இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, September 22, 2024

பேக்கிங் கிளிப் தயாரிப்பு

 

பேக்கிங் கிளிப்

பொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப் ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ. 20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

இந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.

தரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.

கிளிப் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் மேலே சொன்னது போல மாதம் குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம்.

எந்த அளவிற்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவிற்கு வருமானம் கூடும். இன்றைய நிலையில் ஒரு கிலோ கிளிப் ரூ. 50 வரை விற்பனையாகிறது.

தயாரிப்பு முறை

கிளிப் இயந்திரத்தை இயக்குவது மிகவும் எளிதானது. இயக்குவதற்கு ஒருவரே போதும். இடமும் அதிகம் தேவையில்லை. குறைந்த பட்சம்  10 x 10 அடி போதுமானது.

தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு பிடித்து இந்த இயந்திரத்தை கொண்டு தொழில் நடத்த முடியும்.

கிளிப் இயந்திரம் செமி ஆட்டோமெட்டிக்  முறையில் இயங்குகிறது. 0.5 குதிரை திறன் உள்ள மோட்டாரில் இயங்குகிறது. ISO 9000  தரச்சான்றிதழ் பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட கிளிப் இயந்திரத்தையே வாங்க வேண்டும்.

கிளிப் இயந்திரத்தில்  பேக்கிங், கட்டிங் என இரண்டு பகுதிகள் உள்ளன. கட்டிங் பகுதியில் நாம் போடும் இரும்பு துகள்கள் ஒரு கிளிப் அளவிற்கு துண்டிக்கப்படும்.  பேக்கிங் மிஷின் பகுதி, துண்டிக்கப்பட்ட அந்த இரும்புத் துகளை கிளிப்பாக மாற்றிவிடும்.

இதை 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 மில்லி மீட்டர் அளவிலும் 1 இஞ்ச்,  1.5 இஞ்ச் அளவுகளிலும் தயாரிக்கலாம். இந்த மோட்டாரை சிங்கிள் ஃபேஸ் அல்லது 2 ஃபேஸ் கரண்டில் இயக்கலாம்.

இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை அதன் விற்பனையாளரிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த தொழில் மிகச் சிறந்த தொழில் ஆகும். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவினர் இந்த தொழிலை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.

கிளிப் தயாரிப்பதற்கு மூலப் பொருளான  மெட்டல் ஸ்கிராப் ஒரு கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 35 க்கு கிடைக்கிறது.

இதைக் கொண்டு தயாரிக்கப்படும் கிளிப்களை 1 கிலோ ரூ. 50 க்கு விற்கலாம்.  லாபம் 1 கிலோவிற்கு ரூ. 10 கிடைக்கும்.  வாடகை, மின்சாரம், ஊழியர் சம்பளம் என்று சிலவற்றை கழித்தால் கூட குறைந்த பட்சம் ரூ. 5 லாபமாக கிடைக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 கிலோ உற்பத்தி செய்தால் ரூ. 750 லாபம் கிடைக்கும்.  மூலப் பொருட்கள் உள்ளுரிலேயே எளிதாக கிடைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கிளிப்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வருடம் முழுவதும் தங்குதடையின்றி பணி செய்யலாம்.

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு

 குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத் தான் போவோம். கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!

சந்தை வாய்ப்பு

தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.

முதலீடு

இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.2 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.

கட்டிடம்

சுமார் 1500 - 2500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தை விட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும். உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்! ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூலப் பொருள்

குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக் தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில், அல்பியா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.

இயந்திரம்

இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.

தயாரிப்பு முறை

மிக்ஸர்

குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.

எக்ஸ்ட்ரூடர்

இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.

கம்ப்ரஸ்ஸர்

கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளி வரும் காற்றானது டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.

கிரைண்டர்

கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்த பிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

பிளஸ்

மூலப் பொருளை கொஞ்சம் கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ளலாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.

மைனஸ்

இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப்பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.

வேலையாட்கள்

  • திறமையான வேலையாட்கள் - 3
  • சாதாரண வேலையாட்கள் - 3
  • மேலாளர் - 1
  • விற்பனையாளர் - 1
  • அக்கவுன்டன்ட் - 1
  • வாட்ச்மேன் - 2

கூடுதல் வாய்ப்பு

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண்ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது

ஆதாரம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை

பிரட் தயாரிப்பு

 

அறிமுகம்

கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையாகத் தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.

தயாரிப்பு முறை

மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.

அனுமதி

பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச் சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கட்டிடம்

ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டிடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.

இயந்திரம்

ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற  இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்

ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீரும் மின்சாரமும்

20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப் பொருள்கள்

இந்த தொழிலுக்கான முக்கிய மூலப் பொருள் மாவு தான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்த வித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.

வேலையாட்கள்

இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.

முந்தைய செலவுகள்

பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

செயல்பாட்டு மூலதனம்

முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.

சந்தை வாய்ப்பு

  • உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன.
  • இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறு விதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள்.
  • இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

ரிஸ்க்

தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்று விட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.

சாதகமான விஷயம்

  • பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங்களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
  • தற்போது குழந்தைகளின் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்டே கேக்குகளுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்கலாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடி வந்து பர்த்டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.

ஆதாரம்: தொழில்யுகம் மாத நாளிதழ்

நோட்டு புத்தகம் தயாரிப்பு

 

சந்தை வாய்ப்பு

நோட்டு புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்து விட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டு புத்தகங்களில் தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டு புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டுகளுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்து விடலாம். நோட்டு தயாரிப்பின் போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

நிலம் மற்றும் கட்டிடம்

இந்தத் தொழில் தொடங்க 1000 முதல் 1500 சதுர அடி வரை இடம் தேவை. இதில் குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டிடம் இருக்க வேண்டும்.

மூலப் பொருள்

நோட்டு புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர், சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ ரூ. 52-55 வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்

மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்து விடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.

தயாரிப்பு முறை

நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டு புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.

ரூலிங் மெஷின்

இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டு புத்தகத்தில் வரிகளைப் போட்டுக் கொள்ளலாம். இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனையும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.

கட்டிங் மெஷின்

எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

பின்னிங் மெஷின்

வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகளை கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.

பைண்டிங் மெஷின்

இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.

பிரின்டிங் மெஷின்

இந்த மெஷின் மூலம் தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்து வரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இது தான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும் போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது.

ஆதாரம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை

ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறைகள்

 

தக்காளி

தக்காளிக்கு வருடம் முழுவதும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பல நேரங்களில் நஷ்டம் தான் அதிகமாக இருக்கும். விவசாயிகளைப் பொறுத்த வரையில் விளைச்சலை அப்படியே சந்தையில் விற்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்கு மேல் யோசிப்பதேயில்லை. இந்த மன நிலை தான் நஷ்டத்திற்குக் காரணம். விலை குறையும் போது சாலையில் கொட்டி வீணாக்குவதற்கு பதிலாக அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ மாற்றினால் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

உதாரணமாக, ஒரு கிலோ தக்காளியில் சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரித்தால், 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்றைய சந்தையில் 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 ரூபாய் என்றாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதற்கான தயாரிப்பு செலவுக்காக 30 ரூபாயைக் கழித்தாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டால், தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

நன்றாக பழுத்த தக்காளி - ஒரு கிலோ

மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி

பூண்டு - 20 பல்

பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர் வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேக விட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளி கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டு சாப்பிட பயன்படுத்தலாம்.

தக்காளி ஜாம்

தேவையான பொருட்கள்

தக்காளி பழக் கூழ் - ஒரு கிலோ

சர்க்கரை - 750 கிராம்

சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியை சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப் பகுதிகளை சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸியில் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இது தான் தக்காளி பழக் கூழ்). சிறிது தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேக விட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக விழ வேண்டும். அது வரை கலவை வேக வேண்டும். இந்த பதம் வந்த பின் பாத்திரத்தை இறக்கி வைத்து சிறிது ஆற விட்டு, வாயகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆற விட்டு, அதன் பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடான கலவையை பாட்டில்களில் நிரப்பும் போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.

விற்பனை

நாம் மதிப்புக் கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி ­­மையம், சென்னை

இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு,

 

சீட் கவர்

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்

இருசக்கர வாகனங்களின் சீட்கள் பிராண்ட்களுக்கேற்ப ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இருசக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்து விடலாம்.

சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.

இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களைக் கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும்.

தயாரிக்கும் முறை

இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்துத் தைக்க வேண்டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்கமாக கொண்டு வர வேண்டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்).

முதலீடு

டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ. 1.25 லட்சம்

மின் தையல் இயந்திரம் ரூ. 13 ஆயிரம்

கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ. 16 ஆயிரம்

டூல் கிட் ரூ. 2 ஆயிரம்

பல்வேறு டிசைன் டை ரூ. 15 ஆயிரம்

சீட் கவர் மாதிரிகள் ரூ. 4 ஆயிரம்

இரண்டு கத்திரி ரூ. 1000

10 x 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ. 15 ஆயிரம்

ஒரு டேபிள் ரூ. 4 ஆயிரம்

ரேக் ரூ. 4 ஆயிரம்

மொத்த முதலீடு  ரூ. 2 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்

ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.

கிடைக்கும் இடங்கள்

டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன் சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு

ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர்கள் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ. 14 ஆயிரம், கடை வாடகை ரூ. 2 ஆயிரம், மின் கட்டணம் ரூ. 400, உழைப்பு கூலி ரூ. 6 ஆயிரம், இதர செலவுகள் ரூ. 2 ஆயிரம் என ரூ. 22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ. 180 ஆகிறது.

லாபம்

ஒரு சாதாரண சீட் கவர் ரூ. 250, டிசைன் சீட் கவர் ரூ. 350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர்கள் விற்பதன் மூலம் ரூ. 18,750, 50 டிசைன் கவர்கள் விற்பதன் மூலம் ரூ. 17,500 என மொத்த வருவாய் ரூ. 36,250. இதில் செலவு போக லாபம் ரூ. 13,850.

சந்தை வாய்ப்பு

இருசக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.  இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.

சத்து மாவு தயாரிப்பு

 பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல் நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்து மாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, சத்து மாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்

தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

ராகி 2 கிலோ (ரூ. 34)

சோளம் 2 கிலோ (ரூ. 40)

கம்பு 2 கிலோ (ரூ. 32)

பாசிப்பயறு 1/2 கிலோ (ரூ. 28)

கொள்ளு 1/2 கிலோ (ரூ. 10)

மக்காசோளம் 2 கிலோ (ரூ. 28)

பொட்டுக்கடலை 1 கிலோ (ரூ. 70)

சோயா 1 கிலோ (ரூ. 58)

தினை 1/2 கிலோ (ரூ. 18)

கருப்பு உளுந்து 1/2 கிலோ (ரூ. 30)

சம்பா கோதுமை 1/2 கிலோ (ரூ. 30)

பார்லி 1/2 கிலோ (ரூ. 30)

நிலக்கடலை 1/2 கிலோ (ரூ. 40)

அவல் 1/2 கிலோ (ரூ. 40)

ஜவ்வரிசி 1/2 கிலோ (ரூ. 25)

வெள்ளை எள் 100 கிராம் (ரூ. 12)

கசகசா 50 கிராம் (ரூ. 30)

ஏலம் 50 கிராம் (ரூ. 50)

முந்திரி 50 கிராம் (ரூ. 25)

சாரப்பருப்பு 50 கிராம் (ரூ. 25)

பாதாம் 50 கிராம் (ரூ. 25)

ஓமம் 50 கிராம் (ரூ. 15)

சுக்கு 50 கிராம் (ரூ.15)

பிஸ்தா 50 கிராம் (ரூ. 20)

ஜாதிக்காய் 2 (ரூ. 5)

மாசிக்காய் 2 (ரூ. 5)

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியே கூட குடிக்கலாம். காலையில் 2 டம்ளர்  சத்து மாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

உற்பத்தி செலவு

தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ. 740.

அரவை கூலி கிலோ ரூ. 4 வீதம் ரூ. 60.

1 ஆள் கூலி ரூ. 150.

ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ. 950.

மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ. 23,750.

விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ. 1,250.

மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்

15 கிலோ தானியங்களை காய வைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ. 1,440. 25 நாளில் வருவாய் ரூ. 36,000. செலவு போக லாபம் ரூ. 11,000.

சந்தை வாய்ப்பு

பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்து மாவை  தற்போது மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை.

சோப் தயாரிப்பு,

 புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால் தான் இப்போதைய போட்டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.

தயாரிப்பு முறை

சோப் தயாரிக்கும் இயந்திரமானது கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓடத் துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி., நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.

கட்டமைப்பு

2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ. 50 ஆயிரம்

மின் இணைப்பு 5 எச்பி ரூ. 5 ஆயிரம்

சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ. 5 லட்சம்

சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ. 2 ஆயிரம்

10 கேன் ரூ. 2 ஆயிரம்

இதர பொருட்கள் ரூ. 1000

அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ. 5.6 லட்சம்

முதல் மாத உற்பத்தி செலவு ரூ. 5.77 லட்சம்

மொத்த முதலீடு ரூ. 11.37 லட்சம்

உற்பத்தி செலவு

ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ. 27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ. 5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ. 5 ஆயிரம், மின் கட்டணம் ரூ. 2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ. 30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ. 37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ. 5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ. 28,850 செலவாகிறது.

வருவாய்

ஒரு டன் சோப்பை ரூ. 30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ. 1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ. 23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

தேவையான பொருட்கள்

சோடா (டன் ரூ .21 ஆயிரம்)

சிலரி ஆயில் (டன் ரூ. 95 ஆயிரம்)

டினோபால் பவுடர் (கிலோ ரூ. 1350)

க்ளே (டன் ரூ. 5 ஆயிரம்)

கால்சைட் (டன் ரூ. 3 ஆயிரம்)

சிலிகேட் (டன் ரூ. 8 ஆயிரம்)

எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ. 90 ஆயிரம்)

சென்ட் (கிலோ ரூ. 1000)

நீல நிற பவுடர் (கிலோ ரூ. 100)

கிடைக்கும் இடங்கள்

சோடா - கோவை

சிலரி ஆயில் -  புதுவை

டினோபால் பவுடர் - மும்பை

க்ளே - கேரளா

கால்சைட் -  சேலம்

சிலிகேட் - கோவை

எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை

மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு

குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக் கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம். கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன் மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை.

தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.  சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றது தான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.

ஆதாரம்: தீபம் கல்வி மற்றும் பயிற்சி மையம்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites