இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 29, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்


இது பண்டிகைக் காலம். வீட்டில் எது இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரையும், வெல்லமும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் இப்போது குறைந்த விலையில் தரமான வெல்லத்தை எங்கு வாங்கலாம்?
ழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் நெய்க்காரப்பட்டி. இவ்வூரைச் சுற்றி ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் செய்யும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதி கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் கரும்பு விவசாயம். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைக் கொடுப்பதைப் போல, நாட்டு வெல்ல ஆலைகளுக்கும் கரும்பைக் கொடுக்கின்றனர். இதனை பாகு எடுத்து வெல்லமாக்கி ஒவ்வொரு ஆலையும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை பிஸினஸ் செய்கின்றன.  
சில இடங்களில் விவசாயிகள் நேரடியாக ஆலை அமைத்தும் வெல்ல உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று உற்பத்தியாகும் வெல்லத்தை மண்டிகளில் வைத்து ஏலமுறையில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஏலத்தில் மூட்டைக் கணக்கிலும், ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது சில்லறையாகவும் வெல்லத்தை வாங்கிவிடலாம். ஒரு கிலோ ரூபாய் 25-ல் தொடங்கி வெல்லத்தின் தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை மாறுபடுகின்றது.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏஜென்ட் சம்சுதீனிடம் பேசினோம்.
''இந்த பகுதியைச் சேர்ந்தவங்களோட முக்கியத் தொழில் இதுதான். இங்க ஆலைகள்ல சின்ன அச்சுவெல்லம், பெரிய அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் அதிக அளவில் உற்பத்தி செய்யறாங்க. உற்பத்தியானதை வெல்ல மண்டிகள்ல வைத்து விவசாயிகள், வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுவோம். இதில் ஒரு சிப்பம்கிறது 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை.
இங்கு வெல்லம் வாங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், கேரள வியாபாரிகள் என பலரும் வருவாங்க.
கெட்டியாக இருக்கும் வெல்லம் சீக்கிரமா தூள் ஆகாது. அதுபோன்ற வெல்லம் நல்ல விலைக்குப் போகும். அது மட்டுமில்லாம, விலையை தீர்மானம் செய்வதில் நிறத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நல்ல வெளீர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. இது நல்ல விலைக்கு ஏலம் போகும். பண்டிகை காலத்தைப் பொறுத்து வெல்லத்தோட விலை ஏறியிறங்கும். அதாவது, மாசி மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களும் நல்ல 'சீஸன்’ என்று சொல்வோம். வெல்ல உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களிலும் விலை குறைவாகக் கிடைக்கும். விளைச்சல் கம்மியாகும்போது விலை ஏறிவிடும்'' என்றார்.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் வெல்லம் அதிக அளவில் விற்பனையாகும். இதுபோன்ற விசேஷ தினங்களில் வெல்லத்தின் விலை அதிகமாக இருக்கும். இங்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகள் முதல் பெரிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகளின் படையெடுப்பு அதிகம். இங்குள்ள ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது நல்ல தரம் பார்த்தும், பேரம் பேசியும் வெல்லத்தை வாங்கிச் செல்லலாம். மேலும், தூள்களாக சிதைந்த வெல்லத்துண்டுகளை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்லவும் முடியும்.
சர்க்கரை உபயோகிக்கும் முன் நம் மக்கள் நாட்டு வெல்லத்தைத்தான் பயன்படுத்தினார்கள். அளவோடு பயன்படுத்தினால் நாட்டுவெல்லம் சிறந்த மருத்துவ குணங்கள் உடையது.  சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை பயன்படுத்தினால் நீரிழிவு நோய் குறைவதற்கு வாய்ப்புண்டு என்கின்றனர்.  
இனி, பழநிக்குச் செல்கிறவர்கள் அப்படியே பஞ்சாமிர்த டப்பாவோடு, நெய்க்காரப்பட்டி வெல்லத்தையும் கொஞ்சம் வாங்கி வரலாமே!
க.அருண்குமார்,
படங்கள்:  வீ.சிவக்குமார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites