இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, September 24, 2012

நம்பிக்கைதான் மூலதனம்

தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை... உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்...

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா குடும்பம், குழந்தைகள்... வேலைக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கை நிறைய சம்பளம் இருந்தாலும், மனதில் தொழில் செய்யணும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கு அடிதளம் போட்டவர் பூ விற்கும் பெண்மணி ஒருவர்.

கூடை நிறைய பூ, விற்றால் தான் அவருக்கு வருமானம். ஒரு பெண் கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு குடும்பத்தை காப்பாற்றும் போது, நம்மால் ஏன் முடியாது என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன் சொந்தமா தொழில் செய்யணும்ன்னு. இப்ப மார்க்கெட்டில் பிரபலமான தொழில் உணவகம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.

வீட்டிலேயே, சின்னதா சமையல் அறை, வேலைக்கு 3 பெண்கள்... தொழில் தொடங்க ஆயத்தமான பிறகு, முதல் நாள் 20 சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பெரிய நம்பிக்கையோடு அம்பத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு ஸ்டூலில் வைத்து விற்பனை செய்தேன். ஒரே ஒரு பாக்கெட் தான் விற்பனையாச்சு. அன்று பெரிய ஏமாற்றம் என்றாலும், அதையே சவாலாக மாற்றி, கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ வாசலில் விற்றேன். அங்கு ஓரளவுக்கு நல்ல போனது.

ஆனா தினமும் சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு தெருவில் நிற்க முடியாது. அதனால் சூப்பர் மார்க்கெட் வாசலில் சின்னதா ஒரு ஸ்டால் போட திட்டமிட்டோம். அண்ணாநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அதற்கு அனுமதியும் கொடுத்தது. பர்கர், பானி பூரின்னு இல்லாமல் வித்தியாசமா இருக்க குழிப்பணியாரம், பால் கொழுக்கட்டை, சிக்கன் வடை, சிக்கன் மொகாலி, பூர்ண கொழுக்கட்டை, சிக்கன் பகோடா, அடை சட்னி, இடியாப்பம், புட்டு சென்னா... செட்டிநாடு உணவுகளை விற்க ஆரம்பிச்சோம்.

நன்றாக போனதால், கொளத்தூரில் உள்ள அவர்களின் மற்றொரு கிளையிலும் ஸ்டால் போட அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் பல நாட்கள் உணவுகள் வீணாகி உள்ளது. அளவு தெரியாமல் அதிகமா போட்டு வீணாகியிருக்கு. அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் இங்குள்ள மக்கள் வெளி உணவுகள் சாப்பிட மாட்டாங்க. ஆனா அண்ணாநகர் வாசிகளுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இது தெரிந்துக் கொள்ளவே எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. அதன் பிறகு அதற்கு ஏற்ப பொருளை தயாரிக்கிறோம்

தற்போது, சிற்றுண்டி உணவுகள் மட்டும் இல்லாமல், வெரைட்டி ரைஸ், பிரியாணி போன்றவை ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். டிபன் அயிட்டம் மற்றும் இல்லாமல் இது போன்ற உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பிரியாணி. அதே போல் சீமந்த விழாவிற்கும் ஆர்டர் பேரில் சமைச்சு கொடுக்கிறோம். அலுவலகம் செல்பவர்கள் கூட உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். அவர்களுக்கு தனியாக பேக் செய்து ஸ்டாலில் வைத்துவிடுகிறோம்.இவ்வாறு சொல்கிறார்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites