இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 2, 2014

சிறுதானிய பிஸ்கெட்

சிறுதானியங்களின் மீதான மக்களின் அக்கறையும் ஆர்வமும் அதிசயிக்க வைக்கின்றன. நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோர் மட்டுமே சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டது போக, இன்று ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற அத்தனை பேரின் மெனுவிலும் அவை இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. இட்லி, தோசை, உப்புமா, அடை உள்ளிட்ட அத்தனை உணவுகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். சென்னையைச் சேர்ந்த அக்சீலியா அஷோக், சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் செய்து அசத்துகிறார்!

‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். பியூட்டிஷியன் கோர்ஸ், டெய்லரிங்னு பொழுதுபோக்கா கத்துக்கிட்ட பல விஷயங்கள்ல பேக்கரியும் ஒண்ணு. ஆரம்ப காலத்துல எல்லாரும் செய்யற மாதிரி மைதா உபயோகிச்சுதான் பிஸ்கெட் பண்ணிட்டிருந்தேன். சிறுதானிய உணவுகள் பத்தின ஒரு பயிற்சி வகுப்புக்குப் போனதுலேருந்து, அதைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாச்சு. ‘சாதாரணமா நாம சாப்பிடற எல்லா உணவுகளையும் சிறுதானியங்கள்லயும் பண்ண முடியும்’னு அந்தப் பயிற்சியில சொன்னாங்க. அதை வச்சு நானே, சிறுதானியங்கள்ல பிஸ்கெட் வருமானு முயற்சி பண்ணிப் பார்த்தேன். வழக்கமான பிஸ்கெட்டுகளைவிட பிரமாதமா வந்தது. 

சாம்பிள் கொடுத்துப் பார்த்ததுல அக்கம்பக்கத்து வீட்டாருக்குப் பிடிச்சுப் போய், உடனடியா ஆர்டர் கொடுத்தாங்க. இப்ப சாதாரண பிஸ்கெட் வகைகளைவிட, சிறுதானிய பிஸ்கெட் செய்யறதுலதான் நான் பிஸி’’ என்கிற அக்சீலியா, கேழ்வரகு, திணை, கம்பு, கோதுமை, பலதானியக் கலவை என 5 வகைகளில் பிஸ்கெட் செய்கிறார். இனிப்பும் கொழுப்பும் கம்மியான இந்த பிஸ்கெட்டுகளை வயதானவர்கள், நோயாளிகள், டயட் செய்கிறவர்களும் தைரியமாக சாப்பிடலாம்.

‘‘கம்பு, கேழ்வரகு, திணை, கோதுமை, ஆர்கானிக் சர்க்கரை, வெண்ணெய், உப்புனு எல்லாமே தரமானதா பார்த்து வாங்கணும். டயட் பிஸ்கெட்டுங்கிறதால, அதிக வெண்ணெயோ, இனிப்போ சேர்க்கறதைத் தவிர்க்கறது நல்லது. ஓடிஜி அல்லது மைக்ரோவேவ் அவன் அவசியம். மற்ற பொருட்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதும். இதர பிஸ்கெட் வகைகளைப் போல இதை மொத்தமா செய்து வச்சுக்கிட்டு, விற்க முயற்சி பண்ணக் கூடாது. ஆர்டர் எடுத்துட்டு, அதுக்கேத்தபடி ஃப்ரெஷ்ஷா பண்ணிக் கொடுக்கலாம். சூப்பர் மார்க்கெட், பேக்கரிகளுக்கும் சப்ளை பண்ணலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற அக்சீலியாவிடம் 5 வகையான சிறுதானிய பிஸ்கெட்டுகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய். 98431 80300

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites