்கறோம். ஆமணக்கு விதைலேர்ந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கிறாங்கன்றது எல்லாருக்கும் தெரியும். அது உடம்பு சூட்டையும் தணிக்கும். மத்தபடி இதுல ஒரு சூட்சுமமும் இல்லை’’ என்கிறார்.

சாதாரண இட்லி தவிர, இளநீர் இட்லி, புதினா இட்லி, சாக்லெட் இட்லி, தட்டு இட்லி, வெஜிடபிள் இட்லி, பீட்சா இட்லி, டூட்டி ஃப்ரூட்டி இட்லி என ஏகப்பட்ட இட்லி வகைகளைத் தயாரிக்கிறார் இனியவன். சமீபத்தில் நடந்து முடிந்த சினேகா- பிரசன்னா வீட்டுக் கல்யாண விருந்தில் இட்லி சப்ளை செய்ததும் இவரே! பிறந்த நாளைக்கு கேக் வெட்டுகிற கலாசாரத்தை மாற்றி, இட்லி வெட்டுகிற புதுமை முயற்சியையும் ஆரம்பித்திருக்கிறார்.

அதன் தொடக்கமாக, தனது மகளின் பிறந்த நாளைக்கு இட்லி தயாரித்து, ஸ்டாலின் முன்னிலையில் வெட்டச் செய்திருக்கிறார்.‘‘பிறந்தநாள் இட்லிகளுக்கு இப்ப நல்ல வரவேற்பு இருக்குங்க... எந்த வடிவத்துல வேணாலும் செய்யலாம். பார்க்கறதுக்கு கேக் மாதிரியே இருக்கும். நம்ம பாரம்பரிய உணவுங்கிற பெருமையும் சேருது பாருங்க...’’ - தான் தயாரிக்கிற இட்லியைப் போலவே வெள்ளையாகச் சிரிக்கிறார் இனியவன்.

கீரை இட்லி செய்வது எப்படி

ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்காக பண்கொம் பாலாவின்
செய்முறை...

என்ன தேவை?

இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எப்படி செய்வது?

மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊன்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites