இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 14, 2014

வனம் தரும் பணம்

தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் ....
பளிச்... பளிச்...ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை.
வேலையாட்கள் பிரச்னைக்குத் தீர்வு.
4-ம் ஆண்டு முதல் வருமானம்.
வானம் பாத்த பூமி, போக்குக் காட்டும் மழை, சரியில்லாத மண்கண்டம், பற்றாக்குறைத் தண்ணீர், வேலையாட்கள் பிரச்னை என்று பல பிரச்னைகளைப் பார்த்து, பயந்து போய் நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்திருக்கும் அப்பாவி விவசாயியா நீங்கள்...? அல்லது 'இனிமே வெள்ளாமை செஞ்சி ஜெயிக்க முடியாது.. பேசாம நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு வேற பொழப்பைப் பாக்கலாம்" என யோசிப்பவரா...? எப்படி இருந்தாலும் அவசரப்படாதீர்கள்... உங்களைப் போன்றவர்களுக்காகவே தமிழ்நாடு வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு' என்பதுதான் அந்தத் திட்டம். 'நாட்டில் 33 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அரசால் ஆரம்பிக்கப்பட்டத் திட்டமாக இருந்தாலும், அது பொதுநோக்கோடு குறிப்பாக விவசாயிகளுக்கும் பலன் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் விசேஷம். இனி இத்திட்டம் பற்றி விரிவாக விளக்குகிறார், மதுரை வன விரிவாக்க அலுவலர், ராஜசேகரன்.
விரும்பும் மரம் கிடைக்கும்
"இன்னிக்கு இருக்குற சூழல் கேடு எல்லாத்துக்கும் காடுகளை அழிச்சதுதான் காரணம். புவிவெப்பம், ஓசோன் ஓட்டைனு பிரச்னை பெருசானதும் உலக நாடுகள் முழுக்க மரங்களை வளக்கறதுல முனைப்பா இருக்கு. நம்ம நாட்டுலயும் காடுகளோட பரப்பை அதிகரிக்கறதுக்காக வனவிரிவாக்கத்துறை முனைப்பா செயல்பட்டு வருது.
காடுகள், மலைகள், தரிசு நிலங்கள்ல மரக்கன்றுகளை நட்டு வளத்துகிட்டு வர்றோம். ஆனா, காடுகளோட பரப்பு 33 சதவிகிதம் அளவுக்கு உயரணும்னா விவசாயிகள் மற்றும் பொதுமக்களோட பங்களிப்பு ரொம்ப அவசியம்ங்கிறதை உணர்ந்து, 'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்ட'த்தை, 2007-ம் வருஷத்துல இருந்து அரசு செயல்படுத்திக்கிட்டு வருது.
இந்தத் திட்டத்தின்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் நிலத்துல நடுறதுக்குத் தேவையான மரக்கன்றுகளை இலவசமா கொடுக்குறோம். மரக்கன்று நட விரும்புற விவசாயிகளோட நிலங்களை எங்கள் அலுவலர்கள் ஆய்வு செஞ்சி, அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளரும்னு பாத்து மண்ணுக்கேத்த மரக்கன்றுகளைக் கொடுக்குறோம். நாங்க பரிந்துரை பண்ற மரங்கள் மட்டும் இல்லாம விவசாயிகள் விரும்புற மரக்கன்றுகளையும் கேட்டு வாங்கிக்கலாம்.
அனைத்தும் இலவசம்
வெறுமனே மரத்தை நட்டு வளருங்கனு சொன்னா, 'மரம் நட்டா சூழல் சுத்தமாகும், நமக்கென்ன பயன்'னு யோசிக்குறாங்க. அதுனால அவங்களுக்கும் பலன் கிடைக்கணுங்கிறதுக்காக, வணிக ரீதியா பலன் கொடுக்குற மரங்களான, சவுக்கு, பெருமரம் (பீநாரி), குமிழ், மலைவேம்பு, மகோகனி, இலவம், தேக்கு, வாகை, வேம்பு, புங்கன், காயா, சிலவாகை, தடசு... மாதிரியான மரங்களைத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
தேவைப்படுறவங்க நிலத்தை உழுது மட்டும் கொடுத்தா போதும். நாங்களே ஆட்களை அனுப்பி குழியெடுத்து மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்திடுவோம். இதுக்காக விவசாயிக எந்தப் பணமும் செலவழிக்கத் தேவையில்ல. நடவு செய்யுற செடியை நல்லபடியா பராமரிச்சுட்டு வந்தா, நடவிலிருந்து ஒரு வருஷம் கழிச்சு, ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைக்கும்.
ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம்
பொதுவா மானாவாரி நிலம்னா அதுல இலவம், பெருமரம் நல்லா வளருது. கரிசல் மண் நிலமா இருந்தா, இலவ மரம் அருமையா வளரும். மழைக்காலத்துல நட்டு, செடியைச் சுத்தி குழி எடுத்து வெச்சுட்டா போதும்.
இறவைப் பாசனம்னா வரப்புப் பயிராக கூட மரங்களை நட்டுக்கலாம், அல்லது வரப்பைச் சுற்றி வேலிப்பயிரா சவுக்கை நட்டுட்டு வயலுக்குள்ள 15 அடி இடைவெளியில மரக்கன்றுகளை நட்டு இடையில விவசாயம் செய்யலாம். இப்படி மரக்கன்றுகளை நடும்போது முதல் ரெண்டு வருஷத்துக்கு ஊடுபயிரா காய்கறிகள், தானியங்கள்னு ஏதாவது ஒரு பயிர் செஞ்சி அது மூலமா வருமானம் எடுத்துக்க முடியும்.
வருஷா வருஷம் வருமானம்
3-ம் வருஷத்திலிருந்து இலவ மரத்துல காய்கள் கிடைக்கும். 4-ம் வருஷம் சவுக்கு, 5-ம் வருஷம் பெருமரம், 6-ம் வருஷம் குமிழ், 7-ம் வருஷம் மலைவேம்புனு தொடர்ந்து வருமானம் வந்துகிட்டே இருக்கும். 9-ம் வருஷத்தில இருந்து மூணு வருஷத்துக்கொரு தடவை பெருமரம் மறுதாம்பு மூலமா வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்யலாம். 4 வருஷம் கழிச்சு வெட்டும்போது ஒரு சவுக்கு மரம் 25 ரூபாய்னு விலை போனா கூட ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கும்.
நாங்க கொடுக்குற மரங்களிலேயே கம்மியான விலைக்கு போறது சவுக்குதான். அதுலயே இவ்வளவு வருமானம்னா, மத்த மரங்கள் மூலமா கிடைக்கிற வருமானத்தை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.
வேம்பு, புங்கன் மாதிரியான மரங்களா இருந்தா மரங்கள் பெருசாவதற்குள்ள விதைகள் மூலமாவும் வருமானம் பாத்துடலாம். மரமும், விவசாயமும் சேர்ந்த வேளாண் காடுகளை அதிகமா ஏற்படுத்துறதுதான் இந்தத் திட்டத்தோட நோக்கம். பல பிரச்னைகளால விவசாயத்தை வெறுக்குற விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்.
மரப்பயிரை சாகுபடி செய்யுறப்ப 20 ஏக்கர் நிலத்தைக் கூட ஒருத்தரே பராமரிச்சிட முடியும். உரம், பூச்சிக்கொல்லி, வேலையாள்னு எந்தச் செலவும் இல்லை. சுருக்கமாச் சொன்னா இதையும் 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்னே சொல்லலாம். மரம் வளக்குறதுல வருமானம் பாக்குறதோட சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்றோம்ங்கிற திருப்தியும் கிடைக்கும்" என்ற ராஜசேகரன் நிறைவாக,
"மரம் வளக்குற விவசாயிகளுக்கு, 'மரம் வளத்து, விக்குறதுக்காக வெட்டுறப்ப அனுமதி அது, இதுனு அலைய விட்டுடுவாங்களோ'னு ஒரு சந்தேகம் வரும். இது நியாயமான சந்தேகம்தான். மர வியாபாரிகள், தரகர்கள் இந்த விஷயத்தைக் காரணம் காட்டியே மரத்துக்கான விலையில் பாதியைக் குறைச்சுடுவாங்க.
அடையாள அட்டை
இதை தடுக்குறதுக்காக, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டத்தின் மூலமா மரம் வளக்குறவங்களுக்கு புகைப்படம் ஒட்டுன அடையாள அட்டையை கொடுத்திடுறோம். அதுல அவங்களோட நிலத்தின் அளவு, மரங்களோட விவரம்னு எல்லாமே இருக்கும். அதை வெச்சே அவங்க கிராம நிர்வாக அலுவலகத்துல அடங்கல் குறிப்புல மரங்களோட விவரத்தைப் பதிவு செஞ்சுக்க முடியும். மரங்களை விற்பனை செய்றப்ப இந்த அட்டையை வனத்துறை அலுவலகத்துல காட்டி தேவையான ஆவணங்களைக் கொடுத்து கட்டணமா 10 ரூபாயை மட்டும் கட்டினாலே போதும். மரத்தை வெட்டி விற்பனை பண்றதுக்கான அனுமதி கிடைச்சுடும்" என்றார்.
இந்தத் திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக இந்தத் திட்டத்தின் மூலம் மரங்களை வளர்த்து வரும் விவசாயிகள் சிலரை சந்தித்தோம்.
மானாவாரியிலும் மகத்துவம்
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு கிராமத்தில், 'மழையை விட்டால் வழியே இல்லை' என்ற அளவுக்கு வறண்டு கிடந்த கரிசல் காட்டில் இலவம் மற்றும் குமிழ் மரங்களை சாகுபடி செய்து வருகிற சுப்புராமைப் போய் பார்த்தோம். மனிதர் மிகவும் உற்சாகமாக, "பாசன வசதி இல்லாத நிலம். அதனால, மழையை மட்டும் நம்பி பருத்தி, சோளம்னு மாறி மாறி விதைப்பேன். ஆனாலும், விவசாயத்துல கைக்காசுதான் போச்சுதே தவிர, வருமானம்னு சல்லிக்காசு மிச்சமில்ல.
ஊருக்குப் பக்கத்துல இருக்கற 80 சென்ட் நிலத்துல இலவம் மரம் வெச்சிருந்தேன். அதுல விளையுற காயை எடுத்து, பஞ்சாக்கி வித்துத்தான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல வனவிரிவாக்க மையம் மூலமா 'கன்னு கொடுக்குறோம்'னு சொன்னாங்க, நான் 'இலவங்கன்னு கொடுங்க'னு கேட்டு வாங்கி, அஞ்சு ஏக்கர்ல நட்டு மூணு வருஷமாச்சு. இதுவரைக்கும் மழைத் தண்ணியைத் தவிர வேறெந்த தண்ணியும் பாய்ச்சலை. இப்ப காய் காய்க்க ஆரம்பிச்சுடுச்சு.
இங்க எல்லா மரங்களும் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம் கரிசல் மண்தான். இந்த மண், மண்ணுல விழுவுற மழைத் தண்ணியை அப்படியே பிடிச்சு வெச்சுக்கும். அதனால நிலத்துல அங்கங்க உயரமான வரப்புகளைப் போட்டு, செடியை சுத்தியும் சைக்கிள் டயர் அளவுக்கு வட்டமா ஒரு அடி ஆழத்துல குழி எடுத்து வெச்சிட்டேன். இந்தக் குழியில ஒவ்வொரு தடவை மழை பெய்யுறப்பவும் 50 லிட்டர் தண்ணி நிக்கும். இப்படி கரை போட்டு, குழி எடுத்து வெச்சதால என் நிலத்துல விழுகுற மழைத் தண்ணி ஒரு பொட்டுக்கூட வெளிய போகாது.
6-வது வருஷத்துக்கு மேல இருந்து இலவு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். நல்லபடியா விளைஞ்சா ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா கிடைக்கும். இப்ப வாரத்துல ரெண்டு தடவை மட்டும் வந்து நிலத்தை ஒரு சுத்து சுத்திப்பாத்துட்டு போறதோட சரி. பருத்தி இருந்தப்ப ஆள் கிடைக்காம அவஸ்தைப்பட்ட நான், இன்னிக்கு என் நிலத்தையும் பாத்துக்கிட்டு அடுத்தவங்க கூப்பிட்டா வேலைக்கும் போறேன்.
என்னைப் பாத்துட்டு எங்க பகுதியில ஏகப்பட்ட பேரு மரம் வளக்குறதுல இறங்கிட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த வில்லங்கமும் இல்லாத விவசாயம் இந்த மரம் வளர்ப்புதான்" என்றார்.
5 ஏக்கர்...! 20 லட்சம்
அடுத்து நாம் சந்தித்தது, இறவையில் பெருமரம் (பீநாரி) வளர்த்து வரும் திண்டுக்கல், வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தத்தை. "இந்த மரத்தை நட்டு 11 மாசம் ஆகுது. இது மானாவாரியிலயே நல்லா வளரும், நான் அப்பப்ப தண்ணியும் கொடுக்குறதால குறுகிய காலத்துலயே நல்லா வளந்திருக்கு. 5 ஏக்கர்ல கிட்டத்தட்ட
2 ஆயிரம் மரங்க இருக்கு. இதே மாதிரி வளந்தா 4 வருஷத்துல வெட்டலாம்.
ஒரு மரம் 1,000 ரூபாயினு வெச்சுக்கிட்டாக்கூட 20 லட்ச ரூபா வருமானம் கிடைக்கும். அடுத்த மூணு வருஷத்துக்கு ஒருதடவை மறுதாம்பு மூலமா இதே தொகை தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும். வேறெந்த விவசாயத்துலயும் கிடைக்காத வருமானம் மரம் வளர்ப்புல கிடைக்கிறதோட, சமுதாயத்துக்கு நல்லது செஞ்சோம்ங்கிற திருப்தியும் கிடைக்குது" என்கிறார் முருகானந்தம்.
10 வருடம்... 40 லட்சம்..!
மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான சுப்பாராஜ், "45 வருஷமா விவசாயம் பாத்து, நொந்து நூலாகி இனிமே விவசாயமே வேண்டாம்னு முடிவுக்கு வந்து நிலத்தைத் தரிசாப் போட்டுட்டேன். அப்பதான் இந்தத் திட்டத்தில இருந்து வந்த வனவிரிவாக்க மைய அலுவலர்கள், 'இந்த மண்ணுல தேக்கு நல்லா வளரும்'னு சொல்லி தேக்கு மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்தாங்க. நானும் ஆரம்பத்துல இஷ்டம் இல்லாமதான் வாங்கி நட்டேன். ஆனா, மரம் வளர, வளர என்னையும் அறியாம எதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுப் போச்சு.
விவசாயமே வேணாம்னு ஓடுனவன், இப்ப தினமும் காலையில ஆறு மணியில இருந்து எட்டு மணி வரைக்கும் தோட்டதுலதான் இருக்கேன். ஒவ்வொரு மரமா பாத்து, நுனியக் கிள்ளி தடவிக் கொடுப்பேன். இங்க இருக்க ஒவ்வொரு மரமும் என்னோட பேசும். அஞ்சு ஏக்கர்ல தேக்கு இருக்கு. நட்டு 11 மாசத்துலயே 15 அடி உயரம், 22 செ.மீ சுற்றளவுக்கு தடிமனா பருத்திருக்கு.
10 வருஷத்துக்கு முன்ன இதைச் செஞ்சிருந்தா, இன்னிக்கு நான் கோடீஸ்வரனா இருந்திருப்பேன். கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இருந்தாலும் பரவாயில்லை இந்த அஞ்சி ஏக்கர்ல 2,000 தேக்கு இருக்கு. அடுத்த 10 வருஷத்துல ஒரு மரம் 2,000 ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும், 40 லட்ச ரூபா கிடைக்குமே. எந்த வெள்ளாமையில இவ்வளவு வருமானம் கிடைக்கும்" என்றார் ஆனந்தமாக.
ஊடுபயிர்களும் பயிரிடலாம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த ராஜீ, "நான் இந்தத் தோட்டத்துல தண்ணி கட்டிப் பராமரிக்குற வேலை பாத்துக்கிட்டிருக்கேன். (இவர் தோட்ட உரிமையாளர் கிடையாது) தண்ணி வசதி இருக்குறதால இந்த நிலத்துல காய்கறிதான் போடுவோம். போன வருஷம் நவம்பர் மாசத்துல பீநாரியும், குமிழ்ச் செடியும் கொடுத்தாங்க. அதை 15 அடி இடைவெளியில நட்டு, வரப்பு முழுக்க சுத்தி சவுக்கு நட்டுருக்கோம். இடையில பாத்தி எடுத்து தக்காளியை நட்டு, வாய்க்காலோட ரெண்டு பக்கமும் துவரையையும் அகத்தியையும் நட்டுருக்கோம். அகத்தி, மாடுகளுக்கு தீவனமாப் பயன்படுது. தக்காளிக்குப் பாயுற தண்ணியிலயே மரங்க நல்லா உருண்டு திரண்டு வருது. 11 மாசத்துலயே பீநாரி 30 செ.மீ பருமனுக்கு பருத்திருக்கு. அடுத்த வருஷத்திலிருந்து காய்கறி செய்ய முடியாது. நிழல்ல வர்ற வெள்ளாமை ஏதாவதுதான் செய்யணும். 6 வருஷத்துக்கு மேல இந்த மரங்க மூலமா பல லட்சம் வருமானம் வரும்னு சொல்றாங்க. இப்ப இருக்கற சூழ்நிலையில வெள்ளாமை செய்றதை விட மரம் வளக்குறதுதான் நல்லது" என்றார் திட்டவட்டமாக.
இனி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்... நிலத்தைத் தரிசாகப் போடுவதா... விற்று விடுவதா... அல்லது?,
படங்கள் : வீ. சிவக்குமார்
என்ன செய்ய வேண்டும்?
"இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் நிலம் பற்றிய விவரம், பட்டா, சிட்டா, அடங்கல், 2 மார்பளவு புகைப்படங்கள்... ஆகியவற்றுடன் அந்தந்த மாவத்திலுள்ள வன விரிவாக்க மையங்களை அணுகலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மரக்கன்றுகளை நடவு செய்ய இது சரியான பருவம். தவிர, அனைத்து மையங்களிலும் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த மையங்களில் தரமான நாற்றுகள் மானிய விலையில் விற்பனையும் செய்யப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மரம் வளர்ப்பு தொடர்பான இலவசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்கிறார் ராஜசேகரன்.
ஐந்தடி வரைதான் கவாத்து...
மரங்களுக்கு கவாத்து அவசியம். ஆனால், பலரும் கிளைகளை நன்கு வளர விட்டு வெட்டும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். இது தவறாகும். எந்த மரமாக இருந்தாலும் மரம் 5 அடி உயரத்துக்கு வளருகிற வரைக்கும் வேண்டுமானால், பக்கக் கிளைகள் வளர்ந்ததும் வெட்டலாம். அதற்கு மேல் மரம் வளர்ந்த பிறகு நுனியில் பக்கக் கிளை பிரியும் போதே கிள்ளி எடுத்து விடவேண்டும். வளர்ந்த பிறகு நீக்குவதால் மரத்தில் காயங்கள், தழும்புகள் ஏற்படும். அதே போல மரத்தில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் இலைகளை நீக்கவே கூடாது. தேவையில்லாத இலைகளை மரங்களே உதிர்த்து விடும்.
குறைந்த செலவில் பசுமைக் கூடாரம்...
வன விரிவாக்க மையங்களில் குறைந்த செலவில் பசுமைக் கூடாரம் அமைக்கும் முறையையும் கற்றுத் தருகிறார்கள். இந்தகூடாரத்துக்கு 15,000 ரூபாய்தான் செலவாகிறது. இதில் 1,000 நாற்றுகள் உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் குறைந்த அளவில் நாற்று உற்பத்தி செய்து கொள்வதற்கு இந்த கூடாரம் உதவியாக இருக்கும்.

தொடர்புக்கு,

வனவிரிவாக்க அலுவலர், ராஜசேகரன், அலைபேசி: 94424-05981.
விவசாயிகள்:

சுப்புராம், அலைபேசி: 99445-92378.
சுப்பாராஜ், அலைபேசி: 98653-24930,
முருகானந்தம், அலைபேசி: 98944-54774

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites