இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 15, 2013

துயரங்களை துச்சமாக்கிய துணிச்சல்காரி

Tuccamakkiya tuniccalkari trouble!

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்கிற வாசகத்துக்கு மிகப்பொருத்தமான அடையாளம் இந்திரா! சென்னை, சாந்தோம் அருகே சென்று  ‘இந்திரா பஞ்சர் கடை’ என விசாரித்தால், வரைபடம் போட்டு வழிகாட்டுகிறார்கள். புழுதி வாரித் தெறிக்கும் ஒரு தெருவோர நடைபாதையில் பஞ்சர்  ஒட்டும் கடை போட்டிருக்கிறார் இந்திரா. ஆண்களின் உலகில் அரிதாக ஒரு பெண்!

‘‘ஒருவாட்டி எங்கக்கா மண்டையை உடைச்சிட்டாங்க டீச்சர். பள்ளிக்கூடம் பக்கமே போறதில்லைங்கிறதை அப்பவே முடிவு பண்ணிட்டேன்.  மழைக்குக்கூட அங்க ஒதுங்கினதில்லை. எங்கப்பா சைக்கிள் ரிப்பேர் கடை வச்சிருந்தாரு. ஆனாலும், அப்ப  எதையும் தொட்டதுகூட இல்லை! ஒரு  மெஷின் கம்பெனில வேலைக்குப் போயிட்டிருந்தப்ப, எங்க வீட்டுக்காரர் அறிமுகமானாரு. அப்படியே காதலிச்சு, கல்யாணம் கட்டிக்கிட்டோம். 

வீட்டுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு பஞ்சர் கடை வச்சோம். ரெண்டு ஆம்பிளைப்புள்ளைங்க. ரெண்டாவது குழந்தை, என் வயித்துல இருக்கிறப்பவே,  அவனுக்கு கிட்னி ஃபெயிலியர். சம்பாதிக்கிற காசெல்லாம் அவன் வைத்திய செலவுக்கே சரியா இருந்தது. கடை வேலை போக, காலைலயும்  சாயந்திரமும் ரெண்டு மணி நேரம் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்தாரு என் வீட்டுக்காரர். 

அவர் கடைல இல்லாத நேரம் நான் கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். நாளாக ஆக என் குழந்தையோட நிலைமை ரொம்ப சீரியசாச்சு. புள்ளை பொழைக்கிறது  கஷ்டம்னு டாக்டருங்க கையை விரிச்சிட்டாங்க. 3 வயசுல இறந்துட்டான். அதுக்கப்புறம் அவன் நினைப்பாவே இருந்ததால, அதை மறக்க, நிறைய  நேரம் கடைல உட்கார ஆரம்பிச்சேன். இப்ப அதுவே பொழப்பாயிருச்சு.

ஆரம்பத்துல கை, காலெல்லாம் வலிக்கும். மூச்சு வாங்கும். பழகப் பழக சரியாயிடுச்சு. இப்ப என்னால பெரிய பெரிய கார் வரைக்கும்கூட பஞ்சர் போட  முடியும்’’ என்கிற இந்திராவுக்கு மிகப்பெரிய பலம் அவரது கணவர் முத்துக்குமார். ‘‘ஒரு பொண்ணு துணிஞ்சு, ரோட்ல வந்து கடை போட்டு பிழைக்க  வழி தேடறான்னா, அவளுக்குள்ள எவ்வளவு சோகம், கஷ்டம் இருக்கும்னு எந்த ஆம்பிளைக்கும் புரியறதில்லீங்க... 

வாய் கூசாம, அவளைப் பத்தி அசிங்கமா பேசறாங்க. ‘உன் பொண்டாட்டி அங்க நிக்கறா... இங்க நிக்கறா’ன்னு ஆரம்பிச்சு, என் வீட்டுக்காரர்கிட்ட  என்னென்னமோ சொல்வாங்க அதையெல்லாம் கேட்டு, நான் அழுதிருக்கேன். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் இருக்கேன்ல உனக்கு’ன்னு  ஆறுதலும் தைரியமும் சொல்றவரு என் புருஷன்தான். எனக்கு சொந்தம்னு சொல்லிக்க அவரை விட்டா ஆளில்லை. 

எம்புள்ளை செத்ததுக்குக் கூட பிறந்த வீட்லேருந்து யாரும் வரலை. அன்னிக்கு முடிவெடுத்ததுதான்... ‘கடைசி வரைக்கும் எனக்கு நீ, உனக்கு நான்’னு.  இப்ப சந்தோஷமோ, துக்கமோ நான், என் புருஷன், என் மூத்த பையன்னு மூணு பேருக்குள்ள மட்டும்தான்...’’ - வார்த்தைகளைத் தேடித் தேடி, தட்டுத்  தடுமாறித்தான் பேசுகிறார் இந்திரா.

‘‘காலைல 6.30 மணிக்கு கடைக்கு வந்துடுவோம். பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறான். மாமியார் அவனுக்கு சாப்பாடு கட்டி, பள்ளிக்கூடம்  அனுப்பிருவாங்க. வேலையைப் பொறுத்து ராத்திரி வீட்டுக்குப் போக 11 மணி கூட ஆயிரும். பையன், பள்ளிக்கூடத்துலேருந்து நேரா கடைக்கு  வருவான். அவனோட ரெண்டு வார்த்தை பேசிட்டு, பக்கத்துல டியூஷனுக்கு அனுப்பிடுவேன். 

படிச்சிட்டு, மறுபடி வீட்டுக்குப் போயிடுவான். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போய்தான் ராத்திரி சமையல், பாத்திரம் கழுவறது, துணி  துவைக்கிறதுன்னுமத்த வேலைகளை எல்லாம் பார்க்கணும்... கடைல நான் தனியா இருக்கிறது தெரிஞ்சா, வேணும்னே ஏமாத்தறதுக்குன்னு சில பேர்  வருவாங்க. பஞ்சர் ஒட்டிட்டு, காசு கொடுக்காம ஓடிருவாங்க. சில பேர், நிஜமாவே காசில்லாம, வாட்ச், செல்போனை வச்சுக்க சொல்லித் தருவாங்க. 

நான் வாங்க மாட்டேன். நம்பிக்கைதானேங்க வாழ்க்கை... பணம் எங்கப் போயிடப் போகுது?’’ இந்திராவின் வாழ்க்கையைப் போலவே நைந்து  போயிருக்கிறது அவர் அணிந்திருக்கிற உடையும். ஆனாலும் வார்த்தைகளில் வைராக்கியத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் குறைவில்லை.  ‘‘என்னிக்காவது மனசு சரியில்லாட்டி, பக்கத்துல உள்ள கடற்கரைல போய் உட்கார்ந்து மனசு விட்டுப் பேசுவோம். படிச்சிருக்கலாம்.... தப்பு  பண்ணிட்டோமேங்கிற வருத்தம் அப்பப்ப வரும். 

என் பையன் விஷயத்துல அந்தத் தப்பு நடந்துடக் கூடாதுன்னு நினைக்கிறோம். அவனை பெரிய இன்ஜினீயராக்கி பார்க்கணும்.... அதான் என் கனவு...”  கண்களில் தெரிகிற சோகத்தை, சிரிப்பால் மறைத்துப் பேசுகிற இந்திராவுக்கு, வாழ்க்கை எந்தத் துயரத்தையும் மிச்சம் வைக்கவில்லை.  ‘‘எல்லாம் ஒரு  நாள் நிச்சயம் மாறும். 

நல்ல புருஷனும் நல்ல குழந்தையும் அமைஞ்சிருக்காங்க.  பொம்பிளைக் குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா புள்ளை இறந்தப்புறம்,  ஆபரேஷன் பண்ணிட்டாங்க. ஒரே ஒரு பொம்பிளைப் புள்ளையை தத்து எடுத்துக்கலாம்னு வீட்டுக்காரர்கிட்ட கேட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் அந்த  ஆசையும் நிறைவேறிடும். வாழ்க்கைல வேற என்ன சந்தோஷம் வேணும் எனக்கு?’’ துயரங்களை துச்சமெனப் பேசுகிறார் இந்தத் துணிச்சல் பெண்!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites