“மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!”
68 வயதிலும் அசத்தும் விவசாயி!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
மாத்தி யோசி
‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.
செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.
0 comments:
Post a Comment