இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 22, 2024

செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு

 

செயற்கை ரோஸ் பொக்கே

இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது.

செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர்.

அந்த தினங்களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செய்யலாம்.

தயாரிக்கும் முறை

பொக்கே கோன், பூ ஆகியவற்றை தனித்தனியாக தயாரிக்க வேண்டும். ரேப்பரை முக்கால் அடி உயரம், ஒன்றரை இஞ்ச் திறப்பு உள்ளவாறு சுற்றினால் கோன் தயார். பூ தயாரிக்க முதலில் இதழ் தயாரிக்க வேண்டும், பின் அவற்றை பூவாக மாற்ற வேண்டும். ஒரு பூவுக்கு 7 இதழ்கள் தேவை. இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும். இதழ் செய்ய, முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலதாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகும்.

பூ தயாரிக்க, முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் செருக வேண்டும், பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து, ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். ஏழு இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும். பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செலோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் சிங்கிள் பொக்கே ரெடி.

கட்டமைப்பு

தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு.

தேவைப்படும் பொருட்கள்

ஆர்கன்டி துணி (பூக்களுக்கு தேவையான இதழ்கள் தயாரிக்க பயன்படுவது, ஒரு மீட்டர் ரூ. 30 - 20 பூக்கள் தயாரிக்கலாம்).

பூ கட்டும் கம்பி (பூக்களுக்கு தேவையான காம்புகள் செய்ய பயன்படுவது, தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். ஒரு கம்பி ரூ. 2 - 5 காம்புகள் தயாரிக்கலாம்).

கிரீன் பேப்பர் செலோ டேப் (காம்புகள் மீது சுற்ற பயன்படுவது, ஒரு ரோல் ரூ. 25 - 20 காம்புகளில் சுற்றலாம்), கிரீன் கிராப் (கம்பு தானிய கதிரின் சருகு, பொக்கே பூவை சுற்றி இலைகளாக அமைக்க பயன்படுவது. பல கலர்களில் கிடைக்கும். 100 கிராம் பாக்கெட் ரூ. 25 - 4 பொக்கேவில் பயன்படுத்தலாம்), பொக்கே ராப்பர் (பேக்கிங் ஷீட். ஒரு ஷீட் ரூ. 8 - 10 பொக்கேவுக்கு பயன்படுத்தலாம்). பேபி சாடின் ரிப்பன் (பொக்கேயின் கீழ் அழகுக்காக கட்டுவது. ஒரு ரோல் ரூ. 15 - 25 பொக்கேக்களுக்கு பயன்படுத்தலாம்).

கிடைக்கும் இடங்கள்

ஸ்டேஷ்னரி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டோர்களில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு பொக்கே தயாரிக்க உற்பத்தி பொருள் செலவு ரூ. 8. ஒரு நாளில் மணிக்கு 4 வீதம் 8 மணி நேரத்தில் 32 பூக்கள் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ. 256. மாதம் 25 நாளில் 800 பொக்கே தயாரிக்க ரூ. 6,400 தேவை.

வருவாய் (மாதத்துக்கு)

ஒரு செயற்கை பொக்கேவை மொத்த விற்பனை விலையாக கடைகளுக்கு தலா ரூ. 20 வீதம் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ. 16 ஆயிரம். உற்பத்தி செலவு போக லாபம் ரூ. 9,600. சில்லரையாக ரூ. 25 விற்கலாம். அவ்வாறு விற்றால் லாபம் கூடும். பெரிய பூக்களை செய்து, கொத்தாக உருவாக்கி, அதை வண்ணம் தீட்டப்பட்ட பொக்கே ஸ்டாண்ட்களில் செருகி ‘பிளவர் வாஷ்’ தயாரித்து விற்கலாம். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி ­­மையம், சென்னை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites