இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, November 27, 2013

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!



















பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.
இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.
இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இதே போல இளம் பனை ஓலையை வெட்டி, அதையும் மட்டைப்பகுதியில் இரண்டாக வெட்டிப்பிளந்து (முழு ஓலையையும்) விசிறி மாதிரி விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்குப் பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்துவிடும்.

ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருப்பவர்கள் இத்தகைய பனை ஓலையைப் பயன்படுத்துவார்கள். பனையின் குருத்து ஓலையை வெட்டி, அதைப் பக்குவமாக நீரில் நனைய வைத்து ஓலை இதழ்களை மட்டும் கிழித்தெடுத்து ஒருவிதப் பாய்களை முடைவார்கள். இந்தப் பனை ஓலைப் பாய்களைச் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். குருத்து ஓலை இலக்குகளால்(இதழ்களால்) நெய்யப்படும் இந்தப் பனை ஓலைப் பாய்களும் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுப்பார்கள். இது மெத்தை போன்று படுப்பதற்கு மிகவும் சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தாழை மடல்களை வெட்டித் தண்ணீரில் ஊறவைத்து, அதை இலக்கு(இதழ்)களாகப் பிரித்து அதிலிருந்து தாழம்பாய்களைப் பின்னுவார்கள்.
நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து மிதமாகக் கையை வைத்து, அவைகளைப் பனை நாரால் கோத்து ஒருவிதப் பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர். இதே நாணலை வைத்து, மழைக்காலத்தில் நனையாமல் போட்டுக் கொள்ள ‘கொங்காணி’களையும் இந்த நாணல் தட்டையில் இருந்து தயாரிக்கிறார்கள். நாணல் பாய் மெத்தைபோல் படுப்பதற்கு ‘மெத்,மெத்’ என்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின்தான் கோரைப்பாய் நெய்தார்கள். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

இதுவரை, நாம் பார்த்த பாய்கள் எல்லாம், தென்னை, பனை, தாழை, நாணல், கோரைப்புல் போன்ற தாவரங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.
தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இந்தப் பாய்களில் படுத்து எழுந்தால் உடலின் வெப்பம் குறையும். உடல் வலியும் போகும். ஒரு விதத்தில் மறைமுகமான மருத்துவக்குணமாகும் இது.

இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும்.

மேலே கண்ட பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும் ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகளில் ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இதற்கு சூரிக்கத்தி என்ற இருபுறமும் கூரான கத்தி பயன்படுத்தப்படும். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக(கட்டுகளாக) கட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு அக்கட்டுகளை ஆற்றுநீரில் அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பார்கள். இப்போது இரண்டாகக் கீறப்பட்ட கோரைகள் சற்று உப்பி இருக்கும். எனவே அதை மீண்டும் இரண்டாக சூரிக்கத்தி வைத்துக் கீறுவார்கள். பிறகு அக்கோரைகளை முடிகளாக(கட்டுகளாக) முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த கோரைகளை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்துக் கொள்வார்கள். மொத்தக் கோரையில் பத்தில் ஒரு பங்குக்கோரையைப் பிரித்து எடுத்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றிக்கொள்வார்கள்.
ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் 'தரஸ்கு' (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும்.
இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள்.

இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். இந்த இரண்டு மூலப்பொருள்களையும் நெசவாளர்கள், இயற்கைத் தாவரங்களில் இருந்து (கோரைப்புல், கற்றாழை) எளிய உழைப்பு மூலம் பெற்றுக் கொண்டார்கள்.
இனி, பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், இருந்து நெசவு செய்யச் சிறிய நீள்வச பெஞ்சுகள் முதலிய எளிய கருவிகள்தான் தேவை.
இப்படித் தென் மாவட்டங்களில் இயற்கையாய்க் கிடைக்கும் தாவர மூலப்பொருள்களில் இருந்து கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும், தாழம்பாய்களும் தயாரிக்கப்பட்டன. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த கீழ்த்தட்டு மக்களே பாய் நெசவு என்ற தொழிலைச் செய்து வந்தார்கள்.
பாய்களை இன்று பிளாஸ்டிக் கோரைகளால் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இத்தகைய செயற்கை இழைகளால் ஆன பாய்கள் நம் உடல்நலத்திற்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்றதல்ல.

‘பாய்’ என்ற உடன் பலரின் நினைவிற்கு பத்தமடைப் பாய்தான் நினைவுக்கு வருகிறது. பத்தமடைப்பாய்கள் மெல்லிய கோரைகளைக் கொண்டும், பருத்தி நூலைக் கொண்டும், கடினமான உழைப்பைக் கொண்டும் முக நுட்பமான வேலைப்பாடுகளுடன், கலையழகுடன் நெய்யப்படுகிறது. இத்தகைய பத்தமடைப் பாய்கள் இன்று ஆடம்பரப் பொருள்களாகவும் கலைப்படைப்பாகவும் மாறி விட்டது. இப்பாய்களையும் பத்தமடை என்ற ஊரிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியச் சமுதாயத்தவர்களால் நெய்யப்படுகிறது.

ஓலைகளால் பாய்கள் பின்னப்படும். கோரைகளால் பாய்கள் நெய்யப்படும். (தமிழனின் கலைச் சொல்லாட்சி எவ்வளவு அருமையாக உள்ளது பார்த்தீர்களா...)

பாய் ஓய்வின் குறியீடு, இல்லற இன்பத்தின் அடையாளம். ‘பாய் விரிக்க புன்னை மரமிருக்க’ என்ற பாடல் வரிகளில் காதல் உணர்வுடன் ‘பாய்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்ட முஸ்லிம்கள்தான் மகளைக் கட்டிக் கொடுக்கும்போது பலவித சீர் செனத்திகளைக் கொடுக்கிறார்கள். அத்தோடு மறக்காமல் ஒரு பாயையும், தலையணையையும் கொடுக்கிறார்கள். மகளை மருமகனுக்குக் கட்டிக் கொடுக்கிறபோது கூடவே பாயையும் கொடுத்து அனுப்புவதில் வாழ்வியல் சார்ந்த உள்அர்த்தம் வாசகர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற பயன்பாட்டு அம்சம் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.

பழைய பொம்மை... புது மெருகு

படித்தது எம்.பி.ஏ. பிடித்தது பொம்மை சென்னையில் உள்ள ராஜேஸ்வரி மோகனின் வீடு, விதம் விதமான பொம்மைகளால் நிரம்பியிருக்கிறது. ‘‘மத்தவங்களுக்கெல்லாம் வருஷத்துல பத்து நாட்கள் கொலுன்னா, எங்க வீட்டுல 365 நாட்களும் கொலுதான்’’ என்கிற ராஜேஸ்வரி, பழைய பொம்மைகளுக்கு புது பெயின்ட் அடித்து, உடைசல், விரிசல்களை சரிப்படுத்தித் தருகிறார்.Old toy ... New antiquing!

‘‘எம்.பி.ஏ படிச்சிருக்கேன். தனியார் கம்பெனியில வேலை. வருடம் தவறாம கொலு வைக்கிறது எங்க வீட்ல வழக்கம். கல்யாணத்துக்கு முன்னாடியே  எங்கம்மா கொலு வைக்கிறப்ப, அதுல உள்ள பழைய பொம்மைகளை எடுத்து, பெயின்ட் பண்ணிக் காய வச்சுக் கொடுக்கிறது வழக்கம். அந்த வயசுல  விளையாட்டா பண்ணின விஷயம் அது. பெயின்ட், பிரஷ் பத்தி அதிகம் தெரியாது. கல்யாணமாகி மாமியார் வீட்டுக்கு வந்த பிறகும் கொலு வைக்கிறது  தொடர்ந்தது. அம்மா, மாமியார்னு ரெண்டு பேரும் கொடுத்த சில பொம்மைகளுக்கு சென்டிமென்ட்டலான அட்டாச்மென்ட் உண்டு. 

புதுசு மாதிரிக் காட்ட அந்த பொம்மைகளை பெயின்ட் அடிச்சு வைப்பேன். கொலுவுக்கு வர்ற எல்லாரும் பொம்மைகளைப் பத்தி விசாரிக்கத்  தவறினதில்லை. ‘உங்க வீட்டு பொம்மைகள் மட்டும் எப்படி, எப்போதும் புதுசு போலவே இருக்கு’ன்னு ஆச்சரியப்பட்டாங்க. பெயின்ட் பண்ணின  விஷயத்தைச் சொன்னதும், அவங்கவங்க வீட்டு பொம்மைகளையும் அப்படிப் புதுசு போல மாத்திக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. 

எந்த மாதிரி பொம்மைகளுக்கு எந்த மாதிரி பெயின்ட் உபயோகிக்கலாம்னு முறைப்படி கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். பெயின்ட் பண்ணும்போதே,  பொம்மைகளோட சின்னச் சின்ன விரிசல்களையும் சரி செய்யக் கத்துக்கிட்டேன். இப்ப நவராத்திரி ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு, மூணு மாசங்களுக்கு  முன்னாடியே நான் பிசி!

இப்படி ரீபெயின்ட் பண்ற பொம்மைகள், ஆறேழு வருஷங்களுக்கு மெருகு குலையாம அப்படியே இருக்கும். இன்னிக்கு புது பொம்மைகளோட விலை  எக்குத் தப்பா எகிறியிருக்கு. விலை ஒரு பக்கம்னா, இன்னிக்கு வர்ற பொம்மைகளோட தரமும் சுமார்தான்.

பெயின்ட், பிரஷ், பசை மாதிரியான சின்னச்சின்ன பொருட்களுக்கான முதலீடா 750 ரூபாய் செலவழிச்சா போதும். பொம்மையோட அளவைப்  பொறுத்து ஒரு பொம்மைக்கு பெயின்ட் பண்ணவும், ஒட்ட வைக்கவும் தனித்தனியா கட்டணம் வைக்கலாம். பகுதி நேரமா ஏதாவது பிசினஸ் பண்ண  நினைக்கிறவங்களுக்கு இது நல்ல சாய்ஸ்’’ என்கிற ராஜேஸ்வரி, ஆர்வமுள்ளோருக்கு 200 ரூபாய் கட்டணத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு எடுக்கவும்  தயாராக இருக்கிறார்.  90032 71427


Thanks!!!:http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2085&Cat=501

Tuesday, November 5, 2013

படித்ததில் பிடித்தது



முக்கியமாகச் செய்யவேண்டியது முழு உடல் பரிசோதனை!
கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்... ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்’ என்பதே மறைந்துவருகிறது.
 தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சைநிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.
இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.
'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவே இல்லை.
ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.
முழு உடல் பரிசோதனை பற்றி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூத்த உதவிப் பேராசிரியர்           த.ரவிக்குமார் விரிவாகப் பேசினார்.
யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?
  அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதிகம் செலவாகுமா?
  முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.
  அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, குடல், வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை மற்றும் சிறப்புப் பரிசோதனை, அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.
  சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.
யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?
  பிறந்த  பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.
  பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.
  பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.
  பல்வேறு  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்துவிடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோல்தான்.
  போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.                                                            
முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக் கால இடைவெளி என்ன?
30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,
50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒரு வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
  முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.
  உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.
  கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக் கூடியவையே!
சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோ... அதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.
  வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
  சில மருத்துவமனைகளில் நீங்கள் வரும்போதே சிறுநீர், மலம் போன்றவற்றை எடுத்துவரச் சொல்வார்கள். பரிசோதனைக்குத் தேவைப்படும் அளவுகளை அவர்களிடம் கேட்டு அதன்படி எடுத்துச் செல்லுங்கள்.
மனதளவில் எப்படித் தயாராவது?
  இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.  
  காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
  பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.
பரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?
  சர்க்கரை, கொலஸ்ட்ரால்,  நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும்.  பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.
 இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
 பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
 வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.
 தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும்  தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.
 சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்
 ரோமம் அகற்றுவது நல்லதே!
 மார்பகப் புற்றுநோய் மற்றும் டி.பி கிருமித் தாக்குதல், மயிர்க்கால் நோய்த் தாக்குதல், நெறி கட்டுவதைப் பரிசோதித்தல் போன்றவற்றுக்கும் முடி இல்லாது இருப்பது நலம்.
  அக்குளில் உள்ள தோல் பகுதியில் இருக்கும் கறுப்பான வரிகள், இன்சுலின் எதிர்ப்பு உடலில் உருவாகி உள்ளதைக் காட்டும். இதனால் அக்குள் மற்றும் மறைவுப் பகுதிகளில் உள்ள ரோமங்களை நீக்கிவிடுவது நல்லது.
  பிறப்பு உறுப்பு அருகில் சீழ், நெறி, புண், தழும்பு ஆகியன இருந்தால், அது பால்வினை நோயாகவோ, வேறு தொற்று நோயாகவோ இருக்கலாம். அவற்றைப் பரிசோதிக்கவும், குடலிறக்கம் இருந்தால் அதைப் பரிசோதிக்கவும் முடி நீக்கவேண்டியது அவசியம்.
 மார்பில் நிறைய முடி இருப்பது இ.சி.ஜி  மற்றும் டிரெட்மில் பரிசோதனைகளுக்கு இடையூறாக இருக்கும். அவற்றையும் அகற்ற வேண்டி வரலாம்.
 பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?
 கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.  
  பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.
  மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.
  பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.  
  மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.
  அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.
  நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40-க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.
  உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின்குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.
  அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.
  நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.
  செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும்விடலாம்.
  உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
  நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.
என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
ரத்தம்  
  ரத்த வகை எது எனப் பரிசோதிப்பார்கள். அத்துடன் ஆர்.எச். பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என கண்டுபிடிப்பார்கள். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் தகவலாகும். ஒருவருக்கு வாழ்நாளில் ரத்தப் பிரிவு மாறவே மாறாது என்பதால், நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.
 ரத்தசோகை உள்ளதா என அறிய, ஹீமோகுளோபின் அளவு, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, அலர்ஜி இருந்தால் காட்டும் ஈஸினோஃபில் எண்ணிக்கை, ரத்தத்தை உறையவைக்கும் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தம் கசியும் நேரம், உறையும் நேரம், ரத்த அணுக்கள் வளர்ச்சி, உருவம், நிறம், அளவு, அவற்றில் உள்ள குறைபாடுகள், ரத்த நோய்களான ரத்தசோகை முதல் ரத்தப் புற்றுநோய் வரை ஒரே பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.
  மலேரியா, யானைக்கால் வியாதிகள் பரப்பும் கிருமிகள் உள்ளனவா என்பதையும் அறியலாம்.
  ரத்த மாதிரியை வைத்து, கல்லீரல், சிறு நீரகங்கள், தைராய்டு, அட்ரீனல், கணையம், பிட்யூட்டரி, ஆண், பெண் ஹார்மோன் வியாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரத்த அழுத்தம்
  ரத்த அழுத்தம் 120/80 மிமி மெர்க்குரி அளவு சரியான அளவாகும். 130/90க்கு மேல் இருந்தால் உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
 இதய எக்கோ பரிசோதனையில் பிறவி இதய வியாதிகள், இடையில் ஏற்பட்ட வால்வுக் கோளாறுகள், மாரடைப்பிற்குப் பிறகு இதயம் வேலை செய்யும் திறன், இதய சுவர்களில் வீக்கம், சுருங்கிவிரியும் தன்மையில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை அறியலாம்.
ரத்தத்தில் கொழுப்பின் அளவுகள்
 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் (200-க்கு கீழ்), நல்லகொழுப்பான ஹெச்.டீ.எல்(60-க்கு மேல்) கெட்டக் கொழுப்பான எல்.டீ.எல். (100-க்குகீழ்), ட்ரைகிளிசரைடு (150-க்கு கீழ்) போன்றவற்றை அளவிடுவார்கள். இவற்றின் அளவு அதிகமாக இருந்தால், மீன் எண்ணெய் (ஒமேகா 3 கொழுப்பு சத்து கொண்டது, அல்லது பிளாக்ஸ் சீட் உணவில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை கூறுவார்கள்.
சிறுநீர்
  சிறுநீர்ப் பரிசோதனையில், அளவு, நிறம், தெளிவு, கலங்கல், ரத்தக் கசிவு, கிருமித் தொற்று, சிறுநீரக வியாதிகள், சிறுநீர்ப்பை வியாதிகள், கல், புற்றுநோய் வரை தெரிந்துகொள்ளலாம்.
மலம்
மலப் பரிசோதனையில், வயிற்றுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், அமீபா, டைபாய்டு, காலரா  நோய்த் தாக்குதல், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆசன வாய் நோய்கள், தொற்றுக்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
எக்ஸ்ரே
  நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.
இ.சி.ஜி.
  இ.சி.ஜி. என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
உயரம்
  உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் (அ) குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.
எடை
  உயரத்தை சென்டி மீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100 ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.
  பி.எம்.ஐ எனப்படும் உடல் கணக்கீடை, (உங்கள் எடையுடன் உங்கள் உயரத்தை (சென்டி மீட்டரில்) இரண்டு மடங்கால் வகுத்தால் கிடைப்பது) உங்கள் உடல்வாகு ஒல்லி (18க்கு கீழ்), சராசரி (19 முதல் 24), சராசரிக்கு அதிக உடல் வாகு (25 முதல் 29), பருமன் (30 முதல் 34), அதிக பருமன் (35 முதல் 39), மிக அதிக பருமன் (40க்கு மேல்) என வகைப்படுத்தி உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும், ஆலோசனை தருவார்கள்.
இடை அளவு
  இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள்.  இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.
  ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.
  மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில்  ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
வயிற்று ஸ்கேன்
  இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீரப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய்
  வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110/மிகி க்கு கீழ் இருக்க வேண்டும். 110, 125 வரை இருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் உங்களுக்குச் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை முறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலம் அது வருவதை தற்காலிகமாகவோ முழுவதுமாகவோ தள்ளிப்போட முடியும்.
  126 அளவு இருந்தால், மீண்டும் ஒருமுறை வெறும் வயிற்றில் மற்றும் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பரிசோதித்து அதை உறுதிப்படுத்திய பிறகு வாழ்க்கை முறை, உடல்  உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
கல்லீரல் பரிசோதனை
  கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச்  சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.
சிறுநீரகப் பரிசோதனை
  இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.
கண்
 பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.  
காது
  கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுக்கள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.
தோல்
  சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.
ஸ்கேன்
சிடி ஸ்கேன் (CT Scan)
  சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராஃபி  (Computed Tomography scan) என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.
  மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.
  பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்களை சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.
  உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.
 கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.  
  புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.
  எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
  சிடி ஸ்கேன் மிக விரைவாகப் படங்களை எடுக்கும்.
எம்.ஆர்.ஐ.ஸ்கேன் (MRI Scan)
  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.
எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
  எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.
  முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.
மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள் (Pap Tests)
  ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.
பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.
  21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
மேம்மோகிராம் (Mammogram)
  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ் ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.
  40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.
கவனிக்க...
 அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.
  உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.
முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.
லட்சக்கணக்கானவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, அவர்களின் வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் பலரது குடும்பங்களை உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்றிவரும் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர். ஏ.ஆர். விஜயகுமார் ''மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்.'' என்றார்.
மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம்.  செலவைக் குறைப்போம்.
லதானந்த்,
படங்கள்: ஜெ.தான்யராஜூ
படங்கள் உதவி: பாரத் ஸ்கேன், ராயப்பேட்டை, சென்னை.
நன்றி:http://www.vikatan.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites