இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 12, 2014

ஆபத்தில்லாத தொழில்னு எதுவுமே இல்லீங்க..

சிவகாசி என்றாலே மனதில் கந்தகம் தகிக்கும். மற்றவர்களின் மன பிரகாசத்துக்காக தன்னைத்தானே கருக்கிக்கொள்கிற பூமி. நகரின் எந்த திசையில் திரும்பி னாலும் வெடிமருந்து வாடை. பரபரத்துத் திரிகிறார்கள் தொழிலாளர்கள். ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களால் நிறைந்திருந்த பட்டாசுத் தொழிற்சாலைகளில் இன்று பெண்கள். ஆபத்தான சில வேலைகள் தவிர அனைத்துப் பணிகளையும் சர்வசாதாரணமாக கைபோன போக்கில் செய்து வீசுகிறார்கள் இந்தத் தோழிகள்!Nothing is safe from the industry  ...

சிவகாசியைச் சுற்றி வெம்பக்கோட்டை, வில்வநத்தம், ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மொத்தம் 786 ‘ஃபேக்டரி’கள். இவை தவிர, உரிய அங்கீகாரத்தோடு சிறிய அளவில் 300 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பெண்கள்!

‘‘பட்டாசுத் தொழிலுங்கிறது ஒரு கூட்டுத்தொழிலு. பேப்பர் கட்டிங் பண்றது, லோடு ஏத்துறதுன்னு பல தொழில்கள் இதைச் சார்ந்து இருக்கு. எல்லாத்தையும் சேத்து 5 லட்சம் குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கு. வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு இது ஆபத்தான தொழிலாத் தெரியும். எங்களுக்கு எல்லாம் பழகிடுச்சு. தொழிலை சரியா பழகாதவங்களால அல்லது கவனக்குறைவா வேலை பாக்குறவங்களால எங்காவது ஒருசில விபத்துகள் நடக்கலாம். 

அதுக்காக பட்டாசுத் தொழிலையே ஆபத்தான தொழிலா நினைக்கிறாங்க. அப்படிப் பாத்தா ஆபத்து இல்லாத தொழிலே இல்லை. சரியான பாதுகாப்போட பொறுப்பாவும் கவனமாவும் செஞ்சா எல்லாத் தொழிலுமே பாதுகாப்பானதுதான்... - சதுரமாக இயந்திரம் வெட்டிக்கொட்டும் காகிதங்களை சுருட்டிக்கொண்டே பேசுகிறார் குமாரலிங்கபுரம்  சங்கரேஸ்வரி.  சங்கரேஸ்வரியின் கணவர் ராமரும் பட்டாசு ஆலையில்தான் பணிபுரிகிறார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை.

‘‘தலைமுறை தலைமுறையா இந்தத் தொழில்தான் எங்களை வாழ வைக்குது. காலையில இருந்து சாயங்காலம் வரையும் வெடிமருந்து வாடையோட கிடந்தாலும் ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிட முடியுதே... பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கிறோம். மூத்த பொண்ணு என்ஜினியரிங் முடிச்சிருக்கா. ரெண்டாவது மக டிகிரி முடிச்சிருக்கா. கடைசிப்பொண்ணு பிளஸ் 1 படிக்கிறா. பையன் 8வது படிக்கிறான். ஓரளவுக்கு நல்ல பள்ளிகள்ல படிக்க வைக்க முடிஞ்சதுக்கு இந்த தொழில்தான் காரணம்... என்கிறார் சங்கரேஸ்வரி.

2-3 மணி நேரம் பயணம் செய்தெல்லாம் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். மதியச் சாப்பாடு கொண்டு வருகிறார்கள். டீ, ஸ்நாக்ஸ் ஃபேக்டரியிலேயே பாதி விலைக்குக் கிடைக்கிறது. ‘‘சாதாரணமா ஒரு பட்டாசுல பலரோட உழைப்பு இருக்கு. உதிரிவெடியில இருந்து வாணவெடி வரைக்கும் எல்லாமே கூட்டு உழைப்புதான். இப்போ சரவெடி, வாணவெடி, மத்தாப்பூ, பூச்சட்டிக்குத்தான் தேவை அதிகம். இதுதவிர புதுசு புதுசா வெடிகள் தயாரிச்சு பரிசோதனை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. 

ஒரு சரவெடி தயாரிக்க 15 விதமான வேலைகள் இருக்கு. முதல் வேலை நியூஸ்பேப்பரை சைஸ் வாரியா கட் பண்றது. யானை வெடிக்கு ஒரு அளவு, பெரிய வெடிக்கு ஒரு அளவு, உதிரி வெடிக்கு ஒரு அளவு, சரவெடிக்கு ஒரு அளவு இருக்கு. பெரும்பாலும் எல்லா வேலைக்குமே மெஷின் வந்திருச்சு. சில கம்பெனிகள்ல மட்டும் ஆட்கள் வச்சு செய்றாங்க. வெட்டின பேப்பரை பசை தடவி சுருட்டணும்... இது ரெண்டாவது வேலை. உருட்டின பேப்பரை சாயத்துல முக்கி உலர வைக்கணும். பெரும்பாலும் சிவப்பு சாயம்தான் பயன்படுத்துவாங்க. சாயம் உலர்ந்த பிற்பாடு, நீளமான வளையங்கள்ல ஒவ்வொண்ணா அடுக்கி வைக்கணும். 

அடுத்து, சுருட்டின பேப்பருக்கு அடிப்பகுதியில மண் வச்சு மூடணும். இதுவரைக்குமான வேலைகள் ஃபேக்டரிக்கு வெளியிலதான் நடக்கும். இந்த நிலைக்குப் பிறகுதான் ஃபேக்டரிக்குள்ள போகும். இடையில இன்னும் ஒரு வேலை இருக்கு. மருந்துக்கலவை போடணும். இது ஆண்களோட வேலை. அலுமினிய பவுடர், சல்பர், வெடி உப்பு மூன்றையும் சரியான விகிதத்துல சேத்து கலவை போடணும். இதுதான் பட்டாசு தொழில்லயே ஆபத்தான வேலை. ரொம்பக் கவனமா செய்யணும்... என்கிறார் கமலாம்பாள்.

இலங்கையைச் சேர்ந்த கமலாம்பாள் 1974ம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்தவர். தொடக்கத்தில் தையல் தொழில் செய்துவந்தார். காலில் ஏற்பட்ட வலியால் அத்தொழில் பாதிக்கப்பட, பட்டாசு வாழ்க்கை அளித்தது. ‘‘அந்தக் காலத்துல தீபாவளியோட ஃபேக்டரியை மூடிடுவாங்க. அடுத்த ரெண்டு மாதத்துக்கு மானாவாரி நிலங்கள்ல விவசாயம் நடக்கும். ஃபேக்டரியில மராமத்து வேலைகள் செய்வாங்க. பொங்கல் முடிஞ்ச பிறகு திரும்பவும் வேலை ஆரம்பமாகும். இப்போ நிலைமை மாறிப்போச்சு. ஒரு வாரம்தான் லீவ்... என்கிற டி.கல்லுப்பட்டி ஞானவேல், பட்டாசு தொழில்நுட்பத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்.
  
‘‘டியூப்ல மருந்து செலுத்துறதோட வேலை முடியிறதில்லை. அதுக்குப் பிறகுதான் முக்கியமான வேலைகள் இருக்கு. திரி வைக்கணும். லேசா பசை வச்சு மருந்துக்குள்ள செருகி ஒட்டுவாங்க. அதுக்குப் பிறகு கூடையில அள்ளியாந்து கொட்டிடுவாங்க. பூ கட்டுறது மாதிரி நீளமான திரியையும் நூலையும் வச்சு சரமா கட்டுவோம். கட்டி முடிச்சதும் பேக் பண்ணிட வேண்டியது தான். வாணவெடி தயாரிக்கிறது வேறு மாதிரி. முதல்ல அட்டைகளை வச்சு குழாய் மாதிரி கண்டெய்னர் ரெடி பண்ணணும். 

அடுத்து அதுக்குக் கீழே செம்மண்ணும் மணலும் கலந்து பூசணும். அதுக்குப்பிறகு டிஸ்பிளேவுக்கு தகுந்தமாதிரி மணிமருந்து வைக்கணும். மேல போய், நட்சத்திரம் மாதிரி, பூ மாதிரி, மழை மாதிரி பொரிப்பொரியா கொட்டுதுல்ல... அதுக்குப் பேருதான் மணிமருந்து. சூரிய உதயத்துக்குள்ள இந்தக் கலவையை ரெடி பண்ணிடணும். நிழலும் இல்லாம, வெயிலும் இல்லாம ஒரு அறையில காயவச்சு டேங்கர்ல வச்சு லேபிள் ஒட்டிடணும்... என்கிறார் ஞானவேல்.

‘‘மூணுபோகம் விவசாயம் செஞ்ச குடும்பம்தான் எங்களோடது. என்னதான் காலம் நேரம் பாக்காம உழைப்பைக் கொட்டுனாலும் மண்ணுல போட்டதுல பாதிகூட தேறலே. தண்ணி பிரச்னை, மண்ணுப் பிரச்னைன்னு ஏகப்பட்ட பிரச்னைங்க. பல குடும்பங்கள் வேலை தேடி வேற ஊர்களுக்குப் போயிட்டாங்க. எங்க உறவுக்காரர் ஒருத்தர் சிவகாசியில வெடி ஃபேக்டரியில வேலை கிடைக்கும்னு சொன்னாரு. வெடி கம்பெனின்னு சொன்ன உடனே பயமா இருந்துச்சு. ‘விபத்து கிபத்துன்னு அடிக்கடி செய்திகள் வருதே.. சரியா வருமா’ன்னு யோசிச்சு பயந்துக்கிட்டேதான் வந்தோம். 

முதல்ல சின்னச் சின்ன வேலைகள்தான் கொடுத்தாங்க. அப்படியே படிப்படியா வேலையைக் கத்துக்கிடடேன். பயமும் போயிடுச்சு. வருஷம் முச்சூடும் வேலையிருக்கதால இப்போ எந்த பிரச்னையும் இல்லை.. என்கிறார் ஞானவேல். பட்டாசுத் தொழிலை மேம்படுத்த ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் சிவகாசியில் நடக்கின்றன. புதிய பட்டாசு ரகங்களை கண்டறியும் வேலையில் நூற்றுக்கணக்கான போர்மேன்கள் ஈடுபட்டுள்ளார்கள். மருந்துக் கலவைகளை மாற்றியும், வண்ணங்களை சேர்த்தும், வடிவங்களை மாற்றியும் நடக்கும் ஆய்வுகளில் பத்தில் ஒன்று வெற்றி பெறும். பட்டாசு தொழில்நுட்பத்தை கல்லூரிகளில் பாடமாகக்கூட வைத்திருக்கிறார்கள். 

குறுகிய கால பயிற்சி வகுப்புகளும் உண்டு. ஒரு காலத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்களே பட்டாசுத் தொழிலுக்கு வந்தார்கள். இன்று பட்டம் பெற்ற பெண்கள் கூட வேலைக்கு வருகிறார்கள்.வெங்கடாசலபுரம் முருகேஸ்வரி பிளஸ்டூ படித்திருக்கிறார். ‘‘எங்க ஊருல பொம்பளைப்புள்ளைக பத்தாப்பு தாண்டுறதே பெரிய விஷயம். நான் பன்னென்டாப்பு முடிச்சேன். நர்ஸுக்கு படிக்கணும்னு ஆசை. சூழ்நிலை சரியில்லை. பட்டாசு ஆலையில வேலைக்கு ஆள் எடுக்கிறதா சொன்னாங்க. வந்துட்டேன். நான் பன்னென்டாப்புல வேதியியல் படிச்சிருந்ததால, எனக்கு சூப்பர்வைசர் வேல கொடுத்தாங்க. 

வேல செய்றவங்ககிட்ட மூலப்பொருட்களோட அபாயத்தை எடுத்துச் சொல்லணும். தப்பா வேலை செஞ்சா அவங்களுக்கு கத்துக்கொடுக்கணும். அதுதான் என்னோட வேலை.. என்கிறார் முருகேஸ்வரி.‘‘மதுரை பக்கத்துல இருக்கிற வையூர்ல இருந்து நான் கம்பெனிக்கு வாரேன். முன்னால எக்காலமும் விவசாய வேலை நடந்துக்கிட்டே இருக்கும். இப்போ பெரும்பகுதி வயக்காடுகளை வீட்டுமனைகளா மாத்திட்டாங்க. வேற எந்த வேலைக்குப் போனாலும் ரெண்டு நாளு வேலை இருக்கும். நாலு நாளைக்கு இருக்காது. அரை வயிறும் கால் வயிறுமா சாப்பிட்டுக்கிட்டுக் கிடக்கிறதை விட பட்டாசு சுத்த போகலாம்னுதான் இங்கே வந்தோம். 

ஆரம்பத்துல எல்லாரும் வெடிக்கும், சிதறும்னு பயமுறுத்துனாக.. பழக, பழகத்தான் அதெல்லாம் பொய்யின்னு தெரிஞ்சுச்சு. வீட்டை விட்டு கிளம்புனா வேலை கண்டிப்பாக் கிடைக்குங்கிற உறுதி இருக்கு... வாழ்க்கை ஓடுது.. என்று சிரிக்கிறார் தனலெட்சுமி.‘‘நான் பட்டாசு வேலைக்குப் போறேன்னு சொன்னப்பவும் வீட்டில எல்லாரும் பயந்தாங்க. இன்னைக்கு ஆபத்து இல்லாத தொழில்னு எதுங்க இருக்கு? விவசாய வேலை செய்யும்போது பாம்பு கடிச்சு சாகலையா..? ரோட்டுல தம்பாட்டுக்கு நடந்து போறவரை ஏதோ ஒரு வாகனம் இடிச்சுத் தள்ளி உயிர் போகலியா? என் வீட்டுக்காரரை கூட ஒரு சாலை விபத்துலதான் பறி கொடுத்தேன். 

பட்டாசு விபத்து எங்கேயாவது எப்போவாது ஒன்னோ, ரெண்டோ நடக்குது. அதை வச்சுக்கிட்டு ஒட்டுமொத்தமா பட்டாசு ஃபேக்டரின்னாவே விபத்துதான்னு எல்லாரும் நினைக்கிறாங்க. அந்த மனநிலை மாறனுங்க... என்கிறார் ஆமத்தூர் ரெங்கநாயகி.சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பட்டாசு பரிவர்த்தனை நடக்கிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வரியாகவே கிடைக்கிறது. இந்தியாவின் 80 சதவிகித பட்டாசுத் தேவையை சிவகாசிதான் தீர்த்து வைக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்பட்டன. இன்றோ சர்வதேச சந்தையை சீனா கைப்பற்றி விட்டது. 

நமக்குக் கொண்டாட்டமாக இருக்கிற பட்டாசு லட்சக்கணக்கான பெண்களுக்கு வாழ்க்கை. விவசாயம் நலிந்து, கிராமிய தொழில்கள் அழிந்து தவித்து நின்ற பெண்களுக்கு பட்டாசுதான் வாழ்க்கை அளித்திருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிர சியளிக்கிற வேலையை சர்வசாதாரணமாக கையாள்கிறார்கள் சிவகாசி பெண்கள். வெடித்துச் சிதறும் வெடியின் சத்தமே அவர்களுக்கான கைதட்டல்களாக ஒலிக்கிறது!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites