இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, December 10, 2015

உள்ளம் கேட்குமே, மோர் ! தாத்தா


இன்று "மீம்ஸ்" உருவாக்கி  தமிழ்நாட்டையே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஃபேஸ்புக்கில், நமது வலி போக்க சைக்கிளில் மோர் கேனுடன் ஒரு ஓரப்புன்னகை ஏந்தியபடியான  புகைப்படங்களில் வலம் வருகிறார் இந்த "மோர் தாத்தா".
 
திருவான்மியூர்-கொட்டிவாக்கம் கடற்கரைச் சாலைகளில் மோர் விற்கும் எஸ்.ராமஜெயம் என்பவரே நம் மோர் தாத்தா. திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 1998ல் சென்னைக்கு வந்து 2001 வரை வாட்ச்மேனாக பணி புரிந்திருக்கிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இட்லி கடை போட்டார். ஏரியாவில் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. மனம் தளராதவர், மோர் விற்கலாம் என முடிவெடுத்து, முத்திரை பதித்துவிட்டார்.  
 
கடைகளில் கிடைக்கும் நார்மல் மோரை முதலில் போடத் தொடங்கியவர், 3,4 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மோரில் பூந்தி, வெள்ளரிக்காய், மாங்காய் துண்டுகளையும் போட்டு புது ரெசிப்பையே கண்டு பிடித்திருக்கிறார்.  2011 வரை ஓகே'வாக போய்க்கொண்டிருந்த வியாபாரம், அதன் பிறகு கத்திரி வெயிலைப் போல் சூடு பிடித்திருக்கிறது.  ஆனால், இவர் விற்கும் மோர் வெயிலின் சூட்டை தணிக்கத் தவறியதில்லை என்று இவர் கஸ்டமர்கள் கூறுகிறார்கள்.
 
மோர் ஒன்னு. ரெசிப்பி ரெண்டு.
20 ரூபாய் மோர் ( பூந்தி+வெள்ளரிக்காய் )
25 ரூபாய் மோர் ( பூந்தி+வெள்ளரிக்காய்+மாங்காய் )
இந்த வித்தியாசம் சமீபத்தில் மரம் ஏறிய மாங்காயின் விலையினால் தான் என்கிறார் ராமஜெயம். 
 
இவர் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே, பீச்சில் காத்திருப்பவர்கள் இவருக்கு கால் செய்து தங்கள்  க்ளாஸ் மோரை புக் செய்து கொள்கின்றனர். வார நாட்களில்  ஒரு நாளைக்கு 200 மோர் விற்பதாகவும், வார இறுதி நாட்களில் 300 மோர் விற்பதாகவும் சொல்கிறார்.
 
இதில் தன் குடும்பத்தினரின் பங்கும் பெரிது. இவர் வியாபாரத்திற்கு கிளம்பியவுடன், அவர் கூடவே அவர் மனைவி திருமதி.பமீலா'வும் உதவிக்கு கிளம்பி விடுகிறார். இவர்கள் இருவரும் மோர் தயாரிக்கும் டிபார்ட்மெண்ட்டை எடுத்துக் கொள்ள, மகன்கள் கார்த்தீசன், தவசன்னாசி ஆகிய இருவரும் மாங்காய், வெள்ளரி நறுக்க உதவுகின்றனர். முதல் மகன் 12ஆம் வகுப்பும், இரண்டாம் மகன் 9ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.
 
தாத்தா மோருடன் சேர்த்து ஃப்ளேவர்ட் பாலும் விற்கிறார். 15 லிட்டர் பால் வாங்கி அதை 12 லிட்டருக்கு சுண்ட விட்டு, அதிலே ஏலக்காய் அல்லது மசாலாக்களை கலந்து அன்றைய மெனுவை தீர்மானிப்பாரம். மோருடன் மோதினால் மசாலா பால் என்னாகும்? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது.  மொத்த மார்க்கெட்டையும் மோரே எடுத்துக் கொள்கிறதாம்.
 
மசாலா பாலும் இரண்டு விலைகளில் உள்ளது.
30 ரூபாய் - 210 மில்லி 
15 ரூபாய் - 100 மில்லி.
 
காலை இரவு என இரண்டு ஷிஃப்டுகளிலும் மோர் விற்றவர் கொஞ்ச நாட்களாக, இரவில் மட்டும் விற்கிறாராம்.  இரவு 11-11.30 மணி வரை இவருக்கு திருவான்மியூர் ஆர்.டி.ஓ பீச்சில் இருக்க அனுமதி உண்டு.  அதன் பின்னர் காலை 3.30 மணி வரை மெயின் ரோட்டில் விற்பாராம். ஆவடி, ரெட்ஹில்ஸில் இருந்தெல்லாம் தனக்கு வாடிக்கையாளர்கள் உண்டு என பெருமையாகக் கூறுகிறார் மோர் தாத்தா.
தன் படிப்பைப் பற்றிக் கேட்டவுடன், 
 
"7ஆவது வரைப் படிச்சேன்.  நான் 7 படிக்கும் போது என் வாத்தியார் என்ன ஒரு நாள் செம்மயா  அடிச்சாரு. அவ்வளோ சேட்டை பையன் நான். 8 ஆம் வகுப்பு வர்றப்போ, அவரு ஹெட்-மாஸ்டர் ஆனதால, நான் பயத்துலயே ஸ்கூல் போகல.  பாம்பேல மாமா மளிகை கடையில வேலை பார்த்தேன். எனக்கு படிப்பு நல்லா ஏறும். ஆனா படிக்கல. நான் மட்டும் படிச்சிருந்தா இப்போ சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையில இருந்திருப்பேன்." என்கிறார் தீயாக.
 
பல பேர் இவருக்குப் போட்டியாக கடை போட்டும், தன் மோரின் தரத்தால் அவர்களை வெற்றி கண்டார். கல்யாண வீடுகளிலும், தேனீர் விடுதிகளிலும் எவ்வலவோ காடு கொடுத்து கூப்பிட்டும்,தனக்குத் தானே முதலாளியாய் இருக்கிறார். 
 
தாத்தாவின் மாத வருமானம்  பருவநிலை பொறுத்து 20-25 ஆயிரம் வரை மாறுபடுமாம். தன் இரு மகன்களும் படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது. சுண்டல், பஞ்சு மிட்டாய், ஐஸ்-கிரீம் என விற்கும் கடற்கரைச் சாலையில், வித்தியாசமாய்  மோர் விற்று, வெற்றி கண்டு வரும் தாத்தாவின் மாற்று சிந்தனையை என்ன'னு அப்ரிசியேட் பண்றது? 
 
இந்த "மோர்" ஐடியா எப்படி வந்துது தாத்தா'னு கேட்டா, "அப்பெல்லாம் சரவண பவன்ல  இப்படி மோர்  தருவாங்கப்பா" என்கிறார் அசால்ட்டாக. பழைய ஐடியாவுக்கு சிறப்பாக பட்டி டிங்கரிங் பார்த்து இன்று தன் வாழ்கையை சிறப்பாக நடத்தி வருகிறார் ராமஜெயம்.
 
"ஐடியா கெடக்கு நம்மல  சுத்தி, நாம தான் யூஸ் பண்ணனும் நம்ம புத்தி" ன்னு பஞ்சடிச்சுட்டு வரட்டான்னு வீர நட கட்டுறாரு மோர் தாத்தா. 
 
மு.சித்தார்த் (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள் : ஜெ. விக்னேஷ்  (மாணவப் பத்திரிக்கையாளர்)

பிசினஸ் எனர்ஜி தரும் தி பாட்டர் ஸ்டோரி!
பர்த்டே என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கேக்தான். முன்பெல்லாம் வெண்ணிலா, ஸ்டிராபெரி சாக்லேட் என்று சில சாய்ஸ் தான் இருக்கும். இப்போ மெனுகார்டு ரொம்ப பெருசு. விதவிதமா சர்ப்ரைஸ் குடுக்கற மாதிரி கேக் வாங்கறதுதான் இப்போதைய டிரென்ட். போட்டோ கேக், குக்கி கேக், ஃபாண்டன்ட் கேக், கார்ட்டூன் கேக்ஸ், ஐஸ்கிரீம் கேக்ன்னு நிறைய வந்தாச்சு. மார்க்கெட்ல அதோட விலையும் கொஞ்சம் அதிகம். ஹோட்டல் & பெரிய பேக்கரிகள்ள செய்யுற கேக் எல்லாம் உடம்புக்கு நல்லது இல்ல, அதிகப்படியான ப்ரிசர்வேட்டிவ்ஸ் இருக்கும்ன்னு, நீங்க நினைச்சா  வீட்லயே செய்யற அதே சூப்பர் கேக்கை வாங்கிக்கலாம் “தி பாட்டர் ஸ்டோரி” ஆன்லைன் ஷாப்ல!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த ஆன்லைன் பேக்கரிய நடத்தறதும் கேக் செய்யறதும் பெரிய குக் எல்லாம் இல்ல! ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்’ல  இந்த வருஷம் பாஸ்-அவுட் ஆன  பி.ஏ.எக்கனாமிக்ஸ்  பொண்ணு நஜ்வா மக்பூல்தான்! பிரெண்ட்ஸ், தெரிஞ்சவங்கன்னு மட்டும் இல்லாம கடைக்கு மட்டும் இல்லாம கான்டிவென்டல் ஹோட்டலுக்கே கப் கேக்ஸ் விற்கறாங்க நஜ்வா என்கிற இளம் முதலாளி (பட் உண்மையில உழைப்பாளி பாஸ்)! உயர்தர சாக்லேட், ரெட் வெல்வெட் மட்டுமே பயன்படுத்தும் நஜ்வா, தன் “பாட்டர் ஸ்டோரி”யோட சக்சஸ் ஸ்டோரி சொல்றாங்க!  (The Batter story).
 
 
இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் நஜ்வா.
“இப்போவே இந்த வேலையை விட்டுட்டு நீ முழு நேர பேக்கிங்கில் இறங்கிடு” என்கிறார்களாம் அலுவலக நண்பர்கள். அப்படிப் பட்ட ரீச் இவங்க கேக்.  
 
பிசினஸ் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது ?
என் அம்மா கேக் தயாரிப்பாங்க. நானும் என் அக்கா நஃபீஸாவும் அவங்களுக்கு உதவி செய்யும்போது அப்படியே அம்மா கை பக்குவத்திலேயே கேக் செய்ய கத்துகிட்டோம்.  எப்போவாவது நான் செஞ்ச கேக்கை  காலேஜுக்கு  எடுத்துட்டு போகும்போது பிரண்ட்ஸ் எல்லாம் “சூப்பரா இருக்கு! நீ ஏன் பர்த்டேக்கு கேக் செஞ்சு தரக் கூடாது”ன்னு கேப்பாங்க. நான் பெருசா எடுத்துக்கல. ஆனா அவங்க திரும்ப திரும்ப சொல்லி உற்சாகம் கொடுத்தபோது ஏன் தொடங்கக் கூடாதுன்னு நினைச்சேன். வீட்ல எல்லாரும் ஆதரவு குடுத்தாங்க. என் அக்கா எனக்கு ஹெல்ப் பண்ண முன்வந்தாள்.  இந்த வருஷம் ஜனவரில தான் கேக் செய்யறத ஒரு பிசினஸ் மாதிரி ஸ்டார்ட் பண்ணினோம்   கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு இன்னிக்கி எங்க கேக்குக்குன்னே ஸ்பெஷல் கஸ்டமர்கள் இருக்காங்க.  சோ, இப்படி வந்ததுதான் “தி பாட்டர் ஸ்டோரி”!
 
உங்கள் கேக் பற்றி எப்படி விளம்பரம் செய்யறீங்க ?
பேஸ்புக், ஸ்நாப்-சாட் , இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதலங்கள்தான் என்னோட முக்கியமான விளம்பரம். அதிலே நான் செய்கிற கேக்கை எல்லாம் ஃபோட்டோ எடுத்து அப்லோட் பண்ணுவேன்.  எக் -கேக், எக்-லெஸ் கேக், சீஸ் கேக், கப் கேக், மூஸ் கேக், ஜம்போ கேக், ஃபான்டண்ட் கேக் என பல வெரைட்டி உள்ளது. அதை பார்த்துட்டு தெரிஞ்சவங்க அவங்க ஆர்டர்களைத் தருவாங்க. அப்படியே இது புடிச்சு போய் “யார் இந்த பொண்ணு?ன்னு”னு கேட்டு கேட்டு தான் பிசினஸ் டெவலப் ஆகிக்கிட்டிருக்கு. தனியா ஆர்டர் எடுத்து கஸ்டமருக்கு மட்டுமில்லாம ஒரு கான்ட்டிநெண்டல் ரெஸ்டாரன்டுக்கும் ரெகுலரா  சப்ளை செய்றேன். சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடில் உள்ள  "தி குக்கூ க்ளப் டைனா (The cuckoo club dyna) என்கிற ரேஸ்டரன்ட்டிற்கு நான் கப் கேக்குகள் சப்ளை செய்கிறேன்.
 
படிப்பையும் பிசினஸயும் எப்படி மேனேஜ் பண்றீ(ணீ )ங்க ?
இப்போ படிப்பை முடிச்சிட்டதுனால கொஞ்சம் ப்ரெஷர் கம்மி தான். ஆனா காலேஜ் அப்போ,  சில நேரங்கள்ல ஆர்டர்கள் அதிகமா வரும். அதுவும் எக்ஸாம் சமயத்துல ரெகுலர் கஸ்டமர் கேட்டா முடியாதுன்னும் சொல்ல முடியாது. ஒரு ஸ்பெஷல் கேக் செய்ய கொறஞ்சது மூணு மணி நேரமாவது ஆகும். அப்போ எல்லாம் என் தூக்கத்த குறைச்சுகிட்டு வேலை பார்த்ததுண்டு. அப்பப்போ எக்சாம்’ல மார்க்கு குறைஞ்சதும் உண்டு, என அவர் அம்மாவைப் பார்த்து கண் சிமிட்டியவாறு  நமக்கு ஒரு அசால்ட்டு சிரிப்பைத் தட்டி விடுகிறார்.
 
உங்களுடைய மாத டர்ன்-ஓவர் ?
இந்த பிசினஸ நான் ஸ்டார்ட் பண்ணினதே இந்த வருஷம் பிப்ரவரில இருந்து தாங்க. காலேஜ் கல்ச்சுரல்ஸ் மாதிரி ஃபன்க்ஷன்ஸ்’ல மூணு வாட்டி ஸ்டால் போட்டு நல்ல ஹிட் குடுத்துருக்கேன் . மத்தபடி இப்போ, கேக்கோட ப்ளேவர்/ அளவு  பொருத்து ரேட் இருக்கும். ஆனால் எனக்கு 100% ப்ராபிட் இருக்கும் என் பிசினஸில். ஒரு கப் கேக்கை கடைக்கு சப்பளை செய்யும் போது, அதன் விலை 30 முதல் 40 வரை இருக்கும். செய்வதற்கு ஆகும் செலவு ருபாய் 15-20 வரை. சோ, அது லேபர் சார்ஜ் என கண் சிமிட்டுகிறார். கடைக்காரர் அவருக்கு ஒரு விலையை வைத்துக் கொள்வார்.  நிறைய பேர் அவர்கள் கேக்குகள் நீண்ட நாட்கள் கடையில் தங்குவதற்காக ப்ராஸ்ட்டிங் செய்வார்கள். நான் அதை செய்வதில்லை. ரெட் வெல்வட் கேக் 1 கிலோ ரூ.600-700ற்கும், சாக்லேட் கேக் ரூ.700-800ற்கும் விற்கும். இந்த மாசம் ஒரே நாளில் 5 ஆயிரம் ரூபாய்க்கான ஆர்டர் ஒன்று உள்ளது. சில மாதங்கள் குறைவாக இருக்கும். ஆவரேஜா 5-10 ஆயிரம் வரைன்னு சொல்லலாம்.
 
மிகவும் சந்தோஷப்பட்ட தருணம் ?
எனக்கு ஜாரில் அடைக்கப் பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் என்றாலே ஒரு தனி காதல். அதனால் ஜார்  கேக் செய்ய பிடிக்கும். சீஸ் வைத்து செய்த முதல் ஜார் கேக் ஆவ்-ஸமா  வந்துது. அதை நான் வெளிநாட்டுல இருக்கற என் அப்பா கிட்ட  காட்டி ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
 
உங்க பிசினஸ எக்ஸ்பேன்ட் பண்ற ஐடியா ? 
இப்போவே நான் போற ஆபிஸ்ல’ எல்லாரும் வேலைய விட்டுட்டு கேக் பிசினஸ்ல இறங்கிடுங்கறாங்க. இன்னும் நான்  வேலைக்கு சேர்ந்து ஒரு மாச சம்பளம் கூட வாங்கலப்பா! ஒரு 6,7  மாசம் போல வேலைப் பார்த்துட்டு, அப்புறம் அந்தக் காசை வெச்சு ஒரு சொந்த பேக்கரி ஆரம்பிக்கலாம்னு ஒரு மாஸ்டர்-பிளான் இருக்கு. 
நஜ்வாவோட ஒரு ப்ரெண்ட்லி டாக்...
பேக் பண்ணிட்டு பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு போய்டுவோம். அம்மா தான் அதை வாஷ் செய்வார். அதனாலேயே 50% ப்ராபிட் அவர் எடுத்துக் கொள்கிறார் என அம்மாவை  செல்லப் பார்வை பார்க்கிறார்.  புதிதாக பிசினஸ் ஸ்டார்ட் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்லணும். “ரிஸ்க் எடுக்க தயாரா இருங்க. எல்லா நாளும் நல்லா இருக்கும்’னு சொல்ல முடியாது. ஒரு மாசம் சரியாப் போகலைன்னு சொர்ந்துட்டா அடுத்த மாசம் நல்லா வொர்க் பண்ண முடியாது.”
 
மு.சித்தார்த், தா.நந்திதா. (மாணவப் பத்திரிகையாளர்கள்)
படங்கள் :  அஷோக் குமார்.டி

Sunday, December 6, 2015

சொக்கவைக்கும் சூரியகாந்தி!

90 நாள்.... ரூ.50 ஆயிரம் வருமானம்... 
அது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டியுள்ள பாரதிபுரம் பகுதி. முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள சாலையோர நிலம். மஞ்சள் தொப்பி அணிந்த ராணுவ வீரர்கள் போல பிசிறு இல்லாமல் ஒரே சீராக சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான சூரிய காந்திப் பூக்கள். அவ்வழியில் செல்லும் அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறது அவற்றின் வசீகரம். அந்த அழகை ரசித்தபடியே வயலுக்குள் நுழைந்தோம்.
‘‘ஏனுங்க... இந்த சூரியகாந்தி வயலை போட்டோ எடுத்துக்கலாமா?’’ வயலில் வேலையாக இருந்தவரைப் பார்த்துக் கேட்டோம்.
‘‘காசா... பணமா! போதும் போதும்னு நீங்க நெனைக்குற வரை எடுத்துத் தள்ளுங்க’’ ஏக மனதாக அனுமதி கொடுத்தார் வெள்ளந்தி விவசாயி.
பச்சைக்கிளிகள் பூவோடுவரப்பில் நடந்தபடியே தப்பட்டை அடிப்பதுபோல, அலுமினிய வட்டில் ஒன்றின்மீது குச்சி மூலம் தட்டி ஒலி எழுப்பிக்கொண்டே, வட்டில் ஒலியோடு சேர்ந்து, ‘ஆலோலோலோலாங் கூய்... ஆலோலோலோலாங் கூய்’ என்று வாய்குவித்து ஓசை எழுப்பியபடி வயலை வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
‘‘இது, அறுப்பு நேரம். இந்த விதைங்க ருசியா இருக்கும். இதை கொத்தித் திங்க பச்சைகிளிங்க வரும். அதுவும் சாயங்கால நேரத்துல கூட்டம் கூட்டமா வரும். அதுகளை கவ்வை வில்லுல கல்கொண்டு அடிச்சு விரட்டுறது பாவங்க. அதுக்காக விரட்டாம இருந்தா வெள்ளாமை வீடு வந்து சேராது. அதனாலதான் இப்படி கிளிகளை விரட்டுறாங்க’’ என அந்த விவசாயி நமக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த பெண்மணியும் வந்து சேர்ந்துகொண்டார்.
வைகாசிப் பட்டம் வளமான மகசூல்!
இருவரும் வரப்பில் உட்கார்ந்துகொண்டு, நம்முடைய புகைப்படக்காரர் படமெடுப்பதை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களருகில் அமர்ந்து சூரியகாந்தி சாகுபடி பற்றி நாம் கேள்விகளை வீச... மடைதிறந்த வெள்ளமாகப் பேசத் தொடங்கினார் அந்த விவசாயி.
‘‘என்னோட பேரு மூர்த்தி. இது என் மனைவி கருத்தம்மா. எங்க ரெண்டு பேர் உழைப்புதான், இங்க பூப்பூவா பூத்து நிக்குது. இது எங்க சொந்த வயல் கிடையாது. இதுக்கு உரிமைப்பட்டவங்க வெளியூர்ல இருக்காரு. அடிக்கடி இங்கு வந்து அவரால விவசாயம் பார்க்க முடியலை. எங்ககிட்ட பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அவங்க அனுமதியோட வெள்ளாமை வெச்சு எடுத்து, வருஷ கடைசியில ஒரு தொகையை அவங்களுக்குக் குத்தகையா கொடுத்திடுவோம்.
எதைப் போட்டாலும் பொன்னா விளையக்கூடிய வளமான வண்டல் மண் பூமி இது. பாசனத்துக்கு ஏத்த நல்ல தண்ணீரும் கிணத்துல கிடைக்கு. இந்தப் பக்கம் செடிமுருங்கை வெள்ளாமைதான் அதிகம். ஆனா, குத்தகை நிலத்துல ரொம்பநாள் வெள்ளாமை வைக்க முடியாது. திடீர்னு கேணியில தண்ணி குறைஞ்சா சிக்கலாகிடும். வெச்ச முருங்கையும் பாதியில கருகிடும். அதை யோசனை பண்ணித்தான் குறுகிய காலப்பயிரான சூரியகாந்தியை விதைச்சு, இயற்கை உரத்தை மட்டும் போட்டு சாகுபடி செஞ்சிருக்கோம்’’ என்று சொன்ன மூர்த்தி, அடுத்து சாகுபடிப்பாடத்தை சொல்லத்தொடங்கினார் (பார்க்க, பெட்டி செய்தி).
‘‘அறுத்து, விதைகளைப் பிரிச்ச பிறகு, விக்க அதிகம் அலைய வேண்டியதில்லை. போன் பண்ணி சொன்னா போதும், களத்துமேட்டுலயே வந்து எடை போட்டு எடுத்துக்கிட்டு காசு கொடுத்துட்டு போயிடுவாங்க யாவாரிங்க. இன்னைய தேதிக்கு கிலோ 30 ரூபாயில இருந்து 35 ரூபாய் வரைக்கும் போகுது. சராசரியா ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். குத்தகைப் பணம், செலவெல்லாம் போக 30 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். 90 நாள்ல இது நல்ல வருமானம்தானே’’ என்று தெம்பாகச் சொன்னார்.
அவரைத் தொடர்ந்த மனைவி கருத்தம்மா, ‘‘அடுத்த போகம் ஐப்பசிப் பட்டத்துல நிலக்கடலை, அதுக்கு அடுத்த போகம் எள் விதைப்போம். கூலி வேலைக்குப் போயிட்டு இருந்த நாங்க, இன்னிக்கு குத்தகை நிலத்துல வெள்ளாமை பண்ணி நாலு காசு கண்ணுல பாக்குறோம். எங்களுக்குக் கைகொடுத்து உதவுறது, நிலக்கடலை, எள், சூரியகாந்தி மூணும்தான். இந்த மூணு பயிருக்கும் ஆட்டு எருதான் போடுறோம்’’ என்றவர், பழையபடி ‘ஆலோலோலோ ஊய்...’ என்று குரல் கொடுத்து, பச்சைக்கிளிகளை விரட்ட போனார்.   
சாகுபடிக் குறிப்பு...அடியுரமா ஆட்டு எரு!
இதன் அதிகபட்ச வயது 100 நாட்கள். இறவையில் சாகுபடி செய்ய பட்டம் தேவையில்லை. இருந்தாலும், அதிக வெயிலும் மழையும் இல்லாத, கார்த்திகை, வைகாசி, ஆடிப் பட்டங்களில் நடவு செய்தால் முழுமையான மகசூலை எடுக்கலாம். முன்னதாக, சித்திரைப் பட்டத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 5 டன் ஆட்டு எருவைக் கொட்டி பரவலாக இறைத்து விடவேண்டும். ஆட்டு எரு நன்றாகக் காய்ந்து ஈரத்தன்மை இல்லாமல் இருக்கவேண்டும். ஆட்டுப் புழுக்கைகளில் சில நோய்க் கிருமிகள் இருக்கும். எனவே அதை நேரடியாக நிலத்தில் போடுவதை விட, புழுக்கைகளைப் பொடியாக்கி போடுவது நல்லது. ஆட்டு எருவைப் பரவலாக இறைத்துவிட்ட பிறகு, ‘பார் முறைப் பாத்தி’ அமைக்க வேண்டும். பாருக்கு பார் 2 அடி இடைவெளியும், செடிக்கு செடி ஒன்றரை அடி இடைவெளியும் இருக்கும்படி பாத்தி எடுத்து, வரப்பில் விதைகளை நடவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: ரமேஷ் கந்தசாமி க.சத்தியமூர்த்தி

ஒருங்கிணைந்த பண்ணை

ஆடு, கோழி, மாடு, நெல், எலுமிச்சை...குடும்பத் தலைவியின் இயக்கத்தில் ஓர் !
திருமணத்துக்குப் பிறகு சிறகுகளை முடக்கிக் கொண்டு குடும்பக்கூட்டுக்குள் முடங்கும் பெண்கள்தான்  ஏராளம். ஒரு சிலரே அந்தக்கூட்டுக்குள் இருந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டுவர். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி. ‘விவசாயம் செய்ய வேண்டும்’ என்ற பெருங்கனவில், கணவரின் துணையோடு  நிலம் வாங்கி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்து வருமானம் பார்த்து வருகிறார், இவர்.
வேலூர்-சித்தூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கொள்ளமடுகு கிராமம் (ஆந்திர மாநிலம்). இங்குதான் அமைந்துள்ளது, தீபலட்சுமியின் ஒருங்கிணைந்த பண்ணை. தோட்டத்தில் நுழைந்ததும், குரைப்பின் மூலமாக நமது வரவை அறிவித்தன, தீபலட்சுமியின் வளர்ப்பு நாய்கள். முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள், பசுந்தீவனத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த காசர்கோடு குட்டை மாடுகள், கொட்டிலுக்குள் உலவிக்கொண்டிருந்த ஆடுகள்... என இனிமையான சூழலில் இருந்தது, அந்தப்பண்ணை. நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர், சுதாகரன் - தீபலட்சுமி தம்பதியர்.
விவசாய ஆசை கொடுத்த பசுமை விகடன்!
முதலில் பேசிய தீபலட்சுமி, “வேலூர்தான் எனக்குச் சொந்த ஊர். எம்.சி.ஏ முடிச்சிட்டு வேலூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வேலை பார்த்தேன். படிப்பு, வேலை எல்லாமே நகரத்துல இருந்தாலும், எனக்கு விவசாயம், ஆடு, கோழி வளர்ப்புல ஆசை அதிகம். அதுக்குக் காரணம் கிராமத்துல இருந்த எங்க பாட்டிதான். அவங்க வீட்டுக்கு நான் அடிக்கடி போய் வந்ததால எனக்கு விவசாயம், கால்நடை வளர்ப்புனு ஆசை வந்துடுச்சு. ஆனா, எங்க வீட்டுல செடி வளர்க்க இடமில்லை. வேலைக்குப் போயிட்டு இருந்ததால நேரமும் இல்லை.
அப்புறம் கல்யாணம், குழந்தைனு ஆனதும் வேலையை விட்டுட்டேன். கணவர் வீட்டுல செடிகள் வளர்க்க இடம் இருந்ததால காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். கணவர் அசிஸ்டண்ட் புரொபசரா இருக்கார். அவர் பயோ-டெக்னாலஜி படிச்சிருக்கறதால இயற்கை பத்தி அடிக்கடி பேசுவார். அவர்தான் எனக்கு ‘பசுமை விகட’னை அறிமுகப்படுத்தினார். அதைப்படிக்க ஆரம்பிச்சதும், நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை அதிகமாச்சு” என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், அவருடைய கணவர் சுதாகரன்.
“எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தாலும், விவசாயம் செய்ய நேரம் இல்லை. மனைவி ஆசைப்பட்டதும் அதை நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணுனேன். நிலத்தைத் தேடி அலைஞ்சப்போ எனக்கும் விவசாய ஆசை அதிகமாகிடுச்சு. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்தா நிலம் பார்க்கக் கிளம்பிடுவேன். பல தேடல்களுக்குப் பிறகு இந்த மூணு ஏக்கர் நிலம் கிடைச்சது. இதை வாங்கி ஒண்ணரை வருஷமாச்சு. பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை அடிப்படையா வெச்சு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்னு முடிவு செய்தோம். 
மகிழ்ச்சி கொடுத்த நிலக்கடலை!
நிலத்தைச் சுத்தம் செய்து, 80 சென்ட் நிலத்துல முழு இயற்கை முறையில மானாவாரியா நிலக்கடலை விவசாயம் செய்தோம். அதுல 10 மூட்டை நிலக்கடலை கிடைச்சது. அதைப் பார்த்தப்ப சந்தோஷம் தாங்க முடியலை. அடுத்து போர்வெல் போட்டுட்டு நிலக்கடலை அறுவடை செய்த நிலத்துல பலதானிய விதைப்பு செய்து, மடக்கி உழுது வெச்சிருந்தோம்.
பாடம் கற்றுக் கொடுத்த நெல்!
அப்போ, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில இருந்து பயிற்சிக்காக வந்திருந்த அஞ்சு மாணவர்கள், அந்த நிலத்துல ஒற்றை நாற்று முறையில நெல் நடவு செஞ்சாங்க. அதுல பயிர் நல்லா வளர்ந்துச்சு. ஆனா, எங்களுக்கு அனுபவம் இல்லாததால சரியா பராமரிக்கல. அதனால, 80 சென்ட்ல 6 மூட்டை (80 கிலோ மூட்டை) நெல்தான் கிடைச்சது. அதை அரைச்சதுல 300 கிலோ அரிசி கிடைச்சது. 150 கிலோ அரிசியை 72 ரூபாய்னு இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்துட்டோம். மீதி அரிசியை, சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தோம்.
லாபம் கொடுத்த கீரை!
அடுத்து, கீரை சாகுபடி செய்யலாம்னு முடிவு செய்து, 10 சென்ட் நிலத்துல அரைக்கீரையையும், சிறுகீரையையும் வெதைச்சிருந்தோம். வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம் பயன்படுத்தினதுல பூச்சித் தாக்குதல் அதிகம் இல்லாம செழிப்பான கீரை கிடைச்சது. ஒரு கட்டு 7 ரூபாய்னு, தினம் 20 கட்டுகள் வீதம் இயற்கை அங்காடியில விற்பனை செய்தோம். மொத்தம் ஆயிரம் கட்டுக்கீரை கிடைச்சது. அதுல செலவு போக 5 ஆயிரம் லாபம் கிடைச்சது” என்று சுதாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு அலைபேசி அழைப்பு வர, மேற்கொண்டு நமக்கு பண்ணையைச் சுற்றிக் காட்டி விளக்க ஆரம்பித்தார் தீபலட்சுமி.
நம்மாழ்வார் வழியில் பண்ணை வடிவமைப்பு!
“மொத்தம் மூணு ஏக்கர் நிலம். அதுல 80 சென்ட்ல எலுமிச்சை இருக்கு. 40 சென்ட்ல வேலிமசால், முயல்மசால், கோ-4, அகத்திக்கீரை, சூபாபுல்னு பலவகையான  பசுந்தீவனங்கள் இருக்கு. 23 சென்ட்ல மீன்குளம், 5 சென்ட்ல கிணறு, 20 சென்ட்ல வண்டிப்பாதை, 80 சென்ட்ல நெல், 30 சென்ட்ல சேம்பு இருக்கு. 22 சென்ட்ல வீடு, ஆட்டுப்பட்டி, மாட்டுக்கான கொட்டகை எல்லாம் இருக்கு.
நம்மாழ்வார் அய்யா சொல்லிச் சென்ற வழிமுறைகளின்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். நீண்ட நாள் வருமானம் கொடுக்கிற பயிர்ங்கிறதால எலுமிச்சை நட்டோம். 18 அடிக்கு 18 அடி இடைவெளியில 80 சென்ட் நிலத்துல மொத்தம் 100 செடிகள் இருக்கு. நடவு செய்து ஆறு மாசம் ஆகுது. இன்னும் மூணு வருஷத்துல வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். 100 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் வருமானம் எடுக்கணுங்கிறது எங்க குறிக்கோள்.
இந்தப் பகுதியில நிறைய பேர் சேம்பு சாகுபடி செய்றதால நாங்களும் கொஞ்சம் சேம்பு நட்டிருக்கோம். இப்போ 3 மாசப்பயிரா இருக்கு. இன்னும் 3 மாசத்துல வெட்டுக்கு வந்துடும். வெட்டும்போது, 20 மூட்டை (100 கிலோ) அளவுக்குச் சேம்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது மூலமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்.
80 சென்ட் நிலத்துல இந்த முறை அறுபதாம் குறுவையையும், சீரகச் சம்பாவையும் நடவு செய்யலாம்னு இருக்கோம்.
கேரளாவில் கிடைத்த குட்டை மாடு!
பசுமை விகடன்ல ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைப் படிச்ச பிறகு நாட்டு மாடுதான் வாங்கணும்னு முடிவு செய்துட்டேன். பலகட்ட தேடலுக்குப் பிறகு, உலக அளவுல குட்டை இன பசுவான ‘காசர்கோடு குட்டை’ ரக மாடுகளை வாங்கினோம். நாலு பெரிய மாடுகள், ஒரு கன்றுக்குட்டினு மொத்தம் அஞ்சு மாடுகள் இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. ஒண்ணரை வயசுல ரெண்டு கிடேரிகள் நிக்கிது. ஒரு மாடு மட்டும் கறவையில இருக்கு. அதுல இருந்து தினம் கன்றுக்குட்டிக்கு ஒரு லிட்டர் அளவுக்குக் குடிக்க விட்டது போக, ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கிது. மாடு குட்டையா இருக்கிறதால பராமரிக்கிறது சுலபமா இருக்கு. தினம் 5 கிலோ தீவனமே போதுமானதா இருக்கு. இந்த இனத்தைக் கலப்பில்லாம பெருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்.
ஓஹோ... ஓஸ்மானாபாடி!
இங்க நிக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ஓஸ்மானாபாடி ஆடுகள். நம்ம நாட்டு ரக ஆடுகளைப் போலவே கருப்பு நிறத்துல இருக்கும். ஆனா, இந்த ரகத்துல பால் அதிகமா கிட்டைக்கும். ரெண்டு கிடா, 13 பெட்டை, 3 குட்டிகள்னு மொத்தம் 18 ஆடுகள் இருக்கு. உலவுறதுக்கு இடம் விட்டு கொட்டகை அமைச்சிருக்கோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் காலையிலயும் சாயங்காலமும் ஒண்ணரை கிலோ அளவுக்கு பசுந்தீவனமும், கால் கிலோ அடர்தீவனமும் கொடுக்கிறோம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு குட்டிகள் பெருகினதுக்கப்பறம்தான் இதுல வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 40 குட்டிகள் எடுக்கணும்னு வெச்சிருக்கோம். எங்க கணக்குப்படி சரியா கிடைச்சா ஆடு மூலமா வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் எடுக்க முடியும்.
செலவில்லா வருமானம் கொடுக்கும் கோழிகள்!
‘பெருவிடை’ நாட்டுக்கோழி ரகத்துல 8 பெட்டை, 2 சேவல்னு மொத்தம் 10 கோழி வெச்சிருக்கோம். இப்போ, வாரம் 25 முட்டையில இருந்து 30 முட்டைகள் வரை கிடைக்கிது. ஒரு முட்டை 8 ரூபாய்னு விற்பனை செய்றோம். கோழிகளுக்குத் தீவனத்துக்காக எந்தச் செலவும் இல்லை. மேய்ச்சல் மட்டும்தான்.
இதோட, ஒரு ஜோடி கோம்பை நாய்களை தடுப்பூசி எல்லாம் போட்டு ஊட்டமா வளர்த்துக்கிட்டிருக்கோம். அதுல இருந்து குட்டிகளை எடுத்து விற்பனை செய்யலாம்னு இருக்கோம். மீன் வளர்ப்புக்காக 10 ஆயிரம் சதுர அடியில குளம் எடுத்து வெச்சிருக்கோம். இன்னும் மீன் வளர்க்க ஆரம்பிக்கலை. அதே மாதிரி நிலத்துல அமைச்சிருக்கிற பாதையில தென்னை, கொய்யா, சப்போட்டா, நாவல், மாதுளை, மா, பலா, வாழைனு பழச்செடிகளை நடவு செய்திருக்கோம். வாழை சீக்கிரம் தார் போட்டுடும். மத்த பழங்கள் கிடைக்க மூணு வருஷம் ஆகும். எப்பவும் ஏதாவது ஒரு பழம் தோட்டத்துல காய்ச்சிட்டு இருக்குற மாதிரிதான் தேர்வு பண்ணியிருக்கோம்” என்று நிறுத்தினார் தீபலட்சுமி.
நிறைவாகப் பேசிய சுதாகரன், ‘‘தற்சமயம் பண்ணை வளர்ச்சி நிலையிலதான் இருக்கு. இப்போதைக்கு முட்டை விற்பனை, நெல், கீரை விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானம் பராமரிப்புக்கே சரியாகிடுது. இன்னும் ரெண்டு வருஷத்துல நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும். அதுக்குப் பிறகு வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது இல்லாம இப்போ எங்க பிள்ளைங்களுக்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.
நகர வாழ்க்கையில இருக்கிற வெறுமையை, இந்தப் பண்ணை மூலமா போக்கிக்கிட்டோம். கூடவே வருமானத்துக்கான வழியையும் உருவாக்கிட்டோம். இதைவிட நகர வாழ்க்கையில கூடுதல் வருமானம் கிடைக்கலாம்... ஆனா, இந்த சந்தோஷம் கிடைக்குமா” என்று கேட்டு புன்னகையுடன் விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
தீபலட்சுமி,
செல்போன்: 96773-07272

சிக்கனமாக வளர்க்கலாம், சிப்பிக்காளான்..!


சென்ற தலைமுறையில் விவசாயம் பார்த்து வந்தவர்கள் தங்கள் பிள்ளைகள் விவசாயத்துக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று விவசாயத்துக்கே சம்பந்தமில்லாத பல இளைஞர்கள் கூட விவசாயத்தில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஓர் ஆரோக்யமான மாற்றம். அந்த வகையில், காளான் வளர்ப்பு மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார், பொறியாளர் ராஜ்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருக்கிறது, இவரது காளான் பண்ணை.
“பொறியியல் பட்டம் படிச்சுட்டு சென்னையில் தனியார் நிறுவன வேலையில இருந்தேன். சம்பளம் செலவுக்குத்தான் சரியா இருந்தது. வேற வேலை பார்க்கலாம்னு நினைச்சப்ப இனி சம்பளத்துக்கு வேலை பார்ப்பதை விட நாமே சுயதொழில் பண்ணனும்னு முடிவு பண்ணிணேன். அப்ப என் நண்பர்கள் காளான் வளர்ப்பு பற்றி சொன்னாங்க. அவங்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டு, இந்த இடத்தை வாடகைக்குப் பிடிச்சு, பண்ணை அமைச்சேன்.
இது பதினைந்து சென்ட் இடம். 600 சதுரடியில் கீற்றுக் கொட்டகை அமைச்சு, சிப்பிக்காளான் உற்பத்தி செய்றேன். கீற்றுக் கொட்டகை அமைச்சு, கீழே மணலைக் கொட்டிட்டா காளான் வளரத் தேவையான குளிர்ச்சியான சூழல் கிடைச்சிடும். காளான் வளர்க்கத் தேவையான விதையை ஒரு பாக்கெட் (350 கிராம்) நாற்பது ரூபாய்க்கு வாங்குறேன். அதை வெச்சு ரெண்டு படுக்கைகள் தயாரிக்கலாம். வைக்கோலையும், விதையையும் கொண்டு தயாரிக்கிற படுக்கைகளை உரியில் தொங்கவிட்டு, நீர் தெளிச்சுக்கிட்டு வந்தா, 25 நாளில் இருந்து 45 நாட்கள் வரை காளான் அறுவடை செய்யலாம்.
100 படுக்கைங்க இருந்தா தினம், மகசூலா 10 கிலோ முதல், 20 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். செலவு போக, தினமும் ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. தினமும் பதினைந்து கிலோ காளானை, திருச்சி, மதுரைனு அனுப்புறேன். காளானை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்றேன். பொறியியல் படிப்பு மூலம் கிடைக்காத நம்பிக்கை இந்த விவசாயம் மூலமா கிடைச்சிருக்கு” என்றார் சிலாகித்து.
திரு.ராஜ்குமார் தொடர்பு எண்- 98408-02213

காளான் வளர்ப்பு அறைகள்!
காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
300 சதுரடி அளவு அறையில் ஒர் உரியில் நான்கு படுக்கைகள் என்ற விகிதத்தில், 900 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.
காளான் வளர்ப்பு அறை அமைக்க 11 அடி அகலம், 60 அடி நீளம், மூன்றரை அடி ஆழத்தில் இரண்டு குழிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 அடி ஆழம் என பரிந்துரை செய்கிறது). குழியின் மேற்புறத்தில் ஆறடி உயரத்துக்கு ஆர்ச் அமைத்து, ஊதா நிற ‘சில்பாலீன் ஷீட்’ கொண்டு ‘பசுமைக்குடில்’ போல அமைக்க வேண்டும். வெயில் அதிகமான பகுதியாக இருந்தால், பசுமைக்குடிலுக்கு மேல் தென்னகீற்றுகளைப் போட்டு வைக்கலாம். குழியின் தரைப்பகுதியில் அரை அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி வைக்க வேண்டும். குடிலின் ஒரு பக்கத்தில் காற்றை வெளியேற்றும் ‘எக்ஸாஸ்ட் ஃபேன்’ அமைக்க வேண்டும்.

70 நாட்களில்...
தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும்.
14 X 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில் கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்...  என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட சாக்குத் தைக்கும் ஊசியால் 9 துளைகள் இட வேண்டும். தயாரிப்புக்குப் பயன்படுத்தும் விதைகள், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள், கறுப்பு நிறங்களில் இருந்தால், அந்த விதைகளைப் பயன்படுத்தக்கூடாது.
இப்படித் தயாரிக்கப்பட்ட படுக்கைகளைப் படுக்கைத் தயாரிப்பு அறையில் தொங்க விட வேண்டும். இந்த அறையின் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். தினமும் அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பராமரிக்க தரையில் மணல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். தொங்கவிடப்பட்ட படுக்கைகளில் 18 முதல் 24 நாட்களில் மைசீலியம் பூஞ்சணம் பரவிவிடும்.  
 
நன்கு பூஞ்சணம் பரவிய படுக்கைகளை கத்தி மூலம் குறுக்காக வெட்டி இரண்டு பைகளாக்க வேண்டும். வெட்டப்பட்ட பகுதியில்... அவித்து ஆறவைக்கப்பட்ட கரம்பை மண்ணைத் தூவி, காளான் வளர்ப்பு அறையில் (பசுமைக் குடில் போன்ற அறை) வைக்க வேண்டும். படுக்கைகளை வைப்பதற்கு முன்பாக அறையைத் தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். படுக்கைகளை அடுக்கிய பிறகு, தினமும் கைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இந்த அறையில் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 85 சதவிகித ஈரப்பதமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பராமரிப்பில் ஈடுபடும் நபர்கள் கால்களை சுத்தமாகக் கழுவிய பிறகே அறைக்குள் நுழைய வேண்டும்.
வளர்ப்பு அறையில் வைத்த படுக்கைகளில் 7 முதல் 12 நாட்களில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும். 12 முதல் 18 நாட்கள் வரை தொடர்ந்து 6 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். இது முதல் அறுவடை. அடுத்து 7 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை இரண்டாவது அறுவடை செய்யலாம். அடுத்து 10 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை மூன்றாவது அறுவடை செய்யலாம். படுக்கை தயாரித்தது முதல், கடைசி அறுவடை வரை ஏறக்குறைய 70 நாட்கள் ஆகின்றன. இடைப்பட்ட நாட்களில் களைக் காளான்கள் முளைத்து வரும். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
காசி.வேம்பையன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், தே.சிலம்பரசன்
வணக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தொடர்பு கொண்டு பயன் பெறவும். தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், ( எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் எதிரில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்603203.தொலைபேசி: 04427452371


அன்புடையீர் வணக்கம், ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான் கட்டுரையில் இடம்பெற்ற திரு.ராஜ்குமார் தொடர்பு எண்- 98408-02213, செயல்பாட்டில் உள்ளது. தொடர்பு கொண்டு பயன்பெறவும். ( ராஜ்குமார் அண்மையில் மலைப் பகுதிகளுக்கு சென்றிருந்தேன். இதனால், தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்காது என்று சொல்கிறார்)

பால்காளான்

மாதம் ரூ.1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்!
அசைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவு தயாரிக்க சோயா, சேப்பங்கிழங்கு... எனப் பல விளைபொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் முதலிடம் வகிக்கிறது, காளான்.
சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான். அதனால், காளான் சந்தையில் தனியான இடம் பிடித்திருக்கிறது, பால்காளான். இதனால், சமீபகாலமாக விவசாய உபதொழிலாக பால்காளான் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பால்காளான் வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர் கிராமம். இங்குதான் பால்காளான் பண்ணை அமைத்திருக்கிறார், ரமேஷ். வெள்ளைக்குடை போல பாலித்தீன் பைகளில் வளர்ந்து நின்ற காளானை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷை சந்தித்தோம்.
விவசாயத்துக்கு வழிகாட்டிய ஜீரோ பட்ஜெட் பயிற்சி!
‘‘எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர். நான் பி.எஸ்.சி. கணிதவியல் முடிச்சிட்டு, ஒரு போட்டோ ஸ்டியோவுல ஆறு மாசம் வேலை பார்த்துட்டு சொந்தமா போட்டோ ஸ்டுடியோ வெச்சேன். அப்பறம் கல்யாணம் ஆன பிறகு, ஸ்டுடியோவை விழுப்புரத்துக்கு மாத்தினேன். அந்த சமயத்துல தனியார் தொலைக்காட்சியில மாவட்ட செய்தியாளரா வேலை கிடைச்சது. செய்தி சேகரிக்க பல ஊர்களுக்குப் போற வாய்ப்பும் கிடைச்சது. அப்போ, விவசாயம் சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்கும் போது, விவசாயத்து மேல ஆசை வந்துச்சு. 
ஒரு கட்டத்துல தொலைக்காட்சி வேலையை விட்டு ஸ்டுடியோவை மட்டும் நடத்திக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ‘பசுமை விகடன்’ல ஜீரோ பட்ஜெட் பயிற்சி பத்தின அறிவிப்பு வந்தது. ஈரோடுல நடந்த பயிற்சியில கலந்துக்கிட்ட பிறகு, இயற்கை விவசாயம் பத்தின ஆர்வம் அதிகமானதால... விழுப்புரம் பக்கத்துல நிலம் வாங்கி விவசாயத்துல இறங்கினேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமா, அந்த நிலத்தை விற்பனை செய்துட்டேன். அதுக்குப் பிறகு, அப்பாவும் தம்பியும் இந்த ஊர்ல (முகையூர்) வாங்கின பத்து ஏக்கர் நிலத்துல, விவசாயம் செய்றதோட காளானும் வளர்க்கிறேன்” என்று முன்னுரை கொடுத்த ரமேஷ், தொடர்ந்தார்.
‘‘திண்டிவனம் பக்கத்துல ஒரு நண்பர் பால்காளான் வளர்த்தார். அவர்தான் என்னையும்  காளான் வளர்ப்பில் ஈடுபடுத்தினார். நாலு வருஷத்துக்கு முன்ன காளான் வளர்ப்புல இறங்கின சமயத்துல... நோய்த்தொற்று காரணமா காளான்ல பல பிரச்னைகள் வந்தது. அப்பறம், கே.வி.கே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்னு போய் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன்.
சில நண்பர்களோட சேர்ந்து முறைப்படி இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சதும் பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சதோட வருமானமும் வர ஆரம்பிச்சது. நண்பர்கள் பார்ட்னர்களா இருந்தாலும் அவங்களுக்கு வேற தொழில்கள் இருக்கிறதால, முழுக்க பண்ணையைப் பராமரிக்கிறது நான் மட்டும்தான். ரெண்டரை வருஷமா லாபகரமா காளான் வளர்ப்பு நடந்துக்கிட்டிருக்கு” என்றவர், காளான் வளர்ப்பு குறித்து சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு நாளைக்கு 30 படுக்கை (காளான் பெட்) தயாரிக்கிறோம். அந்தக் கணக்குல மாசத்துக்கு 900 படுக்கைகள் தயாரிக்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மூணு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில மூணு அறுவடைக்கும் சேர்த்து 1,300 கிராம் வரை பால்காளான் கிடைக்கும். மொத்த படுக்கைகள்ல இருந்தும் சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். மாசத்துக்கு 900 கிலோ. மொத்த விலைக்குக் கொடுக்கிறப்போ கிலோ 150 ரூபாய்னு எடுத்துக்குவாங்க. சில்லறை விற்பனையில 220 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். எப்படிப் பார்த்தாலும் சராசரியா கிலோவுக்கு 160 ரூபாய் கிடைச்சுடும். அந்தக் கணக்குல பார்த்தா ஒரு மாசத்துக்கு 900 கிலோ காளானை விற்பனை செய்றது மூலமா, 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 54 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 90 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்ற ரமேஷ் நிறைவாக,
‘‘வைக்கோலை வெளிய வாங்கிறப்போ அது ரசாயன உரம் போட்டு விளைய வெச்சதானெல்லாம் பார்த்து வாங்க முடியாது. அதேமாதிரி காளான் உற்பத்திக்கு, வைக்கோலை கிருமிநீக்கம் செய்றதுக்காக சில மருந்துகளைப் பயன்படுத்துவாங்க. வைக்கோல் காளான் வளர்றதுக்கு ஒரு மீடியம்தாங்கிறதால காளான்ல ரசாயன பாதிப்பு இருக்காது. ஆனாலும் நான் கிருமிநீக்கம் செய்ய மருந்துகளைப் பயன்படுத்துறதில்லை. எங்க தோட்டத்துல இயற்கை விவசாயத்துல விளையுற வைக்கோலை வேக வெச்சு கிருமிநீக்கம் செய்துதான் காளான் வளர்க்கிறேன். அதனால, எங்க பண்ணையில உற்பத்தியாகுற காளான் 100% இயற்கைக் காளான். பால்காளான் விற்பனையில எந்த பிரச்னையும் இல்லை. எங்களோட உற்பத்திக்கு அதிகமாவே ஆர்டர் இருக்கு. அடுத்து இன்னும் உற்பத்தியை அதிகரிக்கிற முயற்சியில இருக்கிறோம்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
ரமேஷ், 
செல்போன்: 94432-26467

கைகொடுக்கும் நாடன் வாழை

ஒரு ஏக்கர்... ரூ 2,70,000 வருமானம்... நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை!
ஏற்றுமதிக்கு ஏற்ற கலப்பின வாழை ரகங்களை சாகுபடி செய்து, அதிக வருமானம் எடுக்கும் விவசாயிகளுக்கு மத்தியில்... உள்ளூர் மார்க்கெட்டுக்கு ஏற்ற நாட்டு வாழை ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், கடலூர் மாவட்டம், வழிச்சோதனைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவர், ‘பச்சை நாடன்’ ரக வாழையை சாகுபடி செய்து, லாபகரமான வருமானம் பார்த்து வருகிறார், 
நாம் ராஜாவின் பண்ணைக்குச் சென்றபோது, வாளிப்பாக வளர்ந்திருந்த வாழை மரங்களும், தென்னை மரங்களும் வேகமாக வீசிய காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. தோப்பில் ஆங்காங்கே நாட்டுக்கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. ரம்மியமான அந்தச் சூழ்நிலையில் ராஜாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
“பூர்விக விவசாயக்குடும்பம் நாங்க. தாத்தாவுக்கு அப்பறம் அப்பா விவசாயம் பாக்க ஆரம்பிச்ச பிறகு, கிணறு வெட்டி... மணிலா, கேழ்வரகு, கம்பு, மரவள்ளினு சாகுபடி செய்தார். கிணற்றுப் பாசனத்துல இருந்து போர்வெல் பாசனத்துக்கு மாறினதும், கரும்பு, வாழைனு பணப்பயிர் சாகுபடிக்கு மாறினார், அப்பா. நிலம், வீடு எல்லாம் ஒரே இடத்துல இருக்கிறதால சின்னப் பிள்ளையில இருந்தே விவசாயம் என்னோட ரத்தத்துல ஊறிப் போச்சு. படிக்கிற நேரம் போக மத்த நேரம் முழுக்க, அப்பா கூடச் சேர்ந்து நிலத்துல வேலை பார்க்கிறது வழக்கம். ஐ.டி.ஐ முடிச்சிட்டு, முழுநேரமும் விவசாயத்துல இறங்கினேன். நான், வழக்கமான பயிர்களோட பந்தல் காய்கறிகளையும் பலவித வாழை ரகங்களையும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
கஷ்டம் கொடுத்த வாடல்நோய்!
அப்பா, பூவன் ரகத்தை மட்டும்தான் சாகுபடி செய்தார். நான், ரஸ்தாளி, கற்பூரவல்லி, கிராண்ட்-9 (ஜி-9) ரகங்களையும் சேர்த்து சாகுபடி செய்தேன். ஆரம்பத்துல எருவோடு, உரங்களையும் கலந்து போட்டப்ப விளைச்சல் நல்ல முறையில் இருந்துச்சு. விலையும் நல்லா கிடைச்சதால, வருமானமும் அதிகமா கிடைச்சது. போகப்போக ரசாயன உரங்களோட விலை ஏற்றம் அதிகமாச்சு. ஆனா, வாழைத் தாருக்கு விலை கிடைக்கலை. மண்ணுல வளம் குறைஞ்சி பூச்சி, நோய்த் தாக்குதலும் அதிகமாகிடுச்சு. ஒருமுறை கற்பூரவல்லி வாழையில ‘வாடல் நோய்’ தாக்குதல் அதிகமா இருந்துச்சு. பலபேர்கிட்ட ஆலோசனை கேட்டும், தீர்வு கிடைக்கலை. ஒரு கட்டத்துல வாழையை அழிச்சிடலாம்னு தோணுச்சு. கடைசியா ஒரு விஞ்ஞானியோட ஆலோசனைப்படி டிரைக்கோ டெர்மா விரிடி,  சூடோமோனஸ் கலவையைக் கலந்து தெளிச்ச பிறகுதான் கட்டுப்பாட்டுக்கு வந்துச்சு. அப்போதான், மண்ணும் சூழலும் கெட்டுப்போயிருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்.
பாடம் சொல்லிக்கொடுத்த பசுமை விகடன்!
அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ கையில கிடைச்சது. அதைப் படிக்க படிக்க, என்னோட பல சந்தேகங்கள் தீர்ந்துடுச்சு. பாலேக்கர், நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த பல வித்தைகள் மண்ணைப் பொன்னாக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். தடாலடியா இயற்கை விவசாயத்துல இறங்கினா, மகசூல் குறையுங்கிறதால, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன். இப்ப அஞ்சு வருஷமா முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். அதனால, மண் வளமா இருக்கிறதோட, ரசாயன உரம் போடுறப்ப கிடைக்கிற விளைச்சலுக்கு நிகரா மகசூலும் கிடைச்சுக்கிட்டிருக்கு” என்ற ராஜா, வாழை சாகுபடி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். 
பழ உதிர்வைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!
‘‘இந்தப் பகுதியில அதிக அளவுக்கு பூவன், கற்பூரவல்லி ரகங்களைத்தான் சாகுபடி செய்றாங்க. நான் நாலு வருஷமா செவ்வாழையும், நாடனும் சாகுபடி செய்றேன். இந்த மண்ணுக்கும், தண்ணீருக்கும் செவ்வாழையும், நாடனும் நல்லமுறையில விளைஞ்சு வருமானம் கொடுக்குது. அதில்லாம இயற்கை முறையில சாகுபடி செய்யும்போது, பழம் நல்ல சுவையோட இருக்கிறதோட அதிக நாட்கள் சீப்புல இருந்தாலும் பழங்கள் உதிர்றதில்லை.
நான் செவ்வாழை தார்களைக் கொஞ்சம் கொஞ்சமா வெட்டிக்கொண்டு போய் கடலூர் மாக்கெட்ல விற்பனை செய்றேன். தினமும் அறுவடை செய்து, விற்பனை செய்யும்போது கூடுதலா லாபம் கிடைக்குது. நாடன் வாழைப் பழங்களைத் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவங்க அதிகமா விரும்பி சாப்பிடுவாங்க. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்லயும் இந்த ரகத்துக்கு நல்ல விலை கிடைக்குது.
மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, 4 ஏக்கர்ல பூவன், ஒண்ணரை ஏக்கர்ல செவ்வாழை, 3 ஏக்கர்ல நாடன் இருக்கு. ஒண்ணரை ஏக்கர் பப்பாளி நடவு செய்ய போறேன். நாடன் வாழையில ரெண்டு ஏக்கர்ல அறுவடை முடிஞ்சது. மீதம் ஒரு ஏக்கர் வாழை அறுவடைக்குத் தயாரா இருக்கு” என்றவர், நாடன் வாழை சாகுபடி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...
சிறப்பான மகசூலுக்கு செம்மண்!
‘நாடன் வாழையின் வயது 10 மாதங்கள். ஆடிப் பட்டமும், கார்த்திகைப் பட்டமும் நடவுக்கு ஏற்றவை. தண்ணீர் தேங்காத எல்லா மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம் என்றாலும், சிறப்பான மண் செம்மண்தான். தேர்வு செய்த நிலத்தை இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் எருவைக் கொட்டிக் கலைத்து... ஒரு சால் உழவு செய்ய வேண்டும். 
ஏக்கருக்கு 1,000 மரங்கள்!
நிலத்தை ஈரப்படுத்தி, ஆறரை அடி இடைவெளியில் மண்வெட்டி கொண்டு முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு ஆயிரம் குழிகள் வரை எடுக்க முடியும். இரண்டு முதல் மூன்று மாத வயதுள்ள ‘ஈட்டி’ வாழை இலைக்கன்றுகளைத் தேர்வு செய்து, அவற்றில் கிழங்கில் இருந்து அரை அடி உயரத்துக்குத் தண்டுப் பகுதியை மட்டும் விட்டு மீதியை வெட்டி நீக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், 10 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து, அதில் கிழங்கை முக்கி எடுத்து 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி, விதைநேர்த்தி செய்து குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த நான்கு மாதங்கள் வரை வாழைக்கு இடையில் ஊடுபயிராகக் கத்திரி, வெண்டை, நிலக்கடலை மாதிரியான குறைந்த வயதுடைய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
மாதம் ஒரு உழவு!
நடவு செய்த ஒரு வாரத்தில் கன்றுகளில் இருந்து இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். ஊடுபயிர் இருந்தால், 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். வாழை மட்டும் இருந்தால், 30-ம் நாளில் இருந்து எட்டாவது மாதம் வரை மாதம் ஒரு முறை பவர் வீடர், மினி டிராக்டர் மூலம் உழவு செய்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நடவிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். 3 மற்றும் 6-ம் மாதங்களில் ஒரு வாழை மரத்துக்கு ஒரு கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து மண் அணைக்க வேண்டும்.
வளம் கூட்டும் இலைவழித் தெளிப்பு!
நடவு செய்த 1 மாதம் கழித்து, 150 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஹியூமிக் ஆசிட் கலந்து இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். 2-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 3-ம் மாதம் ஆயிரம் லிட்டர் தண்ணீரில் டிரைக்கோடர்மா விரிடி - 10 கிலோ, சூடோமோனஸ் -10 கிலோ, பஞ்சகவ்யா- 10 லிட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் ஒரு லிட்டர் வீதம் மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும். 4-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 5-ம் மாதம் 150 லிட்டர் அமுதக்கரைசலுடன், 5லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 5 மற்றும் 7-ம் மாதங்களில் 150 லிட்டர் தண்ணீருடன் 900 கிராம் பயோ பொட்டாஷ் கலந்து தெளிக்க வேண்டும். 6-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீருடன் கடல்பாசி உரம் அரை லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்.  
மட்டைக் காய்ச்சல்... கவனம்!
இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், அதிக அளவு பூச்சி, நோய்த்தாக்குதல் இருக்காது. 5 மற்றும் 7-ம் மாதங்களில் வாழையில் மட்டைக்காய்ச்சல் அதிகமாகும். அந்த சமயத்தில், 200 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் சூடோமோனஸ், ஒரு லிட்டர் வேப்பண்ணெய், 50 மில்லி காதிசோப் கரைசல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளித்து விட வேண்டும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் பக்கக் கன்றுகள் வரத்துவங்கும். அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். நான்காவது மாதத்துக்கு மேல் காய்ந்த சருகுகளை அறுத்து மூடாக்காகப் போட வேண்டும். 8-ம் மாதத்துக்குள் குலை தள்ளி விடும். 9-ம் மாதத்தில் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு சவுக்குக்கம்பை முட்டுக் கொடுத்துக் கட்ட வேண்டும். 10-ம் மாதத்தில் வாழையை அறுவடை செய்யலாம். ஒரு தாரில் 8 முதல் 10 சீப்புகளும், ஒரு சீப்புக்கு 16 முதல் 20 பழங்களும் இருக்கும். ஒரு தார் 35 முதல் 40 கிலோ எடை இருக்கும்.”
சாகுபடிப் பாடம் முடித்த ராஜா, நிறைவாக வருமானம் பற்றிச்  சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு வாழைத்தார் 250 ரூபாய்ல இருந்து 350 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. ஒரு தாருக்கு சராசரியா 300 ரூபாய் விலை கிடைச்சுடும். நடவு செஞ்ச 1,000 மரங்கள்ல சேதமானது போக, 900 தார் எப்படியும் கிடைச்சுடும். அந்த வகையில 2 லட்சத்து 
70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல உழவு, இடுபொருள், பராமரிப்புச் செலவுகள் போக ஒண்ணே முக்கால் லட்ச  ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
ராஜா,
செல்போன்: 97861-31320.
‘பலே’ பச்சை நாடன்!
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த வாழை ரகம் பயிரிடப்படுகிறது. இந்த வாழை ரகத்தை ‘நாடு’ என்றும் சொல்கின்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி வாழை சாகுபடி செய்யப்படும் இடங்களில் கன்று அழுகினாலோ அல்லது காய்ந்து போனாலோ அந்த இடத்தில் இந்த ரகத்தை நடவு செய்வார்கள். அதனால், இந்த வாழைக்குக் ‘காலிவாழை’ என்ற பெயரும் உண்டு. மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீஸ், ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை இந்த ரக வாழையில் அடங்கியுள்ளன.
விருது வாங்கிக்கொடுத்த வாழை!
செவ்வாழை, நாடன் ஆகிய வாழை ரகங்களை, ராஜா சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதைப் பாரட்டும் வகையில், திருச்சியில் உள்ள ‘தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், இந்த ஆண்டுக்கான ‘சிறந்த வாழை விவசாயி’ விருதை அவருக்கு வழங்கி கௌவரப்படுத்தியுள்ளது.
காசி.வேம்பையன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites