இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, November 2, 2013

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி

கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்!
எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.
ஏழு அடி இடைவெளி!
ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
எட்டாம் மாதம் அறுவடை!
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.
பூச்சிகள்.. கவனம்!
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.
விற்பனைக்கு பிரச்னை இல்லை!
திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.
தொடர்புக்கு
பாலதண்டாயுதபாணி, செல்போன் : 98946 99975
- See more at: http://spottamil.com/agriculture-india#sthash.S5MEPGE5.dpuf

பானைகள்

எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.
மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர்என்று அழைப்பர்.
பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.
பானை வகைகள்

பானைகள்


நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.
1. அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப்பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை[2]
காலப்போக்கில் மட்பாண்ட கைத்தொழில் யாழ்ப்பாணத்தில் முற்றாக மறைந்துவிடும் என மட்பாண்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது மட்பாண்ட பொருட்களின் விற்பனை வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது.
18.07.2012 செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, மண்ணாலான சட்டி பானைகள் என்பன திருநெல்வேலிச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இதனால் தமக்கு எந்தவித இலாபமும்  கிடைக்கவில்லை என விற்பனையில் ஈடுபட்டிருந்த  வியாபரி ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த முறை ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெற்ற வியாபாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம்  தாம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மற்றுமொரு வியாபாரி கூறினார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் ஹாஸ் பாவனை மற்றும் அலுமினியப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளமையே, மட்பாண்டபொருட்களின் பாவனை குறைவடைவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தாம் இரண்டு சுண்டு அரிசி போட்டு சமைக்கக்கூடிய, பானையை 100 ரூபாவிற்கு விற்பனைசெய்யும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த மட்பாண்ட வியாபாரிகள்  இதே பானையை  80 ரூபாவிற்கு விற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்பாண்ட பொருட்களை உற்பத்தி  செய்வதற்கு தேவைப்படும் மண்ணை வன்னியிலிருந்து காசு கொடுத்து  வாங்குவதாகவும், ஒரு லோட் மண் 50,000 ரூபா வரை   விற்பனையாவதாகவும் குறிப்பிட்ட குறித்த வியாபாரி, வன்னிப்பகுதியில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடுபடுபவர்கள் மண்ணை இலவசாமாக குளங்களிலிருந்தே பெற்று தொழிலில் ஈடுபடுகின்றனர் எனச் சுட்டிக்காட்டினார்.
இதனால், அவர்களைப் போன்று தம்மால் விலை குறைத்து விற்பனை செய்யமுடியாதெனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டால், இந்தத் தொழிலை விட்டு விலகி  வேறு தொழிலை செய்யவேண்டிய தேவை ஏற்படும் எனவும், இவ்வாறு மட்பாண்ட கைத்தொழிலாளர்கள் அனைவரும்  வேறு தொழில் ஈடுபட்டால் காலப்போக்கில் மட்பாண்ட கைத்தொழில் யாழ்ப்பாணத்தில் முற்றாக மறைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவும் அவர் தெரிவித்தார். மண்பாண்ட உற்பத்திகளை ஊக்குவிக்க 200 மில்லியன்!
December 7, 2012 | : செய்திகள்,வணிகம் - நிதி |
 சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் கைத்தொழில் உற்பத்திகளில் ஒன்றான மண்பாண்ட கைத்தொழில் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்ற விசேடமான  பொருட்களை தயாரித்து அவற்றை சந்தைப்படுத்துவதற்கான சந்தைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் ஐனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், பதனிடப்பட்ட வாசனைத் திரவியங்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்திகள், கருவாடு, பதனிடப்பட்ட உணவு மற்றும் குடிபானங்கள், இனிப்பு பண்டங்கள் போன்ற பெறுமதிமிக்க உள்ளூர் உற்பத்திகளில் ஈடுபட்டு  சிறிய  தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கென சுங்க நிலையில் வெளியீடு மற்றும் உள்ளீடுகளுக்கு இடையில் வித்திசாயமான வரியினை விதிப்பதற்கும் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 


இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி.

தேனீக்கள் மட்டும்தானா?...சுறுசுறுப்பு, அதை வளர்க்கும் இந்த.... இல்லத்தரசியும் படு சுறுசுறுப்புத்தான். இயற்கை எழிலுடன் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவையை அடுத்த சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள மலை மந்திரிபாளையம் கிராமத்து பண்ணை வீட்டில், தேன்பண்ணை தொழிலில் வருமானம் நல்ல தேடும் இல்லத்தரசியாக திகழ்பவர் ரேவதி (வயது26). கணவர் திருஞான சம்பந்தம் (33) துணையோடு, வீட்டில் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை தாண்டி பிற மாவட்டங்களிலும் சீசனுக்கு தகுந்தாற்போன்று தேனீ பெட்டிகளை வைத்து, வருமானம் ஈட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரே மகன் திருநாவுக்கரசு (6). தேனீ...தேன்...பற்றி அவரிடம் கேட்ட போது தேனாக பேசத்தொடங்கினார். அது பற்றி பார்க்கலாம்:–
தேனீ வகைகள்
இந்தியாவில் தேனீ வளர்ப்பில் கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மற்றும் வெளிநாட்டு வகையான இத்தாலி தேனீ என 5 வகை தேனீக்கள் உள்ளன. இதில் தற்போது இத்தாலி ரக தேனீதான் தேனீ வளர்ப்பில் லாபகரமாக உள்ளது.இந்த இத்தாலி ரக தேனீக்கள் அந்த நாட்டில் இருந்து முதன் முறையாக கடந்த 1060–ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இதன் பின்னர் 2006–ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டது. தற்போது இந்த தேனீ வளர்ப்பு ராஜ பாளையம், அரவக்குறிச்சி, கோவை பகுதிகளில் விறுவிறுப்பாக காணப்படுகிறது. சுமார் 130 பெட்டிகளில் இத்தாலிய தேனீக்களை வைத்து வளர்த்து வருகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் நாட்டு தேனீக்களை வைத்து வளர்த்தோம்.
ஆனால் அவற்றில் தாய்–சேய் புரூடு வைரஸ்நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த தேனீக்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து. இதனால் தேன் உற்பத்தியின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் இந்த நாட்டு தேனீக்கள், கூட்டில் நன்றாக தேன் இருக்கும் போது திடீரென அந்த தேனீக்கள் பெட்டியை விட்டு விட்டு ஓடிப்போய்விடும். இதற்கு காரணம் வைரஸ் நோய் தாக்குதல் தான். ஒரு கூட்டில் வைரஸ் நோய்தாக்கி இறக்கும் தேனீக்களை பார்த்ததும், மற்ற தேனீக்கள் அங்கிருக்காமல் பறந்து விடும். இதபோன்ற நெருக்கடி நிலை நாட்டு தேனீ வளர்ப்பில் இருந்தது. இதனால் எங்களுக்கு ஆரம்ப கால தேன் உற்பத்தி லாபகரமாக இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி படைத்தது
இந்த நிலையில் இத்தாலி தேனீயில் நோய் பற்றிய பிரச்சினை எதுவும் கிடையாது. இந்த வகைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இதை கோவை வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ததால் அதைவாங்கி வளர்க்க தொடங்கினோம். இதனால் எங்களின் தேன் பண்ணை தொழில் விறுவிறுப்பானது. இந்த தேனீக்களை பொறுத்தவரை நோய் பிரச்சினை இருந்தது இல்லை. ஆனால் தீவனம் அதிகம் தேவைப்படுகிறது. இதற்காக தேன் அதிகமாக இருக்கும் இடங்களில் அவற்றை வைத்து வளர்க்க வேண்டும். குறிப்பாக பூக்கள் அதிகம் உள்ள இடங்களில் வைத்து வளர்த்தால் தேன் அதிகமாக கிடைக்கும். எங்கள் தோட்டம் தவிர மற்ற விவசாயிகளின் தோட்டங்களில் குறிப்பாக முருங்கை, சூரிய காந்தி, கடுகு போன்ற பயிர்கள் வளரும் தோட்டங்களில் இத்தாலி தேனீ பெட்டிகளை வைத்து நாங்கள் தேன் எடுத்து வருகிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுவதால் பயிர்விளைச்சல் அமோகமாக உள்ளது.
மேலும் இத்தாலி தேனீக்கள் எந்த சூழ்நிலையிலும் பெட்டியை விட்டு ஓடிவிடாது. ஆனால் எறும்பு, குழவி பிரச்சினை இருந்தால் நம் நாட்டுரக தேனீக்கள் பெட்டியை விட்டு ஓடிப்போகும். அதற்கு தீவனம் இல்லாத கால கட்டத்தில் கரும்பு ஜூஸ் வைத்து கொடுப்போம். இந்த ஜூசை தேனீக்கள் வளரும் பெட்டியின் ஒரு பகுதியில் வைத்து விடுவோம். அதை தேனீக்கள் வந்து குடிக்கும். சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் போது பாக்டீரியா நோய்கள் வந்துவிடும். ஆகவே அதை தவிர்த்து விடுவோம். இது தவிர குளுக்கோ விட்டா கொடுக்கலாம். ஆனால் அது அதிக விலை என்பதால் தொடர்ந்து கொடுக்க முடியாது. முருங்கை, கொத்துமல்லி தேன் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் இவைகளின் சீசன் காலங்களில் ஆண்டுக்கு 3 மாதங்கள் தான் தேன் எடுக்க முடியும். கொத்த மல்லி ஒரு மாதத்தில் தான் எடுக்க முடியும்.
ரூ.1 லட்சம் வருமானம்
3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலிய தேனீப்பெட்டி ஒன்றின் விலை ரூ.6,500. இதனை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் 1½ அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ஸ்டாண்டுகள் உண்டு. ஒரு பெட்டிக்கும், அடுத்த பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில் எறும்பு, பல்லி, போன்றவை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாக மாறும். இந்த காலகட்டத்துக்கு பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒவ்வொரு முறை சேகரிக்கும் போதும், 2 கிலோ அளவுக்கு குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதில் இருந்து அடுத்த பெட்டியை உருவாக்கி கொள்ள முடியும். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2,500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவுக்கு தேன்கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்தால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்த பகுதியில் பூக்கள் அதிகமாக உள்ளதோ? அதை தெரிந்து கொண்டு போய் பெட்டிகளை வைக்க வேண்டும். அப்போது தான் ஆண்டு முழுவதும் வருமானம் பெற முடியும். முருங்கை கொத்தமல்லி, கடுகு, சூரிய காந்தி,பந்தல் பயிர்கள், தென்னை ஆகியவற்றில் அதிகளவில் தேன் கிடைக்கும். பொங்கலூர், சுல்தான் பேட்டை பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகளில் பூக்கிற பருவத்தில் பெட்டிகளை வைச்சு தேன் எடுப்போம். ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 5 கிலோ தேன் கிடைக்கும். நாங்கள் சுமார் 130 பெட்டிகள் வரை வைத்துள்ளோம். இதன் மூலம் சராசரியாக மாதம் 5 ஆயிரம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்கிறோம். இந்த தொழிலில் நான், மற்றும் எனது கணவர், மற்றும் மாமனார் வேலுச்சாமி, மாமியார் அன்னப்பூரணி என 4 பேர் ஈடுபடுகிறோம். இதனால் எங்களின் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதற்காக நாங்கள் எங்களிடம் வருகிற அனைவருக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
இத்தாலிய தேனீக்களை வீடுகளில் கூட வளர்த்து லாபம் சம்பாதிக்க முடியும். வீட்டு கொல்லை புறத்தில் ஒரு பெட்டி வைத்தால் மாதம் 4 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் குறைந்த பட்சம் ரூ.250 ஆகும். ஒரு பெட்டியில் இருந்து வாரா வாரம் தேன் எடுக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1000 வரை வருமானம் கிடைக்கும். பெட்டி வைக்கும் இடம் கிராமப்புறமாக, விவசாய நடைபெறும் பகுதியாக இருந்தால் நல்லது. நகரத்தில் வசிப்பவராக இருந்தால் பெட்டிகளை வைக்க மரங்கள் அதிமாக உள்ள பகுதியாக இருக்க வேண்டும். இதற்கு முதலீடு என்பது பெட்டி வாங்கும் செலவுதான். ஒரு பெட்டிக்கு ரூ.6,500 ஆகும்.
மகரந்தம் கிலோ ரூ.2000
தேனீக்கள் கொட்டுவது அக்கு பஞ்சர் வைத்தியத்தில் நல்லது என்கிறார்கள். மூட்டு வலி, நரம்பு வலிகள் வராது. ஒரு சில ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைக்காக செயற்கையாக தேனீக்களை கொட்ட வைக்கின்றனர். இது தவிர தேன் பெட்டிகளில் தேனீக்கள் தங்கள் கால்களில் எடுத்து வரும் மகரந்தத்தை சேரிக்கும் முறையை கையாள்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் மகரந்தம் கிலோவுக்கு ரூ.2000 என நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. இந்த மகரந்தம் பெண்களுடைய நோய்களுக்கு சிறப்பான மருந்தாக உள்ளது. இதை தினசரி சாப்பிட்டு வந்தால் தலைவலி, மூட்டு வலி, உடல் வலிகள் இருக்காது. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதை நாங்ள் சாப்பிட்டு வருகிறோம். தேனை பொறுத்தவரை உள்நாட்டு தேவைக்கே பற்றாக்குறையக உள்ளது. இருந்தாலும் எங்களிடம் தேனை வாங்கி நண்பர் ஒருவர் ஏற்றுமதி செய்கிறார். நல்ல தேன் கிடைப்பது தற்போது அரிதாக உள்ளது. நல்ல தேனாக இருக்கிறதா? இல்லையா என்பதை அறிய ஒரு டம்ளரில் தேனை சிறிது ஊற்றினால் அது கீழே போய் கரையாமல் இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறிது அளவு தேனை கொடுத்தால் ஒன்றும் பாதிப்பு இருக்காது. தேனில் வைட்டமின், மினரல்ஸ், தாதுப்பொருட்கள் உள்ளன. சத்துக்கள்இருப்பதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

அழகுப் புல் தரை அமைத்தல்


அழகுப்புல் தரையானது அகத்திற்கும், புறத்திற்கும் குதூகலத்தைத் தருவதோடு நாம் வசிக்கும் சூழ்நிலையை அழகுபடுத்தவும் பயன்படுகிறது. இப்புல்தரை துவங்கிய வரலாறு பார்க்கும் போது இவை இங்கிலாந்தில் தோன்றியதாக அறியப்படுகின்றன. இங்கிலாந்தில் காணப்படும் இயற்கையான, தொடர்ச்சியான சிறு மழைப்பொழிவால் அங்கு பெருமளவில் தரைப்பகுதிகளில் புற்கள் அடர்ந்து காணப்படும். இத்தகைய இயற்கை வனப்பைத் தங்களது தோட்டத்தின் முக்கிய அம்சமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு இங்கிலாந்தில் தோன்றிய அழகுப் புல் வளர்ப்புக் கலையானது பின்னர் நாளாவட்டத்தில் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது அழகுப் புல் தரை வளர்ப்பானது பெரிய பூங்காக்களிலும், வீடுகள் மற்றும் மாளிகைகளின் முன் மெருகூட்டப் பயன்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த புல் தரை வளர்ப்பில் கையாளப்பட வேண்டிய வளர்ப்பு முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நிலம் தயார் செய்தல்
  1. நிலத்தை முதலில் 45 செ.மீ ஆழத்திற்கு நன்கு கொத்தி புழுதியாக்கி அதிலுள்ள சிறு கற்கள், பெரிய மண் கட்டிகள், கோரைக் கிழங்கு, அருகம் புல்லின் கிழங்கு போன்றவற்றை சுத்தமாகப் பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின் மக்கிய எருவையோ அல்லது மக்கிய மாட்டு சாணத்தையோ ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ என்ற அளவிலிட்டு நிலப்பரப்பை சமப்படுத்த வேண்டும். சமப்படுத்தும்பொழுது மழைநீர் வடிவதற்காக 3 மீ பரப்புக்கு 15 செ.மீ சரிவு கொடுத்து சமப்படுத்ததல் நல்லது. இவ்வாறு தயார் செய்த நிலத்திற்கு இரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் மண் நன்கு படிந்து அதில் உள்ள களைகள் முளைக்கும். அவற்றை எடுத்துவிட்டு மீண்டும் கொத்திச் சமப்படுத்த வேண்டும். அழகுப்புல் தரை வளர்ப்பதற்கு 5.0 முதல் 5.6 கார அமில நிலையையுடைய மண் மிகவும் ஏற்றதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்ணில் அமிலம் மிகுதியாக இருந்தால் ஒரு சதுர மீட்டருக்கு 500 கிராம் சுண்ணாம்பை இடவேண்டும். களிகலப்பு மண் மற்றும் காரத் தன்மையுடைய  மண் ஆகியவற்றிற்கு மேற்கூறிய அளவு ஜிப்சம் இடவேண்டும்.
அழகுப் புல் வகைகள்
புல் தரை அமைப்பதற்கு அருகம்புல், அகஸ்டியன் புல், உப்பருகு, நீலப்புல், சிக்குப் புல், சுப்பான் புல், கொரியன் புல், ஹைதராபார் புல் மற்றும் குட்டை பெர்முடா ஆகிய வகைகளை உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு வகைப் புல்லினத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மையும் பயன்பாடும் உண்டு. அத்தகைய சிறப்புத் தன்மைகளை இப்பொழுது பார்க்கலாம்.
அருகம்புல் வகைகள்
புல்தரை அமைக்க பெருவாரியாகப் பயன்படுத்தப் படுகிறது. சைனோடான் இண்ர்மீடியஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்புல் வகையானது சுமாரான மிருதுத் தன்மையுடன் காணப்படும். இவை நிழற்பகுதி மற்றும் தண்ணீர் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புல் தரை அமைக்க உகந்தவை.
உப்பருகு
இப்புல்லினமானது சிறு சிறு முடிச்சுகளாக வளருவதால் இதனை சங்கிலிப் புல் என்றும் அழைப்பார்கள். ஸ்போரா போலஸ் டிரிமுலஸ் என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் இச்சிற்றினமானது மிக மிருதுவான இலைகளுடன் வளரும் இயல்புடையவை. இந்தப் புல்  வகையை களர் மற்றும் அதிக சூரிய ஒளி கிடைக்கும் நிலங்களில் புல் தரை அமைக்கப் பயன்படுத்தலாம்.

நீலப்புல்
போயோ பிரட்டன்சிஸ் என்று அழைக்கப்படும் இந்தப்புல் வகையானது சுமாரான மிருதுவான தன்மையுடன் காணப்படும். இந்தப்புல் வகையானது அமில நிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்கும் மிகவும் உகந்தது.
சிக்கு புல்
சொரசொரப்பான இலைகளுடைய இப்புல் வகையானது பென்னீசீட்டம் கிளேன்டஸிடினம் என்று தாவரவியலாளர்களால் பெயரிடப்பட்டுள்ளது. இவை அமில நிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் புல்தரை அமைக்க உகந்தவை.

ஜப்பான் புல்
ஓரளவுக்கு சொரசொரப்பான தன்மையுடைய இப்புல் வகையானது ஜாய்சியா ஜப்பானிகா என்று அழைக்கப்படுகிறது. இவை மணற்பாங்கான மற்றும் அதிக சூரிய ஒளி படக்கூடிய பகுதிகளுக்கு மிகவும் உகந்தவை.
மணிலாபுல்
ஜாப்சியா மேட்ரல்லா என்றழைக்கப்படும் இப்புல்வகையானது நடுத்தர மிருதுத் தன்மையுடன் காணப்படும். இவை பிரகாசமான சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.

கொரியன் புல்
ஜாய்சியா டெலுயிபோலியா என்றழைக்கப் படும் இப்புல் வகையானது மிருதுவான இலை அமைப்புடன் காணப்படும். இவை சூரிய ஒளி கிடைக்கும் திறந்தவெளியில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.
ஹைதராபாத் புல்
சைனோடான் சிற்றினத்தை சார்ந்த இப்புல் வகையானது மிகவும் மிருதுவான இலை அமைப்புடன் கானப்படும். இவை அதிக சூரிய வெளிச்சம் கிடைக்கும் திறந்த வெளிப்பகுதிகளில் பயிரிட உகந்தவை.

குட்டை பெர்முடா
நடுத்தர மிருதுத் தன்மையுடன் காணப்படும் இப்புல் மகையானது சைனொடான் சிற்றினம் என அழைக்கப்படுகிறது. நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் திறந்த வெளிப்பகுதிகளில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.

புல் தரை அமைக்கும் முறைகள்
புல் தரையானது விதைகள், புல்பாய்நடவு, மண் சாணி கலந்து நடுதல் மற்றும் கரணை அல்லது கிழங்கு ஊன்று முறை ஆகிய முறைகளில் அமைக்கப்படுகின்றன. இந்த முறைகளை இங்கு காண்போம்.
விதை
நன்கு தயார்படுத்திய நிலத்தில் ஒரு பங்கு விதைக்கு ஐந்து பங்கு மணல் கலந்து 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 2.5 கிராம் விதை தேவைப்படும். விதைக்கும் முன் மண்ணை முள் கொத்தால் நன்கு கிளரி விட்டு விதைத்த பின்பு விதைகளைக் கொளமண் கொண்டு மூட வேண்டும். ஒரு மீட்டருக்கு 10 கிராம் பி.எச்.சி மருந்து தூவி எறும்பு  வராமல் தடுக்க வேண்டும். பின் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதை முளைக்க 5 வாரம் ஆகும். புல் 5 செ.மீ உயரம் வளர்ந்த பிறகு அறுத்து விட வேண்டும். இந்த நிலையில் புல் தரைக் கருவி கொண்டு கத்தரிக்கக் கூடாது. உருளை கொண்டு நன்கு உருட்டி விட்டால் புல் நன்றாகப் படியும். டூபுல் என்றழைக்கப்படும் அருகம்புல் (சைனோடான் டேக்டைலான்) இம்முறையில் நன்கு வளரும்.

புல் பாய் நடவு
குறுகிய காலத்தில் புல் கரைகளை அமைக்க குளக்கரைகள் மற்றும் ஆற்றோரங்களில் ஏற்கனவே வளர்ந்த புல் தரைகளைக் கத்தைகளாக வெட்டி எடுத்து வந்து தேவையான இடத்தில் மரக் கொட்டாப்பிடி கொண்டு அப்பத்தைகள் ஒரே சீராகவும் சமமாகவும் படியுமாறு தட்டி விட வேண்டும். இரண்டு பத்தைகளுக்கு நடுவில் இருக்கும் சந்துகளை பொடியான மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும். பின் சற்று கனமான கல் உருளை கொண்டு சுமார் 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறையாக 2 முதல் 3 தடவைகள் உருட்டி விட வேண்டும்.



மண் சாணி கலந்து விடுதல்
இந்த முறையில் புல்லின் வேர்களை 5-7 செ.மீ நீளமுள்ளதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வேர்களை ஒரு பங்கு மாட்டுச் சாணி கொண்ட கலவையில் கலந்து, அதைத் தயார்  படுத்திய தரையில் 2.5 செ.மீ மொத்தத்திற்கு பரப்பி அதன் மேல் வைக்கோல் கொண்டு மூட வேண்டும். பின்னர் பூ வாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். அதன்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். புற்கள் 15 நாட்களுக்குள் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் வீச்சுக் கத்தியினைக் கொண்டு புற்களை அறுத்து விட வேண்டும். மூன்று மாதங்களுக்கு பின்னரே புல்தரைக் கருவியை உபயோகிக்க வேண்டும்.
கரணை அல்லது கிழங்கு ஊன்றுதல்
இந்த முறையில் அருகம்புல்லின் கிழங்குகளையோ அல்லது 5 செ.மீ நீளமுள்ள அருகுகளையோ 5 செ.மீ இடைவெளி கொடுத்து நாற்று நடுவது போல சமப்படுத்தப் பட்ட எரு இட்ட நிலத்தில் நட வேண்டும். 15 நாட்களுக்குள் புல் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்.

ஏஸ்டோ டர்ஃப்
வளர்ந்த நாடுகளில் மேற்கூரைத் தோட்டங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் செயற்கை புல்தரையானது மிகவும் பிரபலமடைந்துள்ளது. செயற்கை நாரிழைகளின் பிணைப்பிற்கு சீரான நீர்த்தெளிப்பு மிகவும் அவசியமாகும்.
புல் தரை பராமரிப்பு
உருளை கொண்டு உருட்டுதல்
இதனால் மேடு பள்ளங்கள் சமமாக்கப்படும். தக்க ஈரப்பசை உள்ள பொழுது உருளை கொண்டு உருட்ட வேண்டும். நிலம் மிகவும் ஈரமாகவோ அல்லது காய்ந்தோ இருக்கும் போது உருட்டுதல் கூடாது.
வெட்டும் கருவி கொண்ட வெட்டுதல்
வளரும் புல்லைப் பூக்க விடாமல் வெட்டி விடுவது அவசியம். புல் தரைக் கருவியோ அல்லது வீச்சுக் கத்தி கொண்டோ 15 நரட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். ஆனால் புல்தரை அமைத்த புதிதில் புற்கள் நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டும் கருவியைப் பயன் படுத்தக் கூடாது.
உரமிடுதல்
வருடம் இரு முறை சதுர மீட்டருக்கு ஒரு கிலோ மாட்டு எரு,  30 கிராம் அம்மோனியம் சல்பேட், 16 கிராம் சூப்பர் பாஸ்பேட்  மற்றும் 16  கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும். உரமிட்ட பின் நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
புல் தரையில் கோரை வகைக் களைகள் அதிகமாக வளர்ந்து காணப்படும். இவற்றைக் கூர்மையான ஊசி கொண்டு கிழங்குகளை குத்தி அகற்றுவதன் மூலமும் அன்சார் 529 என்ற களைக் கொல்லியை லிட்டருக்கு 3 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். புல் தரையில் தோன்றும் அகன்ற இலைக் களைகளை கட்டுப்படுத்த 2-4 டி என்ற களைக் கொல்லியை ஏக்கருக்கு 4 கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். களை அகற்றப்பட்ட இடத்தில் பொடி மண்ணுடன் கலந்த புல்லின் வேர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
புல் தரையை வெள்ளை எறும்புகள், வெட்டுப் புழுக்கள், குடைவுப்புழு, இலைத் தத்துப்பூச்சி மற்றும் aற்புழுக்கள் அதிகமாகப் பாதித்து புல் தரையின் அழகிற்கும் வளர்ப்பிற்கும் பாதகம் உண்டு பண்ணுகின்றன. இத்தகை சேதம் உருவாக்கும் பூச்சிகளையும் இதன் கட்டுப்பாடு பற்றியும் இங்கு காண்போம்.
வெள்ளை எறும்புகள்
இவற்றின் பாதிப்பு காணப்படும் பகுதிகளில் இவை புல்லையும் மண்ணையும் பாதிப்பு ஆங்காங்கே சிறு மண் கேடுகளை உருவாக்குகின்றன. பாதிப்பு காணப்படும் பகுதிகளில் லிண்டேன் 10 சதவிகிதத் தூளை தூவி கட்டுப்டுத்தலாம்.
வெட்டுப்புழு
இவை மண்ணின் மேல் பரப்பில் காணப்படும் புல் தண்டுகளை வெட்டுத் தின்று விடுவதால் ஆங்காங்கே புற்கள் திட்டுத்திட்டாக கருகிக் காணப்படும். பி.எச்.சி 10 சத தூளை இவற்றின் பாதிப்பு காணப்படும் பகுதிகளில் தூவி இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
குடைவுப்புழு
இவை புற்களின் வேர்களையும் தண்டுகளையும் குடைந்து கருகிய திட்டுகளை உருவாக்குகின்றன. இதனை லிண்டேன் 10 சதத்தூளை பாதிப்பு காணப்படும் பகுதிகளில் தூவி இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இலை தத்துப்பூச்சி
இவை இலையில் சாற்றை உறிஞ்சி விடுவதால் இலைகள் பட்டை பட்டையாக  வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த கோடுகளுடன் காணப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட புற்கள் வாடி, இறுதியில் உலர்ந்து போய்விடும். இதனை லிட்டருக்கு 1 மில்லி ரோகர் என்ற மருந்தை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
நூற்புழுக்கள்
இவை புற்களின் வேர்களை பாதிப்பதால் புற்கள் வெளிறிக் காணப்படும். அதனை சதுர மீட்டருக்கு 40 கிராம் பியூராடான் என்ற குருணை மருந்தினை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
புல்தரை பராமரிப்பில் ஏற்படும் பிரச்சினைகள்
வெளிருதல்
இரும்பு மற்றும் மாங்கனீசு பற்றாக்குறையால் புல் தரை வெளிறி மஞ்களாகக் காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய 25 கிராம் பெரஸ் சல்பேட் என்னும் உப்பை 10 லிட்டர் நீரில் கலந்து 100 சதுர மீட்டருக்கு தெளிக்க வேண்டும்.
நாய் சிறுநீர்
புல் தரையின் மேல் நாய்கள் சிறுநீர் கழிப்பதால் வட்ட வடிவில் புல்தரை காய்ந்து காணப்படும். இதனால் காய்ந்த புற்களைப் பிடுங்கி அகற்றி விட்டு புதிய புற்களை நட வேண்டும்.
ஒழுங்கற்ற முறையில் வெட்டுவதால் புல் காய்தல் இவற்றை நிவர்த்தி செய்ய புல் தரை வெட்டும் கருவியின் வெட்டும் விளிம்பை நன்கு கூர்மையாக பராமரிக்க வேண்டும். புற்களை மூன்றில் ஒரு பாகம் மட்டும் வெட்டி நீக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்பாகத்தை மண்ணோடு சேர்த்து வெட்டதலைத் தவிர்க்க வேண்டும்.
ஒழுங்கற்ற தண்ணீர் பாசனம்

இதனால் புற்கள் காய்ந்தும், அழுகியும் போய்விட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய புல் தரை நனையும் வரை மட்டும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites