இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 24, 2019

மறு சுழற்சி முறை

புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘இதைப்போய் நான் செய்வதா..? எனக்கு அதில் அனுபவமில்லையே! என் வீட்டுக்குத் தெரிந்தால் அனுமதிக்கவே மாட்டார்கள்’ என்று சிலர் தொழிலுக்குள் இறங்கும் முன்பே தயங்குவார்கள். அதுபோன்ற ஆட்கள் ஜெயிப்பது சிரமம்தான். காரணம், தொழிலில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய குணமே கூச்சம், தயக்கம், பயம் இவற்றை உதறிவிட்டுக் களமிறங்குவதுதான்.
பலரும் பார்க்கத் தயங்கும் வேலைகள்கூட சிலசமயம் லட்சங்கள் புரளும் பெரிய லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கும். காக்கைகள் போல், நகரின் குப்பைகளில் கிடக்கும் பாட்டில்கள், பாலீதீன்களைச் சேகரிக்கும் ஆட்களைக் கவனித்திருக்கிறீர்களா..?
ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு சக்கர, மூன்று சக்கர சைக்கிள்களில் பிஸியாக பழைய பேப்பர், பாட்டில் கள், வீண்பொருட்களை வாங்கும் வியாபாரிகளைப் பார்த்திருக் கிறீர்களா..?
பழைய புத்தகங்கள், இரும்புச் சாமான்களை வாங்கி கடை முழுக்க அடுக்கி வைக்கும் வேஸ்ட் மார்ட் களின் பிஸியைக் கவனித்திருக் கிறீர்களா..?
அவற்றுக்குப் பின்னால் ஒரு பெரிய இண்டஸ்ட்ரியே இருக்கிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாறும் அந்த வட்டச் சுழலுக்குப் பின்னால் இருக்கிற பிஸினஸ் அற்புதம், ஐடியாக்களால் நிறைந்தது.
நாம் பயன்படுத்திய பொருட்களை என்னவாகத் தருகிறோமோ, அதே பொருளாக மீண்டும் மாற்றித்தர இவர்களும் ஒருவகையில் உதவுகிறார்கள். இதுதான் ரீ-சைக்கிளிங் துறை.
இப்படி தெருவில் பிளாஸ்டிக் சேகரித்து அதை ஒரு காலி மனையில் போட்டு வைத்திருந்தார் ஒருவர். அதைக் கவனித்த மனையின் உரிமையாளர், ‘கண்ட குப்பையையும் என் இடத்தில் போட்டு நாறடிக்காதே! மரியாதையா எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடு!’ என்று மிரட்டினார். ‘வேணும்னா இந்த இடத்துக்கு மாசம் 500 ரூபாய் வாடகை தரட்டுங்களா..?’ என்று அந்த நபர் கேட்க... மனையின் உரிமையாளருக்கு ஆச்சர்யம். சும்மா கிடக்கிற இடத்துக்கு வாடகையா..! ‘சரி... ஆனா, நான் இடத்தை விக்கிறப்போ காலி பண்ணச் சொல்வேன். மறுபேச்சு பேசாம போயிடணும். ஓகே!’ என்று கிளம்பிப் போனார். சில மாதங்கள் கழித்து, இடத்தை விற்கும் முடிவில் அந்த நபரைக் காலி பண்ணச் சொன்னார் உரிமையாளர். ‘பண்ணிடறேனுங்க... இப்போ, இந்த இடம் எவ்வளவுக்குப் போகுதுங்க..?’ என்று பணிவாகக் கேட்ட நபர், அவர் சொன்ன விலைக்கு அந்த இடத்தைத் தானே வாங்கிக்கொண்டார். சாதாரண வேலையிலும் சூப்பர் வருமானம் வரும் என்பதற்கு அந்த வீண் பொருட்கள் சேகரிப்பவர் மாதிரி ஆட்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். ரீ-சைக்கிளிங் துறையில் இது சாத்தியமாக இருக்கிறது.
பாட்டில்களை வாங்கி, அதை மறுபயன்பாட்டுக்கு விடுவது என்பது ஒருவகை. பாட்டில்களில் அடைக்கப் பட்டு வரும் ஜூஸ், ஊறுகாய், சில மருந்துப் பொருட்கள், மதுபான வகைகள் என்று கண்ணாடி பாட்டில்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு அதில் மீண்டும் தங்கள் தயாரிப்பை அடைத் துத்தர, நிர்வாகமே வாங்கிக் கொள்வது ஒருவகை.
பிளாஸ்டிக் கேன்களைப் பொறுத்தவரை, அதை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது சிரமம். அது ஜூஸ் பாட்டிலோ, ஷாம்பூ பாட்டிலோ... புதிய கேனில் அடைத்துத் தருவதுதான் வாடிக்கையாளர்களைக் கவரும். தண்ணீர் பாட்டில் களையே எடுத்துக் கொள்ளுங் களேன். அதைப் பயன்படுத்திய பிறகு, ‘நசுக்கி வீசுங்கள்’ என்ற வாசகம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், அப்படியே குப்பைத் தொட்டியில் வீசினால், அதை மீண்டும் ஒருமுறை யாரேனும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதற்காகச் செய்யப்படும் எச்சரிக்கை. சுகாதாரம் ஒருபக்கம்... பழைய கேனிலேயே தண்ணீர் அடைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் புதிய கேனை வாங்க வைக்கும் வியாபார உத்தி மறுபக்கம்!
இதில் ஒருவிஷயத்தில் ஆறுதல் அடையலாம். நாம் பயன்படுத்திய கேனிலேயே மறுபடியும் தங்கள் தயாரிப்புகளை அடைத்துத் தருவதில்லை அவர்கள். புதிய கேனில்தான் தருகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆரம்பத்தில் அந்த முத்திரை பற்றிச் சொன்னேனே... இப்படி ஒரு முத்திரை, கேனின் அடியில் இருந்தால், அது ரீ-சைக்கிள் செய்யப்படக்கூடிய பிளாஸ்டிக் என்று அர்த்தம்.
தெ ருவில் அலைந்து, வீடு தேடி வந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்குபவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். அதை வாங்குகிற கடைக் காரர் மொத்த வியாபாரி ஒருவரை நாடிச் சென்று விற்பார். அவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். இதையெல்லாம் மொத்தமாக பிரித்துச் சுத்தப்படுத்தி, வகை வாரியாக ஒழுங்கு செய்து பேக் பண்ணி ரீ-சைக்கிளிங் செய்கிற பெரிய நிறுவனத்தாரிடம் கொடுப்பார் அந்த மொத்த வியாபாரி.
அங்கே ரீ-சைக்கிளிங் நடந்து அதிலிருந்து புதிய கன்டெய்னர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.
இதுபோன்ற சுழற்சியில் பல ஆயிரம் தெரு வியாபாரிகள், சில ஆயிரம் சிறு வியாபாரிகள், நூற்றுக்கணக்கான பெரு வியாபாரிகள், சில நிறுவனங்கள் என்று எத்தனை அழகாக லாபம் பங்கிடப்பட்டு வருகிறது பார்த்தீர்களா..? இவை எல்லாம் எதிலிருந்து..? நாம் வீண் என்று தூக்கி எறியும் அல்லது சிறு தொகைக்கு தரும் பொருட்களில் இருந்து!
இந்தத் துறையில் கடந்த பல வருடங்களாக இருக்கிற ராஜகோபால், புழல் பகுதியில் ஒரு பெரு வியாபாரியாக மாதம் ஒன்றுக்கு 40 டன் பெட் பாட்டில்களை பெரிய நிறுவனங்களுக்கு விற்பவராக இருக்கிறார். இந்தோ பாலிமர் என்ற நிறுவனத்தின் சார்பாக இத்தொழிலைச் செய்து வரும் இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். சௌதி அரேபியாவுக்குப் போய் திரும்பிய இவர், உறவினர் ஒருவர் இதே தொழிலைச் செய்வதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இந்த யூனிட்டை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பலருக்கு வேலை வாய்ப்பும் தந்திருக்கிறார்.
கரகர சத்தத்தோடு, இவரது ஃபேக்டரியில் பாட்டில்கள் நொறுங்கி சதுர பேல்களாக அடைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாக இருக்கிறது.
இவர் போன்றோரிடமிருந்து பெரிய நிறுவனங்கள் வாங்குகின்றனவே... அவர்கள் என்ன செய்கிறார்கள்..? இந்த பழைய பிளாஸ்டிக் பேல்களை வாங்கி, கலர் வாரியாகப் பிரித்து சுத்தம்செய்து, மிக்ஸி போன்ற பெரிய மெஷின்களில் போட்டு துண்டு, துண்டாக நொறுக்குகிறார்கள். மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட பவுடர் போல் ஆக்கி, மீண்டும் சுத்தம் செய்கிறார்கள். அதன்பிறகு, அது புதிய பாட்டிலாக உருமாற்றம் பெறுகிறது. நாம் கடையில் வாங்கும் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களைத் தயார் செய்து தருகிறார்கள்.
சென்னையை அடுத்த மணலியில் இருக்கிற ஃப்யூச்சுரா ( futura ) நிறுவனம் பாலியஸ்டர் பொருட்கள் தயாரிப்பதோடு, இது போன்ற ரீ-சைக்கிளிங் துறையிலும் மிளிர்கிறது. ரூபாய் 500 கோடிக்கும் மேலே டர்ன் ஓவர் பார்க்கிற இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ-வாக இருக்கிறார் ரங்கராஜன்.
‘சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இதுபோன்ற மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி ரீ-சைக்கிளிங் செய்கிற பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இதன்மூலம் மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. அதுபோக, தவறான பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் கெடுவதையும் தவிர்க்க முடிகிறது. போட்டிருக்கும் முதலீட்டுக்கு ஏற்ற வகையான பெரிதான லாபம் என்று எங்களுக்குக் கிடைக்காமல் இருந்தாலும் இந்தத் துறையின் பாதை பிரகாசமாக இருக்கிறது. உலக அளவுத் தொடர்பு களோடு எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ரங்கராஜன். இந்த நிறுவனத்துக்கு போட்டி என்று பெரிதாக இங்கில்லை. இதனால் எதிர்கால வளர்ச்சி அபரிமிதமாக இருக்க வாய்ப்பு தெரிகிறது.
இப்படித் தனித்தன்மை யோடு உள்ள, போட்டி குறை வாக உள்ள, யாரும் இறங்கத் துணியாத தொழில்களில் குதிக்கும் தைரியம் கொள்ளுங் கள். மூளையை முழுதாகப் பயன்படுத்தி, திட்டமிட்டுக் காய் நகர்த்தினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். வலுவான வருமானம் வந்தே தீரும்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites