மீன் வளர்ப்பு... உத்தரவாதமான லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. ஆனால், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானோர் குறைந்த பரப்பில்தான் செய்து வருகிறார்கள். ஆனால், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த விவசாயி சர்மஸ்த், 12 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் அனுபவம் பெற்ற சர்மஸ்த், இத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளித்து வருகிறார்.
ஒரு பகல் பொழுதில் அவரது மீன் பண்ணைக்குச் சென்றோம். மீன்களுக்குத் தீவனம் போட்டுக்கொண்டிருந்தவர், நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 12 ஏக்கர். 20 அடி அகலத்துக்குக் கரைகள் அமைச்சிருக்குறதால, நீர்ப்பரப்பு 8 ஏக்கர்லதான் இருக்கும். மீன் பண்ணை தொழிலுக்கு முக்கியம் கரைகள்தான். அதை அகலமா அமைச்சாதான் பெருமழைக் காலங்கள்ல உடைப்பு ஏற்படாமல் இருக்கும். நான்கு சக்கர வாகனங்கள் வந்துட்டுப்போக வசதியா இருக்கும். நிறைய இடத்தைக் கரைகளுக்கு விட்டு வீணாக்கிட்டோம்னு கவலைப்படத் தேவையில்ல. கரையில தென்னை மூலம் வருமானம் எடுக்கலாம். நாங்க அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். கரைகள்ல நிறைய களைகள் மண்டுது. ஆடுகளை மேயவிட்டுப் பசுந்தீவனமாகப் பயன்படுத்திக்குறோம்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்த்துகொள்ளத் தொடங்கினார்.
‘‘பட்டய படிப்பு முடிச்சதும், சவுதியில் சில வருஷம் வேலைபார்த்தேன். 1990-91-ம் வருஷங்கள்ல வளைகுடா நாடுகள்ல போர் நடந்தது. அந்தச் சமயத்துல, சொந்த ஊருக்குத் திரும்பி வந்துட்டேன். இங்கயே இருந்து விவசாயத்தைக் கவனிப்போம்னு முடிவெடுத் தேன். அப்பா, நெல், கரும்புச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தார். இது அதிக களித் தன்மை கொண்ட பள்ளக்கால் நிலம். எப்பவும் ஈரம் இருந்துகிட்டே இருக்கும். அதனால சரியான விளைச்சல் இல்ல. இந்த நிலத்துக்கு எது ஏற்றதோ, அதைச் செஞ்சா தான், சரியா இருக்கும்னு முடிவெடுத்து அதுக்கான தேடல்ல இறங்கினேன்.
எப்பவும் தண்ணீர் தேங்கி நிக்கக்கூடிய இந்த மண்ணுல, நிறைய புழுப் பூச்சிகள் உருவாகுது. இதைச் சாப்பிட்டு வளரக்கூடிய மீன்களை வளர்த்தா, வெற்றிகரமாக இருக்கும்னு தீர்மானிச்சேன். ஆனால், இதை எப்படி வளர்க்கணும்ங்கற முறையான தொழில்நுட்பம் எனக்குத் தெரியாது. எங்க ஊருக்குப் பக்கத்துல உள்ள பட்டீஸ்வரத்துல, பிச்சை அய்யர் மீன் வளர்த்துக்கிட்டு இருந்தார். அவரைச் சந்திச்சேன். நிறைய ஆலோசனை சொன்னார்.
1993-ம் வருஷம் 7 ஏக்கர்ல மீன் வளர்ப்பை ஆரம்பிச்சேன். எனக்கு வழிகாட்டிய, பிச்சை அய்யர் நினைவா, ஒரு குட்டைக்குப் பிச்சை அய்யர் குட்டைனு பேர் வெச்சேன். மீன் வளர்ப்புல இறங்கிய பிறகு, அனுபவ ரீதியாகவும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு கிட்டேன். தஞ்சாவூர் மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்களும் ஆலோசனைகள் சொல்லி, என்னை ஊக்கப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. 8 ஏக்கர்ல தொடங்குன இந்த மீன் பண்ணை படிப்படியாக வளர்ச்சி அடைஞ்சு, இப்ப 12 ஏக்கர் பரப்புக்கு விரிவடைஞ்சிருக்கு. அகலமான கரைகள், ஆட்டுக்கொட்டகை, பண்ணைத் தொழிலாளர்கள் தங்குறதுக் கான வீடு, மீன் குஞ்சு உற்பத்திக்கான கட்டுமானங்கள் எல்லாம் போக, அஞ்சரை ஏக்கர்ல மீன் குஞ்சு உற்பத்தியும், இரண்டரை ஏக்கர்ல மீன் வளர்ப்பும் செஞ்சிக்கிட்டு இருக்கோம்’’ என்றவர் பணியாளர்களிடம் சில வேலைகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.
மீன் குஞ்சு உற்பத்தி
‘‘மீன் குஞ்சு உற்பத்திக்கு வெவ்வேறு அளவுகள்ல 24 குட்டை களை அமைச்சிருக்கேன். மீன் குஞ்சுகளோட வயசு, வளர்ச்சிக்கு ஏற்ப, பிரிச்சு வளர்க்குறதுக் காக இதுமாதிரி சின்னச் சின்ன குட்டைகளை உருவாக்கி இருக்கோம். அதுமட்டுமல்லாம ஒவ்வொரு குட்டையையும் வருஷத்துல 4 மாசம் வெயில்ல நல்லா காய வைக்கணும். சின்ன குட்டைகளா நிறைய இருந்தாதான், தட்டுப்பாடு ஏற்படாம, வருஷம் முழுக்க, மீன் குஞ்சுகள உற்பத்தி செய்ய முடியும்.
மீன் குஞ்சுகளைக் குட்டைகள்ல விடும்போது பறவைககிட்ட இருந்து காப்பாத்தணும். அதுக்காக எல்லாப் பக்கமும் வலை கட்டி விடுவோம். குட்டைகள்ல 10 சென்ட் பரப்புக்கு 3 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கை கரைச்சு விட்டு அடுத்த 5 நாள்கள் கழிச்சு, குஞ்சுகளை விடுவோம். 10 சென்ட் பரப்புக்கு 3 முதல் 5 லட்சம் குஞ்சுகள் வரை விடுவோம். ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு ஒரு கிலோ வீதம் தினமும் கடலைப் பிண்ணாக்கை ஊற வெச்சிப் போடுவோம். 6 முதல் 15 நாளைக்கு, கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை மாவு, கோதுமை தவிடு, ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு ஒண்ணேகால் கிலோ வீதம் தீவனம் போடுவோம். அடுத்த வாரங்கள்ல படிப் படியாக 250 கிராம் வீதம் தீவனத்தோடு அளவை அதிகப்படுத்திக்கிட்டே இருப்போம். 45 நாள்கள் வயசுல, விரலி குஞ்சுகளாக விற்பனை செய்வோம்’’ என்றவர், மீன் குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் விற்பனை குறித்துப் பேசினார்.
‘‘ரோகு 60 சதவிகிதம், மிர்கால் 75 சதவிகிதம், கட்லா 25 சதவிகிதப் பிழைப்புத்திறனோடு விற்பனைக்குத் தேறி வரும். தண்ணீரின் தன்மையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தும், குஞ்சுகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தும், அப்பப்ப வேற குட்டைகளுக்குக் குஞ்சுகளை மாத்த வேண்டியதிருக்கும். எல்லாக் குஞ்சுகளையுமே 45 நாள் வயசு வரைக்கும் வெச்சிருந்து, ஒரே சமயத்துல விற்பனை செய்ய முடியாது. மத்த மீன் பண்ணையாளர்கள் வந்து கேட்கும் போதெல்லாம் விற்பனை செஞ்சிக்கிட்டே இருப்போம். 3 நாள் வயசுடைய நுண் குஞ்சுகளை, குட்டையில விட்டதிலிருந்தே விற்பனையை ஆரம்பிச்சிடுவோம். 10 நாள் வயதுடைய ஒரு குஞ்சு 25 பைசா, 20 நாள் குஞ்சு 50 பைசா, 45 நாள் குஞ்சு 1 ரூபாய், 60 நாள் குஞ்சு 1 ரூபாய் 25 பைசாங்கற விலையில விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். வருஷத்துக்குக் குறைஞ்சபட்சம் 10 லட்சம் நுண் மீன்குஞ்சுகளைக் குட்டையில் விட்டு வளர்த்தோம்னா, அதுல 5 லட்சம் குஞ்சுகள் விற்பனைக்குத் தேறும். ஒரு குஞ்சுக்குச் சராசரியா ஒரு ரூபாய் வீதம் 5 லட்சம் வருமானம். இதுல செலவு போக 2 லட்சம் ரூபாய் லாபமாக மிஞ்சும்’’ என்றவர், இருப்பு மீன் குஞ்சுகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
வளர்ச்சி தேக்கப்பட்ட இருப்புக் குஞ்சுகள்
‘‘60 நாளைக்குப் பிறகு, தீவனம் போடாம, குட்டையில் இயல்பாகக் கிடைக்கக்கூடிய தாவர, விலங்கு நுண்ணுயிரிகளை மட்டும் மீன் குஞ்சுகள் சாப்பிட்டு, அதிக வளர்ச்சி அடையாத குஞ்சுகளாக 8 - 10 மாதங்கள்ல விற்பனை செய்றோம். இதை ‘வளர்ச்சி தேக்கப்பட்ட இருப்புக் குஞ்சுகள்’னு சொல்வோம். 20 சென்ட் பரப்புக்கு 6,000 குஞ்சுகள் வீதம் விட்டோம்னா, 4,000 குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்கும். ஒரு குஞ்சுக்கு 10 ரூபாய் வீதம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல தீவனச் செலவே கிடையாது. ஆனால் தாவர, விலங்கு நுண்ணுயிரிகளை உருவாக்க, 20 நாளைக்கு ஒருதடவை சாண நீரை ஊத்துவோம் (20 கிலோ சாணத்தை, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதிலுள்ள வாயு முழுமையாக வெளியேறி, கசடுகள் அடியில் தங்கிய பிறகு மேலே உள்ள தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து, குட்டையில் பரவலாக ஊற்ற வேண்டும்). வருஷம் 4 லட்சம் ரூபாய்க்கு இருப்புக் குஞ்சுகளை விற்பனை செய்றோம். ஆள் செலவு போக, 2.5 லட்சம் ரூபாய் லாபமாக மிஞ்சும். பொதுக் குளங்கள்ல மிகவும் குறுகிய காலங்கள்ல மீன் வளர்க்கக் கூடியவங்க, இம்மாதிரியான குஞ்சுகளை விரும்புவாங்க. இதுமாதிரி பெரிய குஞ்சுகளாக வாங்கிக்கிட்டுப் போய், குளத்துல விட்டால், அடுத்த 3 - 4 நாள் மாதங்களிலே அது வேகமாக வளர்ந்து பெரிய மீன்களாக விற்பனைக்குத் தேறி வந்துடும்’’ என்றவர், என்றவர், இரண்டரை ஏக்கர் குளத்தில் மீன் மூலமாகக் கிடைக்கும் வருமானம் பற்றியும் பேசினார்.
‘‘ரெண்டரை ஏக்கர் குளத்துல வளர்க்கிற மீன்களை 8-12 மாதங்கள்ல விற்பனை செய்வோம், எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. மீன் பிடிக்குறதுக்கு முதல்நாளே, அவங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிடுவேன். பண்ணைக்கே வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு ஏக்கர்ல 2,400 குஞ்சுகள் விட்டோம்னா, அதுல 2,000 குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்கும். சராசரியாக 1,600 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ உயிர் மீன் 200 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா 3,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு கிலோ மீன் உற்பத்தி செய்ய 2 கிலோ தீவனம் வீதம் 110 ரூபாய் செலவாகுது. 1,600 கிலோ மீன் உற்பத்திக்கு 1,76,000 செலவாகுது. இதைத் தவிர, மீன் குஞ்சுகள், தண்ணீர் இறைக்க, மீன் பிடிப்புச் செலவு எல்லாம் போக, ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர் மீன் உற்பத்திமூலம் 2.5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,
‘‘இந்த 12 ஏக்கர் நிலத்திலிருந்து வருஷத்துக்கு மொத்தம் 8,10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது’’ என்றார்.
தொடர்புக்கு, சர்மஸ்த்,
செல்போன்: 98940 54526.
மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் இங்கே பாடமாக...
மீன் வளர்ப்புக்கு, வடக்குத் தெற்கு திசையில் செவ்வக வடிவத்தில் குளம் அமைக்கப்பட்டால், இயல்பான காற்றின் போக்கில் அலைகள் உருவாகும். இதனால் மீன்களுக்குத் தேவையான ஆக்சிஜன் தாராளமாகக் கிடைக்கும். களிபாங்கான மண்ணும் இதற்கு முக்கியம். 5-6 அடி ஆழத்தில் குளம் அமைக்க வேண்டும். குளத்திற்குள் உழவு ஓட்டி, ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு அரையடி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பி, ஏக்கருக்கு 20 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட வேண்டும். 2 நாள்களுக்குப் பிறகு, 3 அடி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பி, 100 லிட்டர் தெளிந்த சாண நீரை ஊற்ற வேண்டும். பிறகு 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி ஒரு ஏக்கருக்கு, 45 நாள்கள் வயதுடைய 2,400 விரலி குஞ்சுகள் விட வேண்டும்.
ரோகு, கட்லா, மிர்கால் எல்லாம் கலந்து விட வேண்டும். தலா 10 சதவிகிதம் கடலைப் பிண்ணாக்கு, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, 48 சதவிகிதம் தவிடு, 2 சதவிகிதம் தாது உப்பு கலந்த தீவனம் கொடுக்க வேண்டும். 1-10 நாள்களுக்குத் தினமும் ஒரு கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை 10 சதவிகிதம் தீவன அளவை அதிகப்படுத்த வேண்டும். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீன்களின் மொத்த எடையில் 2 சதவிகிதம் தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மீன் தலா 100 கிராம் வீதம் 2,400 மீன்கள் 240 கிலோ எடை இருக்கும். தினமும் 5 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். பிறகு தீவன அளவை அதிகப்படுத்த தேவையில்லை.
சாதம், இட்லி, செங்காயாக உள்ள பப்பாளி, புல், பூசணிக்காய், தக்காளி, ஆமணக்கு இலை போடலாம். மீன்கள் விரும்பிச் சாப்பிடும். முட்டைகோஸ், முள்ளங்கி தழைகளைப் போட கூடாது. இவற்றை மீன்கள் விரும்பிச் சாப்பிடும். ஆனால் தண்ணீரின் கார, அமிலத்தன்மை மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் தீவனம் கொடுக்காமல் பட்டினி போட வேண்டும். இதனால் மீன்கள் தனக்குத் தேவையான உணவைத் தேடி அலைந்து, தாவர, விலங்கு நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். இதனால் மீன்கள் சுறுசுறுப்பு அடையும்.
நிழல்
கோடைக்காலங்களில் மீன்களுக்கு ஓரளவுக்கு மிதமான நிழல் அவசியம். ஆனால், அதேசமயம் அதிகபட்சம் 20 சதவிகிதம் மட்டும் நிழல் இருக்க வேண்டும். சிலர் தங்களது மீன் பண்ணைகளில் அதிக அளவில் மரங்களை வளர்த்து, 40 - 50 சதவிகிதம் நிழலை உருவாக்கி விடுகிறார்கள். இது மீன்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். தென்னை, தேக்கு, நாவல், வாழை, கிளிரிசீடியா, சூபாபுல், அகத்தி, முருங்கை உள்ளிட்ட மரங்களை வளர்க்கலாம்.
எவை தரமான மீன் குஞ்சுகள்
மீன் வளர்ப்பில் ஈடுபடக்கூடியவர்கள், மீன் குஞ்சுகள் வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுழற்சியில், எதிர் திசையில் மிகவும் சுறுசுறுப்பாக நீந்திச் செல்லக் கூடிய குஞ்சுகளாக இருக்க வேண்டும். வாலில் சிதைவு இல்லாமல் இருக்க வேண்டும். பேன்கள் இருக்கக் கூடாது. தலை பெருத்தும் உடல் சிறுத்தும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உடல் இளைத்துப் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். மீன்களுக்கான வழக்கமான தோற்றத்தில் குஞ்சுகள் இருக்க வேண்டும்.
தென்னை
“கரைகள்ல மொத்தம் 120 தென்னை மரங்கள் இருக்கு, ஒரு வருஷத்துக்கு, ஒரு மரத்துல இருந்து 100 காய்கள் வீதம், மொத்தம் 12,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு 10 ரூபாய் வீதம் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். காய் பறிப்புக்கூலி, இதரச் செலவுகள் போக, 70,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.
ஆடு வளர்ப்பு
30 ஆடுகள் வளர்க்குறோம். கரைகள்ல வளரக்கூடிய களைகள்தான் இவற்றுக்குத் தீவனம். இந்த ஆடுகள்மூலம் கிடைக்கக்கூடிய குட்டிகளை வளர்த்து விற்பனை செய்றோம். அது மூலமா 40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக, தென்னை, ஆடு வளர்ப்புல கிடைக்கிறது மீன் வளர்ப்புக்கான கூடுதல் ஊக்கத்தொகைத்தான். இதையும் மீன் பண்ணையில கிடைக்கிற லாபமாகத்தான் பார்க்கிறேன்” என்கிறார் சர்மஸ்த்.
0 comments:
Post a Comment