சென்னை, கே.கே.நகரில் உள்ள பாக்யலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பவர்கள் அவர் வீட்டுச் செல்லப் பிராணிகள். குட்டியும், பெரிசுமாக வீடு கொள்ளாத செல்ல நாய்களின் கூட்டம்... நாய்க்குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிற வேலையை அத்தனை அன்பாகச் செய்கிறார் பாக்யலட்சுமி!
‘‘என் பொண்ணுக்கு பக் இன நாய்க்குட்டி ஒண்ணு கிஃப்ட்டா வந்தது. அதை ஆசையா வளர்த்திட்டிருந்தோம். அதை வளர்க்கிற அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்ல ஒரு நபரா நேசிச்சோம். நாய்கள் மேல எங்க பிரியம் அதிகமானதால, செயின்ட் பெர்னார்டு இன நாய்க்குட்டி ஒண்ணு வாங்கினோம். முதல்ல வாங்கின பக் நாய் 6 குட்டிகள் போட்டது. தெரிஞ்சவங்க எல்லாரும் எங்களுக்கு ஒரு குட்டி கொடுங்கனு கேட்க ஆரம்பிச்சாங்க. உடனடியா 3 குட்டிகள் வித்துப் போச்சு. நாய்க்குட்டிகளை வளர்க்கறதுங்கிறது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அனுபவம்.
மனுஷங்களைப் போலவே பார்த்துக்கணும். பெண் குட்டியா இருந்தா அதுக்கும் மாதவிடாய் வரும். ரெண்டாவது முறை மாதவிடாய் வந்ததும் அதை இனப்பெருக்கத்துக்கு விடணும். இனப்பெருக்கத்துக்கு விடப்படற ஆண் நாயோட சொந்தக்காரங்களுக்கு ஒரு குட்டியோ அல்லது அதுக்கான பணத்தையோ கொடுத்துடணும். நாயோட கர்ப்ப காலம் 2 மாசம். குட்டிகள் போட்டதும் 50 நாட்கள் கழிச்சுதான் விற்கணும். ஒவ்வொரு இன நாய்களுக்கும் என்ன சாப்பாடு கொடுக்கணும், எப்படிப் பார்த்துக்கணும்கிற தகவல்களை அவசியம் தெரிஞ்சு வச்சிருக்கணும்.
நாய் குட்டி போட்டதும், அதுங்களோட பிறந்த தேதி, அம்மா பேர் எல்லாம் குறிச்சு வைக்கணும். விற்கற போது அந்தத் தகவல்களைப் பார்த்துதான் வாங்குவாங்க. செல்லப் பிராணிகள் மேல அன்பு இருக்கிறவங்களுக்கு இந்த பிசினஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்’’ என்கிற பாக்யலட்சுமி, 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்க நம்பிக்கை அளிக்கிறார். ‘‘நாய்க்குட்டி வாங்கற செலவு, அதுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவச் செலவுனு எல்லாம் இதுல அடக்கம். யாருக்கு என்ன மாதிரித் தேவைனு பார்த்து அதுக்கேத்த இனமா வளர்க்கலாம்.
சிலர் ஆசைக்காக வளர்க்க விரும்புவாங்க. அவங்களுக்கு பக், பொமரேனியன் மாதிரி அமைதியான நாய்க்குட்டிகள் பிடிக்கும். ராட்வீலர், லெசப்சோ, செயின்ட் பெர்னார்டுனு நிறைய இனங்கள் இருக்கு. எந்த இனமா இருந்தாலும் 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற பாக்யலட்சுமியிடம் நாய் வளர்ப்பு, அவற்றுக்கான உணவுகள், பராமரிப்பு, இனப்பெருக்கம், விற்பனை என எல்லாவற்றுக்கும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். கட்டணம் 300 ரூபாய். (98408 44181)
0 comments:
Post a Comment