இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, March 7, 2012

சமையல் தொழில்லில் நல்ல லாபம்

தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை... உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்...

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா குடும்பம், குழந்தைகள்... வேலைக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கை நிறைய சம்பளம் இருந்தாலும், மனதில் தொழில் செய்யணும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கு அடிதளம் போட்டவர் பூ விற்கும் பெண்மணி ஒருவர்.

கூடை நிறைய பூ, விற்றால் தான் அவருக்கு வருமானம். ஒரு பெண் கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு குடும்பத்தை காப்பாற்றும் போது, நம்மால் ஏன் முடியாது என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன் சொந்தமா தொழில் செய்யணும்ன்னு. இப்ப மார்க்கெட்டில் பிரபலமான தொழில் உணவகம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.

வீட்டிலேயே, சின்னதா சமையல் அறை, வேலைக்கு 3 பெண்கள்... தொழில் தொடங்க ஆயத்தமான பிறகு, முதல் நாள் 20 சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பெரிய நம்பிக்கையோடு அம்பத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு ஸ்டூலில் வைத்து விற்பனை செய்தேன். ஒரே ஒரு பாக்கெட் தான் விற்பனையாச்சு. அன்று பெரிய ஏமாற்றம் என்றாலும், அதையே சவாலாக மாற்றி, கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ வாசலில் விற்றேன். அங்கு ஓரளவுக்கு நல்ல போனது.

ஆனா தினமும் சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு தெருவில் நிற்க முடியாது. அதனால் சூப்பர் மார்க்கெட் வாசலில் சின்னதா ஒரு ஸ்டால் போட திட்டமிட்டோம். அண்ணாநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அதற்கு அனுமதியும் கொடுத்தது. பர்கர், பானி பூரின்னு இல்லாமல் வித்தியாசமா இருக்க குழிப்பணியாரம், பால் கொழுக்கட்டை, சிக்கன் வடை, சிக்கன் மொகாலி, பூர்ண கொழுக்கட்டை, சிக்கன் பகோடா, அடை சட்னி, இடியாப்பம், புட்டு சென்னா... செட்டிநாடு உணவுகளை விற்க ஆரம்பிச்சோம்.

நன்றாக போனதால், கொளத்தூரில் உள்ள அவர்களின் மற்றொரு கிளையிலும் ஸ்டால் போட அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் பல நாட்கள் உணவுகள் வீணாகி உள்ளது. அளவு தெரியாமல் அதிகமா போட்டு வீணாகியிருக்கு. அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் இங்குள்ள மக்கள் வெளி உணவுகள் சாப்பிட மாட்டாங்க. ஆனா அண்ணாநகர் வாசிகளுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இது தெரிந்துக் கொள்ளவே எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. அதன் பிறகு அதற்கு ஏற்ப பொருளை தயாரிக்கிறோம்

தற்போது, சிற்றுண்டி உணவுகள் மட்டும் இல்லாமல், வெரைட்டி ரைஸ், பிரியாணி போன்றவை ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். டிபன் அயிட்டம் மற்றும் இல்லாமல் இது போன்ற உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பிரியாணி. அதே போல் சீமந்த விழாவிற்கும் ஆர்டர் பேரில் சமைச்சு கொடுக்கிறோம். அலுவலகம் செல்பவர்கள் கூட உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். அவர்களுக்கு தனியாக பேக் செய்து ஸ்டாலில் வைத்துவிடுகிறோம்.இவ்வாறு சொல்கிறார்கள்.
*************************************************************************************
கையேந்தி பவனில் தொடங்கி, நட்சத்திர ஓட்டல் வரை செட்டிநாட்டுப் பலகாரங்களுக்குத் தனி வரவேற்பு சமீபகாலமாக! வீட்டிலும் ஓட்டலிலும் ஒரே மாதிரி உணவுகளை சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு செட்டிநாட்டு உணவுகள் மாறுதலான சுவை. நகரமெங்கும் செட்டிநாட்டு உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமும் அதுதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட பார்வதிக்கு, செட்டிநாட்டுப் பலகாரங்கள் தயாரித்து விற்பதுதான் முழுநேர பிசினஸ்!
‘‘பூர்வீகம் செட்டிநாடு. எங்க ஊர் பாரம்பரிய பலகாரங்கள் செய்ய சின்ன வயசுலயே கத்துக்கிட்டேன். கல்யாணமாகி சென்னைக்கு வந்த பிறகு வீட்டுக்கு மட்டுமே செய்திட்டிருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி கணவர் ஒரு விபத்துல தவறிட்டார். ரெண்டு சின்னக் குழந்தைங்களை வச்சுக்கிட்டு அடுத்து என்னங்கிற வழி தெரியாம நின்னப்ப, மகளிர் சுய உதவிக் குழுவுல உள்ளவங்க வற்புறுத்தி சேர்த்தாங்க. என்னையும் ஏதாவது தொழில் தொடங்கச் சொன்னாங்க. சமைக்கிறதைத் தவிர எதுவுமே தெரியாத எனக்கு, அந்த நேரம் கை கொடுத்து தூக்கி விட்டது செட்டிநாட்டுப் பலகாரங்கள்தான். பணியாரம், கந்தரப்பம், கருப்பட்டிப் பணியாரம், கற்கண்டு வடை, சீப்புச் சீடை, தேன்குழல், இடியாப்பம், மல்லிப்பூ இட்லினு செட்டிநாட்டு ஸ்பெஷல் உணவுகளை முதல்ல குழுவுல உள்ள பெண்களோட வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் எடுத்துச் செய்து கொடுத்தேன். அவங்க வீடுகளுக்கு வந்த விருந்தாளிங்க சாப்பிட்டுப் பார்த்துட்டு நல்லாருக்கேனு அடுத்தடுத்து ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே சின்னச் சின்ன விசேஷங்களுக்கு, கேன்டீனுக்கு ஆர்டர் வந்தது. பண்ணிட்டிருக்கேன்’’ என்கிற பார்வதி, விருப்பமுள்ளோருக்கு இந்தப் பலகாரங்களை செய்யக் கற்றுத் தந்து, தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கத் தயாராக உள்ளார்.
முதலீடு... பிசினஸ் வாய்ப்பு?
‘‘500 ரூபாய் முதலீடு போதும். முதல்ல ஆரம்பிக்கிறப்ப, வீட்ல உள்ள பாத்திரங்களை வச்சே பண்ணலாம். ஆர்டர் பிடிக்க, முதல்ல அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு சாம்பிள் கொடுத்துப் பார்க்கலாம். என்னென்ன அயிட்டம், என்ன ஸ்பெஷல்னு நோட்டீஸ் அடிச்சு விநியோகிக்கலாம். இன்னிக்கு எல்லா ஓட்டல்கள்லயும் செட்டிநாட்டு அயிட்டங்களுக்குனு தனிப்பிரிவே இருக்கு. வீட்டுக்குப் பக்கத்துல உள்ள சின்னச்சின்ன ஓட்டல்கள்ல பேசி, ஆர்டர் பிடிக்கலாம். பிறந்த நாள் பார்ட்டி மாதிரியான சின்ன விசேஷங்களுக்கு செய்து கொடுக்க ஆரம்பிச்சாலே, பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்!’’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites