இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, March 9, 2014

மாநில விருது பெற்ற வெற்றி விவசாயி


 ல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின நாளில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது, தமிழக அரசு. அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக விளைச்சல் எடுத்த ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி என். பரமேஸ்வரனுக்கு 5 லட்ச ரூபாய் பரிசும், பதக்கமும் வழங்கி கௌரவப் படுத்தியுள்ளார், முதல்வர் ஜெயலலிதா.
விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தபோது, ''இந்த விருது முறைப்படி என் மனைவிக்குத்தான் போய்ச் சேரணும். அவுங்க கொடுத்த ஊக்கமும், உழைப்பும்தான் விருது வாங்கிக் கொடுத்திருக்கு'' என்று பெருமையோடு மனைவியை அறிமுகப்படுத்தி வைத்த பரமேஸ்வரன், தொடர்ந்தார்.  
கொட்டிக் கொடுக்கும் கோடை உழவு!
''ஒரு போகம் முடிஞ்சவுடனேயே கோடையில ரெண்டு உழவு ஓட்டி நிலத்தை நல்லா ஆறப்போடணும். அப்பதான் களைகள் வீரியம் இல்லாம போகும். மழை சரியா இல்லாததால் போன வருஷம் கோடை உழவு ஓட்டி ஆறப் போட்டேன். கிட்டத் தட்ட ஒரு வருஷம் நிலம் சும்மா கிடந்துச்சு. ஏழு ஏக்கருக்கும் சேர்த்து பத்து டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைச்சு, உழுது நடவு செஞ்சேன். சம்பா மசூரி-5204 ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுருந்தேன். விதை நெல்லை அக்ரி ஆபீஸ்லதான் வாங்கி னேன். சரியான நேரத்துல களையெடுக்குறது, சரியான அளவுல தண்ணி பாய்ச்சுறது, சரியான நேரத்துல தேவையான அளவு உரம் கொடுக்குற துனு பராமரிச்சதுலதான் இந்த விளைச்சல் எடுக்க முடிஞ்சது. நான் விதைச்ச நேரத்துல சீதோஷ்ண நிலையும் நல்லா இருந்ததால பூச்சித் தாக்குதலும் இல்லை. அப்பப்போ வேளாண் அதிகாரிகளும் வந்து ஊக்கம் கொடுத்தாங்க.
அறுவடை சமயத்துல, வேளாண் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ரெண்டு வெளியூர் விவசாயிகள் வந்திருந்தாங்க. அவங்க முன்னாடி அறுவடை செஞ்சு 'ரேண்டம்’ முறை யில கணக்கீடு செஞ்சாங்க. ஒற்றை நாற்று நடவு முறையில ஏழு ஏக்கர்ல நான் நெல் நடவு செய்திருந்தாலும், 50 சென்ட் நிலத்துக்கான மகசூலை வெச்சுத்தான் கணக்குப் போட்டாங்க. அந்த வகையில, ஒரு ஏக்கர்ல நான் எடுத்த விளைச்சல் 6 ஆயிரத்து 110 கிலோ. இதை வெச்சுதான்... அதிக விளைச்சல் எடுத்ததுக்கான விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க. இந்த விருது ஒட்டுமொத்த விவசாயி களுக்கும் கிடைச்சதா நினைச்சு சந்தோஷப்படுறேன்'' என்றார், மகிழ்ச்சியாக.
விருதில் இருக்கு வில்லங்கம்!
மாநில அளவில் விருது வழங்கு வதில் உள்ள சில குறைகளை நம்மிடம் சுட்டிக்காட்டினர், சில முன்னோடி விவசாயிகள். அவை இங்கே இடம்பிடிக் கின்றன.
'அறச்சலூர்’ செல்வம் முன்னோடி இயற்கை விவசாயி: 'வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களால் கண்டுபிடிக்கப் பட்ட உயர் விளைச்சல் நெல் ரகங்களைப் பயிர் செய்யும் விவசாயிகளுக்குள்தான் போட்டி வைக்கப் படுகிறது. பவானி, பொன்னி உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பயிர் செய்யும் விவசாயிகளை வேளாண்துறை கண்டு கொள்வதில்லை. அதேபோல், முழுக்க முழுக்க வளம் குன்றா வேளாண்மையை மேற்கொண்டுவரும் பாரம்பரிய சாகுபடி முறை நெல் விவசாயி களையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. வருங்காலங்களில் இது மாற்றப்பட வேண்டும்.''
சுப்பு, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர்: 'இது போன்ற போட்டிகளை அனைத்து நெல் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதில்லை. குறிப்பிட்ட சில விவசாயி களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படுகிறது. விருது பெற்ற விவ சாயி, பயிர் செய்துள்ள 7 ஏக்கர் விளைச் சலையும் கணக்கில் எடுக்காமல், 'ரேண்டம்’ முறையில் 50 சென்ட் மட்டுமே கணக்கிடப்படுவது சரியாக இருக்காது. தவிர, வேளாண்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. விருதுபெற்ற விவசாயிகளின் வயலுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முன்னோடி விவசாயிகளை அழைத்துப்போய் பார்வையிட ஏற்பாடுகள் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட விவசாயி மேற்கொண்ட தொழில்நுட்பங்களைக் கேட்டறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் மற்ற விவசாயி களுக்கு உபயோகமாக இருக்கும். வரும் ஆண்டுகளில், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட முக்கிய பயிர்களையும் விளைச்சல் போட்டியில் சேர்க்க வேண்டும்.'
இது குறித்து,   தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் நெல் மட்டும் சிறுதானியப் பிரிவு துணை இயக்குநர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ''தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் இந்த மாநில விருது தொழில் நுட்பத்துக்கானது. திருந்திய நெல் சாகுபடியை, அனைத்து நெல் விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில், தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான பரிசுகள் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது'' என்பதோடு முடித்துக்கொண்டார்.
தொடர்புக்கு, என். பரமேஸ்வரன், செல்போன்: 99941-39988.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites