இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 3, 2014

தென்னை... பப்பாளி... வாழை...


தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி...
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டம், பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி.
ஆரணியில் இருந்து, செய்யாறு செல்லும் சாலையில் பயணித்தால்... இருபதாவது கிலோ மீட்டரில் வருகிறது, கன்னிகாபுரம். இங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பொன்னம்பலம். செழிப்பாக வளர்ந்திருந்த தென்னை, பப்பாளி, வாழை மரங்கள் அடங்கிய தோப்பில் மாசிலாமணியைச் சந்தித்தோம்.
ஆள் பற்றாக்குறையால் மரப்பயிர்கள்!
''எங்களுது பாரம்பரிய விவசாயக் குடும்பம். சின்னப் பிள்ளையா இருக்கறப்பவே... அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. பெரியம்மாதான் வளர்த்தாங்க. காலேஜ்ல பி.எஸ்சி. மேத்ஸ் படிப்புல சேர்ந்த நான், பண வசதி இல்லாததால... படிப்பை பாதியிலேயே விட்டுட்டு, எங்களுக்கு இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க வந்துட்டேன். அதுல சுமாரான வருமானம் கிடைச்சுது. கல்யாணம் ஆன பிறகு, மளிகைக் கடை வெச்சேன். அதுல வந்த வருமானம், விவசாயத்துல கிடைச்ச வருமானம் எல்லாத்தையும் போட்டு... ரைஸ்மில் போட்டேன். அந்த சமயத்துல (92-ம் ஆண்டு) விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாச்சு. அதனால, தென்னங்கன்றுகளை நட்டுட்டு, வரப்புல தேக்குக் கன்றுகளை நட்டுட்டேன்.
வழிகாட்டிய பயிற்சிகள்!
அப்படியே காலம் ஓடிடுச்சு. என்னோட மூணு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்ச பிறகு, அரசியல்ல இறங்கினேன். 2001-ம் வருஷம் ஊராட்சி மன்றத் தலைவரா ஆனேன். அடுத்தத் தேர்தல்ல தோத்துட்டேன். அப்பறம் அரசியல்ல இருந்து ஒதுங்கி, முழுசா விவசாயத்துல இறங்கினேன். அந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. முதல் இதழைப் படிச்சப்பவே... அதுல இருந்த எல்லா தகவலும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. இப்போவரைக்கும் தொடர்ந்து படிச்சுட்டிருக்கேன்.
தேர்தல்ல தோத்தாலும், 'பசுமை விகடன்’ கொடுத்த தெம்பால, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். 'இனியெல்லாம் இயற்கையே...’, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சிகள் மூலமா கத்துக்கிட்ட விஷயங்கள வெச்சு... தென்னந்தோப்புல ரெண்டு முறை பல தானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளமா மாத்தி, ஊடுபயிரா, ரெண்டு வருஷத்துக்கு காய்கறி சாகுபடி செய்தேன். இப்போ, சோதனை முயற்சியா மூன்று அடுக்குப் பயிரா தென்னைக்கு இடையில இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி எடுத்து பப்பாளிச் செடிகளையும், வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கேன்.
தென்னை நாற்று மூலமும் வருமானம்!
ஒன்றரை ஏக்கர்ல 90 தென்னை மரங்கள் இருக்கு. வரப்புல 100 தேக்கு மரங்கள் நிக்குது. நல்லா வளந்துருக்குற 30 தேக்கு மரங்களை 4 லட்ச ரூபாய் விலைக்குக் கேட்டுட் டிருக்காங்க. தென்னைக்கு இடையில அரை ஏக்கர்ல 500 மொந்தன் வாழை போட்டுருக் கேன். வாழைக்கு இடையில 30 சென்ட்ல 200 'ரெட் லேடி’ பப்பாளி கன்னுகளை நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நாலு வருஷம் ஆகிடுச்சு. முன்ன சராசரியா
100 தேங்காய் காய்ச்ச மரங்கள்ல, இப்போ 150 காய்கள் கிடைக்குது. தேங்காயை உரிச்சு வித்துடறேன். அதில்லாம, நெத்துக்காய்களை நாத்தா வளத்தும் விற்பனை செய்றேன்'' என்றவர், தோப்பைச் சுற்றிக் காட்டினார்.
ஒன்றரை ஏக்கரில்... 4 லட்சம்!
நிறைவாகப் பேசிய மாசிலாமணி, ''90 தென்னை மரங்கள்ல இருந்து மரத்துக்கு 150 காய் வீதம் வருஷத்துக்கு 13 ஆயிரத்து 500 காய் கிடைக்குது. இதுல 7 ஆயிரத்து 500 காய்களை உரிச்சு, ஒரு தேங்காய் 6 ரூபாய்னு வித்துடுவேன். அது மூலமா 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 6 ஆயிரம் காய்களை தென்னங்கன்னுகளா உற்பத்தி பண்ணிடுவேன். எப்படியும் 5 ஆயிரம் கன்னுங்க உருவாகிடும். வருஷத் துக்கு ஆயிரம் கன்னுகள இலவசமா கொடுத்துட்டு, மீதியை 25 ரூபாய் வீதம் விலைக்கு கொடுத்துடுவேன். 4 ஆயிரம் நாத்து மூலமா, வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுட்டு இருக்கு.
பப்பாளியில இப்போதான் காய் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. 200 பப்பாளி மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 10 ஆயிரம் கிலோ அளவுக்கு காய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். இப்போதைக்கு ஒரு கிலோ 15 ரூபாய்னு விலை போகுது. இந்தக் கணக்குல பார்த்தா... பப்பாளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அரை ஏக்கர்ல இருக்கற 500 வாழை மூலமா, ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.
நான் எதிர்பார்த்தபடி விளைஞ்சு வந்துச்சுனா, அடுத்தடுத்த வருஷங்கள்ல ஒன்றரை ஏக்கர்ல இருந்து, வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் எடுத்துடுவேன். செலவெல்லாம் போக எப்படியும் வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்'' என்று உற்சாகமாக விடைகொடுத்தார்!
தொடர்புக்கு:மாசிலாமணி,
செல்போன்: 86810-25763.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குப் பயிர்!
தென்னைக்கு இடையில் அடுக்குப் பயிர் சாகுபடிக்காக மாசிலாமணி சொல்லும் தொழில்நுட்பங்கள்...

''தென்னைக்குத் தென்னை அதிகபட்சம் 27 அடி இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில், இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பயறு, தானியங்கள், காய்கள் மாதிரியான குட்டையான பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் வாழை, பப்பாளி போன்றவற்றை நடவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைப்பு!
தென்னைக்கு இடையில் பல தானியங்களை விதைத்து பூ எடுத்ததும் மடக்கி உழ வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு போன்ற தானியங்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; காராமணி, துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுகளில் ஏதாவதொன்றில் 4 கிலோ; நிலக்கடலை, சோயா, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; சோம்பு, தனியா, மிளகு, சீரகம் போன்ற வாசனைப் பொருட்களில் ஏதாவதொன்றில் 1 கிலோ; சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ... எனக் கலந்து விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழுவதுதான் பல தானிய விதைப்பு (எண்ணெய்வித்துப் பயிர்களில் கடுகு, எள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மட்டுமே போதுமானது).
இருமடிப்பாத்தி!
பல தானியச் செடிகளை மடக்கி உழுது, பதினைந்து நாட்கள் கழித்து, இரண்டடி இடைவெளியில், நான்கு அடி அகலத்துக்கு நீளவாக்கில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளில் ஒரு பக்கத்தில் 8 அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, வாழை நடவு செய்ய வேண்டும். பாத்தியின் மறுபக்கத்தில், முக்கோண நடவு முறையில், இரண்டு வாழைகளுக்கு இடையில் ஒரு பப்பாளி வருவது போல நடவு செய்ய வேண்டும். அதாவது, 8 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, பப்பாளிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நடவுக்கு முன்பு ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு டன் எரு, தலா 20 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 50 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் குவித்து... தென்னை மட்டைகளால் மூடி ஒரு மாதம் கழித்து தண்ணீர் தெளித்து புரட்டி விட வேண்டும். மீண்டும் ஒரு மாதத்துக்கு அப்படியே வைத்துவிட்டால், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்.
மாதம் 100 லிட்டர்!
மாதம் ஒரு முறை, பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். இலை, தழை மற்றும் தோப்பில் கிடைக்கும் கழிவுகளை பாத்திகளின் மீது மூடாக்காகப் போடலாம். நடவு செய்த 6-ம் மாதத்தில் மரத்துக்கு 10 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியும் வந்தால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
நடவு செய்த 4-ம் மாதத்தில் பப்பாளியில் பூவெடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற கணக்கில் விட்டுவிட்டு, மீதி ஆண் மரங்களைக் கழித்து விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பப்பாளியில் மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மொத்த மரங்களையும் அகற்றி, புதிதாக கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை... 9-ம் மாதம் குலைதள்ளி, 12-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.''

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites