இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 28, 2012

தோல் தொற்று நோய்களை தடுக்க

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது.

தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம்  பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன.

பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

ரெசிபி

பிரெட் சப்பாத்தி: பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

டயட்

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடி
வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites