அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு தேவை மிக அதிகம். இதை மனதில் வைத்து, மானாவாரி மற்றும் இறவையில் தொடர்ந்து மகசூல் கிடைக்கும் வகையில், நிலத்தை இரண்டாகப் பிரித்து பாசிப்பயறு சாகுபடியில் தொடர் வருமானம் பெற்று வருகிறார், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.
‘‘நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம்தான். இந்தப்பகுதி முழுக்கவே வானம் பாத்த பூமிதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்லை. அறிவொளி இயக்கத்துல மூணு வருஷம் வீதி நாடகக்குழுப் பயிற்சியாளரா இருந்தேன். அடுத்து, மாநில வயது வந்தோர் கல்வித் திட்டத்துல ஊக்குநரா வேலை பார்த்தேன். 2001-ம் வருஷம் சமூகப்பணிகளையெல்லாம் விட்டுட்டு, முழுமையா விவசாயத்துல இறங்கினேன். அக்கம்பக்கத்து விவசாயிகளைப் பார்த்து நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணினேன். ஆனா, ஒண்ணும் விளைஞ்சபாடில்லை.
அப்போதான், ஒரு நண்பர், ‘நாடகத்துல ராகம் போட்டு பாட்டு பாடுற மாதிரி கிடையாது, விவசாயம். முதல்ல ரசாயன உரம் போடுறதை நிறுத்தி, இயற்கை முறையில விவசாயம் செய்’னு ஆலோசனை சொன்னார். அவரே, கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்துல நடந்த பயிற்சிக்கும் அழைச்சிக்கிட்டுப் போனார். அங்க இயற்கை வேளாண்மை பத்தி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ஒன்பது வருஷமா முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன்” என்று முன்கதை சொன்ன பாக்கியராஜ் தொடர்ந்தார்.
பட்டத்துக்கேற்ற பயிர்!
“மழை கிடைக்கலைனு வருத்தப்பட்டுட்டு இருக்காம, மழை கிடைக்கிற சமயத்துல அந்தப் பட்டத்துக்குரிய பயிரை விதைச்சா நல்ல மகசூல் எடுத்திட முடியும். அதாவது ஆடி மாசம் மழை கிடைக்காம, புரட்டாசி மாசம் மழை கிடைச்சா... புரட்டாசிப் பட்டத்துக்கான பயிரைத்தான் விதைக்கணும். அந்த வகையில போன அஞ்சு வருஷமா பாசிப்பயறு எனக்கு நல்லா ஒத்தாசை செய்யுது. அதை, மானாவாரி, இறவைனு ரெண்டுலயும் சாகுபடி செய்யுறேன். இப்போ, இறவை சாகுபடியை முடிச்சுட்டு, புரட்டாசிப் பட்டத்துல மானாவாரியா பாசிப்பயறைப் போடுறதுக்கு நிலத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கேன்” என்ற பாக்கியராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் லாபம்!
‘‘மானாவாரியா சாகுபடி செய்தா சராசரியா ஏக்கருக்கு 480 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இறவையில ஏக்கருக்கு சராசரியா 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் கணக்குல மூணு ஏக்கர்ல ஒரு முறை மானாவாரி விவசாயம், ஒரு முறை இறவை விவசாயம்னு வருஷத்துக்கு ரெண்டு போகம்னு வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு சராசரியா 3 ஆயிரத்து 200 கிலோ (32 குவிண்டால்) அளவுக்கு மகசூல் கிடைக்குது. நான் விதையாத்தான் விற்பனை செய்றேன். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துல ஒரு கிலோ பாசிப்பயறு விதைக்கு 107 ரூபாய் கொடுக்கிறாங்க. அந்தக் கணக்குல பார்த்தா, 3 லட்சத்து 42 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.
விதைக்காக இல்லாம கடையில விற்பனை செய்தா, குவிண்டால் 7 ஆயிரம் ரூபாய்னு (கிலோ 70 ரூபாய்) எடுத்துக்குவாங்க. இதன் மூலமா 2 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய்தான் கொடுப்பாங்க. ஆனா, விதைக்காக விற்பனை செய்யுறப்ப ஒரு லட்ச ரூபாய் கூடுதலாவே லாபம் கிடைக்கும்’’ என்று தெம்பாகச் சொன்னார் பாக்கியராஜ்!
தொடர்புக்கு,
பாக்கியராஜ்,
செல்போன்: 96269-74894
பாக்கியராஜ்,
செல்போன்: 96269-74894
விளைச்சலுக்கு விதைநேர்த்தி!
சோறு வடித்த கஞ்சி ஒரு லிட்டரில் 20 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, 20 கிராம் ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து அதில், 6 கிலோ பாசிப்பயறு விதைகளைப் போட்டு கிளறி, ஓலைப்பாய் அல்லது சணல் சாக்கில் (பிளாஸ்டிக் தாள் தவிர்க்கவும்) 2 மணி நேரம் உலர்த்தி விதைத்தால், வளர்ச்சி நன்றாக இருக்கும். பூச்சி, நோய் அதிகமாகத் தாக்காது.
ஊடுபயிராக அவுரி !
பாசிப்பயறு விதைத்த 30-ம் நாள், இரண்டாவது முறை களை எடுப்பதற்கு முன்பாக... ஏக்கருக்கு 3 கிலோ அளவில் அவுரி விதையைத் தூவ வேண்டும். பிறகு, களை எடுத்தால் அவுரி விதைகள் நன்றாக மண்ணில் புதைந்து விடும். 82-ம் நாளில், பாசிப்பயறில் மூன்றாவது பறிப்பு முடிந்ததும் செடிகளை அறுக்காமல், அப்படியே காய விட்டுவிட வேண்டும். 10 நாட்களில் பாசிப்பயறுச் செடிகள் காய்ந்ததும், அவுரி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
தை-மாசி மாதத்தில் அவுரியை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 2 குவிண்டால் அவுரி நெத்து கிடைக்கும். ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்த பாக்கியராஜ், ‘‘இந்த வருமானம் சாகுபடிச் செலவுக்கு கைக்கொடுக்குது” என்றார், உற்சாகமாக.
புழுத்தாக்குதலைத் தடுக்க வரப்பு!
பாக்கியராஜ் சொல்லும் அனுபவ ஆலோசனைகள் பாசிப்பயறு விதைக்கும்போதே ஆமணக்கு, சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையும் கலந்தோ வரப்பைச் சுற்றிலும் விதைக்க வேண்டும். பயிரைத்தாக்கும் பூச்சிகள் இந்தப் பயிர்களிலேயே அமர்ந்துகொள்ளும். இதனால், பாசிப்பயறைப் பூச்சிகள் தாக்காது.
நம்மிடமே விதைவங்கி!
விதைகளைக் கடைகளில் வாங்குவதை விட நமது பயிரில் இருந்தே விதைகளை எடுத்து வைப்பது நல்லது. இரண்டாவது முறை பறிக்கும் காய்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
மூன்று முறை அறுவடை செய்தால், கூடுதல் மகசூல்!
பாக்கியராஜ் சொல்லிக் கொடுக்கும் பாசிப்பயறு சாகுபடிப் பாடம் இங்கே...
மானாவாரிக்கு புரட்டாசிப் பட்டம்!
‘‘மானாவாரி சாகுபடிக்கு புரட்டாசிப் பட்டம் ஏற்றது. சித்திரை மாதம் சட்டிக் கலப்பையால் கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். வைகாசி மாதம் செம்மறி ஆட்டுக்கிடை போடவேண்டும் (ஏக்கருக்கு 500 ஆடுகளைக் கொண்டு 3 நாட்கள் கிடை போடவேண்டும்). அடுத்த மூன்று நாட்களுக்குள் கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். ஆனி மாதத்தில் 2 டிராக்டர் குப்பையை (தொழுவுரம்) நிலத்தில் பரப்பி, கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.
எடுப்பு உழவு அவசியம்!
ஆடி மாதத்தில் ஒரு மழை கிடைத்ததும், கொக்கிக் கலப்பையால் ‘எடுப்பு உழவு’ செய்து நிலத்தைக் காயவிட வேண்டும். ஆடி மாத எடுப்பு உழவடிப்பது தடுப்பூசி போடுவது போன்றது. இதனால் மண்ணுக்குள் புதைந்துள்ள களை விதைகள் முளைக்கும். ஆவணி-புரட்டாசியில் மழை பெய்ததும் விதைப்பதற்கு முன் உழவடிக்கும்போது முளைத்துள்ள களைச்செடிகள் தூரோடு அகற்றப்பட்டு விடும். புரட்டாசியில் மழை பெய்ததும், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை உழுது விட்டு, விதைநேர்த்தி செய்த விதைகளைத் தூவி, அவற்றை மண் மூடுமாறு கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 3 முதல் 5 நாளுக்குள் முளைப்புத் தெரியும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். 30 முதல் 33 நாட்களுக்குள் இரண்டாவது முறை களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாளில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதால் பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
50-ம் நாளில் பிஞ்சு தெரியும். 55 முதல் 60-ம் நாட்களில் காய்கள் காய்த்து நிற்கும். 65-ம் நாளில் பறித்து விட வேண்டும். 70 நாளுக்கு மேல் போய்விடக் கூடாது. பொதுவாக, பல விவசாயிகள் 65-ம் நாளில் ஒரே அறுவடையாக, செடியைத் தூரோடு அறுத்து பிறகு நெத்தைப் பறித்து உடைத்து பயறைப் பிரித்தெடுப்பார்கள். ஆனால், செடியில் இருந்து நெத்தை மட்டும் பிடுங்கி எடுத்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். 65, 72 மற்றும் 80 ஆகிய நாட்களில் அறுவடை செய்யலாம். இப்படி மூன்று முறை காய்களைப் பறிக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும். மானாவாரியில் ஏக்கருக்கு சராசரியாக 480 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இறவையில் 600 கிலோ மகசூல்!
இறவையில் பாசிப்பயறை விதைக்க மாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தை மாதத்தில் சட்டிக்கலப்பை மூலம் ஓர் உழவு செய்து ஐந்து நாட்கள் ஆற விட்டு... 6-ம் நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு, 3 நாட்கள் கழித்து, ஓர் உழவு செய்ய வேண்டும். அதிலிருந்து 2 நாட்கள் கழித்து இரண்டு முறை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். மாசி மாதம் 8 அடி நீளம்,5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்து, வாய்க்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்த விதைகளை... ஒரு பாத்திக்கு, குறைந்தது 40 முதல் 50 செடிகள் வருமாறு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.
விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைப்புத் தெரியும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 20 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாட்களில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். குறுகிய கால பயிர் என்பதால், பஞ்சகவ்யாவைக் குறைந்த அளவுக்குக் கலந்து தெளித்தாலே போதுமானது. 60-ம் நாளுக்கு மேல் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரே பறிப்பாக பறிக்காமல் 65, 72, 80-ம் நாட்களில் பறித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். இறவையில், ஏக்கருக்கு சராசரியாக 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.