இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, May 17, 2012

களைக் கவலை, இனி இல்லை... அரூர் விவசாயியின் அற்புதக் கருவி...

பண்ணைக் கருவிகள் சிறப்பிதழ்
களைகளை அழிக்க சிரமப்படும் விவசாயிகளுக்காகவே நவீன கருவிகள் பலவும் சந்தையில் கிடைக்கின்றன. என்றாலும், 'இன்னும் எளிமையான களைக் கருவி இருந்தால் நன்றாக இருக்குமே...’ என்கிற எண்ணமே விவசாயிகளிடம் பரவலாக இருக்கிறது. இப்படி கவலைப்பட்ட தர்மபுரி மாவட்டம், அரூர், முத்துக்கவுண்டன் நகர் விவசாயி குமார், தானே களத்தில் இறங்க இப்போது விவசாயிகளின் மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்விதத்தில் களையெடுக்கும் கருவியை வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

கலாம் பாராட்டிய கருவி
களைக் கருவிகள் பலவற்றிலும் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே இருக்கிறது. அதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று யோசித்து செயல்படுத்தியதில் உருவானதுதான் இந்தக் கருவி. ஐந்து வருடமாக நிறைய மாற்றங்கள், மேம்பாடுகளை செய்து, இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். 2008-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார். அந்த வருடம் சென்னையில் நடந்த கண்காட்சியில் இதைப் பார்வையிட்ட அப்துல் கலாம், நிறையவே பாராட்டினார் என்று சொன்ன குமார், மஞ்சள் தோட்டத்தில் அந்தக் கருவியை இயக்கியும் காட்டினார். களத்தில் இறக்கப்பட்ட நொடிகளிலேயே களைகள் தூள் தூளாகி மண்ணோடு கலந்து விட்டன.

ஒரு மணி நேரத்தில் 30 சென்ட்
தொடர்ந்து பேசிய குமார், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, மக்காச்சோளம், சூரியகாந்தி, பாக்கு, தென்னை, பருத்தி, மிளகாய், பூந்தோட்டம், பழத்தோட்டம் என்று அனைத்துக்கும் இந்தக் கருவி மூலம் களை எடுக்கலாம். கருவியை இயக்குவதற்கு வசதியாக ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 25 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த இடைவெளியைக் கூட்டியும் குறைத்தும் கருவியைத் தயாரித்து கொடுக்க முடியும். 3 குதிரைத் திறன் இன்ஜின் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் சராசரியாக 30 சென்ட் பரப்பளவில் களை எடுக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போதுமானது. 30 ஏக்கருக்கு ஒரு முறை களை பறிக்கும் பிளேடுகளை மாற்ற வேண்டும். இதுக்கு 350 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை செலவாகும்.

சுலபமாக இயக்கலாம்
பெரும்பாலான களை மெஷின்களை இயக்குவது, கடினமாக இருக்கும். ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு மாறும்போது அடுத்தவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஓரப்பகுதிகளில் மெஷினை திருப்பி அடுத்த வரிசைக்குப் போகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த எல்லா பிரச்னைகளுக்குமே இவரின் கருவியில் தீர்வு இருக்கிறது. சக்கரங்கள் எல்லாம் இரும்பு பிளேட்டால் செய்திருப்பதால் முன்னேறிச் செல்வது சுலபம். வரப்புகளையும் சுலபமாக கடக்கலாம். பெண்களும் சுலபமாக இதை இயக்கலாம். ஒரே கையாலயும் இயக்க முடியும்.
வண்டியின் வேகத்தைத் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள முடியும். இதில் ‘ஆட்டோ கிளட்ச்’ தொழில்நுட்பம் இருப்பதால் வேகத்துக்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும். ஒரே லீவர் மூலமாகவே கியரை மாற்றாமலே முன்பும் பின்பும் இயக்க முடியும் (இன்சிடென்ட் ரிவர்ஸ் அண்டு ஃபார்வர்டு சிஸ்டம்). பிளேடில் சிக்காமல் தப்பும் ஒரு சில களைச் செடிகளை இந்த வசதியின் மூலம் முன்னும் பின்னும் நகர்த்தி தூளாக்கிவிடலாம்.

பரிந்துரை செய்யும் பல்கலைக்கழகம்
செடிகளின் வரிசையை ஒட்டி மிக நெருக்கமாக களை எடுத்தாலும், செடிகளுக்குப் பெரும்பாலும் பாதிப்பு வராது. வாய்க்கால் கரைகளைக் கடக்கும்போது மட்டும் செயல்படுகிற மாதிரி, பிளேடு பகுதியில் 'ஃப்ளோட்டிங் மெக்கானிசம்’ அமைக்கப்பட்டிருக்கும். அதனால் கரைகள் சேதமாகாது. அதனால் களை பறிப்புக்குப் பிறகு பாசனம் செய்வதற்கும் சிரமம் இருக்காது. நிலத்தின் தன்மைக்கு ஏற்ற மாதிரி வெட்டும் ஆழத்தைத் தானாகவே மாற்றி அமைத்துக்கொள்ளும் 'ஆட்டோ டெப்த் கன்ட்ரோல்’ நுட்பமும் இருக்கிறது. இதை நாமே மாற்றிக் கொள்வதற்கான (மேனுவல்) வசதியும் இருக்கிறது என்ற குமார், நடைமுறையில் இருக்கும் கருவிகளில் இவரின் கருவிதான் சிறப்பானது என்று கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதோடு, 'குறைந்த அதிர்வு கொண்ட கருவி, திருப்புவது மிக எளிது, கரைகள் மற்றும் ஓரப்பகுதிகளிலும் எளிமையாக இயக்க முடியும், நெருக்கமாகக் கரைகளைச் சேதப்படுத்தாமல் களை பறிக்கும்’ என்ற பரிந்துரையையும் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கிறது என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

நிறைவாகப் பேசிய குமார், ''இதன் விலை 63 ஆயிரம் ரூபாய். ஐம்பது சதவிகிதம் அரசு மானியம் கிடைக்கிறது. கிராமப்புறத்தில் மகளிர் குழுவெல்லாம் இதை வாங்கி வாடகைக்கு விட்டோ களைகளை எடுத்துக் கொடுத்தோ வருமானம் பார்க்க முடியும். மூன்று பெண்கள் மட்டும் இருந்தாலே சுழற்சி முறையில் நாள் முழுவதும் தொடர்ந்து ஓட்ட முடியும் என்கிற யோசனைகளையும் சொன்னவர், ''அடுத்த கட்டமாக, எளிமையாக நிலக்கடலை பறிக்க, பருத்திச் செடிகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் சேகரிப்பதற்கான கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகிறார். அரசாங்கம் உதவி செய்து ஊக்கம் கொடுத்தால் சீக்கிரம் அதையெல்லாம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார் எதிர்பார்ப்புகளோடு.

தொடர்புக்கு, குமார்,
செல்போன்: 97869-73339

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites