இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 26, 2014

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்! காகிதத்தில் காசு; கலக்கும் கல்லூரி மாணவி!


தங்கம் அணிந்தால்தான் மதிப்பு என்ற காலம் போய், உடைக்கு ஏற்ற வண்ணவண்ண நகைகளை அணிவது இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது. ஃபேஷன் நகைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அழகுக் கொஞ்சும் லோலாக்கு, நெக்லஸ் போன்ற ஃபேன்சி நகைகளைக் காகிதத்தில் செய்து காசு பார்க்கிறார் ப்ரீத்தி. சவீதா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி தன் பிசினஸ் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''பேப்பர் ஜுவல்லரியில் ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இறங்கினேன். பிறகு அதுவே விரும்பிச் செய்யும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. எனது சிறுவயது முதலே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.   பொழுதுபோக்காகக் கலைப் பொருட்கள் தயார் செய்து வீட்டை அலங்கரித்து வந்தேன்.
கல்லூரிக்குச் செல்லும்போது கலைப் பொருட்கள் செய்வதற்கான வகுப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு நகைகள் வடிவமைத்தல் பிரிவில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். நகை வடிவமைத்தலில் பேப்பர் ஜுவல்லரி என்னை மிகவும் கவர்ந்தது. அதை முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.
புதிய புதிய டிசைன்களில் காகித நகைகளை வடிவமைத்தேன். காகித நகைகளை பல வண்ணங்களில் தயாரித்தேன்.  இந்தக் காகித நகைகளை அணியும் கலாசாரத்தைக் கல்லூரி மாணவர்களுக்கிடையில் அறிமுகப்படுத்தி பிசினஸாக ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எனக்குத் தோன்றியது.
ஆரம்பத்தில் நான் தயாரித்த காகித நகைகளை அன்றைய தினத்தில் நான் அணியும் உடைகளுக்கு மேட்சிங்காகப் போட்டு கல்லூரிக்குச் சென்றேன். அதைப் பார்த்த என் சக தோழிகள் 'இந்த நகைகளை எங்கு வாங்கினாய், மிக அழகா இருக்கே’ என்று கேட்க, 'நானே இதைத் தயாரித்தேன்’ என்று சொன்னதும்,  எங்களுக்கும் செய்துகொடு என்று கேட்கத் தொடங்கினார்கள். அதுவரை வெறும் பொழுதுபோக்காக நான்  செய்த விஷயம் எனக்கு பிசினஸ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.  இன்று என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிற அளவுக்குக் கைதருகிறது இந்த பிசினஸ்.
எனது தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து 'அலன்கிரித்தா’ என்ற பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கினேன். என் கலெக்ஷன்ஸ் 25 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை உள்ளது. லோக்கல் ஆர்டர்கள் மட்டுமின்றி மும்பையிலிருந்து எல்லாம்கூட ஆர்டர் வருகிறது. நான் விலையில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்றாலும், வெளியூர் ஆர்டர் எனில், அதற்கான டெலிவரிக் கட்டணங்கள் தவிர, வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கமாட்டேன்.
இந்தத் தொழிலுக்கான முதலீடு மிகக் குறைவு. நான் படித்துக்கொண்டே இந்த பிசினஸ் செய்வதால், பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. என் தேவைகளை நானே பூர்த்திசெய்யும் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. தேவைக்குப்போக மீதமுள்ள தொகையைச் சேமித்துவைக்கிறேன்.
இப்போதைக்கு இந்த பிசினஸ் நன்றாகச் செல்கிறது. படிக்கிற நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருப்படியாக இதைச் செய்து நாலு காசு பார்ப்பதால் என் பெற்றோருக்கும் என் மீது நல்ல நம்பிக்கை வளர்ந்துள்ளது. கல்லூரியிலும் நல்ல பெயர்தான்! இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு 'அலன்கிரித்தாவை’ இன்னும் பெரிய அளவில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை'' என்றார் ப்ரீத்தி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites