இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 22, 2024

ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறைகள்

 

தக்காளி

தக்காளிக்கு வருடம் முழுவதும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பல நேரங்களில் நஷ்டம் தான் அதிகமாக இருக்கும். விவசாயிகளைப் பொறுத்த வரையில் விளைச்சலை அப்படியே சந்தையில் விற்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்கு மேல் யோசிப்பதேயில்லை. இந்த மன நிலை தான் நஷ்டத்திற்குக் காரணம். விலை குறையும் போது சாலையில் கொட்டி வீணாக்குவதற்கு பதிலாக அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ மாற்றினால் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

உதாரணமாக, ஒரு கிலோ தக்காளியில் சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரித்தால், 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்றைய சந்தையில் 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 ரூபாய் என்றாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதற்கான தயாரிப்பு செலவுக்காக 30 ரூபாயைக் கழித்தாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டால், தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

நன்றாக பழுத்த தக்காளி - ஒரு கிலோ

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி

பூண்டு - 20 பல்

பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர் வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேக விட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளி கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டு சாப்பிட பயன்படுத்தலாம்.

தக்காளி ஜாம்

தேவையான பொருட்கள்

தக்காளி பழக் கூழ் - ஒரு கிலோ

சர்க்கரை - 750 கிராம்

சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியை சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப் பகுதிகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸியில் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இது தான் தக்காளி பழக் கூழ்). சிறிது தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேக விட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக விழ வேண்டும். அது வரை கலவை வேக வேண்டும். இந்த பதம் வந்த பின் பாத்திரத்தை இறக்கி வைத்து சிறிது ஆற விட்டு, வாயகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆற விட்டு, அதன் பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடான கலவையை பாட்டில்களில் நிரப்பும் போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.

விற்பனை

நாம் மதிப்புக் கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி ­­மையம், சென்னை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites