இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 31, 2015

ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்

கிராஃப்ட் பொருட்கள் செய்யறதுக்கான மெட்டீரியல்களை வாங்கக்கூட கணவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு”
- எங்கிட்ட கிராஃப்ட் வகுப்புகளுக்கு வரும் பெண்கள் பலரும் இப்படி சொல்லக் கேட்டிருக்கேன். ஒரு காலத்துல இந்த நிலையில் இருந்தவதான் நானும். இன்னிக்கு மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால, நம்பி கத்துக்கோங்க, நம்பிக்கையோட களத்துல இறங்குங்க, நாளைக்கு நம் தேவைகளை மட்டும் இல்ல… குழந்தைகள், வீட்டுச் செலவுனு எல்லாத்தையும் நாமே பார்த்துக்கலாம்னு கிராஃப்ட் வகுப்புகளுக்கு வர்ற பெண்களுக்கெல்லாம் சொல்வேன். இதுதான் உண்மை!”
- சிரித்த முகத்தோடு ஆரம்பித்தார் சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன்.
”சின்ன வயசுல என்னோட கிராஃப்ட் ஆர்வத்தைப் பார்த்து, ‘இவளை ஏதாவது ஆர்ட் கிளாஸில் விடுங்க’னு பலரும் சொன்னாங்க. ஆனா, எங்கப்பா, அம்மாவுக்கு அது பெருசா தெரியாம போயிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம், ‘இப்போவாச்சும் உன் விருப்பப்படி கிராஃப்ட் கிளாஸ் போயேன்’னு தம்பி தூண்டுகோலா இருக்க,  கணவரும் சந்தோஷமா அனுப்பி வெச்சார். தஞ்சாவூர் பெயின்ட்டிங், மியூரல் வொர்க், குஷன் மேக்கிங், கேண்டில் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ரிட்டர்ன் கிஃப்ட்னு ஏகப்பட்ட கிராஃப்ட் அயிட்டங்களை முழுமையா கத்துக்கிட்டேன்.
பொருட்களைத் தயாரிச்சு விற்பனைக்கு கொடுத்ததோட, 15 வருஷ அனுபவம் மூலமா… ஏரியா பெண்கள், கல்லூரிப் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள்னு பலருக்கு பயிற்சிகளையும் கொடுக்கிறேன். ராமேஸ்வரம், கோவை, துபாய்னு அழைப்புகள் வந்துட்டே இருக்கு!” என்றபோது, பெருமிதம் சாந்தி குரலில்.
”நான் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், என்னை மீட்டதே… இந்த கைவினைக் கலைதான். வேலைக்குப் போற பெண்களானாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களானாலும் சரி… சுற்றம் எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துறதுல குறை வைக்கிறதில்ல. இது தொடரும்போது, மனதளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, அந்த நேரங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை செய்து பாருங்க… மனசுக்கு புத்துணர்வு கிடைக்கும். இதுவே கைவினைப் பொருட்களா இருந்தா, மனசும் லேசாயிடும், வருமானத்துக்கும் வழி கிடைக்கும். பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சுட்டா, நாலு மனுஷங்களை பார்த்துப் பழகுற அந்த அனுபவம், சுவாரஸ்யமா நம்மை அழைச்சுட்டுப் போகும்!”
- ரசித்து அனுபவித்துப் பேசுகிறார் சாந்தி.
”எனக்கு ரொம்ப பிடிச்சது, கேண்டில் மேக்கிங்தான். நான் செய்யும் கேண்டில்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமா இருக்கும். தண்ணீரில் மிதக்கும் தீபம், ரோஜா, ஆட்டின் ஷேப், ரிட்டர்ன் கிஃப்ட் விளக்குகள், கேண்டில் ஜுவல் பாக்ஸ்னு பார்க்கிறவங்களை வாங்க வைக்கும். நியூ இயர், கார்த்திகை, கிறிஸ்துமஸ் விழா காலங்கள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கும். மே, ஜூன் தவிர, மற்ற மாதங்கள்ல ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும். சர்ச் ஆர்டர்கள் கிடைச்சுட்டா, எப்பவும் பிஸியா வைக்கும். ஆர்டர்களைப் பிடிக்கறதுலதான் நம்மோட சாமர்த்தியமும், வருமானத்துக்கான வழியும் அடங்கியிருக்கு.
கேண்டில் பிசினஸில் மட்டுமே மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். மற்ற கிராஃப்ட் பொருட்களையும் சேர்த்து செய்தா, கிட்டத்தட்ட 20 ஆயிரம் வரை கிடைக்கும். நான் வகுப்புகளும் எடுக்கிறதால, 25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சீரியஸ் படங்கள், மெகா சீரியல்கள் எல்லாம் எனக்குப் பார்க்கப் பிடிக்காது. அதனால போரடிக்கிற நேரத்தை கிராஃப்ட்டில் செலவழிக்க ஆரம்பிச்சேன். இப்போ இதுவே எனக்கு முழுநேர தொழிலா ஆகிடுச்சு!” என்ற சாந்தி, தன் அருகில் இருந்த வேக்ஸ் டெடிபியரை இதமாக வருடினார்.

நிரந்தர லாபம்… நிகரில்லா கிராஃப்ட்!
”எம்ப்ராய்டரி தொடங்கி, பெயின்ட்டிங் வரை கிராஃப்ட்டில் உங்களுக்கு இருக்கிற ஏ டு இஸட் கேள்விகள் என்னென்ன? மார்க்கெட்டிங், விளம்பரம், வருமானம், லாபம் இதிலெல்லாம் என்னென்ன சந்தேகங்கள் இருக்கு? குறிப்பா, கேண்டில் மேக்கிங்கில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான சூட்சுமம் என்னென்ன? எல்லாத்துக்கும் பதில் தர தயாரா இருக்கேன். தினமும் மூணு நிமிஷத்துக்கு கீழ இருக்கற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க” என்று வாசக, வாசகிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் கிராஃப்ட் பயிற்சியாளர், சாந்தி.
+(91)-44-66802912
இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன… உங்கள் செல்போனில் ‘அவள் விகடன் வழிகாட்டும் ஒலி’ என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!
நன்றி விகடன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites