இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 18, 2014

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்..

ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது... தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன. தவிர, நாவலை தோட்டத்தில் வைத்தால், பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளும் இதை சாகுபடி செய்யாமல் தவிர்க்கிறார்கள்.
இந்நிலையில், சில விவசாயிகள் மட்டும் ஒட்டு ரக நாவலை சாகுபடி செய்து, நாவல் பழப் பிரியர்களின் ஆசையைத் தீர்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தாதன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்.
காய்த்துக் குலுங்கும் மாமரங்களும், தலைவணங்காமல் நின்ற சம்பங்கிச் செடிகளும், கருமை நிற கண்கள் போல கொத்துக்கொத்தாகப் பழங்கள் தொங்கும் நாவல் மரங்களும் சூழ்ந்திருந்த தோட்டத்தில், சின்னராஜை சந்தித்தோம்.
நாவல் பழங்களை நம்மிடம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தவர், ''எம்.எஸ்சி, பி.எட் முடிச்சும் வேலை கிடைக்கல. படிப்பு முடிச்சு ரெண்டு வருஷத்துல கல்யாணம் நடந்திடுச்சு.
குடும்பச் சொத்து பிரிச்சதுல, எனக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சுது. 'அதுல விவசாயம் பார்த்து பொழப்பை ஓட்டமுடியாது’னு எலக்ட்ரிக் டவர் போடுற வேலைக்காக உத்தரப்பிரதேச மாநிலத்துக்குப் போனேன். அங்க தொழிலைக் கத்துகிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து, தனியா டவர் அமைக்கிற வேலையை கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சிட்டிருக்கேன். அதுல வந்த வருமானத்துல 15 ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நிலம் வாங்குன புதுசுல தண்ணி பிரச்னை இல்லை. அதனால நெல், வாழைனு சாகுபடி செஞ்சேன். இடையில தண்ணிக்குத் தட்டுப்பாடு ஆனதும், பதினைஞ்சு போர்வெல் போட்டேன். ஆனா, ஒரு போர்லதான் தண்ணி கிடைச்சது. அதுல கிடைக்கிற தண்ணியை, ஒரு சிமெண்ட் தொட்டியில (100 அடி நீளம், 40 அடி அகலம், 10 அடி ஆழத் தொட்டி) நிரப்பி பாசனம் செய்றேன். கொஞ்சநாள் சப்போட்டா சாகுபடி செஞ்சேன். அது, வறட்சியைத் தாங்காததால வெட்டிட்டு மா நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சின்னராஜ் தொடர்ந்தார்.
இயற்கைக்கு இட்டுச் சென்ற பசுமை விகடன்!
''எதேச்சையா ஒரு முறை 'பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படிச்சேன். அதுல சொல்லி இருந்த விஷயங்கள் பிடிச்சுப் போகவும் தொடர்ச்சியா 6 வருஷமா வாங்கிப் படிச்சிட்டிருக்கேன். அதிலிருந்து இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன். பசுமை விகடன்ல வந்த பப்பாளி சாகுபடி பத்தி படிச்சிட்டு, ஆயிரத்து 600 செடியை நட்டதுல, ரெண்டு வருஷத்துல 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்து, 4 ஆயிரம் செடி நடவு செஞ்சேன். ஆனா, அந்த வருஷம் கொஞ்சம் வறட்சியாகிட்டதால, 7 லட்சம் ரூபாய்தான் வருமானம்.
மாமரங்களுக்கு ஊடுபயிரா 60 சென்ட் நிலத்துல நாட்டு சம்பங்கி சாகுபடி செய்றேன். அது மூலமா, ஒரு வருஷத்துல 1 லட்சத்து
62 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்திருக்கேன். இன்னொரு 60 சென்ட்ல மாவுக்கு ஊடுபயிரா ஹை-பிரீட் சம்பங்கி போட்டிருக்கேன். அது இப்பதான் மகசூலுக்கு வர ஆரம்பிச்சிருக்கு. இதில்லாம, சில நண்பர்களோட சேர்ந்து மாம்பழக்கூழ் கம்பெனியை நடத்துறோம். எங்க, கம்பெனிக்கே இயற்கை மாம்பழம் தேவையா இருக்குறதால முழு இயற்கை விவசாயம்தான் பண்றேன்.
20 மரங்களில்...  1 லட்சத்து 40 ஆயிரம்!
மொத்தம் இருக்குற 15 ஏக்கர்ல ஒரு ஏக்கர்ல தென்னை, 12 ஏக்கர்ல மா இருக்கு. 2 ஏக்கர்ல 150 நாவல் மரங்கள் இருக்கு. ஒரு சோதனை முயற்சியாதான் நாவல் கன்னுகளை நட்டேன். இது, எங்க பகுதிக்கு நல்லா வருது, ஆனா, தண்ணி இல்லேன்னா, காய்ப்பு இருக்கறதில்லை. இந்த வருஷம் கடுமையான வறட்சியால 150 மரங்கள்ல 20 மரங்கள்லதான் காய்ப்பு இருக்கு. போன வருஷம் 30 மரங்கள் காய்ச்சுது.
நாவல் பழத்துக்கு நல்ல விலை கிடைச்சுட்டிருக்கு. ஒரு மரத்துக்கு சராசரியா 50 கிலோ பழம் கிடைக்கும். ஒரு கிலோ பழத்துக்கு பண்ணை விலையா 140 ரூபாய் கிடைக்குது.
20 மரத்துல இருந்தே 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். தண்ணி மட்டும் இருந்து, எல்லா மரமும் காய்ச்சிருந்தா பல லட்சங்கள் வருமானமா கிடைச்சுருக்கும்'' என்று ஆதங்கத்துடன் சொன்னார் சின்னராஜ்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மெட்டூரைச் சேர்ந்த ஜெயக்குமார், ஒரு ஏக்கர் ஒட்டுரக நாவல் சாகுபடியிலேயே லட்சங்களில் வருமானம் எடுத்து வருகிறார். 10.02.14 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் 'ஜுஸ்... ஜாம்... மிட்டாய்! நெல்லியில் மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலமாக 'பசுமை விகடன்’ வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் இந்த ஜெயக்குமார். பசுமைக் குடைக்கு இடையில் கருநீல முத்துக்களாகச் சிரிக்கும் நாவல்பழத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே நம்மிடம் பேசினார், ஜெயக்குமார்.
உயரம் பிரச்னையில்லை!
''பொதுவா நாவல் மரங்க ரொம்ப உயரத்துக்குப் போகும். அதுல அறுவடை செய்றதுல ரொம்ப சிரமம் இருக்கறதாலதான் விவசாயிக  சாகுபடி செய்யத் தயங்குறாங்க. ஆனா, மரங்களை முறையா கவாத்து செஞ்சு குடை மாதிரி வெச்சுகிட்டா, அதிக உயரம் போகாது. அறுவடை செய்றதும் சுலபம்.
நான் 2003-ம் வருஷம் ஆந்திராவுல இருந்து, ஒரு கன்னு 100 ரூபாய்னு வாங்கிட்டு வந்து நட்டேன். வழக்கமா 35 அடி இடைவெளி விடுவாங்க. நான் அடர்நடவு முறையில செடிக்கு செடி 22 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில 82 கன்னுகளை நடவு செஞ்சேன். 8-ம் மாசம் குடை வடிவத்துல செடியைக் கவாத்து செஞ்சேன். அதுக்கப்பறம் ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசம் கவாத்து செஞ்சிட்டிருக்கேன். இந்த ரக நாவல் நாலாம் வருஷத்துல காய்க்க ஆரம்பிக்கும். ஆரம்பத்துல மரத்துக்கு 5 கிலோதான் கிடைக்கும். வருஷா வருஷம் மகசூல் கூடும். இந்த மரங்களுக்கு 11 வயசாகுது. இந்த வருஷம்தான் நல்லா காய் பிடிச்சிருக்கு. இந்த வயசுக்குப் பிறகுதான் மகசூல் அதிகரிக்கும். இது கூடிட்டே போகும்.
விற்பனையில் வில்லங்கமில்லை!
இப்போதைக்கு ஒரு மரத்துக்கு 60 கிலோ வீதம் தினமும் பழங்கள் கிடைக்குது. இதை நாகர்கோவில், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாதிரியான ஊர்கள்ல இருக்குற சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிட்டிருக்கேன். பசுமை அங்காடிகள்லயும் கேட்டு வாங்கிக் கிறாங்க. அதனால, விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.
பொதுவா, நாவல் ஒரு வருஷம் நல்லா காய்க்கும். ஒரு வருஷம் சரியா காய்க்காது. அதுக்காக மனம் தளர்ந்துடக் கூடாது. பொறுமையா இருந்தா, நல்ல லாபம் எடுக்கலாம்.
என்னோட ஒரு ஏக்கர்ல 82 மரங்கள் இருக்கு. 80 மரங்கள்ல மரத்துக்கு 50 கிலோ பழம் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டாலே... 4 ஆயிரம் கிலோ வரும். கிலோ 140 ரூபாய்னு விற்பனை செய்யுறப்போ, 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம். பராமரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் போக, வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் லாபம். கிட்டத்தட்ட 70 நாளைக்குள்ள அந்த வருஷத்துக்கான மொத்தப் பணத்தையும் எடுத்துடலாம்.
நான் அப்படியே பழமா விக்காம, நாவல்ல இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.
தொடர்புக்கு, சின்னராஜ்,
செல்போன்: 94432-83047
ஜெயக்குமார்,
செல்போன்: 98659-25193.

தினமும் பறிக்க வேண்டும்...
 ஜெயக்குமார் பகிர்ந்து கொண்ட பராமரிப்பு முறைகள் பாடமாக...
நாவலை நடவு செய்யும் போது... 5 கிலோ தொழுவுரம், தலா 5 மில்லி (திரவ நிலையில்) அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து குழியில் இட்டு, செடிகளை நடவு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாரம் ஒரு தண்ணீர் கொடுத்து, போகப்போக... 15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தால் போதுமானது. கவாத்து செய்யும்போது கிடைக்கும் இலைகளை, மரத்தைச் சுற்றி மூடாக்காகப் போடவேண்டும். இதனால், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். நாவல் மரத்தில் இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் இருக்கும். இதை இயற்கைப் பூச்சிவிரட்டி மூலம் விரட்டலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி பஞ்சகவ்யா, தலா 2 மில்லி பவேரியா பேசியானா, மெட்டோசைட் (பயோ) ஆகியவற்றைக் கலந்து, மரம் நன்றாக நனையுமாறு (இலைகள் முழுவதும் நனைந்து தண்ணீர் சொட்டும் அளவுக்கு) தெளிக்க வேண்டும். இப்படி தெளிக்க... ஒரு ஏக்கருக்கு 80 டேங்க் (10 லிட்டர்) தேவைப்படும்.
பழம் வரும் சமயத்தில் பழப்புழு தாக்க வாய்ப்பு உண்டு. இதனால், பழங்கள் சூம்பிவிடும். வெள்ளைப்பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து, மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, இக்கரைசலில் 10 மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பழப்புழுக்கள் கட்டுப்படும். ஒவ்வொரு ஆண்டும் கவாத்து செய்ததும்... மரத்துக்கு 150 கிலோ தொழுவுரம் அல்லது 15 கிலோ மண்புழு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மே மாதம் 3-ம் வாரத்தில் இருந்து, ஜூலை மாதம் வரை பழம் பறிக்கலாம். தினமும் பறிக்காவிட்டால், பழங்கள் உதிர்ந்து விடும்.
 ரத்தத்தைப் பெருக்கும் நாவல்!
நாவல் பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கிருபாகரன், ''நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர, இதில் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், சுவையான பானங்கள், மணப்பாகு (சிரப்) ஆகியவற்றையும் தயாரிக்கலாம். சிறிய அளவில் பழச்சாறு உண்டால், வயிற்றுப்போக்கு குணமாகும். நாவல் பழங்களுக்கு பசியைத் தூண்டும் குணமும், ரத்தத்தை விருத்தி செய்யும் குணமும், உடலை உரமாக்கும் குணமும் இருக்கிறது.
பொதுவாக, நாவல் பழங்கள் சாப்பிட்டால், நீர் வேட்கை நீங்கும். நாவல் பழச்சாற்றை ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பயன்படுத்தினால், சர்க்கரை நோயாளிகளின் நீர் வேட்கை தணியும். இரைப்பைக் குடல்வலி நீக்குவதோடு, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமானப் பண்புகளையும் கொண்டுள்ளது. பொடி செய்யப்பட்ட விதைகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் விதைகள், நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகமான நாவல் பழங்கள் உண்டால் பித்தம் கூடும். சில நெல்லிக்காய்களை மென்று தண்ணீர் குடித்தால் பித்தம் தணிந்துவிடும்'' என்று சொன்னார்.
கிருபாகரன், செல்போன்: 94434-92258

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites