இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, November 22, 2017

முலாம்பழம்

யற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி… ரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களுடன் தாங்களும் தற்போது இணைந்துள்ளனர் தானிப்பாடியைச் சேர்ந்த சென்னன்-குமாரத்தி தம்பதி.
பச்சைப் போர்வையின் மேல் நெருப்புக்கோழி முட்டை இட்டதைப் போல தோற்றம் கொடுத்த முலாம் பழத்தோட்டத்தில் தம்பதியைச் சந்தித்தோம்.
“எங்க குடும்பத்துக்குச் சொந்தமா நாலரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. அதுல 10 வருஷம் விவசாயம் பார்த்தேன். ஆனா, போதுமான வருமானம் இல்ல. அதனால, 19 வருஷத்துக்கு முன்ன சவுதிக்கு வேலைக்குப் போனேன். அதுல கிடைச்ச வருமானத்துல இடம் வாங்கி வீடு கட்டினேன். பிள்ளைகளைப் படிக்க வைச்சேன். பாகப்பிரிவினை செய்த பிறகு, எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதோட கூடுதலா ரெண்டரை ஏக்கர் நிலம் வாங்கினதுல இப்போ நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. முன்னாடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்திட்டுப் போவேன். இப்போ பத்து மாசமா இங்கேயே தங்கிட்டேன்” என்ற சென்னனைத் தொடர்ந்தார், குமாரத்தி.
“அவர் வெளிநாட்டுக்குப் போன பிறகு, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, நான் களை வெட்டுற வேலைக்குப் போனேன். நாலு பிள்ளைங்களும் காலேஜ் போன பிறகு, நிலத்துல விவசாயம் பார்க்க வந்தேன். கிணத்துல இருக்குற தண்ணியைப் பொறுத்து, நெல், நிலக்கடலை, மரவள்ளினு விவசாயம் பார்த்தாலும், பெருசா சொல்லிக்கிடுற மாதிரி வருமானம் இல்லை. பொண்ணோட படிப்புக்காக வாங்கின கல்விக்கடனோட வட்டி அதிகமான சமயத்துல, அடைக்க வழி தேடிட்டு இருந்தப்போதான்… முலாம்பழத்தை சாகுபடி செய்யச் சொன்னார் எங்க சொந்தக்காரர். முதல் தடவைங்கிறதால, ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல சாகுபடி செய்திருக்கேன். மீதி நிலத்துல வழக்கமான நிலக்கடலை சாகுபடி செய்திருக்கேன். குறைவான தண்ணீர்ல நல்ல முறையில வெளைஞ்சு வந்திருக்கு. முதல் அறுவடை முடிச்சுட்டோம். எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைச்சிட்டிருக்கு” என்று குமாரத்தி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார் சென்னன்.
“நாங்க ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்றோம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டறதுக்கு பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துறோம். இன்னமும் இயற்கை விவசாயத்துக்கு மாற முயற்சி செய்யல. முலாம்பழத்துல 75 நாள்ல வருமானம் பாத்துட முடியும்.60 நாள்ல முதல் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல இருந்து முதல் அறுவடையில 6 டன் பழங்கள் கிடைச்சது. இன்னும் ரெண்டு அறுவடை மூலமா 5 டன் அளவுக்கு பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ பழம் 8 ரூபாயில இருந்து 12 ரூபாய் வரை விலை போகுது. ஆறு டன் பழங்களை விற்பனை செய்ததுல 55 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சிருக்கு. மீதி 5 டன் பழத்துக்கு சராசரியா 9 ரூபாய் வீதம் விலை கிடைச்சா 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கிட்டத்தட்ட மொத்தம் ஒரு லட்ச ரூபாய் கிடைச்சுடும். மொத்த செலவு 30 ஆயிரம் ரூபாய் போக, கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். நானும் என் மனைவியும் மட்டும்தான் வேலை செஞ்சிருக்கோம். ரெண்டு மாசத்துல இது நல்ல லாபம்தான்” என்றார்.
இப்பகுதியில் பெரும்பாலானோர் ரசாயன முறையில்தான் முலாம்பழத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் முலாம்பழத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார், தானிப்பாடியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குறவன் ஓடை கிராமத்தைச் சேர்ந்த மணி.
இவர், 10.3.2013 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான, ‘அசத்துது அனந்தனூர் சன்னம் மிரட்டுது முத்தின சன்னம்..!’ என்ற செய்தியின் மூலம் ஏற்கெனவே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
பாதை மாற்றிய பசுமை விகடன்!
“எனக்குச் சொந்தமா 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சம்பா பட்டத்துல மட்டும் இயற்கை முறையில பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்றேன். நெல் அறுவடைக்கு பிறகு 2 ஏக்கர்ல நிலக்கடலை, ஒரு ஏக்கர்ல கம்பு, 50 சென்ட் நிலத்துல மாட்டுத்தீவனம், 50 சென்ட் நிலத்துல கேழ்வரகு, 2 ஏக்கர்ல முலாம்பழம்னு இயற்கை விவசாய முறையில சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் பார்த்த சமயத்துல வருமானத்துக்காக பல விவசாய முறைகளை மேற்கொண்டேன்.
நெல், கடலைல வருமானம் குறைவா இருந்ததால தர்பூசணி சாகுபடி செய்தேன். அதுல போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சது. அது மூணு மாசப் பயிர். அதை அறுவடை செஞ்ச பிறகு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான்… விதை கம்பெனி சேல்ஸ் ஆபீஸர் ஒருத்தர், முலாம்பழ சாகுபடி பத்திச் சொன்னார். உடனே, ரெண்டு ஏக்கர்ல விதைச்சேன். அறுவடை செய்யுற பதம் தெரியாம போனதால நஷ்டம் ஆகிடுச்சு. வியாபாரிங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு சரியான முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்ச பிறகு, நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்து மூடாக்குக்காக ‘மல்சிங் ஷீட்’ போட்டு தர்பூசணி, முலாம்பழம், சாம்பல் பூசணினு மூணையும் தொடர்ச்சியா சாகுபடி செய்தேன். அதுல வருமானத்துக்கு பஞ்சம் இல்லாம இருந்துச்சு. அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சில கலந்துக்கிட்டேன். அப்போ மல்சிங் ஷீட் போடக்கூடாதுங்கிறதை உணர்ந்து… அதை தவிர்த்து இயற்கை முறையில முலாம்பழத்தை சாகுபடி செய்தேன். ஆனா, சரியான விளைச்சல் இல்லை. அதனால, மூணு வருஷமா மூலாம்பழம் சாகுபடி செய்யல. போன வருஷத்துல இருந்து திரும்பவும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இந்த வருஷம் அறுவடை முடிஞ்சுது.
இப்ப ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செய்யப் போறேன்” என்ற மணி, இயற்கை முறையில் முலாம்பழத்தை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே…
மாசிப்பட்டம் ஏற்றது!
‘முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள். முலாம்பழச் செடிக்கு, செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது. பங்குனிப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இப்பட்டத்தில், 55 நாட்களிலே மகசூல் கிடைத்தாலும் மகசூல் குறைவாகத்தான் இருக்கும்.
செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் ஏற்றவை. சாகுபடி நிலத்தை கொக்கிக்கலப்பை மூலம் 4 சால் உழவு செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 2 டிப்பர் ஆட்டு எரு அல்லது மாட்டு எருவைக் கொட்டி களைத்து விட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது சமப்படுத்திக் கொண்டு வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும் (இவர் சொட்டு நீர் அமைத்திருக்கிறார்).
வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச்செடி அரை அடி இடைவெளியில் கையால் பள்ளம் பறித்து விதையை நடவு செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 200 முதல் 250 கிராம் விதை தேவைப்படும்). தமிழகத்தில் ஆரஞ்சு நிற சதைப்பகுதி உள்ள பழங்களுக்குத்தான் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் தரமான விதை உற்பத்தியாளர்களிடம் இந்த ரக விதையை வாங்கி நடவு செய்தால் பங்கமில்லாமல் வருமானம் பார்க்கலாம். நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்… பூச்சிகளுக்குப் பூச்சிவிரட்டி!
பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, சூரியகாந்தி அல்லது தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 15 முதல் 20-ம் நாளுக்குள்… தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும். 20-ம் நாளில்களை எடுக்க வேண்டும்.
25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் அரப்பு-மோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஏழு டேங்குகள் தேவைப்படும்.
தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயுடன், 100 கிராம் லவங்கம் பட்டையை அரைத்து கலந்து நான்கு லிட்டர் தண்ணீரில் ஊற  வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ புகையிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் 40-ம் நாளில் தெளிக்க வேண்டும். 45 முதல் 55 நாட்களில் காய்கள் ஒரு கிலோ முதல் ரெண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 60-ம் நாளில் முதல் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம்.
ஏக்கருக்கு 9 டன்!
சாகுபடிப் பாடம் முடித்த மணி, “ஏக்கருக்கு சராசரியா 9 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ சராசரியா 9 ரூபாய் வீதம் விற்பனை செய்தா… 81 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 15 ஆயிரம் ரூபாய் போக, 66 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.
தொடர்புக்கு,
சென்னன், செல்போன்: 09944773757 , மணி, செல்போன்: 09597577326
நன்றி: பசுமை விகடன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites