இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

சலூன் கடை நடத்தும் பட்டதாரிப் பெண்!

‘படிச்ச புள்ளைக்கு புத்தியப்பாரு... கட்டுன புருஷனைத்தவிர எந்த ஆம்பிளையையும் தொட்டுக் கூட பேசாத நம்ம ஊருல பொறந்துட்டு கண்டக் கண்ட ஆம்பிளையைஎல்லாம் தொட்டு முடிவெட்டறதும்... ஷேவிங் பண்றதும்... ஏக்கா, நல்லாவா இருக்கு? பட்டப்படிப்பு படிச்சிட்டு இந்தப் பொண்ணுக்கு வேற வேலை கிடைக்கலையா..?’’  ‘‘அந்த பொம்பளப்புள்ள முடிவெட்டுது, ஷேவிங் பண்ணுதுன்னு அந்தப்பக்கம் போனீங்க... பூரி கட்ட பிஞ்சிறும்...’’ - இப்படி பல பெண்களின் அர்ச்சனைகளுக்கும், மனைவிமார்களின் வசைபாடுகளுக்கும் காரணம் ஒரு பெண் தனியாக சலூன் கடை வைத்திருப்பதுதான். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தேவி. கடந்த 2004ம் ஆண்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பிகாம் முடித்ததும் அரசு வேலைக்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை. எஸ்.ஐ., ஆக வேண்டும் என்பது தேவியின் கனவு. அதற்காக மூன்று முறை முயற்சி செய்திருக்கிறார். மூன்று முறையும் உடல் தகுதியில் தேர்வு பெற்றிருக்கிறார். ஆனால், எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்.

‘‘ஏறக்குறைய இந்தக் காலகட்டத்துலதான் அடுத்தடுத்து சோதனைகளை சந்திச்சேன்...’’ என்று ஆரம்பித்த தேவி, அதைக் குறித்து விளக்க ஆரம்பித்தார். ‘‘கூட பொறந்த மூணு சகோதரர்களும் சொல்லிவச்சா மாதிரி அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இந்த அதிர்ச்சிலேந்து மீள முடியலை. கடைசி தம்பி புவனேஷ்வரன், இப்ப ஒன்பதாவது படிக்கிறான். எங்கப்பா பேரு தங்கவேல். அவர் சலூன் கடைதான் நடத்திட்டு வந்தாரு. ஆனா, அவருக்கு சர்க்கரை வியாதி உண்டு. 

அதனால அவரால நின்னு வேலை பார்க்க முடியாது. இதனால கடையை பல நேரம் மூடியே வைச்சிருப்பாரு. சாப்பாட்டுக்கும், குடும்பத்தை நடத்தவும் ரொம்பவே திண்டாடினோம். வறுமைனா வறுமை அப்படியொரு வறுமை. என்ன செய்யறதுன்னு யோசிச்சப்பதான் நாமளே சலூன் கடையை நடத்தினா என்னன்னு தோணிச்சு. அப்பா கடையை திறக்காதப்ப சில நாள் கத்தி, கத்திரி பிடிச்ச அனுபவம் இருக்கு. அதனால துணிஞ்சு  இறங்கலாம்னு முடிவு பண்ணினேன்.

ஆனா, அப்பா அதுக்கு சம்மதிக்கலை. ‘இது ஆம்பள செய்ய வேண்டிய வேலை. அவங்களே இப்ப சலூன் கடையை வைக்கிறதில்ல. இப்பப் போய் இப்படி சொல்றியே... கல்யாணம் கட்டிகிட்டு பொழப்ப பாரு’னு சொல்லிட்டாரு. நான் விடலை. பேசிப் பேசி அவரை கரைச்சேன். என்னோட தொழில் நேர்த்தி அப்பாவுக்கு தெரியும். அதனால வேற வழியில்லாம சம்மதிச்சாரு. அங்க இங்க கடனை வாங்கி மேற்கு பல்லடத்துல இருக்கிற நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தேன். எங்கப்பாவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. 

அவங்க எல்லாரையும் சந்திச்சு கடை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்தேன். ஆனா, திறப்பு விழாவுக்கும் சரி, அதுக்குப் பிறகும் சரி ஒருத்தரும் என் கடைக்கு முடி வெட்டிக்கவோ, ஷேவிங் பண்ணிக்கவோ வரலை. பொம்பள கையால செஞ்சுக்கறதான்னு ஈகோ தடுத்திருக்கு. தவிர, நான் எப்படி முடி வெட்டுவனோன்னும் சந்தேகப்பட்டிருக்காங்க...’’ என்று சிரித்த தேவி, பல நாட்கள் கடையை திறந்து வைத்து ஈதான் ஓட்டினாராம். அதன் பிறகு சிறுவர்களையும் முதியவர்களையும் அனுப்பி ஆழம் பார்த்திருக்கிறார்கள். தொழில் சுத்தமாக இருக்கவே மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘ஆனாலும் எல்லாம் சரியாகிடுச்சுன்னு சொல்ல முடியாது. தினமும் ஒன்றிரண்டு பேர்தான் வருவாங்க. இதனால வாடகை கட்டவே சிரமப்பட்டேன். அப்பத்தான் ஆட்டோ ஃபைனான்ஸ் கடைல கணக்கு எழுதற வேலை கிடைச்சது. உடனே சலூன் கடையை தினமும் காலை 6 மணிலேந்து 9 மணிவரைக்கும், அப்புறம் மாலை 6 மணிலேந்து இரவு 10 மணிவரைக்கும் நடத்த ஆரம்பிச்சேன். மீதி நேரத்துல அந்த ஆட்டோ ஃபைனான்ஸ் கடைக்கு வேலைக்குப் போறேன். Graduate female shop Saloon run!


எப்படியாவது இந்த சலூன் கடையை பெருசா விரிவுப்படுத்தணும். அதுதான் என் கனவு லட்சியம்...’’ என்று சொல்லும் தேவிக்கு கட்டிட வேலை, ஆட்டுத்தோல் உரிப்பது, குடிசைபோடுதல், இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்தல் ஆகிய வேலைகளும் தெரியுமாம். ‘‘கடைல கத்தி, கத்திரிகோல்... ஃபைனான்ஸ் நிறுவனத்துல பேனா, பென்சில்... இப்படி நாள் முழுக்க என்னோட விரல்கள் இயங்கிகிட்டே இருக்கு. இப்ப என் தொழில் நேர்த்தியை பார்த்துட்டு பலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. 

சலூன் கடையை விரும்பித்தான் நடத்தறேன். ஆண்கள் மட்டுமே செய்யற வேலைனு எதுவும் கிடையாது. கட்டிங், ஷேவிங் பண்ணறப்ப நான் தொழிலாளிதான். பெண் கிடையாது. எந்த வேலையா இருந்தாலும் விருப்பத்தோட செய்தா நிச்சயம் ஜெயிக்கலாம்...’’ என்று அழுத்தத்துடன் சொல்லும் தேவி, கடனை அடைக்க வேண்டும். குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகுதான் திருமணத்தை பற்றி யோசிப்பேன்” என்கிறார்.

- என்.சுப்பிரமணியன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites