இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 20, 2021

கொய்யா, அத்தி, மாதுளை

 ரே பயிரைச் சாகுபடி செய்து சரியான விலை கிடைக்கவில்லையே எனப் புலம்பும் விவசாயிகளுக்கு மத்தியில், சந்தையில் அதிக தேவையுள்ள பயிரைச் சாகுபடி செய்தால் விலை குறைவு, நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொரோனா காலத்திலும் என்னை வாழவைத்தது வித்தியாசமான பயிர் தேடல்தான்” என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்.


தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது செட்டிக்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தின் கடைக்கோடியில் உள்ளது ரமேஷின் இயற்கை விவசாயப் பண்ணை. மாதுளைத் தோட்டத்துக்குள் வேலையாள்களுடன் சேர்ந்து மாதுளைப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

மாதுளையுடன் ரமேஷ்
மாதுளையுடன் ரமேஷ்


‘‘அடிப்படையிலேயே விவசாயக் குடும்பம். அப்பா துரைராஜ், போஸ்ட் மாஸ்டரா வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்த்தாலும் விவசாயத்தைக் கைவிடல. அம்மா முழுநேரம் விவசாயத்தைப் பார்த்துக் கிட்டாங்க. இறவையில கத்திரி, தக்காளி, முருங்கை மாதிரியான காய்கறிகளும், மானாவாரியா உளுந்து, பாசிப் பயறும் சாகுபடி செஞ்சுட்டு வந்தாங்க.

நான் எம்.சி.ஏ முடிச்சுட்டு பெங்களூருல ஒரு கம்பெனியில 3 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, அமெரிக்காவுல 7 வருஷம் வேலை பார்த்தேன். சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல எனக்கு ரொம்ப ஆர்வம். படிக்கும்போதே கிடைக்குற நேரத்துல தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகளைச் செய்வேன். அப்ப மானாவாரி, இறவை ரெண்டுமே ரசாயன உரத்தைப் பயன்படுத்திதான் செஞ்சிட்டு வந்தாங்க. ஆனா, எனக்கு ரசாயன உரம் போடுறது, பூச்சிக்கொல்லி தெளிக்கிறதுலயெல்லாம் உடன்பாடு கிடையாது.

வாய்ப்புக் கொடுத்த கொரோனா

தோட்டத்துல உரம் தூவப் போறாங்க, பூச்சிக்கொல்லி அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சாலே மூணு நாளுக்குத் தோட்டத்துப் பக்கமே வர மாட்டேன். இதுக்கு மாற்று என்னங்கிற தேடல்ல இறங்குனேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி யூடியூப்ல சில வீடியோக்களைப் பார்த்தேன். இந்த நிலையில, கொரோனா முதல் அலைக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால ஊருக்கு வந்தேன். தொற்று தீவிரத்துக்குப் பிறகு, ஊருலயே இருந்துட்டேன். அந்த நேரத்துலதான் நம்ம தோட்டத்துல இயற்கை முறையில வித்தியாசமா ஏதாவது சாகுபடி செய்யலாம்னு யோசனை வந்துச்சு. நான் இயற்கை விவசாயம் செய்யப்போறேன்னு வீட்ல சொன்னதும், யாருக்குமே நம்பிக்கை இல்ல. ஆனாலும், நான் வேலைகள்ல இறங்குனேன். என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு இயற்கை விவசாயம் செய்ற நண்பர்கள்ட்ட கேட்டேன்.

கொய்யா தோட்டத்தில்
கொய்யா தோட்டத்தில்


லக்னோ-49 கொய்யா

‘நம்ம பகுதியில நாட்டுக்கொய்யா, லக்னோ-49 ரகக் கொய்யாதான் பரவலா சாகுபடி செய்றாங்க. மற்ற ரகக் கொய்யாவை விட ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா 7 நாள்கள் வரைக்கும் இருப்பு வெச்சு விற்பனை செய்யலாம். இதுக்கு நல்ல வரவேற்பும், சந்தையில அதிக தேவையும், கூடுதல் விலையும் கிடைக்குது’னு சொன்னாங்க. தைவான் ரகக் கொய்யாவைச் சாகுபடி செஞ்சுட்டு வர்ற சில விவசாயிகளோட தோட்டத்துக்கு நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்தேன்.

அத்தித் தோட்டம்
அத்தித் தோட்டம்


பூனா அத்தி

எங்களுக்கு 7 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 1.25 ஏக்கர்ல உழவடிச்சு, குழி எடுத்துச் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு கொய்யா கன்னுகளை நட்டேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், மூலிகைப் பூச்சுவிரட்டி நானே தயாரிச்சு பயன் படுத்துனேன். இதே மாதிரி பழமரச் சாகுபடியில வேற என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கோவில்பட்டியில ராஜ்மோகன்ங்கிற விவசாயி, இயற்கை முறையில அத்திச் சாகுபடி செய்யுறதா பசுமை விகடன்ல படிச்சேன். அவர்கிட்டயே 200 பூனா ரகக் கன்றுகளை வாங்கி அரை ஏக்கர்ல நட்டேன்.

பக்வா மாதுளை

மாதுளையும் இந்த மண்ணுக்கு நல்லா வரும்னு இன்னொரு நண்பர் சொல்ல, முக்கால் ஏக்கர்ல 400 பக்வா ரக மாதுளைக் கன்றுகளையும் நட்டேன். மீதியுள்ள நிலத்துல 2 ஏக்கர்ல ரெட்லேடி பப்பாளி, 2.5 ஏக்கர்ல கால்நடை தீவனம் நடவு பண்ணவும், கூடவே நாட்டுக்கோழி, மாட்டுப்பண்ணை அமைக்கவும் நிலத்தைத் தயார் செஞ்சுட்டு இருக்கேன்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

மாதுளைத் தோட்டம்
மாதுளைத் தோட்டம்


“1.25 ஏக்கர்ல 1,300 தைவான் பிங்க் ரகக் கொய்யா கன்றுகள நடவு செஞ்சேன். இதுல 400 கன்றுகள் சரியான வளர்ச்சி இல்லாமப் பட்டுப்போச்சு. 200 அத்திக் கன்றுகள்ல 40 கன்றுகள் பட்டுப்போச்சு. 400 மாதுளையும் நல்ல நிலையில இருக்கு. கொய்யா 8 மாசம், அத்தி 3 மாசம், மாதுளை 3 மாசம் காய்ப்புல இருக்கு. கொய்யா ஒரு கிலோ 25 ரூபாய், அத்தி ஒரு கிலோ 150 ரூபாய், மாதுளை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிட்டு இருக்கு. சேதாரமான காய்கள் போக விற்பனையான 8,500 கிலோ கொய்யா மூலமா 2,12,500 ரூபாய், 150 கிலோ அத்தி மூலமா 22,500 ரூபாய், 600 கிலோ மாதுளை மூலமா 24,000 ரூபாய்னு மொத்தம் 2,59,500 ரூபாய் வருமானமாக் கிடைச்சது.

தைவான் கொய்யா, ஒரு கிலோ 50 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஆனா, எங்க பகுதிகள்ல அதிகமான கொய்யா விளைச்சல் இருந்ததுனால பாதி விலைதான் கிடைச்சது. இதுல உழவு, கன்று, குழி, நடவு, மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, களை, இடுபொருள், அறுவடைனு மொத்தம் 1,61,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடுச்சு. அதுபோக மீதமுள்ள 98,500 ரூபாய் லாபமாக் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக,

இடுபொருள்
இடுபொருள்


விற்பனையில் வில்லங்கமில்லை

‘‘இதுவரைக்கும் நான் செஞ்ச செலவுத்தொகையை எடுத்துட்டேன். மகசூல் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு. இன்னும் படிப்படியா அதிகரிக்கும். இனிமேல் பராமரிப்புச் செலவு மட்டும்தான். கொய்யாவை வியாபாரிகளே அறுவடை செஞ்சு எடுத்துட்டுப் போறதுனால அதுல அறுவடைச் செலவு எனக்கு மிச்சம். அத்திப்பழம் உள்ளூர்லயே விற்பனை யாயிடுது. மாதுளை கழுகுமலை, கோவில்பட்டியில உள்ள பழக்கடை களுக்கு அனுப்பிடுறேன்.

மத்த விவசாயிகளைப்போல ஒரே பயிரைச் சாகுபடி செய்யாம வித்தி யாசமா சாகுபடி செஞ்சா சந்தையில எப்பவுமே தேவை இருந்துகிட்டே இருக்கும்” எனச் சொல்லி மகிழ்ச்சி யுடன் விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,

ரமேஷ்,

செல்போன்: 98865 12358

அத்தி, மாதுளைச் சாகுபடி!

அத்தி, மாதுளை நடவு செய்ய வடிகால் வசதியுள்ள மண் ஏற்றது. மழைக்கு முன்பாக நடவு செய்வது சிறப்பு. அத்தி நடவு செய்ய, செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். மாதுளை நடவு செய்ய, செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 2 அடி உயரத்தில் அத்தியை மேட்டுப்பாத்தி அமைத்து நடவு செய்தால் வளர்ச்சி, பறிப்புக்கு எளிதாக இருக்கும். அத்தி மற்றும் மாதுளை 5 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றது.

அத்தியைப் பொறுத்தவரையில் இலைத்துரு நோய் தென்பட்டால் இலைகளை உதிர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால், கிளைகள் முழுவதும் பரவும். துரு நோய் மழைக்காலத்தில் காய்களிலும் பரவி புள்ளிகளை ஏற்படுத்தும். இதனால் பழங்கள் விலை போகாது. துரு நோயைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் களை எடுக்கலாம். கன்று நட்டு, 3-ம் மாதத்தில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அதன் பிறகு, 20 நாளுக்கு ஒருமுறை 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு, 100 கிராம் மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து செடிகளின் தூரில் அடியுரமாக வைக்க வேண்டும்.

மாதுளைத் தோட்டம்
மாதுளைத் தோட்டம்


6 முதல் 15 மாதங்கள் வரை பூக்கும் பூக்களை உதிர்த்து விட வேண்டும். 15-வது மாதத்துக்குப் பிறகே காய்க்க விட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்துச் செய்ய வேண்டும். மரம் அதிக உயரம் வளராமல் இருப்பதற்கும், அதிக கிளைகள் மூலம் மகசூல் அதிகரிப்பதற்கும், அறுவடை எளிதாக இருப்பதற்கும் கவாத்து முக்கியம். முறையாகக் கவாத்துச் செய்து பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.

மாதுளையைப் பொறுத்தவரையில் அதிக தண்ணீர் கொடுக்கக் கூடாது. காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் விட வேண்டும். ஈரப்பதம் அதிகமானால் பூக்கள் உதிரும். மாதுளையில் பழ ஈ தாக்குதல் இருக்கும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டிதான் தீர்வு. அதேபோல மாதுளையில் ஏற்படும் கறுப்புத் துளைகளைத் (ஃப்ரூட் போரல்) தவிர்க்க, 100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 200 கிராம் சூடோமோனஸைக் கலந்து தெளிக்கலாம். அத்தி, மாதுளைக்குத் தனிப் பராமரிப்பு ஏதுமில்லை. கொய்யாவுக்குத் தரும் அதே இடுபொருள்களை அதே நாளில் கொடுக்கலாம். அத்தி, மாதுளையைப் பொறுத்தவரையில் 3 மாதத்துக்கு ஒருமுறை 5 முதல் 10 கிலோ தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும்.

கரைசலுக்காகத் தனித்தொட்டி

ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றைத் தனித்தனி டிரம்களில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, சிமென்ட் தொட்டிகளில் தயார் செய்தால் அதை அப்படியே வடிகட்டி சொட்டுநீர் மூலம் பாய்ச்சிவிடலாம். இதற்காக, பம்ப்செட் அருகில் 10 அடி நீளம், 8 அடி அகலம், 3.5 அடி உயரத்தில் ஒரு தொட்டியும், 5 அடி நீளம், 8 அடி அகலம், 3.5 அடி உயரத்தில் ஒரு சிறிய தொட்டியையும் அமைத்திருக்கிறேன். முதல் தொட்டியில் கரைசல்களைத் தயார் செய்துவிட்டு, அதில் கிணற்றுத் தண்ணீரைத் திறந்து விடுவேன். இந்தக் கரைசல் கலந்த தண்ணீர் வடிகட்டப்பட்டு இரண்டாவது கீழ் தொட்டியில் விழும். இதன் பிறகே, கரைசல் கலந்த நீர் சொட்டுநீர் மூலம் செடிகளுக்குச் சென்றடையும். முதல் தொட்டியிலேயே கரைசல், தண்ணீருடன் வடிகட்டப்படுவதால் குழாயில் அடைப்பு ஏதும் ஏற்படாது.

கொய்யா
கொய்யா

இப்படித்தான் கொய்யா சாகுபடி செய்யணும்!

1.25 ஏக்கரில் ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா சாகுபடி செய்வது குறித்து ரமேஷ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பழப்பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை பட்டம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஆவணி, புரட்டாசி போன்ற மாதங்களில் நடவு செய்வது சிறந்தது. நிலத்தை, ஒரு வாரம் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச்செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழியை ஒரு வாரம் ஆறவிட்டு நடவு நாளன்று, ஒவ்வொரு குழிக்குள்ளும் தலா 250 கிராம் மண்புழு உரத்துடன் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். பிறகு, கன்றை நடவு செய்து, மண் அணைத்துத் தண்ணீர் விட வேண்டும்.

3 முதல் 4 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றது. முதல் ஒரு மாதம் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 2 லிட்டர் இ.எம் கரைசல் மற்றும் 200 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 2 லிட்டர் மீன் அமிலம் எனச் சுழற்சி முறையில் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். மாதம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத் துடன் 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை 2 நாள்கள் ஊறவைத்து வடிகட்டி பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

கொய்யா தோட்டம்
கொய்யா தோட்டம்

4-ம் மாதத்தில் பக்கக் கிளையின் நுனிகளைக் கிள்ளி விட (கவாத்து) வேண்டும். 7-ம் மாதம் வரை தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும். 8-ம் மாதத்தில் பூக்கும் பூக்களைக் காய்ப்புக்காக விடலாம். பூ பூத்ததிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா, 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மீன் அமிலம், 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி இ.எம் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.

கொய்யாவைப் பொறுத்தவரையில் கற்றாழைப்பூச்சியின் தாக்குதல் அடிக்கடி இருக்கும். இலைகள் சுருண்டு காணப்படுவதுடன் இலைக்காம்புகள், இலைகளின் பின்புறம் எனப் பப்பாளியில் மாவுப்பூச்சியைப் போலவே காணப்படுவது இதன் அறிகுறி. அந்த நேரத்தில், 200 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 500 மி.லி, புங்கன் எண்ணெய் 500 மி.லி கலந்து இதனுடன் 200 கிராம் காதிசோப்பைக் கலந்து கரைத்து அப்படியே கைத்தெளிப்பானால் தெளித்தால் போதும்.

10-ம் மாதத்திலிருந்தது காய்களைப் பறிக்கலாம். செடியில் காய்ப்புத் தொடங்கியதும் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இதைத் தவிர்க்க, பிஞ்சு பிடிக்கத் தொடங்கியதுமே ஒரு ஏக்கருக்கு 4 இடங்களில் விளக்குப்பொறி வைத்துக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப்பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். 13-ம் மாதத்திலிருந்தது மகசூல் படிப்படியாக அதிகரிக்கும்.

கொய்யா தோட்டத்தில்
கொய்யா தோட்டத்தில்

இரண்டாம் ஆண்டிலிருந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை செடிக்கு 2 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் அல்லது ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அடியுரத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.

மண்புழு உரத்தையும் அடியுரமாக வைக்கலாம். 4 மாதத்துக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். காய் பறிக்கும்போதே செடியின் நுனிக் கொழுந்துகளைக் கிள்ளி விட வேண்டும். காய்ப்பு குறைவதுபோலத் தெரியும்போது கவாத்துச் செய்து விடலாம். இயற்கை முறையில் முறையாகப் பராமரித்து வந்தால் 10 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மகசூல் எடுக்கலாம்


thanks you :VIKATAN .

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites