இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, January 1, 2014

தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை


காளான் தாய்வித்து மற்றும் படுக்கை வித்து தயாரிப்பு
காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன. பிரித்தெடுத்த காளான் பூசண மூலவித்தை சோளம் போன்ற தானியங்கில் வளரச் செய்து அவற்றைத் தாய் வித்தாகப் பயன்படுத்தலாம். ஒருமுறை இவ்வாறு உற்பத்தி செய்த தாய் வித்துப்புட்டிகளிலிருந்து இரண்டு முறை படுக்கை வித்துத் தயாரிக்கலாம். ஒரு தாய் வித்துப்புட்டியிலிருந்து பலமுறை தொடர்ந்து வித்துப் பெருக்கம் செய்தால் பூசணத்தின் வீரியம் குறைந்து காளான் விளைச்சல் பாதிக்கப்படும்.

காளான் தாய் வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கத் தரமான சோளத்தைத் தண்ணீர் விட்டு அலசி நல்ல சோளத்தைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் கொதித்து சோளம் வேகும் நிலையில் ஒன்றிரண்டு சோளங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது சோளத்தை விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கினால் மெதுவாக நகங்கும் நிலை வந்தவுடனோ வேக வைப்பதை நிறுத்தி விட வேண்டும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த சோளத்தைச் சாக்குப் படுதாவில் பரப்பி ஈரம் போக உலர்த்த வேண்டும். உலர் எடை அடிப்படையில் ஒரு கிலோ சோளத்திற்கு 20 கிராம் கால்சியம் கார்பனேட் தூளை வேக வைத்து ஈரம் போக்கிய சோளத்துடன் நன்கு கலந்துவிட வேண்டும்.

இந்நிலையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வேக வைத்த சோளத்தின் ஈரப்பதமாகும். சோளம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கையிலெடுக்கும் போது பொல பொலவென்று இருக்க வேண்டும். காளான் வித்து தயாரிப்பதற்க 150 காஜ%( பருமனும் 11”X15” அளவு உள்ள பாலி புரபலீன் பைகளைப் பயன்படுத்த வேண்டும். பின்பு கால்சியம் கார்பனேட் கலந்த சோளத்தை பாலிபுரபலீன் பைகளில் 300 கிராம் அளவில் நிரப்பி வாய்பாகத்தை ஈரம் உறிஞ்சாத பஞ்சினால் அடைத்துப் பின்பு ஒரு காகிதத் துண்டினால் பஞ்சடைப்பானை மூடிச் சணல் நூல் கொண்டு கட்டி விட வேண்டும்.

பின்பு இவ்வாறு தயாரிக்கப்பட்ட பைகளை அழுத்த வெப்ப மூட்டி என்று சொல்லக் கூடிய ஆட்டோகிளேவில் வைத்து 20 ராத்தல் நீராவி அழுத்தத்தில் இரண்டு மணி நேரம் வைத்துத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். புட்டிகளின் சூடு ஆறிய பிறகு அவற்றைத் தாய்வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோளம் நிறைந்த புட்டிகளைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட திசு வளர்ப்பறையினுள் வைக்க வேண்டும். பிறகு பெட்ரித் தட்டில் அல்லது சோதனைக் குழாயில் வளர்த்துள்ள காளான் பூசணத்தைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட கம்பி மூலம் துண்டுகளாக வெட்டி சோளம் நிறைந்த புட்டிகளுக்கு மாற்ற வேண்டும். ஒரு புட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வீதம் இட்டு புட்டிகளை மீண்டும் அதே பஞ்சடைப்பானால் மூடிவிட வேண்டும். ஒரு பெட்ரித்தட்டிலுள்ள பூசணத்திலிருந்து சுமார் 10 தாய் வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். ஒரு சோதனைக் குழாயில் உள்ள பூசணத்திலிருந்த இரண்டு தாய் வித்துப்பைகள் தயாரிக்கலாம். இப்புட்டிகளைத் தனியறையில் வைத்து பூசணத்தை வளரச் செய்ய வேண்டும்.

சுமார் 15 நாட்களில் வித்துப் பை முழுவதும் பூசணம் பரவி வெண்மையாகக் காணப்படும். அதன் பின் 3 முதல் 5 நாட்களில் பூசண வளர்ச்சி நிறைவுற்றவுடன் இவற்றைத் தாய் வித்துப் புட்டிகளாகப் பயன்படுத்தலாம்.ஒரு தாய் வித்துப் பையிலிருந்து சுமார் 30 படுக்கை வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். இதற்கு நன்கு வளர்ந்த தாய்வித்துப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். தாய் வித்துப் புட்டியிலிருந்து படுக்கை வித்துத் தயாரிக்க இருவர் தேவை. இதையும் திசு வளர்ப்பறையில் தான் செய்ய வேண்டும். ஒரு ஆள் தாய்வித்துப் பை இடது கையில் எடுத்துக் கொண்டு வித்துப் பை மூடியுள்ள பஞ்சடைப்பானை வலது கை விரல்களுக்கிடையே பிடித்துத் திறந்தவுடன் வித்துப்பை வாய்ப் பகுதியைச் சூடாக்க வேண்டும். நுனிப்பகுதி வளைந்த இரும்புக் கம்பி ஒன்றைச் சூடாக்கித் தொற்று நீக்கம் செய்த பிறகு அக்கம்பியால் தாய்வித்துப் புட்டியிலுள்ள வித்துக்களைக் கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள பையை இடது கையில் எடுத்து வலது கையால் பையை மூடியு்ளள பஞ்சடைப்பானை நீக்கி வாய்ப்பகுதியைச் சூடாக்கிய பிறகு எரியும் புன்சன் பர்னருக்கு அருகில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது தாய்வித்துப் பையை வைத்திருப்பவர் கிளறி வைத்துள்ள வித்தினை சுமார் 10 கிராம் அளவுக்குப் புதிதாகத் தயாரித்து வைத்துள்ள வித்துப்பை வாய்க்குள் சாய்த்துக் கொட்டிவிட வேண்டும். உடனடியாக படுக்கை வித்துப் புட்டியைச் சூடாக்கி அதே பஞ்சினால் மூடி வைக்க வேண்டும். வேறு நுண்ணுயிரிகள் உட்செல்லாமல் இருக்க அனைத்துச் செயல்முறைகளையும் எரியும் புன்சன் பர்னருக்கு அருகிலேயே செய்ய வேண்டும்.

காளான் பூசணமிட்ட படுக்கை வித்துப்பைகளை வேறொரு அறைக்குள் வைத்துவிட வேண்டும். சுமார் 15 நாட்களில் வித்துப்பை முழுவதும் காளான் பூசணம் நன்கு பரவியிருப்பதைக் காணலாம். பின் 18 முதல் 20 நாட்கள் வளர்ந்த வித்துப்பை காளான் படுக்கை தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். வித்துப்பைகள் தயாரித்திலிருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. பாலபுரபைலீன் பைகள் அதிக வெப்பத்தைக் தாங்கக் கூடியவை. தொற்று நீக்கம் செய்யும்போது உருகிவிடாது பயன்படுத்தலாம். வித்துப் பைக்கு வாய்ப் பகுதியாக சுமார் 3 செ.மீ. விட்டமும் 2 செ.மீ. உயரமும் உள்ள பி.வி.சி. பைப்பில் செய்த வளையங்களையும் பயன்படுத்தலாம். பாலிபுரபைலின் பையின் வாய் பகுதியைக் குவித்து வளையத்தினுள்ள செலுத்தி சுமார் 3 செ.மீட்டர் உயரத்திற்கு பையை வெளியே இழுத்து வாய்ப்பகுதியை விரித்துவிட்டு வளையத்தையொட்டி வெளிப்புறமாகக் கீழ்நோக்கி மடித்து விட வேண்டும். இப்போது பையின் அமைப்பு ஒரு கண்ணாடிப் புட்டி போன்றிருக்கும்.
காளான் வித்து உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
  • வித்து தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படும் சோளம் தரமானதாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்காதவாறும் இருத்தல் வேண்டும்.
  • சோளம் அரை வேக்காடாக மட்டுமே வேக வைக்க வேண்டும். அதிக நேரம் வேக வைத்தல் குழைந்து போவதோடு இதில் தயாரித்த வித்துக்கள் துர் நாற்றம் வீசும்.
  • வித்துப்பைகளின் வாய் பகுதியை அடைக்க ஈரம் உறிஞ்சா பஞ்சுவை காற்று புகா வண்ணம் அடைக்க வேண்டும்.
  • தொற்று நீக்கம் செய்யும் போது வெப்பமூட்டியின் இராத்தம் அழுத்தம் மற்றும் புட்டிகளை உள்ளே வைத்திருக்கும் நேரம் ஆகியவைகளை சரியான அளவில் கணக்கிட்டு செயல்படுத்தபட வேண்டும்.
  • தொற்று நீக்கிய ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பூசணத்தை உட்செலுத்தி வித்த உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஒரு தாய் வித்திலிருந்து இரண்டு தலைமுறைக்கு மேல் வித்துப் பெருக்கம் மேற்கொள்ளப்படக் கூடாது.
  • வித்துப்பைகளின் மேல் காளான் இரகம் மற்றும், தயாரித்த தேதி போன்றவைகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
  • வேற்றுப் பூசணம் தாக்கிய வித்துப்பைகள் மஞ்சள், பச்சை கருப்பு மற்றும் ஊதா நிறங்களுடன் காணப்படும். அவ்வித்துப் பைகளை உடனே அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். வித்துப்பையை பிரித்தவுடன் காளான் மணம் வீசப்பட வேண்டும். இதுவே நல்ல விதை என்பதைக் குறிக்கும். மாறாக புளித்த வாடை வீசும் வித்துக்களை அகற்றிவிட வேண்டும்.
  • வித்துக்களை தயாரித்து ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதிக நாள் பட்ட வித்துக்கள் மஞ்சள் நிறத்துடன் ஆடை படர்ந்து இருக்கும். இதனை உபயோகித்தால் மகசூல் குறையும்.
  • வித்து தயாரிக்கும் அறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் திரவத்தை 1:2 என்ற விகித்தில் கலந்து புகையூட்டம் ஏற்படுத்தினால் வித்துப்பைகளில் வேற்று பூசணம் படர்வதை தவிர்க்கலாம்.
தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை


 


ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு!


ரெடிமேட் ஆடைகள்!
முன்பெல்லாம்  இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள்.  ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு.  மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. 
ல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும்  நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  
சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும்  ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.  
மூலப் பொருட்கள்!
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!
இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.
முதலீடு!
இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.  
ஃபைனான்ஸ்!
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்!
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.
வேலையாட்கள்!
நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.  

தயாரிக்கும் முன்...
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!
பிளஸ்!
ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.  
மைனஸ்!
திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.
ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.
-பானுமதி அருணாசலம்
  படங்கள் : வெ. பாலாஜி
வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.
''நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.
இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.
லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.
இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!''.
  பா.விஜயசந்தர்

Thursday, December 26, 2013

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி..!


'வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!
தொடர்புக்கு,
சுப்ரமணியன்,
செல்போன்: 97913-79864.

Wednesday, December 18, 2013

உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்


தூத்துக்குடியில் மீன் உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல்விளக்கம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வளர்ப்பு மீன்களின் உணவு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் மீன் உணவு தரக்கண்காணிப்பு ஆய்வகம் அமைத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சியில் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது மற்றும் உணவு மேலாண்மை பற்றிய விளக்கவுரைகளும், செயல் முறை விளக்கமும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் கெண்டை மீன் வளர்ப்போர், அலங்கார மீன் வளர்ப்போர், இறால் வளர்ப்போர் மற்றும் மீன்களுக்கான உணவு தயாரிப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் 9443002467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுத ங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூடுதல் விவரங்கள் அறிய
பன்ணை சார்ந்த மீன் உணவு தயாரிப்பு குறித்த விவரங்களை அறிய “பேராசிரியர் மற்றும் தலைவர், கடல் சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461–2910336, 2340554, 94422 88850 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று பயிற்சி மைய தலைவர் சா.ஆதித்தன் தெரிவித்தார்.
Thanks:http://www.dailythanthi.com/Tuticorin,%20instead%20of%20marine%20aquatic%2

Sunday, December 15, 2013

வெற்றி தந்த வெயிலுக்கு நன்றி


வேலூரின் சிறப்புகளில் ஒன்று என்னத் தெரியுமா? வருடத்தின் ஒன்பது மாதங்களும் வெயில் வாட்டியெடுக்கும். அந்த வெயிலையே தன் தொழிலுக்கான அச்சாணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த லாவண்யா பாலாஜி. தாகத்துக்குத் தண்ணீரைவிட குளிர்பானங்களையே இன்று பலர் நாடுகிறார்கள். மக்களின் அந்த மனநிலைதான் இவரைக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது. இவர்களது நிறுவனத் தயாரிப்பில் உருவான குளிர்பானங்கள், இன்று நகரின் முக்கியக் கடைகளில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கல்லூரி பேராசிரியராக இருந்தவர், தொழில்முனைவோராக மாறியதற்குப் பின்னால் குடும்பமும், தன்முனைப்பும் இருப்பதாகச் சொல்கிறார்.
“திருமணத்துக்குப் பிறகு நான் சென்னையில்தான் இருந்தேன். அப்போது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் கணவருக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவருக்கு வேலூருக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். பொதுவாக வேலூரின் வெயிலைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். எங்களுக்கு என்னவோ அதிகமான வெயிலும், குளிரும் பிடித்துவிட்டது. அதனால் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினோம். இங்கேயும் கல்லூரி பணி தொடர்ந்தது. என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது பணியைத் தொடரமுடியாமல் போனது” என்று முன்கதை சுருக்கம் சொல்கிறார் லாவண்யா.
கைகொடுத்த தொழில் மையம்
குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தாலும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல். அதற்காக வீட்டை மட்டும் நிர்வகிப்பதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை லாவண்யா. தன் திறமையை நிரூபிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன் நினைப்பைப் பலரிடமும் கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அப்போது லாவண்யாவின் மாமனார்தான், தொழில்தொடங்கச் சொல்லி உற்சாகம் அளித்திருக்கிறார்.
“என் மாமனார் வீட்டில், சிறு அளவில் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தார்கள். அதையே நான் பெரிய அளவில் செய்யலாம் என்று நினைத்தேன். என் கணவரும், மாமனாரும் எனக்குத் துணை நிற்க, தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க லட்சக் கணக்கில் பணம் வேண்டுமே. என்னச் செய்வது என்று யோசித்தபோது, மாவட்டத் தொழில் மையம் எங்களுக்குக் கைகொடுத்து உதவியது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகியபோது, பட்டதாரிகளுக்கு என்னவிதமான கடனுதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். முதல்கட்டமாக மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நான் கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்புதல் வாங்கினேன். அதன் பிறகு ஒரு மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் பயிற்சி, என் ஆர்வத்துக்கு உரமிட்டது” என்கிறார் லாவண்யா.
லாவண்யா, படம் : வி.எம்.மணிநாதன்
வழிகாட்டிய தொழில்முனைவோர்கள்
ஒரு மாதம் நடந்த பயிற்சியில் பலதுறை நிபுணர்களும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். தொழில்தொடங்கி வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடலும் நடந்திருக்கிறது. அதுதான், ‘என்னால் முடியுமா?’ என்ற லாவண்யாவின் தயக்கத்தைத் தகர்த்திருக்கிறது. கடனுதவி கிடைப்பதற்கு முன்னரே தொழிற்சாலை தொடங்குவதற்கான இடம், பணியாளர்கள், விற்பனை என்று சகலத்தையும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் லாவண்யா. குளிர்பானத் தயாரிப்பு ஃபார்முலாக்களில் இவருடைய மாமனாரின் பங்கு அதிகம் இருந்ததாகச் சொல்கிறார்.
வரவேற்ற வாடிக்கையாளர்கள்
“உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனக் குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பு செல்லுபடியாக வேண்டும் என்றால் அது மிகப்பெரும் சவால்தானே? தரத்திலும் சுவையிலும் புதுமையைக் கூட்டினால்தான் அது சாத்தியமாகும் என்று புரிந்தது. குளிர்பானங்கள் இயற்கை மணத்துடனும் சுவையுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நம் மண்ணின் பானமான சோடா கலர் சுவையுடன் அது பொருந்திப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
உண்ணும் பொருள் என்பதாலேயே எதையுமே இரு மடங்கு பரிசோதனைக்குப் பிறகுதான் செயல்படுத்தினோம். என் மாமனாரின் தொழில்நுட்ப அறிவுடன் என் கணவரின் மார்க்கெட்டிங் அறிவும் எனக்குப் பக்கப் பலமாக இருந்தன” என்று சொல்கிற லாவண்யா, நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள, அவருடைய கணவர் பாலாஜி ராஜா, வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் கடைகளை அணுகுவதே சிரமமாக இருந்தது என்கிறார் லாவண்யா.
“புதுத் தயாரிப்பு என்பதாலேயே பல கடைகளில் எங்கள் குளிர்பானங்களை வாங்க யோசித்தார்கள். ஆனால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்கள், அடுத்தமுறையும் கேட்கத் தொடங்கியதால் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வந்தது. இன்று ஆற்காடு முதல் குடியாத்தம் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கடைகளுக்கு எங்கள் குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வேலூர் நகரின் முக்கியக் கடையில்தான் நான் மாதா மாதம் மளிகைப்பொருள்கள் வாங்குவேன். அங்கே வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்தியில் எங்கள் தயாரிப்பைப் பலர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கும். இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைக்கிறோம், நிச்சயம் வெற்றியும் பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் லாவண்யா.

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா


என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.
“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!

பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்!


புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல்.
அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே இங்கு பெண்கள்தான் புரோட்டா மாஸ்டர்கள். பெண்களுக்கே உரிய கைபக்குவத்தில் புரோட்டா வீசுவதால், அதை சாப்பிடுவதற்கென்றெ பக்கத்து கிராமங்களில் இருந்து தினமும் பஸ் ஏறி வந்துவிட்டு போகிறார்கள் பலர்.
இந்த ஓட்டலில் இரண்டாம் தலைமுறை புரோட்டா மாஸ்டராக இருப்பவர் செந்தூர்வள்ளி டீச்சர். மாஸ்டர் சரி, அதென்ன டீச்சர்? படித்து வாங்கிய பட்டம்தான். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது உள்ளூர் பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் செந்தூர்வள்ளி, வெட்கப்படாமல் தனது பாரம்பரியத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார்.
‘‘சின்ன வயசுல, அம்மா புரோட்டா வீசுறத பாத்துருக்கோம். நாங்க யாரும் கையில மாவை எடுத்துடக் கூடாதுங்கறது அம்மாவோட பயம். ஆனா, குடும்பச் சூழல் எங்களையும் புரோட்டா வீச வைச்சிருச்சு. இன்னைக்கி நாங்க தலை நிமிர்ந்து நிக்கிறோம்னா அதுக்குக் காரணம் நாங்க பழகி வைச்சிருக்கிற இந்த புரோட்டா மாஸ்டர் தொழில்தான்’’ என்கிறார் 13 வயதில் இருந்து புரோட்டா வீசிக்கொண்டிருக்கும் செந்தூர்வள்ளி டீச்சர். அவரே தொடர்கிறார்..
பொம்பளப் புள்ளைங்க இந்த வேலையச் செய்யக் கூடாதுங்கறது அப்பா, அம்மாவோட எண்ணம். ஆனா, முடியாத வயசுல அம்மா பட்ட கஷ்டத்தைப் பார்த்துட்டு நாங்களே களத்துல இறங்கிட்டோம். கடைக்கு வெளியில புரோட்டா வீசுனாத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. அதனால கடைக்குள்ளேயே புரோட்டா வீசுனோம். கல்யாணம் ஆன பின்னாடித்தான் கடை முகப்புலேயே புரோட்டா வீச ஆரம்பிச்சோம்.
நாங்க அக்கா தங்கச்சிக நாலு பேரு. எங்களுக்கு கல்யாணம் முடிச்சது, எங்க அத்தை பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிச்சது, தம்பியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புனது எல்லாமே நாங்க புரோட்டா வீசி சம்பாதிச்ச பணத்செந்தூர்வள்ளிதாலதான் சாதிக்க முடிஞ்சுது.

இப்போ தற்காலிகமா உள்ளூர் ஸ்கூல்ல வேலை குடுத்துருக்காங்க. காலையில புரோட்டோ வீசிக் குடுத்துட்டு ஸ்கூலுக்குப் போயிருவேன். அதை எல்லாம் கல்லுல போட்டு எடுத்து வியாபாரம் பாத்துருவாங்க அக்கா. சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் கையில மாவை எடுத்துருவேன். எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா அக்காவும் புரோட்டா வீசுவாங்க.
எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க இந்த வேலையை செஞ்சுட்டே இருப்போம்.. உறுதியாய் சொன்ன செந்தூர்வள்ளியிடம், ‘‘டீச்சருக்கு படிச்சுட்டு ஓட்டல்ல புரோட்டா வீசுறது கஷ்டமா தெரியலையா?’’ என்று கேட்டால் சிரிக்கிறார்.
‘‘இதுல கஷ்டப்பட என்ன இருக்கு? பொய் சொல்லக் கூடாது, களவாடக் கூடாது. நேர்மையா எந்தத் தொழிலைச் செய்தாலும் அது தெய்வத்துக்கு சமம். படிச்சுட்டு புரோட்டா சுத்தலாமான்னு அன்னைக்கி நான் யோசிச்சிருந்தா, இன்னைக்கி எங்க குடும்பம் கஷ்டப்படாம கஞ்சி குடிச்சிருக்க முடியாதே’’.. செந்தூர்வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மைதாவை எடுத்து சின்னதாய் ஒரு புரோட்டா வீசிக் கொண்டிருந்தாள் அவரது ஏழு வயது மகள் தர்ஷினி !

படித்ததில் பிடித்தது


காதல் கணவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்.
நடுத்தரக் குடும்பம். நல்ல கல்வி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஐ.டி. நிறுவனத்திலேயே பணியாற்றும் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு. காதலித்த பெண்ணுடன் பெற்றோர் சம்மதத்தில் திருமணம். இப்படியாய் மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்தார் ஆர். ஹரிகுமார் (28).
ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இடி விழுந்ததுபோல அதிர்ச்சி தரும் செய்தி.
harikaran_saranyaஉடல் நலம் சற்று பாதித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறினார்.

சிறுநீரகம் கிடைப்பது கடினம்
“அவ்வப்போது தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும். பணிச் சுமையே காரணம் என நினைத்து அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் எனக்குள் இருந்த ரத்த அழுத்தப் பிரச்னை எனது சிறுநீரகங்களின் செயல்பாட்டை முடக்கி விட்டது என்பதை பிறகுதான் உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் ஏராளமான மருத்துவர்கள், பலவித சிகிச்சைகள் என அலைந்தேன். எவ்வித முன்னேற்றம் இல்லை. இறுதியில் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில் சேபியன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனை சந்தித்த பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. இறுதியில் எனது மனைவி சரண்யாவே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்” என்றார் ஹரிகுமார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை 29-ம் தேதிமுதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
“நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது” என தனது அனுபவத்தின் மூலம் கூறுகிறார் ஹரிகுமார் மனைவி சரண்யா (25).
உறுப்பு தான விழிப்புணர்வு குறைவு
“இன்று சிறுநீரக நோயாளிகள் சிறுநீரகங்களைத் தானமாகப் பெற இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் தானமாகத் தர வேண்டும். இல்லையெனில் விபத்துகளின் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டோரின் சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட வேண்டும். எனினும் மூளைச்சாவு ஏற்பட்டோரின் உறுப்புகளை தானம் அளிப்பதற்கான விழிப்புணர்வு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தானமாக அளிப்பதன் மூலம் விரைவான சிகிச்சை கிடைப்பதோடு விரைவில் நலம் பெறவும் முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் சிறுநீரகம் தானம் அளிப்பதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனது ஒரு சிறுநீரகத்தை எனது கணவருக்கு தானம் அளித்த நிலையில், மற்றவர்களைப் போல நானும் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன்” என்கிறார் சரண்யா.
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கு கூற விரும்புவது என்ன என ஹரிகுமாரிடம் கேட்டோம். “நல்ல ஆலோசனை தரும் மருத்துவரை விரைவாக அடையாளம் காண வேண்டும். எந்த வகையில் சிறுநீரகத்தை தானமாகப் பெறப் போகிறோம் என்பதையும் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் சிகிச்சைக்கு தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மால் விரைவில் சிகிச்சை பெற முடியும். இது தொடர்பாக யாரேனும் என்னுடைய 97911 98017 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் ஹரிகுமார்.

பெண்களுக்கான வங்கி


கடந்த மாதம் ஏழு மாநிலங்களில் பெண்களுக்கான பிரத்யேக வங்கிகள் தொடங்கப்பட்டன. மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் பெண்கள் வங்கிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி மும்பையில் நவம்பர் 19ம் தேதியன்று பெண்களுக்கான வங்கியை பிரதமர் திறந்து வைத்தார். அதே நாளன்று சென்னை, அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு கிளைகளும் தொடங்கப்பட்டன.
பெண்களுக்குத் தனியாக வங்கி எதற்கு என்ற கேள்வி எழுவது இயற்கைதான். அதில் பெண்களுக்கென்று பிற வங்கிகள் அளிக்காத சிறப்புச் சேவைகள் இருக்கின்றனவா என்னும் கேள்வியுடன் சென்னை அண்ணா சாலையில் திறக்கப்பட்ட ‘பாரதிய மஹிளா பேங்க்’ஐ அணுகியபோது பெண்களுக்கான பிரத்யேகமாக வங்கித் திட்டங்கள், கடன்கள் கொடுப்பது, உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது தெரியவந்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு தொழில்களுக்கும், பெண்களின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கும் துணை புரியும் இந்த வங்கிகளில் குழந்தைகள் காப்பகம் நடத்தவும் உணவு தயாரிப்பு வேலை (catering) செய்யவும் கடன்கள் தரப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவும் கண்மலை சுய உதவிக் குழுவும் சென்னை கிளையில் முதல் நாள் கடன் பெற்றன. ராயபுரத்தில் இருக்கும் இந்த இரண்டு மகளிர் குழுக்களிலும் தையல் தொழில் செய்யும் பெண்களே உறுப்பினர்கள். கண்மலை குழுவில் 13 பெண்களும் கதம்பச் சுடர் குழுவில் 15 பெண்களும் உள்ளனர்.
கண்மலை சுய உதவிக் குழு உறுப்பினர் சத்யா, பி.காம் படித்திருக்கிறார். முன்பு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் பிரிவில் வேலை பார்த்துவந்தார். பிறகு ஏற்றுமதி நிறுவனத்தில் நைட்டிகள் தைத்து வந்தார். வருமானம் போதாததால் வேலையை விட்டு வீட்டிலேயே தைக்க ஆரம்பித்தார் சத்யா. வீட்டு உரிமையாளர் தையல் மெஷின் சத்தத்தைப் பொறுத்துக்கொள்ளாததால் கண்மலை குழுவில் மற்றொரு உறுப்பினரான தனது சித்தி புஷ்பராணியின் வீட்டில் வைத்து த் தைத்துவருகிறார். அப்பாவுக்குக் கல்லீரலில் அறுவை சிகிச்சை, அண்ணனுக்கு ரூ.5000 மாத சம்பளம், அம்மா இல்லத்தரசி. இந்நிலையில் சத்யா ஏதாவது தொழில் செய்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில்தான் தைக்க ஆரம்பித்தார்.
கடன் என்னும் வரம்
கண்மலை குழு ஆரம்பித்து ஏழு மாதங்களிலேயே பெண்கள் வங்கியிலிருந்து கடன் கிடைத்திருக்கிறது. இதுதான் அவர்கள் வாங்கும் முதல் கடன் என்பதால் குழு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். “இந்தக் கடன் அறிவித்திருப்பது வானத்தை எட்டியது போல் இருக்கிறது. கடனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ரூ.1,30,000-ஐக் கொண்டு தையல் கடை ஆரம்பிக்கலாம் என்று ஆசைப்படுகிறோம்” என்கிறார் குழு உறுப்பினரும் சத்யாவின் சித்தியுமான புஷ்பராணி .

“சத்யா கூறியதால் பொழுது போக்காகத்தான் நான் தையல் கற்றுக்கொண்டேன். ஆனால் அதுதான் இப்போது எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறது” என்கிறார் புஷ்பராணி.

மீனவர் வாழ்வில்...
கதம்பச் சுடர் சுய உதவிக் குழுவில் நான்கு வருடமாக உறுப்பினராக இருப்பவர் ஷகீலா. மீனவராக இருந்த அவரது கணவர் திருமணமாகி ஆறு வருடங்களிலேயே விபத்தில் இறந்துவிட்டார். மூன்று வயது ஆண் குழந்தையுடன் வாழ்க்கையைத் தனியாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்.
அடுப்பில் இருக்கும் பால் பொங்குகிறதா இல்லையா என்று கவனித்துக் கொண்டே தனது தையல் மெஷினை ஓட்ட ஆரம்பிக்கிறார் ஷகீலா. தனது கஷ்டங்கள் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பேசத் தொடங்குகிறார். “அவர் இறந்த பின் நான் மிகவும் கலங்கிவிட்டேன். வாடகைக்கு தையல் மெஷின் வாங்கி வீட்டில் இருந்தே தைக்க ஆரம்பித்தேன். இந்த தொழிலை நம்பிதான் என் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு. தெரிந்த பெண்கள் பதினைந்து பேர் கூடி இந்த குழுவை ஆரம்பித்தோம்.” என்கிறார்.
எத்திராஜ் கல்லூரியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸின் பெண்களுக்கான தொழில்முனைவோர் வங்கியில் கடன் வாங்கி இதுவரை ஷகீலாவையும் சேர்த்து 10 பேர் சொந்தமாக மெஷின் வாங்கியுள்ளனர். பெண்கள் வங்கி கதம்பச் சுடருக்கு ரூ.3 லட்சம் கடன் தருவதாக அறிவித்துள்ளது.
“நாங்கள் முதலில் அலகாபாத் வங்கியில் கணக்கு வைத்திருந்தோம். எங்களுக்கு கடன் கொடுத்த மேலாளர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். அதன் பிறகு வந்தவர் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. எனவே ஐ.ஒ.பி. பெண்கள் வங்கிக்கு மாறினோம். அங்கு எல்லோரும் எங்களது நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். முகம் தெரியாத ஒருவரிடம் பேசவே தயங்கும் எனக்கு பெண்கள் வங்கி என்பதால் சுலபமாக பேசிப் பழக முடிந்தது. புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பெண்கள் வங்கியிலும் இதே வரவேற்பு இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறோம்” என்கிறார் ஷகீலா தன்னம்பிக்கையுடன்.

பாட்டியான பிறகும் படைப்பாளியாகலாம்


கடமைகளை எல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு அப்பாடா என்று ஓய்ந்து உட்காருகிற வயதில் கலைகளின் பின்னால் செல்கிறார் சேலம், அழகாபுரம் சிவாய நகரைச் சேர்ந்த கெஜலஷ்மி. பறந்துகொண்டே இருக்கிற பட்டாம்பூச்சி போல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கிறார். சோர்ந்து உட்கார்ந்துவிட்டால் உடல், மனம் இரண்டுமே துருப்பிடித்துப் போய்விடும் என்று சொல்கிற இவர், கலைகளின் மூலம் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறார்.

“நானும் உங்களில் ஒருத்திதான். என் கணவருக்குச் சுயதொழில். அதனால் திருமணமான புதிதில் அவரது வியாபாரம் தொடர்பான கணக்கு வழக்குகளில் உதவுவேன். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். வீடு, வேலை, குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறக்கும். இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொடுத்து, பேரன், பேத்திகளையும் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆசுவாசம், எனக்குள் வேரூன்றி இருந்த கலையார்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தது. என் அக்கா மகள், ஃபேஷன் நகைகள் செய்வதில் வல்லவள். அவளைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அடிப்படை செய்முறையுடன் என் கைத்திறனையும் சேர்த்துப் புதுப்புது மாடல்களை நானே உருவாக்கினேன். என் வீட்டில் பெண்கள் அதிகம் என்பதால் நான் எத்தனை வகையான நகைகள் செய்தாலும் உடனே அவற்றுக்குக் கழுத்தோ, காதோ கிடைத்துவிடும்” என்று புன்னகையுடன் பேசுகிற கெஜலஷ்மி, பயன்படாத பொருட்களைக்கூடப் பளபளக்கும் கலைப்பொருள்களாக மாற்றிவிடுகிறார்.
கல்லையும் சிற்பமாக்கலாம்
எண்ணெய் கவர்கள், பால் கவர்களை முக்கோணமாக வெட்டி, சுருட்டி இவர் தொடுக்கும் மாலைகள் கொள்ளை அழகு. இளநீர் குடித்துவிட்டு நாம் ஸ்ட்ராவைத் தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் கெஜலஷ்மியோ அவற்றை வைத்து அலங்காரக் குடைகளை உருவாக்கி விடுகிறார். ஆம்லெட் போட்டுவிட்டு நாம் தூக்கியெறியும் முட்டை ஓடுகளில் கண்கவர் ஓவியங்கள் தீட்டுகிறார். அச்சுக் கலையையும் ஒரு கை பார்க்கிறார். புடவைகள், குழந்தைகளின் ஆடைகளில் விதவிதமான அச்சுகளைப் பதிக்கிறார். தையல் எந்திரத்தை நம்பாமல், கைகளிலேயே விதவிதமான எம்ப்ராய்டரி வடிவங்களைச் செய்கிறார். முகப்புவைத்த முத்துச்சரமும், பதக்கம் பதித்த சங்கிலியும் இவரது சிறப்புத் தயாரிப்புகள்.
“நான் இவ்வளவு பொருட்களைச் செய்தும் எதையும் விற்பனை செய்ததில்லை. என் மனத் திருப்திக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்குமே இவை போதுமானதாக இருக்கின்றன. ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்துக் கடைகளில் வாங்குவதைவிட என் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு என் கையால் செய்த பொருட்களைக் கொடுக்கும்போது தோன்றுகிற மகிழ்ச்சிதான் என் வருமானம்!” என்று சொல்லும் கெஜலஷ்மி, இதுவரை யாரிடமும் இந்தக் கலைகளைப் பயின்றதில்லை.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites