இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, February 9, 2014

பாறையிலும் பயிர் வளரும்... நிரூபித்துக் காட்டிய விவசாயி


மனசு வெச்சா... பாறையிலயும் பயிர் பண்ணலாம்' என்பார்கள். இதையே மந்திரமாக எடுத்துக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைப்பட்டியில், கருங்கல் பாறையாக இருந்த நிலத்தை, கடின முயற்சியால், விளைநிலமாக மாற்றியிருக்கிறார், கணபதி.
''இந்த நிலத்தை விவசாய நிலமா மாத்த முயற்சி எடுத்துக்கிட்டிருந்தப்ப, பார்த்தவங்க எல்லாம், 'கட்டாந்தரையில ஏம்ப்பா விவசாயம் பண்றே’னு கிண்டல் செஞ்சாங்க. அவங்க சொன்னதுலயும் ஒரு நியாயம் இருந்துச்சு. ஏன்னா, இது கருங்கல் பாறைதான். ஆனா, பத்து வருஷ போராட்டத்துக்குப் பிறகு, இப்ப பயிர் விளைஞ்சு நிக்கிறதைப் பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஊரே மலைச்சு நிக்குது'' என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டும் கணபதி, ஒரு வழக்கறிஞர்.
''பி.ஏ, பி.எல். படிச்சு முடிச்ச நான், சென்னை, தலைமைச் செயலகத்துல மொழிபெயர்ப்பாளர் வேலையில சேர்ந்தேன். எங்க குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அதனால, எனக்கும் விவசாயத்து மேல ஆர்வம். 84-ம் வருஷம் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, கையில இருந்த காசை வெச்சு... கொஞ்சம் தரிசு நிலங்களை விலைக்கு வாங்கியும், கொஞ்ச நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் விவசாயத்தை ஆரம்பிச்சேன். அப்படித்தான் இந்த நிலமும் கைக்கு வந்துச்சு. ரெண்டு ஏக்கர் முழுசும் புதர்காடு மாதிரி இருந்துச்சு. 'இந்த நிலத்துல ஒண்μம் செய்ய முடியாது’னு ஊரே சொன்னாலும், 'விவசாய நிலமா மாத்தமுடியும்’னு நம்பிக்கை இருந்துச்சு'' என்று சொல்லும் கணபதி, அதை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்தும் இருக்கிறார்.
''2004-ம் வருஷம், கொஞ்ச பேரை சேர்த்துக்கிட்டு பாறையை உடைக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக பாறைகளை உடைச்சு, ஆறு அடி வரைக்கும் எடுத்தோம். அப்பறம், கண்மாய் மண், என்னோட வயல்ல இருந்த மேல் மண் எல்லாத்தையும் கொண்டு வந்து... மூன்றரை அடி உயரத்துக்கு கொட்டி நிலத்தை சமப்படுத்தினோம். டிராக்டர் வெச்சு உழுது சின்னச் சின்ன கற்களையெல்லாம் எடுத்தோம். பாறைங்கிறதால 'போர்’ போட முடியல. அதனால, 14 கிணறுகளை வெட்டியிருக்கேன். ஒவ்வொண்μம் 70 அடி ஆழம். சில கிணறுகளுக்கு கரன்ட் கனெக்ஷன் இருக்கு. கனெக்ஷன் இல்லாத கிணறுகள்ல ஜெனரேட்டர் வெச்சு தண்ணி இறைச்சுதான் விவசாயம் பண்றேன்.
எனக்கு சொந்தமா 150 மாடுகளும், 400 ஆடுகளும் இருக்கு. ஒவ்வொரு ஏக்கர்லயும் நாலு நாளைக்கு மாட்டையும் ஆட்டையும் கட்டி வெச்சுடுவேன். வடக்கயிறால மூμ வரிசையா பிரிச்சு, ஒவ்வொரு வரிசையிலும் 15 மாடுகளை எதிர் எதிரா கட்டிடுவேன். ஆடுகளை மொத்தமாகக் கட்டிடுவேன். இதனால, அதுகளோட சாணம், மூத்திரம் ரெண்டும் நிலத்திலேயே விழுந்துடும். அஞ்சு நாள் கழிச்சு சாணம் காயுறதுக்குள்ள உழுது விட்டுட்டதால... அவ்வளவு சத்தும் மண்ணுல சேர்ந்து நிலம் வளமாகிடுச்சு. 15 ஏக்கர்ல மக்காச்சோளம், 5 ஏக்கர்ல சின்ன வெங்காயம் போட்டிருந்தேன். மக்காச்சோளத்துல 30 டன், சின்ன வெங்காயத்துல 7 டன் மகசூல் கிடைச்சுது.
மாசத்துக்கு ஒரு தடவை வேப்பம் பிண்ணாக்குக் கரைசலை அடிச்சதை தவிர, உரம்னு எதையுமே தனியா வாங்கி கொட்டல. 'மாட்டுச்சாணத்தையும், மூத்திரத்தையும் மட்டுந்தான் அடியுரமா போட்டேன்’னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க. அந்தளவுக்கு விளைஞ்சு நின்னதுதான் காரணம். இயற்கை உரத்தோட அருமை இப்பதான் இந்தப் பக்கம் இருக்கறவங்களுக்கு புரியுது'' என்று சொன்ன கணபதி,
''மக்காச்சோளம் ஒரு டன் சராசரியா 15,000 ரூபாய் விலை போனதுல... 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. சின்ன வெங்காயத்துக்கும் நல்ல விலை கிடைச்சுது. சராசரியா கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இதுல செலவு ஒண்ணரை லட்ச ரூபாய் போனா, 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபா லாபம். மக்காச்சோளத் தட்டையை அப்படியே மடக்கி உழுது, கேழ்வரகு நடலாம்னு இருக்கேன்'' என்ற கணபதி,
'மொத்தமா கணக்குப் பார்த்தா... கொஞ்சம் கூடுதலாத்தான் செலவழிச்சுருக் கேன். ஆனா, ஒண்μக்கும் உதவாத பாறை நிலம் விளைஞ்சு நிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்துக்கு ஈடு, இணை கிடையாது. அதனால தான், என்னை 'அட்வகேட்’னு சொல்லிக்கிறதைவிட 'விவசாயி’னு தான் சொல்லிக்கிறேன்'' என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசினார்!

ரியல் எஸ்டேட்டுக்கு தடா!
அரண்மனைப்பட்டி, குருந்தம்பாறை ஆகிய பகுதிகள், திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளன. அந்தப் பகுதிகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர் வளைக்க முயல... அதைத் தடுத்து நிறுத்தியிருகிறார், கணபதி. இதைப் பற்றி பேசியவர், ''மழை இல்லாததால, வறட்சியோட பிடியில சிக்கின விவசாயிங்க, திக்குத் தெரியாம நின்னாங்க. இதைப் பயன்படுத்திக்கிட்ட சிலர், விவசாயிங்ககிட்ட பணவலையை வீசினாங்க. அது தெரிஞ்சதுமே, ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, 'மழையில்லாத காரணத்துக்காக யாரும் நிலத்தை விக்காதீங்க. விவசாயம் செய்யறதுக்கு தண்ணியும், விதைநெல்லும் நான் கொடுக்குறேன்’னு சொன்னேன். அதனால, நிறைய பேர் ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வாங்கின அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டாங்க'' என்று சொன்னார்.
இதை ஆமோதித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமையா, ''அஞ்சு வருஷத்துக்கு முன்ன சரியா மழையில்லாததால, 'நிலத்தை வித்துடலாம்’னு முடிவு பண்ணினேன். அதைத் தெரிஞ்சுகிட்டு கணபதி ஐயாதான் அவர் கிணத்துல இருந்து, மூμ கிலோ மீட்டர் தூரம் இருக்கற என் நிலத்துக்கு பைப் மூலமா தண்ணியும் கொடுத்து... விதைநெல்லும் கொடுத்தாரு. அவராலதான் இப்போ தொடர்ந்து விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இல்லேனா, இன்னிக்கு என் நிலத்துலயும் ரியல் எஸ்டேட் கொடி பறக்க ஆரம்பிச்சுருக்கும்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு,
கணபதி,
செல்போன்: 98400-98480.

கைவண்ணமாகுது காந்தம்!

வெளிநாடு சென்று வருவோர் மறக்காமல் வாங்கி வரும் அன்பளிப்புப் பொருட்களில் முக்கியமானது மேக்னட் வைத்த போட்டோ ஃப்ரேம்ஸ்.  பாஸ்போர்ட் சைஸ் அல்லது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களை அதனுள் பொருத்தி, ஃப்ரிட்ஜில் ஒட்ட வைத்துவிடலாம். வீட்டுக்கு வருவோரின்  கவனம் ஈர்க்கும் இது.
Kaivannamakutu magnet!

சென்னையைச் சேர்ந்த ஜனனியின் கைவண்ணத்தில் உருவாகும் ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள், நவராத்திரி மற்றும் இதர விசேஷங்களுக்கும் அன்பளிப்பாகக்  கொடுக்கப் பொருத்தமானவை.‘‘நம்மூர்ல விதம் விதமான ஃப்ரிட்ஜ் மேக்னட்ஸ் கிடைக்குது. அதை அப்படியே ஃப்ரிட்ஜ்ல ஒட்டி வைக்கலாம்.  அவ்வளவுதான். அதுவே போட்டோ ஃப்ரேம் மாடல் ஃப்ரிட்ஜ் மேக்னட்னா, குழந்தைங்க படங்களையும் வீட்ல உள்ளவங்க படங்களையும் பொருத்தி  ஒட்டலாம். 

ஒவ்வொரு முறை அந்தப் படங்களைப் பார்க்கிற போதும் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். மனுஷங்க படம் வேண்டாம்னு நினைக்கிறவங்க, சாமி  படங்களையோ, கார்ட்டூன் படங்களையோகூட பொருத்தி வைக்கலாம்’’ என்கிற ஜனனி, வெறும் 500 ரூபாய் முதலீட்டில் இதைச் செய்யத்  தொடங்கலாம் என நம்பிக்கைத் தருகிறார்.‘‘வுட், மணிகள், ஸ்டோன்ஸ், மேக்னட், க்ளே, பசை, வார்னிஷ், பிரஷ், ஃபேப்ரிக் கலர்ஸ்னு இதுக்குத்  தேவையான பொருட்கள் எளிமையா கிடைக்கக் கூடியவை.                        

மரத்தை நமக்கு விருப்பமான ஷேப்ல வெட்டிக்கிட்டு, அதுக்குள்ள போட்டோ வைக்க இடம் விட்டுட்டு, டிசைன் பண்ணணும். மேக்னட் பொருத்தினா  ஃப்ரிட்ஜ்லயோ, பீரோவுலயோ ஒட்ட வைக்கலாம். அது வேண்டாம்னு விரும்பறவங்க, டபுள் சைட் டேப் வச்சு, எந்த இடத்துல வேணாலும்  ஒட்டிக்கலாம். அதுவும் பிடிக்கலையா, அதோட பின் பக்கம் குட்டி ஸ்டாண்டு பொருத்தி ஷோ கேஸ்ல சாதாரண போட்டோ ஃப்ரேமாகவும்  உபயோகிக்கலாம். 

விநாயகர், பறவை, செல்போன் ஸ்டாண்டு, கலசம், துளசி மாடம், கார்ட்டூன் கேரக்டர்னு கற்பனைக்கேத்தபடி எந்த உருவத்தை வேணாலும் இதுல  கொண்டு வரலாம். அளவையும், வேலைப்பாட்டையும் பொறுத்து 50 ரூபாய்லேருந்து 100 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம்  நிச்சயம்’’ என்கிற ஜனனி ஒரே நாள் பயிற்சியில் 5 மாடல் மேக்னட் போட்டோ ஃப்ரேம்களை தேவையான பொருட்கள் உள்பட 500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுத் தரக் காத்திருக்கிறார். 

98410 19293

பொம்மையாகுது உல்லன்!

உல்லன் நூல் என்றதும் நமக்கெல்லாம் குல்லாவும், ஸ்வெட்டரும்தான் நினைவுக்கு வரும். கன்னியாகுமரியைச் சேர்ந்த செண்பகவள்ளியின்  கைவண்ணத்தில் ஒவ்வொரு கண்டு உல்லன் நூலும் அழகிய கைவினைக் கலைப்பொருளாக உருவெடுக்கிறது.Getting a wool doll!


‘‘பிளஸ் டூதான் படிச்சிருக்கேன். சமுதாய மேம்பாட்டுத் திட்டத்துல நிறைய கைவினைக் கலைகள் கத்துக்கிட்டேன். அப்படிக் கத்துக்கிட்டதுதான்  உல்லன் நூல் வேலைப்பாடும், குரோஷா வேலைப்பாடும். உல்லன்ல மாலை, திரைச்சீலை, குட்டிக் குட்டி கூடைகள், பொம்மைகள், கோழிக்குஞ்சு,  டெலிபோன் மேட், டேபிள் மேட், குடைன்னு ஏகப்பட்டது செய்யலாம். 

சாதாரணமா ஃபர் கிளாத்ல பொம்மைகள் பண்றதுன்னா, அதுக்கான செலவு ரொம்ப அதிகம். ஆனா, அதே பொம்மைகளை உல்லன்ல செய்தா அழகும்  கூடும்... செலவும் குறைவு’’ என்கிறவர் குரோஷா முறையிலும் பலவித கைவினைப் பொருட்களைச் செய்கிறார்.‘‘குரோஷா பின்னத்  தெரிஞ்சவங்களுக்கு ஹேண்ட்பேக், பர்ஸ், சின்னச் சின்ன பொம்மைகள்னு அதுக்கேத்த பொருட்கள் இருக்கு. பின்னத் தெரியாதவங்க உல்லன்ல  செய்யலாம். ரெண்டுக்குமே தனித்தனியா 500 ரூபாய் முதலீடு போதுமானது. உல்லன் நூல், குரோஷா ஊசி, ஃப்ரேம், பூம்பாம் செட்... இது மட்டும்தான்  தேவையான பொருட்கள். 

ஒரு பொருள் செய்ய அரை மணி நேரம் போதும். குறைஞ்சபட்சம் 15 ரூபாய்லேருந்தே விற்கலாம். டெடிபியர் மாதிரியான பொம்மைகளை அளவைப்  பொறுத்து 25 முதல் 75 ரூபாய் வரைக்கும் கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் நிற்கும். ஃபேன்சி ஸ்டோர், கண்காட்சிகள்ல விற்கலாம். நவராத்திரிக்கு  ஒரே மாதிரியான அன்பளிப்பு கொடுக்க நினைக்கிறவங்களுக்கு சரியான சாய்ஸ் என்கிற செண்பகவள்ளி, குரோஷா பின்னல் தேவைப்படாத 5  பொருட்களை 250 ரூபாய் கட்டணத்தில் ஒரே நாளிலும், குரோஷாவுக்கான அடிப்படைப் பயிற்சியுடன் சேர்த்து, 10 பொருட்களை 2 நாட்கள்  பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்திலும் கற்றுத் தருகிறார். பத்து, பதினைந்து பேர் கொண்ட குழுவாகக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு, அவரவர்  ஊரிலேயே சென்று வகுப்புகள் எடுக் கவும் தயாராம். 

99446 73363

அழகுப் பொருளாகுது மூங்கில்!

மூங்கில் என்றால் புல்லாங்குழலைத் தவிர நமக்கெல்லாம் வேறு ஒன்றும் நினைவுக்கு வராது. சென்னை, ஆவடியைச் சேர்ந்த பவானியின் கைகளில்  மூங்கில் சொன்னபடியெல்லாம் கேட்டு, அழகழகான கலைப் பொருட்களாக வடிவம் பெறுகிறது!

‘‘மாஸ்டர் ஆஃப்  ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சிருக்கேன். படிக்கும் போது டெக்ஸ்டைல் டிசைனிங்தான் என்னோட பிரதான பாடம். என்னோட படிப்பு  சம்பந்தப்பட்ட பிரஷ், டூல்ஸை எல்லாம் வச்சுக்க, சும்மா நானாகவே மூங்கில்ல ஒரு பாக்ஸ் டிசைன் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர்  கேட்க ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் விசாரிக்கவே, எனக்கும் அதுல ஆர்வம் அதிகமானது.

அப்படியே மூங்கில்ல ஒவ்வொரு பொருளா பண்ண ஆரம்பிச்சேன். இன்னிக்கு அதுதான் என்னோட முதல் விருப்பம்னு சொல்ற அளவுக்கு  வளர்ந்திருக்கு...’’ என்கிற பவானி, மூங்கிலில் பேனா ஸ்டாண்டு, மொபைல் ஸ்டான்டு, வால் ஹேங்கிங், கொட்டாங்குச்சி ஸ்டாண்டு,  லேம்ப் ஷேடு,  நகைப்பெட்டி, பிளவர் வேஸ் என விதம்விதமான பொருட்களைச் செய்கிறார்.
Beauty porulakutu bamboo!

‘‘மரச்சாமான்கள் விற்கற கடைகள்ல மூங்கில் குச்சிகள் கிடைக்கும். அடிக் கணக்குல வாங்கணும். அது தவிர, கட்டிங் டூல்ஸ், பிரம்பு, கலர், ஸ்க்ரூ,  அலங்காரப் பொருட்கள்னு 1,000 ரூபாய் முதலீடு போதும். ஒரு அடி மூங்கில் குச்சியோட விலை 50 ரூபாய். ஒரு பொருள் பண்ண குறைஞ்ச பட்சம்  ஒரு அடி தேவை. 50 சதவிகித லாபம் உறுதி.

கட்டிங் டூல்ஸ் வச்சு நாமளே மூங்கிலைக் குடைஞ்சு, வெட்டி, நமக்கேத்த டிசைனை கொண்டு வரலாம். ஒரு பொருள் பண்ண வெறும் 45 நிமிடங்கள்  போதும். ஆடம்பரமான அன்பளிப்புகள் கொடுக்கணும், அதே நேரம் பட்ஜெட்டும் இடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க, மூங்கில் பொருட்களைத்  தேர்ந்தெடுக்கலாம். 

இன்னும் சொல்லப் போனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, டிசைனர் பீஸாகவும் செய்து தரலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எத்தனை  காலத்துக்கும் அப்படியே இருக்கும்’’ என்கிறவரிடம், 2 நாள் பயிற்சியில் 5 விதமான மூங்கில் கலைப் பொருட்களை தேவையான பொருட்களுக்கான  செலவுடன் சேர்த்து 1,000 ரூபாயில் கற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு 97892 99716

அழகு நுணுக்கம் கலாசாரம்!

மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பார்பி பொம்மைகளையும் செயற்கை இழைகளால் செய்யப்படுகிற புசுபுசு  பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை. ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கினாலும், இந்த  பொம்மைகளில் ஆரோக்கியத்துக்கோ, தரத்துக்கோ துளியும் உத்தரவாதமில்லை. பொம்மையின் இழைத்துகளோ, சாயமோ குழந்தைகளின் வயிற்றுக்குள்  போனால் நிச்சயம் கேடுதான். ஆனாலும், பெற்றோருக்கு வேறு வழியில்லை. 
Beauty resolution culture!
“ஏன் இல்லை... பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிற கொண்டபள்ளி பொம்மைகளை வாங்கிக் கொடுத்துப் பழக்குங்க. காணாமப் போயிட்டிருக்கிற  கலாசாரத்தையும் கட்டிக் காப்பாத்தலாம். உங்க பிள்ளைங்களும் ஆரோக்கியமா இருப்பாங்க. இந்த வருஷ நவராத்திரிக்கு உங்க வீட்டு கொலுவை  அலங்கரிக்கிற கொண்டபள்ளி பொம்மைகள், தொடர்ந்து உங்க குழந்தைங்க விளையாடப் பயன்படட்டுமே...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாதவி. 

பொம்மைகளுக்கு, குறிப்பாக கொலு பொம்மைகளுக்குப் பெயர் போன கொண்டபள்ளி கிராமத்திலிருந்து விதம் விதமான பொம்மைகளை வரவழைத்து,  காட்சிக்கும் விற்பனைக்கும் வைப்பதுடன், அந்த பொம்மைகளின் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி வருகிறார் மாதவி.  (www.kondapallihandicrafts.blogspot.com)‘‘ஆந்திராவுல உள்ள ஒரு கிராமத்தோட பெயர்தான் கொண்டபள்ளி. அங்கே வாழற மக்களோட பிரதான  தொழில், பொம்மைகள் பண்றது. பொல்கின்னு சொல்லப்படற ஒரு வகையான மரத்தை வச்சு, முழுக்க, முழுக்க கைகளாலயே செய்யப்படற  பொம்மைகள். 

எடை குறைவா, கையாள சுலபமா இருக்கும். கொண்டபள்ளியில உள்ள ஒவ்வொரு குடும்பமுமே இந்த பொம்மைகள் செய்யற தொழில்  தெரிஞ்சவங்களா இருப்பாங்க. ஆண்கள் வெட்டி, செதுக்கிக் கொடுக்க, பெண்கள் சாயம் ஏத்தி அழகுப்படுத்துவாங்க.பொம்மையோட ஒவ்வொரு  பகுதியையும் தனித்தனியே, ஒவ்வொரு கலைஞரும் கைகளாலேயே செய்து, பிறகு இணைப்பாங்க. அப்படி இணைக்க  புளியங்கொட்டையில இருந்து  செய்யற ஒருவிதமான இயற்கையான பசையை வச்சுத்தான் இணைப்பாங்க. பொம்மைகளை ஒட்டி, இணைச்சு முடிச்சதும், அடுத்து சாயம் பூசுவாங்க. 

அந்தச் சாயம் கூட இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதுதான். அதனால குழந்தைங்க விளையாடவும் பாதுகாப்பானது.ஒவ்வொரு பொம்மையும்  யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கேரக்டர்களாக இருக்கும். இதிகாசங்கள்லேருந்தும், நாட்டுப்புறக் கலைகள்லேருந்தும் கூட உருவங்கள்  செய்வாங்க. மனித முகங்கள், கடவுள் உருவங்கள், விலங்குகள், கொண்டபள்ளி வீரர்கள் போன்றவையும் அடக்கம்.  உதாரணத்துக்கு பூம்பூம் மாடு,  அரிசி வியாபாரி, காய்கறிச் சந்தை, சலவைத் தொழிலாளி, உழவர்கள், பால் கறக்கும் பெண்கள், மரம் ஏறும் ஆண்கள், தண்ணீர் இறைக்கிற பெண்கள்...  இப்படி! இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமப் போன பல தொழில் களையும் அதோட பின்னணியில உள்ள மக்களையும் அவங்க  வாழ்க்கையையும் அந்த பொம்மைகள்ல பார்க்கலாம். பக்தி சார்ந்த விஷயங்களையும் விட்டு வைக்கறதில்லை கொண்டபள்ளி கைவினைக்  கலைஞர்கள். 

தசாவதாரம், கீதோபதேசம், ராமாயணம், முருகனும் மயிலும், அனுமனும் ராமனும், நாட்டிய கணேசர்னு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொம்மைகளையும்  இத்தனை அழகா, நுணுக்கமான வேலைப்பாடுகளோட வேற எங்கேயும் பார்க்க முடியாது’’ என்கிறார் மாதவி. கைகளால் செய்யப்படுகிற கொண்டபள்ளி  பொம்மைகளுக்கு நிகராக கவனம் ஈர்க்கின்றன ஏட்டிகோப்பக்கா பொம்மைகள். கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், பொம்மை  ஸ்கூட்டர், கார், ரயில்வண்டி, மாட்டுவண்டி, சொப்புச் சாமான்கள் என அவற்றைப் பார்க்கும்போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப  ஏங்குகிறது மனது. இத்தனை பாரம்பரியம் மிக்க கொண்டபள்ளி பொம்மைகளுக்கு புவியியல்சார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  நல்லதொரு ஆரம்பத்துக்குக் காரணமாகட்டும் நவராத்திரி!   

Thursday, February 6, 2014

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!


விவசாயம்' என்றதுமே... 'அதுக்கெல்லாம் ஏக்கர் கணக்குல நிலம், ஆள் பலம், பணம் எல்லாம் இருந்தாத்தான் சாத்தியம்’ என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும். ஆனால், ஏக்கர் கணக்கில் நிலமோ, பணமோ தேவையில்லை. மனதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால்... கையகல நிலத்திலும், கலக்கலாக விவசாயம் செய்ய முடியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை விவசாயிகளில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், காவல் ஆய்வாளர் இளங்கோவன்.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912.

ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை


இலக்கில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய வேண்டிய குழந்தைகளின் சிறகை ஒடித்து... வகுப்பறைக்குள் அடைத்து வைத்து பாடங்களைச் சுமத்தி மழலை குணத்தை மரணிக்கச் செய்து விடுகிறது, நமது கல்விமுறை. வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் குஷியோடு கல்வி கற்கும் அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.
வழக்கமான பாடங்களுடன், விவசாயம், கைவினைத்தொழில், விதவிதமான விளையாட்டுகள்... என சொல்லிக்கொடுப்பதன் மூலமாக, 'பாடம் கற்கிறோம்’ என்கிற எண்ணமே இல்லாமல் விளையாட்டுப் போக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள். பசுமையான நெல் வயல்கள், மண்ணால் கட்டப்பட்ட பசுமைக் கட்டடங்கள், மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்கள், விளையாடி மகிழும் குழந்தைகள்... என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பள்ளியில் ஆஜரானோம்.
பள்ளியைப் பற்றி விளக்கினார், தாளாளர்களில் ஒருவரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபேட்ரிக் என்கிற கோவிந்தா.
பாகுபாடு பார்ப்பதில்லை!
''அருண், லீலா, பூர்ணிமா, ஆலீஸ் இவங்களோட நானும்னு ஐந்து பேர் சேர்ந்து, 2009-ம் வருஷம் இந்தப் பள்ளியைத் தொடங்கினோம். முதல் கட்டமாக வேடியப்பனூர் கிராமத்தில் 20 மாணவர்களோடு வாடகைக் கட்டடத்தில் பள்ளியை ஆரம்பித்தோம். பிறகு நண்பர்கள், தன்னார்வலர்களின் உதவியோடு 'தி ஃபாரஸ்ட் வே’ என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி... கணத்தம்பூண்டியில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிக்குத் தேவையான நிரந்தரக் கட்டடங்களைக் கட்டினோம். சிமெண்ட் பயன்படுத்தாமல், சுட்ட செங்கல், சுண்ணாம்பு, பாறைகள் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை வைத்தே கட்டி, 2011-ம் ஆண்டு இங்கே வந்தோம்.
எங்களின் நோக்கம்... எல்லாவிதமான மக்களுக்கும் கல்வி கொடுப்பதுதான். வெள்ளைக்காரர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடுகள் பார்ப்பதில்லை. ஏழைக் குழந்தைகளிடம் பள்ளிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மற்றவர்களிடம் பள்ளிச் செலவுக்காக குறைவான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறோம். தற்சமயம் 44 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் இருக்கிறோம்'' என்று முன்னுரை கொடுத்த கோவிந்தா, தொடர்ந்தார்.
விளையாட்டு மூலம் கல்வி!
'பெரும்பாலான பள்ளிகள் வழக்கமான பாடத்தோடு, வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை ஊறுகாய் போலத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள். நாங்கள் இயற்கை விவசாயம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியம்... என அனைத்தையும் பாடமாகவே இணைத்திருக்கிறோம். மேலும், மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியாக இல்லாமல் களப்பயிற்சியாகவே கற்றுக் கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொள்வதுடன், உணரவும் முடிகிறது. 12 வயது வரையுள்ள குழந்தைகளைச் சுதந்திரமாக, இயற்கையோடு இயங்க விடுவதால், வருங்கால வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
நாங்கள் மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். மூன்றரை வயது முதல், ஐந்தரை வயது வரை; 6 வயது முதல் 8 வயது வரை (யங்கர் குரூப்); 8 வயதுக்கு மேல் (மிடிலேஜ் குரூப்) என்று பிரித்து வைத்திருக்கிறோம். முதல் பிரிவிலிருக்கும் குழந்தைகள... எழுத்துகளை எழுதச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. விளையாட்டு மூலமாகவே வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்கும் முறையை வைத்திருக்கிறோம். தினமும் காலையில் 'நேச்சர் வாக்’ என்ற பெயரில் செடிகள், மரங்கள், காய்கறிகள், பறவைகள் என எல்லாவற்றையும் காட்டி, தொட்டு உணரச் செய்கிறோம். அவர்கள் எண்ணம்போல இங்கு விளையாடலாம், தூங்கலாம், மற்றவர்களுக்கு கதை சொல்லலாம், படம் வரையலாம்'' என்று ஆச்சர்யப்படுத்திய கோவிந்தா, தொடர்ந்தார்.
இங்கு வகுப்புகள் இல்லை!
''எங்கள் பள்ளியில் தற்போது மாநில அரசின் சமச்சீர்க்கல்வி ஆங்கிலப் பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு வரை நடத்துகிறோம். வகுப்பறை, மரத்தடி என மாணவர்கள் விரும்பிய இடத்தில்தான் பாடம் நடத்துவோம். எல்லா மாணவர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் தோட்ட வேலைக்கான வகுப்புகள் உண்டு. அதில் பாத்தி அமைப்பது, நடவு செய்வது, நெல் நடவு, ஜீவாமிர்தம் தயாரிப்பது... என பலவிதமான வேலைகளைச் செய்கின்றனர். 'மிடிலேஜ் குரூப்’ மாணவர்களுக்கு எனத் தனித்தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். அதில் ஒவ்வொருவரும், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய்... என பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள். மூன்று ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளைச் சம்பா, பொன்னி நெல் ரகங்களை சாகுபடி செய்கிறோம். நெல் நடவு சமயத்தில் மாணவர்களுக்காக கொஞ்சம் இடத்தை ஒதுக்கி, அவர்களை நடவு செய்யச் சொல்கிறோம். அந்தப் பயிர் வளர வளர மாணவர்கள் அதிகமாக உற்சாகமடைகின்றனர்.
அனைத்தையும் கற்றுத்தரும் கள ஆய்வு!
விரும்பும்போது மாட்டுவண்டிப் பயணம், மாடுகள் மூலம் உழவு... என மாணவர்களே செய்து பார்க்கிறார்கள். வெள்ளிக்கிழமைதோறும், காடுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு விதம்விதமானப் பறவைகளைப் பார்த்து உணர்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 25 பறவைகளின் பெயர்களாவது தெரியும். மேலும், மாணவர்களை நேரடியாக ஏரிப்பாசன முறை, கோயில்கள், அவற்றைச் சுற்றியுள்ள கடைகள், காய்கறிச் சந்தைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும்படியாக கள ஆய்வுக்கும் உட்படுத்துகிறோம். தண்ணீர், நெல், சோழர்கள், பாண்டியர், பல்லவர் எனப் பல தலைப்புகளில் ஆய்வு செய்யவும் கற்றுக் கொடுத்திருக்கிறோம்'' என்ற கோவிந்தா,
''இந்த அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாக இருந்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது இவர்கள்தான்'' என பள்ளி தாளாளர்களில் ஒருவரான அருண் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா ஆகியோரைக் காட்டினார்.
இயற்கையை நேசி..! உலகம் அழியுமா யோசி!
''இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, மூணு வருஷம் மும்பையில வேலை பார்த்தேன். அந்த வாழ்க்கைப் பிடிக்காம, சென்னைக்கே திரும்பிட்டேன். என்னோட தாத்தா, ரமண மகரிஷி கூடவே இருந்தவர். அதனால நான் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போவேன். அந்த சமயங்கள்ல மலையில் இருக்கும் மரங்கள், பறவைகளைப் பார்த்து, ஆசிரமத்திலேயே சேவை செய்ய அனுமதி கேட்டேன். 'சின்ன வயசு... இப்ப வேண்டாம்’னு சொல்லி, கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் சார்புல நடத்தப்படுற 'தி ஸ்கூல்’ல தோட்டக்கலை டீச்சரா சேர்த்து விட்டாங்க. இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டு, மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
'டைம் வித் நேச்சர்’னு ஒரு திட்டத்தை உருவாக்கி, மரங்கள், பறவைகள் பத்தி சொல்லிக் கொடுத்து இயற்கையை நேசிக்க வெச்சேன். சென்னையில ஸ்பென்ஸர், மால்கள், ஏ.சி.னு பழக்கப்பட்ட பணக்காரக் குழந்தைகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுத் துச்சு. ஒருமுறை ஆரோவில் போகும்போது, கோவிந்தாவை சந்திச்சேன். அவர், திருவண்ணாமலை மலையில மரம் நட்டு 'சூழல் பூங்கா’ உருவாக்கினதைப் பத்திச் சொன்னார். 'வாங்களேன்... ஒரு ஸ்கூல் நடத்தலாம்’னு கூப்பிட்டார். உடனே நானும் என் மனைவியும் திருவண்ணாமலைக்கு வந்துட்டோம்'' என்றார், அருண்.
இதுதான் வாழ்க்கைக் கல்வி!
அவரைத் தொடர்ந்த பூர்ணிமா, ''எங்க மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க, ரூடால்ஃப் ஸ்டெய்னர் (Rudolf steiner) மற்றும் மாண்டிஸோரி (Montessori)ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறோம். சில மாணவர்களுக்குப் படிக்கும் குறைபாடுகள் இருக்கும். அதைத் தகுந்த முறைகளோடு சொல்லிக் கொடுக்கும்போது, எல்லா மாணவர்களைப் போலவே அவர்களும் போட்டி போடுகின்றனர். பொதுவாவே, மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து பயப்படக்கூடாது. இங்கு இருக்கும் எந்த மாணவனும் ஆசிரியரைப் பார்த்து பயப்படுவதில்லை. எல்லோரிடமும் சகஜமாக பேச கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
ஆண்டுக்கு ஒரு முறை, வெளியில் இருந்து பானை செய்யும் கலைஞர், சிலை செய்யும் சிற்பி, பனை ஓலையில் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுப்பவர், வாழை நார் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொடுப்பவர்களை அழைத்து வந்து, கை வேலைகளைக் கற்றுக் கொடுக்கிறோம். இதன்மூலமாக, மாணவர்களே பலவிதமான பொருட்களை உருவாக்குகிறார்கள். அந்தப் பொருட்களை 'மருதம் மேளா’ நடத்தி விற்பனை செய்கிறோம். மேலும், ஓவியம் வரைவது, நாடகம் நடிப்பதிலும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மாலை நேரத்தில், பள்ளிக் கட்டடத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள பாறைகளைப் பயன்படுத்தி, உச்சிக்கு ஏறும் 'ராக் கிளைம்பிங்’ மலையேறும் பயிற்சியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'போல்கர்-உத்தலார்’ தம்பதி கற்றுக் கொடுக்கிறார்கள்'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.
'ஏட்டுச்சுரைக்காய்'களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு நடுவில், நிஜ சுரைக்காய்களை உற்பத்தி செய்யவே கற்றுத் தரும் இந்தப் பள்ளியைப் பற்றி பெருமிதத்தோடு யோசித்தபடி திரும்பி நடந்தோம்!  
 தொடர்புக்கு,
அருண்,
செல்போன்: 97898-64166.

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!


'புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''
-இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ் பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல் நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி காரணமாக கரைய ஆரம்பித்தாலும்... தற்போது மீண்டும் வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக லாபம் பார்க்கும் விவசாயிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சிவிக்காடு-அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரக்கண்ணு.
''சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தைப் பாக்க வந்துட்டேன். கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அனுபவங்களை ஏற்படுத்திக்கிட்டு... சம்பாதிச்சதுலதான் இப்போ, எட்டு ஏக்கர்ல ஒருங்கிணைந்தப் பண்ணையத்தை உருவாக்கி இருக்குறேன். ரெண்டு ஏக்கர்ல தென்னை, ரெண்டு ஏக்கர்ல கோ-4, ஒரு ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. மூணு ஏக்கர்ல வழக்கமா இரு போகம் நெல் போடுவேன். அதே நிலத்துல கோடையில ஒரு போகம் சோளம், நிலக்கடலை, எள்ளு, உளுந்துனு போட்டு எடுத்துடுவேன்.
தென்னந்தோப்புக்கு உள்ளயே தனித்தனியா கொட்டகை போட்டு, அதுல 500 நாட்டுக்கோழி, 15 ஆடு, 50 ஜோடிப் புறா, 10 முயல், 9 மாடுங்கனு வளர்த்துட்டு இருக்கேன். இதில்லாம, 15 வாத்துகளும் இருக்கு. வேலி ஓரத்துல சூபாபுல், கிளரிசீடியா, கல்யாணமுருங்கை, வேம்பு, ஒதியன், நுணா மரங்கள் இருக்கு. பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துக்குச் சொந்தமான ரெண்டு குளத்தைக் குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்துட்டு இருக்கேன்'' என்று தன்னுடைய ஒருங்கிணைந்தப் பண்ணை பற்றிய முன்னுரையைக் கொடுத்த வைரக்கண்ணு, பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்.
களை எடுக்கும் கால்நடைகள்!
''தென்னந்தோப்புல மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவெல்லாம் ஓட்டுறதில்லை. தண்ணியையும் தாராளமா கொடுக்கறதில்லை. பத்து நாளைக்கு ஒரு தடவைனு காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணி பாய்ச்சுவேன். இப்படிச் செய்றதால... தென்னையோட சல்லி வேர்கள் அழுகாம இருக்கும். மண்ணும் இறுகாம இருக்கும். களைகள், புல் பூண்டுகளை... கோழி, வாத்து, ஆடு, மாடுகள் சாப்பிட்டுடும். இந்தச் செடிகளை அறுத்து, முயலுக்கும் கொடுப்போம். ஆடு, மாடுகள் மேயுறதால, அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா இருக்கு. ஏகப்பட்ட மண்புழுக்களும் இருக்கு. அதனால, தென்னைக்கு எந்த ஊட்டமும் கொடுக்காமலே செழிப்பா இருக்கு. 
 
கழிவிலிருந்து உரம்!
கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 3 டன் மண்புழு உரம் தயாரிக்குறோம். ரொம்ப வருஷமா ஒரு தென்னை மரம் சரியா காய்க்காம இருந்துச்சு. அதை வெட்டிடலாமானுகூட யோசிச்சுட்டு இருந்தோம். அந்த சமயத்துல யதார்த்தமா அந்த மரத்துக்குப் பக்கத்துல மண்புழு உரம் தயாரிக்க படுகை போட்டோம். கொஞ்ச நாள்லயே அந்த மரம் அருமையா காய்க்க ஆரம்பிச்சுடுச்சு. அதனால, இங்க வெள்ளாமை வைக்கிற எல்லா பயிர்களுக்கும் இதைத்தான் உரமா போடுறோம். அதோட பஞ்சகவயாவையும் தெளிச்சு விடுவோம். வேற எந்த ஊட்டத்தையும் பயன்படுத்துறதில்லை.
செலவைக் குறைக்கும் மாட்டு வண்டி!
ரெண்டு வண்டி மாடுகள், ஏழு கலப்பினப் பசுக்கள் இருக்கு. சூபாபுல், தீவனச் சோளம், கிளரிசீடியா, கோ-4, சோளத்தட்டை எல்லாத்தையும் கலந்து, ஒரு மாட்டுக்கு தினமும்
7 கிலோ அளவுக்கு பசுந்தீவனம் கொடுக்குறோம். வண்டி மாடு இருக்குறதால போக்குவரத்துச் செலவும் அதிகமா இருக்கறதில்லை. எப்பவும் 3 மாடு கறவையில இருக்கும். தினமும்
20 லிட்டருக்குக் குறையாம பால் கிடைக்குது'' என்ற வைரக்கண்ணு, கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.
மேய்ச்சல் முறையில் நாட்டுக் கோழிகள்!
''தாய்க்கோழியா 90 பெட்டைகள், 10 சேவல்கள் இருக்கு. இதில்லாம, வெளியில இருந்து வாங்கின 400 நாட்டுக் கோழிக்குஞ்சுகளும் இருக்கு. ஒருநாள் வயசுள்ள குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் கம்பெனி தீவனம் வாங்கிப் போடுவோம். அதுக்கப்பறம், நாங்களே தயாரிக்குற தீவனத்தைக் கொடுத்துடுவோம். ஒருநாள் வயசுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு கோழிக்கு ரெண்டரை கிலோ தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். வருஷத்துக்கு இதுமாதிரி 1,400 குஞ்சுகளை வளர்த்து வித்துட்டு இருக்கேன். எங்ககிட்ட இருக்குற கோழிகள் மூலமா கிடைக்கிற குஞ்சுகளையும் இதேபோல வளர்த்து விற்பனை செய்றோம். நாட்டுக்கோழி முட்டைகளையும் தனியா விற்பனை செய்றோம். கோழிகள் இங்கேயே மேய்ஞ்சுடும். இருந்தாலும், தினமும் அரிசி, குருணை, தவிடு எல்லாத்தையும் கலந்து போடுவோம். அப்பதான் நாம கூப்பிட்டா கோழிகள் ஓடி வரும்'' என்று சொல்லிக்கொண்டே... தீவனத்தை அள்ளி வீசிய வைரக்கண்ணு ஆடு, முயல், வாத்து ஆகிய வற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
பரணில் ஆடுகள்... கூண்டில் முயல்கள்!
''ஜமுனாபாரி ரகத்துல 2 கிடாவும், 6 பெட்டையும் இருக்கு. நாட்டு ஆடுகள்ல 3 பெட்டையும், 4 குட்டிகளும் இருக்கு. நாட்டு ஆடுகளோட, ஜமுனாபாரி கிடாவை இனச்சேர்க்கை செய்யும்போது தரமான குட்டிங்க கிடைக்குது. ஜமுனாபாரி ஆடுகளை பரண் அமைச்சு வளர்க்குறோம். ஆடுகளுக்கு எங்க தோட்டத்துல கிடைக்கிற பசுந்தீவனத்தையே கொடுத்துடுவோம். ஆடுகள் மூலமா கிடைக்கிற குட்டிகளை, எட்டு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். ஜமுனாபாரி ஆடுகளை நாட்டு ஆடுகளோடு கலக்காம விற்பனை செய்றதால... நல்ல விலை கிடைக்குது.
கூண்டு முறையில 8 பெட்டை முயல் களையும், 2 ஆண் முயல்களையும் வளர்க் கிறோம். இங்க விளையுற பசுந்தீவனங்களைத் தான் முயல்களுக்கு  கொடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் குட்டி போட்டதும் ஆணோட சேர விடாம ஒரு மாசத்துக்கு பெட்டைகளைப் பிரிச்சு வெச்சுடுவோம். அப்பதான் முயல்கள் ஆரோக்கியமா இருக்கும். வருஷத்துக்கு மொத்தமா 240 குட்டிகள் கிடைக்குது. இதை மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம்.
வாத்துகள்ல 3 ஆண், 12 பெண் இருக்கு. ஒரு வாத்து, வருஷத்துக்கு 270 முட்டைகள் இடும். உடைஞ்சு சேதாரமானது போக, இதுல 200 முட்டைகள் தேறும். அப்படி பார்த்தா... வருஷத்துக்கு 2 ஆயிரத்து 400 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 5 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். பகல் நேரங்கள்ல வாத்துகளை மீன் குளத்துல விட்டுட்டா... பாசி, புழுக்களை எல்லாம் சாப்பிட்டுடும். வாத்தோட கழிவுகள், மீன்களுக்கு உணவாகிடும். வாத்துக்கும், முயலுக்கும் எங்களுக்கு தீவனச் செலவே கிடையாது. அதனால, இந்த ரெண்டு மூலமா கிடைக்கிறது எல்லாமே லாபம்தான்!
நாட்டுப் புறாவுல 50 ஜோடி இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 1,000 குஞ்சுகள் கிடைக்கும். இதுல 800 குஞ்சுகள் தேறும். இதையெல்லாம் மூணு மாசம் வரைக்கும் வளர்த்து விற்பனை செஞ்சுடுவோம். புறாக் களுக்கு பொட்டுக்கடலை, கம்பு, பச்சைப் பயறு எல்லாம் கலந்து தீவனமா கொடுப் போம்'' என்ற வைரக்கண்ணு, அடுத்து போய் நின்றது... மீன்குளத்தில்!
''ஒரு ஏக்கர் பரப்புல ஒண்ணு, ரெண்டு ஏக்கர் பரப்புல ஒண்ணுனு மொத்தம் ரெண்டு குளம் இருக்கு. பிறந்து ஒருநாள் ஆன, 1 லட்சம் மீன்குஞ்சுகள வாங்கிட்டு வந்து, ஒரு குட்டையில விட்டு 2 மாசம் வளர்க்கணும். விரல் அளவுக்கு வளந்ததும், அதுகள குளத்துல விட்டுடுவோம். 1 லட்சம் குஞ்சுகளுக்கும் சேர்த்து, 15 நாள் வரைக்கும் தினமும் அரை கிலோ கடலைப் பிண்ணாக்கை தீவனமா கொடுப்போம். அடுத்த 45 நாளைக்கு, தினமும் ஒரு கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ எண்ணெய் எடுத்த தவிடு ரெண்டையும் கலந்து போடுவோம். ரெண்டு மாசம் கழிச்சு பார்த்தா... 20 ஆயிரம் குஞ்சுகள் தேறும். இதுல 9 ஆயிரம் குஞ்சுகளை மட்டும் மூணு ஏக்கர் குளத்துலயும் விட்டுட்டு, மீதியை விற்பனை செஞ்சுடுவோம்.
குளத்துல வளர்ற குஞ்சுகளுக்கு சோயா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு எல்லாத்தையும் கலந்து களி மாதிரி வேகவெச்சு தீவனமா கொடுப்போம். ஒரு ஏக்கர் குளத்துக்கு முதல் ஒரு மாசத்துல தினம் ஒரு கிலோ; 2-ம் மாசம் தினம் 2 கிலோ; 3-ம் மாசம் தினம் 3 கிலோனு தீவனம் கொடுக்கணும். 4-ம் மாசத்துல இருந்து 8-ம் மாசம் வரைக்கும் தினம் 4 கிலோ அளவுக்கு தீவனம் கொடுப்போம். தீவனத்தை நைலான் சாக்குல, மூட்டையா கட்டி, அதுல மூணு துளை போட்டு, தண்ணீரோட மேற்பரப்புல இருக்குற மாதிரி தொங்க விட்டுடுவோம். கூடவே, தினமும் 2 கிலோ கோழி எச்சத் தையும் சாக்குல கட்டி தொங்க விடுவோம்.
எட்டு மாசம் கழிச்சு, தவளை, ஆமை இதெல்லாம் பிடிச்சு சாப்பிட்டது... தானாகவே செத்துப் போனது... வளர்ச்சி அடையாததுனு மீன்குஞ்சுகள்ல இழப்பு வரும். இதெல்லாம் போக, 3 ஏக்கர் குளத்துக்கும் சேர்த்து மொத்தமா 5 ஆயிரம் மீன்கள் கிடைக்கும். ஒரு மீன் முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை இருக்கும். எடை கணக்குல சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்கள் கிடைக்கும். வியாபாரிகளே குளத்தை தேடிவந்து, மீனைப் பிடிச்சு எடை போட்டு, கிலோ 100 ரூபாய்னு எடுதுக்குறாங்க'' என்ற வைரக்கண்ணு நிறைவுப் பகுதிக்கு வந்தார்.
''விவசாயம், கால்நடைனு ஒண்ணைச் சார்ந்து, ஒண்ணை வெச்சுருக்குறதால... செலவு குறையுது. ஒண்ணோட கழிவு இன்னொண்ணுக்கு உணவாயிடுது. பசுந் தீவனங்கள் இருக்கறதால தீவனச் செலவு குறைஞ்சுடுது. குறிப்பா... வாத்து, முயலுக் கெல்லாம் தீவனச் செலவே இல்லாம வருமானம் மட்டும் வந்துட்டே இருக்குது. இந்த எட்டு ஏக்கர் ஒருங்கிணைந்தப் பண்ணையம் மூலமா வருஷத்துக்கு 13 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்று கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாட சொன்ன வைரக்கண்ணு,
''கொஞ்சம் மெனக்கெட்டா... கண்டிப்பா நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்கிறதுக்கு நானே நல்ல உதாரணம்தானே'' என்று கேட்டு புன்னகைத்தார்!

வாழை நார் பிரிக்கும் எந்திரம்


கல்லூரி மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு…
கண்டுபிடிப்பு
”கழிவுகளைக் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் எடுக்கணும்னுதான் எங்க படிப்பறிவைப் பயன்படுத்தி இந்தக் கருவியைக் கண்டு பிடிச்சுருக்கோம்” என்று பெருமை யுடன் சொல்கிறார்கள், தூத்துக்குடி, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் இறுதி யாண்டு இளநிலை இயந்திரவியல் பயிலும் ராம்குமார், ஹரிகுமார், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர். இவர்கள் வடிவமைத் திருப்பது… வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி!
கல்லூரி தேடிச் சென்ற நம்மிடம் பேசிய ஹரிகுமார், ”இன்ஜினீயரிங் படிப்புல மாணவர்கள் குழுவா சேந்து ஒரு மெஷினை வடிவமைக் கணும். அதுக்கும் மார்க் உண்டு. எங்க ‘டீன்’, ‘மார்க்குக்காக மட்டும் ஏதாவது ஒரு மெஷினை உருவாக்கா தீங்க. சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயன்படுற மாதிரியான ஒண்ணை உருவாக்குங்க’னு சொன்னார். விவசாயக் குடும் பத்தைச் சேந்தவங்களான எங்க நாலு பேர் மனசுலயும் அது நல்லா பதிஞ்சுட்டுது. விவசாயியோட கஷ்ட, நஷ்டம் புரிஞ்ச நாங்க… ‘விவசாயிகளுக்கான மெஷின் தயாரிப் போம்’னு முடிவு பண்ணி… விவசாயிகளோட தேவை என்னனு தெரிஞ்சுக்கறதுக்காக நிறைய அலைஞ்சோம். அப்போ உருவானது தான் இந்த மெஷின்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்துல வாழை சாகுபடி அதிகமா நடக்குது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில வாழை நார்களுக்கானத் தேவை அதிகமா இருக்கு. எங்க மாவட்டத்துல இருந்து பிளேடு மூலமா நாரைப் பிரிச்சு எடுத்துதான், கன்னியாகுமரிக்கு அனுப்பு றாங்க. அதனால, ‘அதுக்கான மெஷினையே உருவாக்கிடலாம்’னு முடிவு பண்ணிட்டோம். கரன்ட் தட்டுப்பாடு அதிகமா இருக்கறதால கையால இயக்குற மாதிரி இதை வடிவமைச் சோம். இதன் மூலமா பூக்கட்டுறதுக்கு மட்டுமில்ல… புடவை, கைவினைப் பொருட்கள் தயாரிக்கனு வாழையிலிருந்து நார் எடுத்து பயன்படுத்தலாம்” என்றவரைத் தொடர்ந்த ராம்குமார், இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கினார்.
”நாலு அடி உயர செவ்வக வடிவச் சட்டத்தின் மேல், சுருள் வளைய இணைப் புக்கத்தி கொண்ட தொடர் பற்சக்கரத்தைப் பொருத்தியிருக்கிறோம். இது சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது முனையில் சுருள் வளையத்துடன் பிடிப்புக் கத்தி, இருபக்கமும் கூர்மை கொண்ட கத்தி என இரண்டு கத்திகளைப் பொருத்தியிருக் கிறோம். ஒரு மீட்டர் நீளம், இரண்டு அங்குல அகலத்தில் உள்ள வாழை மட்டையை மெஷினில் இரண்டு பிளேடுகளுக்கு கீழ் வைக்கும்போது… எதிர்முனையிலுள்ள காந்தம் கத்திகளின் மறுமுனையைப் பிடித்துக் கொள்ளும். பிறகு, பற்சக்கரத்தை கையால் சுழற்றினால், வாழை மட்டையில் உள்ள ரெசின், பித்து மற்றும் நீர் போன்ற பிசுபிசுப்பு திரவம், வாழை மடலின் நார்க்கழிவு ஆகியவை நீங்கி, சுத்தமான வாழைநார் கிடைத்துவிடும்” என்றார், ராம்குமார்.
”இந்த மெஷினோட அடக்க விலை 4 ஆயிரத்து 500 ரூபாய். நிறைய எண்ணிக்கையில தயாரிக்கும்போது இதுல பாதி பணத்துக்குக் கூட தயாரிக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு ஒரு கிலோ அளவுக்கு நார் பிரிக்க முடியும். வழக்கமா பிளேடு வெச்சு பிரிக்கும்போது முக்கால் கிலோ அளவுக்கு கூடப் பிரிக்க முடியாது. இந்த மெஷினை சீக்கிரமாவும், சுலபமாவும் இயக்க முடியும். பெண்களேகூட இயக்க முடியும். இடம் மாத்துறதும் சுலபம். பாதுகாப்பனதும்கூட” என்று சிலாகித்தார், வசந்தகுமார்.
நிறைவாக, ”இந்த மெஷினுக்காக சிறந்த கண்டுபிடிப்பு சான்றிதழும், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் எங்களுக்குக் கிடைச்சுருக்கு. நிறைய விவசாயிகள் இதைப் பார்த்துட்டு போறாங்க. அடுத்ததா, ஒரடி ஆழம் வரை ஏர் உழும் கலப்பை; கரும்பு லாரி, டிராக்டர்னு லோடோட கிராமத்து சாலைகள்ல போற வாகனங்கள்… சேறு-சகதியில சிக்கிடாம இருக்கறதுக்காக ரோட்டுல இருக்குற குழியோட ஆழத்தைக் காட்டுற எச்சரிக்கை மணியோட கூடிய ரேடியேட்டர் கருவி… இது ரெண்டையும் உருவாக்கலாம்னு இருக்கோம்” என்று கையை உயர்த்தினர் அந்த நான்கு மாணவர் களும்!

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி..


வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
புயலுக்குப் பிறகும் மகசூல்!
கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 வாழை!
'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
பூச்சி, நோய் தாக்காது!
தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
ஏக்கருக்கு 90 ஆயிரம்!
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!

தொடர்புக்கு,
சுப்ரமணியன்,
செல்போன்: 97913-79864.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites