இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 2, 2013

அழகுப் புல் தரை அமைத்தல்


அழகுப்புல் தரையானது அகத்திற்கும், புறத்திற்கும் குதூகலத்தைத் தருவதோடு நாம் வசிக்கும் சூழ்நிலையை அழகுபடுத்தவும் பயன்படுகிறது. இப்புல்தரை துவங்கிய வரலாறு பார்க்கும் போது இவை இங்கிலாந்தில் தோன்றியதாக அறியப்படுகின்றன. இங்கிலாந்தில் காணப்படும் இயற்கையான, தொடர்ச்சியான சிறு மழைப்பொழிவால் அங்கு பெருமளவில் தரைப்பகுதிகளில் புற்கள் அடர்ந்து காணப்படும். இத்தகைய இயற்கை வனப்பைத் தங்களது தோட்டத்தின் முக்கிய அம்சமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு இங்கிலாந்தில் தோன்றிய அழகுப் புல் வளர்ப்புக் கலையானது பின்னர் நாளாவட்டத்தில் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது அழகுப் புல் தரை வளர்ப்பானது பெரிய பூங்காக்களிலும், வீடுகள் மற்றும் மாளிகைகளின் முன் மெருகூட்டப் பயன்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த புல் தரை வளர்ப்பில் கையாளப்பட வேண்டிய வளர்ப்பு முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நிலம் தயார் செய்தல்
  1. நிலத்தை முதலில் 45 செ.மீ ஆழத்திற்கு நன்கு கொத்தி புழுதியாக்கி அதிலுள்ள சிறு கற்கள், பெரிய மண் கட்டிகள், கோரைக் கிழங்கு, அருகம் புல்லின் கிழங்கு போன்றவற்றை சுத்தமாகப் பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின் மக்கிய எருவையோ அல்லது மக்கிய மாட்டு சாணத்தையோ ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ என்ற அளவிலிட்டு நிலப்பரப்பை சமப்படுத்த வேண்டும். சமப்படுத்தும்பொழுது மழைநீர் வடிவதற்காக 3 மீ பரப்புக்கு 15 செ.மீ சரிவு கொடுத்து சமப்படுத்ததல் நல்லது. இவ்வாறு தயார் செய்த நிலத்திற்கு இரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் மண் நன்கு படிந்து அதில் உள்ள களைகள் முளைக்கும். அவற்றை எடுத்துவிட்டு மீண்டும் கொத்திச் சமப்படுத்த வேண்டும். அழகுப்புல் தரை வளர்ப்பதற்கு 5.0 முதல் 5.6 கார அமில நிலையையுடைய மண் மிகவும் ஏற்றதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்ணில் அமிலம் மிகுதியாக இருந்தால் ஒரு சதுர மீட்டருக்கு 500 கிராம் சுண்ணாம்பை இடவேண்டும். களிகலப்பு மண் மற்றும் காரத் தன்மையுடைய  மண் ஆகியவற்றிற்கு மேற்கூறிய அளவு ஜிப்சம் இடவேண்டும்.
அழகுப் புல் வகைகள்
புல் தரை அமைப்பதற்கு அருகம்புல், அகஸ்டியன் புல், உப்பருகு, நீலப்புல், சிக்குப் புல், சுப்பான் புல், கொரியன் புல், ஹைதராபார் புல் மற்றும் குட்டை பெர்முடா ஆகிய வகைகளை உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு வகைப் புல்லினத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மையும் பயன்பாடும் உண்டு. அத்தகைய சிறப்புத் தன்மைகளை இப்பொழுது பார்க்கலாம்.
அருகம்புல் வகைகள்
புல்தரை அமைக்க பெருவாரியாகப் பயன்படுத்தப் படுகிறது. சைனோடான் இண்ர்மீடியஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்புல் வகையானது சுமாரான மிருதுத் தன்மையுடன் காணப்படும். இவை நிழற்பகுதி மற்றும் தண்ணீர் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புல் தரை அமைக்க உகந்தவை.
உப்பருகு
இப்புல்லினமானது சிறு சிறு முடிச்சுகளாக வளருவதால் இதனை சங்கிலிப் புல் என்றும் அழைப்பார்கள். ஸ்போரா போலஸ் டிரிமுலஸ் என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் இச்சிற்றினமானது மிக மிருதுவான இலைகளுடன் வளரும் இயல்புடையவை. இந்தப் புல்  வகையை களர் மற்றும் அதிக சூரிய ஒளி கிடைக்கும் நிலங்களில் புல் தரை அமைக்கப் பயன்படுத்தலாம்.

நீலப்புல்
போயோ பிரட்டன்சிஸ் என்று அழைக்கப்படும் இந்தப்புல் வகையானது சுமாரான மிருதுவான தன்மையுடன் காணப்படும். இந்தப்புல் வகையானது அமில நிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்கும் மிகவும் உகந்தது.
சிக்கு புல்
சொரசொரப்பான இலைகளுடைய இப்புல் வகையானது பென்னீசீட்டம் கிளேன்டஸிடினம் என்று தாவரவியலாளர்களால் பெயரிடப்பட்டுள்ளது. இவை அமில நிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் புல்தரை அமைக்க உகந்தவை.

ஜப்பான் புல்
ஓரளவுக்கு சொரசொரப்பான தன்மையுடைய இப்புல் வகையானது ஜாய்சியா ஜப்பானிகா என்று அழைக்கப்படுகிறது. இவை மணற்பாங்கான மற்றும் அதிக சூரிய ஒளி படக்கூடிய பகுதிகளுக்கு மிகவும் உகந்தவை.
மணிலாபுல்
ஜாப்சியா மேட்ரல்லா என்றழைக்கப்படும் இப்புல்வகையானது நடுத்தர மிருதுத் தன்மையுடன் காணப்படும். இவை பிரகாசமான சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.

கொரியன் புல்
ஜாய்சியா டெலுயிபோலியா என்றழைக்கப் படும் இப்புல் வகையானது மிருதுவான இலை அமைப்புடன் காணப்படும். இவை சூரிய ஒளி கிடைக்கும் திறந்தவெளியில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.
ஹைதராபாத் புல்
சைனோடான் சிற்றினத்தை சார்ந்த இப்புல் வகையானது மிகவும் மிருதுவான இலை அமைப்புடன் கானப்படும். இவை அதிக சூரிய வெளிச்சம் கிடைக்கும் திறந்த வெளிப்பகுதிகளில் பயிரிட உகந்தவை.

குட்டை பெர்முடா
நடுத்தர மிருதுத் தன்மையுடன் காணப்படும் இப்புல் மகையானது சைனொடான் சிற்றினம் என அழைக்கப்படுகிறது. நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் திறந்த வெளிப்பகுதிகளில் புல் தரை அமைக்க மிகவும் உகந்தவை.

புல் தரை அமைக்கும் முறைகள்
புல் தரையானது விதைகள், புல்பாய்நடவு, மண் சாணி கலந்து நடுதல் மற்றும் கரணை அல்லது கிழங்கு ஊன்று முறை ஆகிய முறைகளில் அமைக்கப்படுகின்றன. இந்த முறைகளை இங்கு காண்போம்.
விதை
நன்கு தயார்படுத்திய நிலத்தில் ஒரு பங்கு விதைக்கு ஐந்து பங்கு மணல் கலந்து 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 2.5 கிராம் விதை தேவைப்படும். விதைக்கும் முன் மண்ணை முள் கொத்தால் நன்கு கிளரி விட்டு விதைத்த பின்பு விதைகளைக் கொளமண் கொண்டு மூட வேண்டும். ஒரு மீட்டருக்கு 10 கிராம் பி.எச்.சி மருந்து தூவி எறும்பு  வராமல் தடுக்க வேண்டும். பின் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதை முளைக்க 5 வாரம் ஆகும். புல் 5 செ.மீ உயரம் வளர்ந்த பிறகு அறுத்து விட வேண்டும். இந்த நிலையில் புல் தரைக் கருவி கொண்டு கத்தரிக்கக் கூடாது. உருளை கொண்டு நன்கு உருட்டி விட்டால் புல் நன்றாகப் படியும். டூபுல் என்றழைக்கப்படும் அருகம்புல் (சைனோடான் டேக்டைலான்) இம்முறையில் நன்கு வளரும்.

புல் பாய் நடவு
குறுகிய காலத்தில் புல் கரைகளை அமைக்க குளக்கரைகள் மற்றும் ஆற்றோரங்களில் ஏற்கனவே வளர்ந்த புல் தரைகளைக் கத்தைகளாக வெட்டி எடுத்து வந்து தேவையான இடத்தில் மரக் கொட்டாப்பிடி கொண்டு அப்பத்தைகள் ஒரே சீராகவும் சமமாகவும் படியுமாறு தட்டி விட வேண்டும். இரண்டு பத்தைகளுக்கு நடுவில் இருக்கும் சந்துகளை பொடியான மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும். பின் சற்று கனமான கல் உருளை கொண்டு சுமார் 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறையாக 2 முதல் 3 தடவைகள் உருட்டி விட வேண்டும்.



மண் சாணி கலந்து விடுதல்
இந்த முறையில் புல்லின் வேர்களை 5-7 செ.மீ நீளமுள்ளதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வேர்களை ஒரு பங்கு மாட்டுச் சாணி கொண்ட கலவையில் கலந்து, அதைத் தயார்  படுத்திய தரையில் 2.5 செ.மீ மொத்தத்திற்கு பரப்பி அதன் மேல் வைக்கோல் கொண்டு மூட வேண்டும். பின்னர் பூ வாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். அதன்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். புற்கள் 15 நாட்களுக்குள் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் வீச்சுக் கத்தியினைக் கொண்டு புற்களை அறுத்து விட வேண்டும். மூன்று மாதங்களுக்கு பின்னரே புல்தரைக் கருவியை உபயோகிக்க வேண்டும்.
கரணை அல்லது கிழங்கு ஊன்றுதல்
இந்த முறையில் அருகம்புல்லின் கிழங்குகளையோ அல்லது 5 செ.மீ நீளமுள்ள அருகுகளையோ 5 செ.மீ இடைவெளி கொடுத்து நாற்று நடுவது போல சமப்படுத்தப் பட்ட எரு இட்ட நிலத்தில் நட வேண்டும். 15 நாட்களுக்குள் புல் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்.

ஏஸ்டோ டர்ஃப்
வளர்ந்த நாடுகளில் மேற்கூரைத் தோட்டங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் செயற்கை புல்தரையானது மிகவும் பிரபலமடைந்துள்ளது. செயற்கை நாரிழைகளின் பிணைப்பிற்கு சீரான நீர்த்தெளிப்பு மிகவும் அவசியமாகும்.
புல் தரை பராமரிப்பு
உருளை கொண்டு உருட்டுதல்
இதனால் மேடு பள்ளங்கள் சமமாக்கப்படும். தக்க ஈரப்பசை உள்ள பொழுது உருளை கொண்டு உருட்ட வேண்டும். நிலம் மிகவும் ஈரமாகவோ அல்லது காய்ந்தோ இருக்கும் போது உருட்டுதல் கூடாது.
வெட்டும் கருவி கொண்ட வெட்டுதல்
வளரும் புல்லைப் பூக்க விடாமல் வெட்டி விடுவது அவசியம். புல் தரைக் கருவியோ அல்லது வீச்சுக் கத்தி கொண்டோ 15 நரட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். ஆனால் புல்தரை அமைத்த புதிதில் புற்கள் நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டும் கருவியைப் பயன் படுத்தக் கூடாது.
உரமிடுதல்
வருடம் இரு முறை சதுர மீட்டருக்கு ஒரு கிலோ மாட்டு எரு,  30 கிராம் அம்மோனியம் சல்பேட், 16 கிராம் சூப்பர் பாஸ்பேட்  மற்றும் 16  கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும். உரமிட்ட பின் நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
புல் தரையில் கோரை வகைக் களைகள் அதிகமாக வளர்ந்து காணப்படும். இவற்றைக் கூர்மையான ஊசி கொண்டு கிழங்குகளை குத்தி அகற்றுவதன் மூலமும் அன்சார் 529 என்ற களைக் கொல்லியை லிட்டருக்கு 3 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். புல் தரையில் தோன்றும் அகன்ற இலைக் களைகளை கட்டுப்படுத்த 2-4 டி என்ற களைக் கொல்லியை ஏக்கருக்கு 4 கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். களை அகற்றப்பட்ட இடத்தில் பொடி மண்ணுடன் கலந்த புல்லின் வேர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
புல் தரையை வெள்ளை எறும்புகள், வெட்டுப் புழுக்கள், குடைவுப்புழு, இலைத் தத்துப்பூச்சி மற்றும் aற்புழுக்கள் அதிகமாகப் பாதித்து புல் தரையின் அழகிற்கும் வளர்ப்பிற்கும் பாதகம் உண்டு பண்ணுகின்றன. இத்தகை சேதம் உருவாக்கும் பூச்சிகளையும் இதன் கட்டுப்பாடு பற்றியும் இங்கு காண்போம்.
வெள்ளை எறும்புகள்
இவற்றின் பாதிப்பு காணப்படும் பகுதிகளில் இவை புல்லையும் மண்ணையும் பாதிப்பு ஆங்காங்கே சிறு மண் கேடுகளை உருவாக்குகின்றன. பாதிப்பு காணப்படும் பகுதிகளில் லிண்டேன் 10 சதவிகிதத் தூளை தூவி கட்டுப்டுத்தலாம்.
வெட்டுப்புழு
இவை மண்ணின் மேல் பரப்பில் காணப்படும் புல் தண்டுகளை வெட்டுத் தின்று விடுவதால் ஆங்காங்கே புற்கள் திட்டுத்திட்டாக கருகிக் காணப்படும். பி.எச்.சி 10 சத தூளை இவற்றின் பாதிப்பு காணப்படும் பகுதிகளில் தூவி இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
குடைவுப்புழு
இவை புற்களின் வேர்களையும் தண்டுகளையும் குடைந்து கருகிய திட்டுகளை உருவாக்குகின்றன. இதனை லிண்டேன் 10 சதத்தூளை பாதிப்பு காணப்படும் பகுதிகளில் தூவி இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இலை தத்துப்பூச்சி
இவை இலையில் சாற்றை உறிஞ்சி விடுவதால் இலைகள் பட்டை பட்டையாக  வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த கோடுகளுடன் காணப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட புற்கள் வாடி, இறுதியில் உலர்ந்து போய்விடும். இதனை லிட்டருக்கு 1 மில்லி ரோகர் என்ற மருந்தை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
நூற்புழுக்கள்
இவை புற்களின் வேர்களை பாதிப்பதால் புற்கள் வெளிறிக் காணப்படும். அதனை சதுர மீட்டருக்கு 40 கிராம் பியூராடான் என்ற குருணை மருந்தினை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
புல்தரை பராமரிப்பில் ஏற்படும் பிரச்சினைகள்
வெளிருதல்
இரும்பு மற்றும் மாங்கனீசு பற்றாக்குறையால் புல் தரை வெளிறி மஞ்களாகக் காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய 25 கிராம் பெரஸ் சல்பேட் என்னும் உப்பை 10 லிட்டர் நீரில் கலந்து 100 சதுர மீட்டருக்கு தெளிக்க வேண்டும்.
நாய் சிறுநீர்
புல் தரையின் மேல் நாய்கள் சிறுநீர் கழிப்பதால் வட்ட வடிவில் புல்தரை காய்ந்து காணப்படும். இதனால் காய்ந்த புற்களைப் பிடுங்கி அகற்றி விட்டு புதிய புற்களை நட வேண்டும்.
ஒழுங்கற்ற முறையில் வெட்டுவதால் புல் காய்தல் இவற்றை நிவர்த்தி செய்ய புல் தரை வெட்டும் கருவியின் வெட்டும் விளிம்பை நன்கு கூர்மையாக பராமரிக்க வேண்டும். புற்களை மூன்றில் ஒரு பாகம் மட்டும் வெட்டி நீக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்பாகத்தை மண்ணோடு சேர்த்து வெட்டதலைத் தவிர்க்க வேண்டும்.
ஒழுங்கற்ற தண்ணீர் பாசனம்

இதனால் புற்கள் காய்ந்தும், அழுகியும் போய்விட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய புல் தரை நனையும் வரை மட்டும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.


2 comments:

மிக அருமையாகவும் விளக்கமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

தங்கள் வருகைக்கு நன்றி திரு வள்ளுவ ராஜ் அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites