இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 26, 2014

மேடை அலங்காரம்... முன்னேறும் மாணவன்

 திருமணம் சார்ந்த தொழில்கள் எதுவாக இருந்தாலும் அதில் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என்பது உறுதி. அந்த வகையில் தன் தொழிலை அமைத்துக்கொண்டு சிறப்பாக முன்னேறி வருகிறார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வரும் கிறிஸ்டோபர்.
திருமணத்தில் மேடை அலங்காரங்களை மேற்கொள்வது மட்டுமே இலக்கு என்று நின்றுவிடாமல் பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள், கட்சி விழாக்கள் என எல்லா மேடைகளிலும் தனது கைவண்ணத்தைக் காண்பித்துப் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றுவிடுகிறார் கிறிஸ்டோபர். 'மேடை அலங்காரம் செய்வதில் மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன்' என்று சொல்பவரிடம், 'எப்படி இந்தத் தொழிலை ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்டோம்.
''பள்ளிப் பருவத்திலேயே எனக்கு ஓவியங்கள் மீது அதிக ஆர்வம். எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அதில் சில மாற்றங்களைச் செய்து, அதை வித்தியாசமான ஒரு கலைப்பொருளாகத் தயாரித்துவிடுவேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே மேடை அலங்காரம் செய்பவரிடம் சேர்ந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். பள்ளி செல்லும் நேரம் தவிர, மீதி இருக்கும் நேரத்தில் தேவையான பொருட்களை வாங்குவது, அவருக்கு உதவியாகப் பொருட்களை எடுத்து வைப்பது என்று சிறிய அளவிலான வேலைகளைச் செய்வேன். அதனால் இந்தத் தொழில் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது.
கல்லூரியில் நுழைந்ததும் நான் ஏன் இந்தத் தொழிலை சுயமாகச் செய்யக்கூடாது என்று யோசித்தேன். நாங்கள் வசிப்பது நிலக்கோட்டை அருகில் உள்ள முருகத்தூரான்பட்டி என்கிற ஒரு சிறிய கிராமம். இங்கிருக்கும் மக்களுக்கு மேடை அலங்காரங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. முதன்முதலில் ஒரு திருமணத்துக்கு நான் மேடை அலங்காரம் செய்தேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றிலிருந்து எந்த ஒரு சிறிய விசேஷமாக இருந்தாலும் என்னை அழைத்துவிடுவார்கள். இப்போது என்னிடம் 90,000 மதிப்புள்ள பொருட்கள் உள்ளது.
என் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணத்தை என் வீட்டிலிருந்து வாங்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேலை செய்து சம்பாதித்தப் பணத்தைச் செலவு செய்யாமல் 25,000 ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தேன். அதை வைத்துதான் முதலில் சிறிய அளவில் மேடை அலங்காரங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினேன்.
கல்லூரி செல்ல ஆரம்பித்ததும் நான் ஒருவனாகத் தொழில் செய்து முதன்முதலில் சம்பாதித்தது 5,000 ரூபாய். அன்றைய தினம் என்னால் மறக்கவே முடியாது. என் உழைப்புக்குக் கிடைத்த முதல் வருமானம் அது.
வருகிற வருமானத்தில் செலவுகள்போகச் சேர்த்துவைத்துதான் மேடை அலங்காரங்களுக்குத் தேவையானவற்றை வாங்குவேன். விதவிதமான பிளாஸ்டிக் பூக்கள், கலர் துணிகள், அலங்காரத் தூண்கள் இவையெல்லாம் வைத்துள்ளேன்.
முகூர்த்த நாட்களில் பல ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய ஆர்டர் என்றால் மேடை அலங்காரம் நிறைய இருக்கும். இதற்காக நான் 30,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பேன். திருமண மண்டபங்களில் முதலிலேயே சொல்லி வைத்துவிடுவேன். அவர்கள் விசேஷம் நடத்துபவர்களிடம் கேட்டு மேடை அலங்காரம் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் சொல்லிவிடுவார்கள்.
சிறு வயது முதல் தேவையில்லாத செலவுகளைச் செய்யமாட்டேன். தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குத்  தேவையானதை வாங்கிக்கொடுப்பேன்;  அவ்வப்போது வீட்டுத் தேவைக்குக் கொடுப்பதுடன், என்னுடைய கல்விச் செலவுகளையும், என்னுடைய தேவைகளையும் பெரும்பாலும் நானே பூர்த்திச் செய்துகொள்வேன்.
திருமணம் மட்டும் இல்லாமல் கட்சி மீட்டிங், கல்லூரி மற்றும் பள்ளி விழாக்கள் என எல்லாவற்றுக்கும் நான் மேடை அலங்காரங்களைச் செய்து தருவதால் எப்படியும் மாதத்துக்கு இரண்டு ஆர்டர்கள் வரை கிடைத்துவிடும்.
தேர்வு நேரங்களில் ஆர்டர் இருந்தாலும் செய்யமாட்டேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இதனையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் செய்யவேண்டும் என்பதே என் ஆசை'' என்றார் நம்பிக்கையாக!
பெஸ்ட் ஆஃப் லக் கிறிஸ்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites