இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, March 19, 2014

மாடித்தோட்ட வெள்ளாமை!



எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.
ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.
”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.
தரை சேதமாவதில்லை!
மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.
களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.
இங்க இல்லாததே இல்லீங்க..!
மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை,  இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.
ஆண்டுக்கு  15 ஆயிரம் லாபம்!
நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.
நன்றி விகடன்

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...


அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.
பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

 ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.
''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன்.  இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள : mrtmani@yahoo.co.in
தொடர்புக்கு,
விஜயகுமார்,
செல்போன்: 93444-16089

டாபிகல் டாப்ஸ்

கடை கடையாக ஏறி இறங்கி தேடித் தேடி சல்வாரோ, சேலையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. மேட்ச்சிங் துப்பட்டாவுக்கு தெருத்தெருவாக  அலைய வேண்டியதில்லை. இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த வரவேற்பு, ஜீன்ஸ் அல்லது லெக்கிங்ஸ்... அதற்கு மேல் தொடை வரை நீளும்  டாப்ஸ். சிம்பிளாக அதே வேளை அழகாகவும் காட்டக்கூடிய இந்த டாப்ஸ் ஒல்லியோ, குண்டோ, குட்டையோ, நெட்டையோ... எப்படிப்பட்டவர்களுக்கும்  அம்சமாகப் பொருந்தும் என்பதே ஹைலைட்டான விஷயம்.சென்னை, பெருங்களத்தூரைச் சேர்ந்த ராகிலாவுக்கு முழுநேர பிசினஸே டாப்ஸ் தைப்பதுதான்!

‘‘25 வருஷமா தையலைத் தவிர வேற எதுவும் தெரியாது. என் மகள் ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறா. அவளுக்காக டாப்ஸ் தச்சுக் கொடுப்பேன்.  அவ போட்டுக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படியே டாப்ஸ் தைக்கிறதுல பிசியானேன். கடைகள்ல ரெடிமேட்  டாப்ஸ் கிடைக்குது. அதெல்லாம் ஸ்டாண்டர்டு அளவுகள்ல, ஒரே மாதிரி டிசைன்லதானே கிடைக்கும்? மட்டமான துணியில தச்சிருப்பாங்க. அதைப்  போட்டுக்கிற பொண்ணுங்களுக்கு உள்ளாடையெல்லாம் வெளியில தெரியற அளவுக்கு துணி கண்ணாடி மாதிரி மெலிசா இருக்கும். Topical tops!

அப்படி எந்த தர்மசங்கடமும் இல்லாம இருக்கணும்னு நான் முதல் குவாலிட்டி காட்டன்ல தைக்கிறேன்’’ என்கிற ராகிலா, பெண்களின்  விருப்பத்துக்கேற்ப முழுக்கை வைத்தது, அரைக்கை வைத்தது, கையில்லாதது என 3 மாடல்களில் தைக்கிறார். ‘‘ஐடி மாதிரியான கம்பெனியில  வேலை பார்க்கிறவங்க பெரும்பாலும் காட்டன் மெட்டீரியல்தான் கேட்கறாங்க. சிலர் வேற மெட்டீரியலையும் டிசைனையும் கொடுத்து தச்சுக்  கொடுக்கச் சொல்றதும் உண்டு. கர்ப்பிணிகளுக்கு ஏத்தபடி ஜிப் வச்ச டாப்ஸும் தச்சுக் கொடுக்கறேன். 

ஒரு டெய்லரிங் மெஷின் இருந்தா போதும். மெட்டீரியல், ஊசி, நூல் உள்ளிட்ட மத்த பொருட்களுக்கும் சேர்த்து 5 ஆயிரம் முதலீடு வச்சு துணிஞ்சு  இந்த பிசினஸ்ல இறங்கலாம். ஒரு நாளைக்கு 10 முதல் 15 டாப்ஸ் வரை தைக்கலாம். காலேஜ், ஐடி கம்பெனிகள்ல உள்ள பெண்கள்கிட்ட மாடல்  காட்டி ஆர்டர் வாங்கலாம். சின்னச் சின்ன கடைகளுக்கும் சப்ளை பண்ணலாம். 325 ரூபாய்லேருந்து 400 ரூபாய் வரைக்கும் மாடலை பொறுத்து  விலை வேறுபடும். செலவெல்லாம் போக 50 சதவிகித லாபம் தங்கும்’’ என்கிற ராகிலாவிடம் 2 நாள் பயிற்சியில் 5 மாடல் டாப்ஸ்களை 500 ரூபாய்  முதலீட்டில் கற்றுக் கொள்ளலாம். ( 97104 82119)

Sunday, March 9, 2014

தர்மபுரி தென்னை நார் கயிறு சீனாவுக்கு ஏற்றுமதி

தர்மபுரி : தர்மபுரி அருகே தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார் கயிறு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. 

தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் பொள்ளாட்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் தேங்காய் நார் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், அரசம்பட்டி ஆகிய இடங்களில் தேங்காய் நார் கயிறு மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கயிறு, மெத்தை விரிப்பு, மிதியடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பெங்களூர், ஹைதராபாத், தமிழகத்தில் சென்னை, ஓசூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. சமீபகாலமாக சீனாவுக்கும் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தென்னை நார் தொழிற்சங்க செயலாளர் முனிராஜ் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் மட்டையிலிருந்து அதிகளவில் கயிறு தயாரிக்கப்படுகிறது. 35 கிலோ எடையுள்ள ஒரு பண்டல் தேங்காய் நார் ரூ.350 முதல் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய்நார் கயிறு கட்டுமான பணிகளுக்கு அதிகமாக விற்பனை செய்கிறோம். ஒரு பண்டல் ரூ.900 முதல் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவிற்கு கயிறு ஏற்றுமதி நடக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இங்கிருந்து சீனாவுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நேரடி ஏற்றுமதியை தொடங்கியுள்ளன. இதனால் தென்னை நார் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆண்டுக்கு 1.30 லட்சம் டன் தேங்காய் மட்டை கிடைக்கிறது. பஞ்சு நூல் தயாரிப்பது போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது. - See more at: http://dnk.dinakaran.com/News_Detail.asp?Nid=59124#sthash.xSpFgrXD.dpuf

10 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட பஞ்சாப் எருமை!


பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மொகாலி பகுதியில் 'பஞ்சாப் விவசாய உச்சி மாநாடு’ நடந்து. அதில், சிறந்த கால்நடைகள் பற்றிய கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன்னுடைய 'கொழு கொழு’ எருமையை காட்சிக்கு நிறுத்தியிருக்கிறார். 1,200 கிலோ எடை, ஐந்தே முக்கால் அடி உயரம், 11 அடி நீளம் கொண்ட அந்த எருமை, பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அந்த எருமைக்கு தினமும் தீவனத்துடன் 10 லிட்டர் பாலும் கொடுப்பாராம், சோமல். சிறந்த எருமை வளர்ப்புக்கான பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசைப் பெற்றுள்ளார். அந்த எருமையைக் கண்டு வியந்த வெளிநாட்டினர் சிலர், பத்து கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முன்வந்துள்ளனர். ஆனால், சோமல் அதை விற்க மறுத்துவிட்டார்.

வறட்சியிலும் வளமான வருமானம்! மகசூல்


 நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின்சாரம்; தண்ணீர் வற்றிய கிணறு; தலைவிரித்தாடும் வேலையாட்கள் தட்டுப்பாடு; இவற்றுக்கு இடையில்... வானத்தையும், வருண பகவானையும் நம்பி, மானாவாரி பூமியில் விவசாயம் செய்வது என்பதே பெரும் சாதனைதான். இந்த நிலையில், 26 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா என பழவகைகளை சாகுபடி செய்து, நல்ல வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன்-மேகலா தம்பதி என்பது, நம்பிக்கையூட்டும் விஷயம்தானே!
வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு, மத்தியில் செழிப்பாக இருந்த தோட்டத்தில் காய்த்துக்குலுங்கிய நெல்லி மரங்களுக்கிடையில் ராஜேந்திரன்-மேகலா தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசிய ராஜேந்திரன், ''எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி பக்கத்துல சின்னமுத்தூர். அஞ்சு ஏக்கர் நிலத்துல கடலை, வெத்தலைக் கொடிக்கால், கேழ்வரகு மாதிரியான பயிர்களை எங்கப்பா சாகுபடி செய்துட்டிருந்தார். நானும், விவசாயம் பார்த்துக்கிட்டே ஐ.டி.ஐ. வரைக்கும் படிச்சேன். 80-ம் வருஷம் திருச்சி 'பெல்’ நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டு வருஷத்துல ராணிப்பேட்டையில 'பெல்’ நிறுவனத்துக்கு மாறுதலாகி வந்தேன். குடும்பம், குழந்தைகளோட படிப்புனு பலவிதமான எண்ணங்கள்ல மூழ்கி இருந் தாலும், விவசாயம் பார்க்கணுங்குற எண்ணம் மட்டும் மனசுக்குள்ள இருந்து போகல.
அதிகமான மாசுபட்ட வாணியம்பாடி!
92-ம் வருஷம் வேலை பார்க்கும்போது கம்பெனியில விபத்து ஏற்பட்டு, கையில ரெண்டு விரல் போயிடுச்சு. அதுக்காக ஓய்வுல இருந்தப்ப... விவசாயத்துல இறங்கணும்கிற எண்ணம் அதிகமாகிடுச்சு. ரெண்டு வருஷமா நிலம் தேடி.... 96-ம் வருஷம் 30 ஏக்கர் நிலத்தை இங்க வாங்கினேன். தனியார் பள்ளியில ஆசிரியரா இருந்த மனைவி, அந்த வேலையை விட்டுட்டு விவசாயத்துல என்கூட கைகோத்தாங்க.
மண்ணைத் திருத்த நெல் சாகுபடி!
இந்தப் பகுதி முழுக்க மானாவாரி பூமிதான். அதனால ரசாயன உரம், பூச்சிக்கொல்லியால மாசுப்படாத நிலம்தான். இதை திருத்தி, கிணறு வெட்டினேன். முதல்போகத்துல நெல் விவசாயம் செஞ்சு, நிலத்தைப் பண்படுத்தினேன். பிறகு, நிலத்தோட மண் மாதிரிகளை ஆய்வு செஞ்சப்ப, செம்மண் கலந்த சரளை மண்ணுக்கு சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா மரங்கள் நல்லா வளரும்னு சொன்னாங்க. நிலம் மாசுபடாம இருக்கணும்னா... தாத்தா, அப்பா காலத்து இயற்கை வழி விவசாயம்தான் சிறந்ததுனு புரிஞ்சுக்கிட்டு, அதையே செயல்படுத்தினேன்.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வான சொட்டுநீர்ப் பாசனம்!
மொத்தம் 30 ஏக்கர் நிலம். 18 ஏக்கர்ல 1,000 சப்போட்டா செடிகளையும், இடைவெளியில 800 நெல்லிச் செடிகளையும்; 8 ஏக்கர்ல 600 மா  கன்றுகளையும், அதுக்கு இடையில 600 கொய்யாச் செடிகளையும் சாகுபடி செஞ்சுருக்கேன். மீதி நாலு ஏக்கர் நிலத்துல நெல், கடலை, கொள்ளு மாதிரியான பயிர்களை சாகுபடி செய்றேன்.
ஆரம்பத்துல பழச்செடிகளுக்கு என்னோட கிணத்துல இருந்த தண்ணீர் போதுமானதா இல்லை. பக்கத்து நிலத்து விவசாயிகிட்ட இருந்து காசுக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சித்தான் செடிகளை வளர்த்தேன். தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க எல்லா பழமரங்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான் நடக்குது. ஆரம்பத்துல கிடைச்ச அளவுக்குகூட ஆட்கள் கிடைக்கல. இப்ப என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேரும்தான் நிலத்தை முழுமையா பராமரிப்பு செய்யுறாங்க. நானும், என்னோட மனைவியும் வாரத்துல ரெண்டு மூணு நாட்கள் நிலத்துக்கு வந்துட்டுப் போறோம். மனைவி, நெல்லிக்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுறாங்க.
விற்பனைக்கு நண்பர்களே போதும்!
இயற்கை முறையில மரங்களை பராமரிப்பு செய்யறதால, இடுபொருட்களோட செலவு, ஆட்கள் செலவு குறைவா இருக்கு... நல்ல வருமானமும் கிடைக்குது. பழமரங்கள் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, தோட்டம் முழுக்க விதம்விதமான பறவைகள் வந்துடுச்சு. அதுங்களும் தோட்டத்துக்கு உரத்தைக் கொடுக்குதுங்க.
ஆரம்பத்துல விளைஞ்ச பொருட்களை சென்னை 'சண்டே மார்க்கெட்’டுக்குக் கொண்டு போனேன். போக்குவரத்துச் செலவுகள் அதிகமானதால நண்பர்கள் வட்டாரத்துலயும், தோட்டத்துலயும் நேரடியா விற்பனை செய்றேன்'' என்று, ராஜேந்திரன் முடிக்க, சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார் அவருடைய மனைவி மேகலா.
சப்போட்டாவுக்கு நெல்லி... மாவுக்கு கொய்யா...
'30 அடிக்கு 30 அடி இடைவெளியில் சப்போட்டா செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு சப்போட்டா செடிகளுக்கிடையில் ஒரு நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும். 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மா செடிகளை நடவு செய்துவிட்டு, இரண்டு செடிகளுக்கிடையில் ஒரு கொய்யா செடியை நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு, ஐப்பசி மாதம் சிறந்தது. 3 கன அடிக்கு குழி எடுத்து, ஒரு மாதம் குழிகளை ஆறப்போட வேண்டும். பின்னர், 10 கிலோ எருவோடு மேல்மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்குக் குழியை நிரப்ப வேண்டும். ஒட்டுச் செடிகளாக இருந்தால், ஒட்டுப்பகுதியானது, தரைப்பகுதியில் இருந்து அரையடி மேலே இருப்பது போன்று நடவு செய்து, உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
சப்போட்டாவில் கிரிக்கெட், பி.கே.எம்-1, பி.கே.எம்-2 ஆகிய ரகங்களும்; நெல்லியில் என்.ஏ-7, காஞ்சன், பி.எஸ்.ஆர் ஆகிய ரகங்களும்; மாவில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்லிகா, செந்தூரா போன்ற ரகங்களும்; கொய்யாவில் அலகாபாத், ஹைதராபாத், லக்னோ-49 ஆகிய ரகங்களும் சாகுபடி செய்வதற்கு சிறந்தது.
வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா!
பழச்செடிகளை நடவு செய்த 3 முதல் 4 ஆண்டுகள் வரையில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து, தர்பூசணி மாதிரியான குறுகிய காலப்பயிர்களை சாகுபடி செய்யலாம். நான்கு ஆண்டுகள் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை 4 கிலோ எரு, 1 கிலோ மண்புழு உரம், தலா 250 கிராம் வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பன் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் வைத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை மரங்களின் வளர்ச்சிக்காக டேங்க் (12 லிட்டர்) ஒன்றுக்கு 1 லிட்டர் பஞ்சகவ்யாவை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 10 டேங்க் தெளிக்க வேண்டியிருக்கும்.
காய்ப்புக்கு வந்த மரங்களுக்கு, 6 மாதங்களுக்கு ஒருமுறை செடிகளுக்கிடையில் டிராக்டர் மூலம் களையெடுத்து, 10 கிலோ எரு, 2 கிலோ மண்புழு உரம், தலா 1 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் மண் வைத்து அணைத்து, பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை டேங்குக்கு (12 லிட்டர்) 1 லிட்டர் பஞ்சகவ்யா, 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளித்துவிட வேண்டும். மேலும், 200 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் குணபசலம், 1 லிட்டர் ஆவூட்டம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும், ஒரு லிட்டர் வீதம் ஊற்றிவிட வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால் மட்டும், பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
பிப்ரவரியில் சப்போட்டா... ஜூனில் நெல்லி...
நடவு செய்த மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளில் மரங்கள் காய்க்கத் துவங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும்... சப்போட்டா மரங்கள்... நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூவைத்து, பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். நெல்லி மரங்களைப் பொருத்தவரைப் பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பூவைத்து, ஜூன் முதல் ஜூலை மாதங்களில் அறு வடைக்கு வரும். மாமரங்கள் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதங்களில் பூவைத்தால்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் அறுவடை செய்யலாம். கொய்யா மரங்கள்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் பூவைத்தால்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம்.’ வறட்சிப் பகுதி என்பதால், கொய்யா ஒரு சீஸனில் மட்டுமே காய்க்கிறது.
26 ஏக்கரில்... 9 லட்சம்!
சாகுபடிப் பாடத்தை மேகலா முடிக்க, வரும்படிப் பாடத்தை ஆரம்பித்த ராஜேந்திரன், ''வறட்சியில் சேதாரமான மரங்கள் போக மீதம் உள்ள மரங்களில்... 900 சப்போட்டா மரங்களில் இருந்து, 20,000 கிலோ சப்போட்டா கிடைக்கும். சராசரியாக கிலோ 15 ரூபாய் வீதம் விற்பனை செய்வதன் மூலம்... 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். 300 மா மரங்களில் இருந்து சராசரியாக 15 ஆயிரம் கிலோ காய்கள் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் வீதம் விற்பனை செய்தால், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 600 கொய்யா மரங்களில் இருந்து, 11 ஆயிரம் கிலோ கொய்யா அறுவடை செய்யலாம். கிலோ 10 ரூபாய் வீதம் விற்பனை செய்தால்... 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 500 நெல்லி மரங்களில் இருந்து 7 ஆயிரத்து 500 கிலோ கிடைக்கிறது. ஒரு கிலோ 15 வீதம், 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 52 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. மீதமுள்ள 4 டன் நெல்லிக் காய்களைப் பதப்படுத்தி... தேன் நெல்லி, இஞ்சி நெல்லிக்காயாக மதிப்புக்கூட்டினால், ஒரு டன் அளவுக்கு மதிப்புக்கூட்டிய நெல்லிக்காய் கிடைக்கும். கிலோ 250 ரூபாய் வீதம், ஒரு டன் மூலமாக 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம், 26 ஏக்கர் பழமரங்களில் இருந்து, 9 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். களையெடுப்பு, உரமேலாண்மை, பறிப்புச் செலவுகளாக ரூபாய் 4 லட்சம் போக... 5 லட்சத்து, 37 ஆயிரம் வரை லாபமாகக் கிடைக்கும்'' என்றார் உற்சாகமாக!
தொடர்புக்கு, ராஜேந்திரன், செல்போன்: 94436-25731

தேன்நெல்லி!
நெல்லிக்காய்களை பாத்திரத்தில் இட்டு, பிளவு வரும் அளவுக்கு, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அதன் பிறகு, இளம் சூட்டில், நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கம் செய்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு ஒரு கிலோ வெல்லம் என்ற கணக்கில் பாகு தயாரித்து ஆற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் பாகில் நெல்லிக்காயைக் கொட்டிக் கிளறி இரண்டு நாட்கள் ஊறவைக்க வேண்டும். பாகு நீர்த்துத் தண்ணீர் போன்று மாறியிருக்கும். பாத்திரத்தில் இருக்கும் நெல்லிக்காயை மாலை வரை, நிழலில் உலர்த்தி விட்டு, மீதம் இருக்கும் தண்ணீர் போன்ற திரவத்தைக் கொதிக்க வைத்து, ஆற வைக்க வேண்டும். மீண்டும் அந்தத் திரவத்தில் நெல்லிக்காயை இட்டு, ஓர் இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் தண்ணீரை வடித்து, வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து, அடுத்த மூன்று நாட்கள் நிழலில் காய வைக்க வேண்டும். இப்போது உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகளாக இருக்கும். அடுத்து, 2 கிலோ நெல்லித்துண்டுகளுக்கு, ஒரு லிட்டர் தேன் என்ற கணக்கில் கலந்து ஊறவைத்தால் ... அடுத்த 24 மணிநேரத்தில் தேன்நெல்லி தயார்.
இஞ்சிநெல்லி!
தேன்நெல்லி தயாரிக்கும் அதே முறையில் தயார் செய்ய வேண்டும். இதில் வெல்லப்பாகு தயார் செய்யும்போது, 2 கிலோ நெல்லிக்காய்க்கு 250 கிராம் இஞ்சி என்றக் கணக்கில் சாறு எடுத்து, அவற்றை கொதிக்க வைத்து, ஆற வைத்து கலந்துகொள்ள வேண்டும். அடுத்த 24 மணிநேரத்தில் இஞ்சி நெல்லி தயார். இதில் தேன் பயன்படுத்தத் தேவையில்லை.

மாநில விருது பெற்ற வெற்றி விவசாயி


 ல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின நாளில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது, தமிழக அரசு. அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக விளைச்சல் எடுத்த ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி என். பரமேஸ்வரனுக்கு 5 லட்ச ரூபாய் பரிசும், பதக்கமும் வழங்கி கௌரவப் படுத்தியுள்ளார், முதல்வர் ஜெயலலிதா.
விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தபோது, ''இந்த விருது முறைப்படி என் மனைவிக்குத்தான் போய்ச் சேரணும். அவுங்க கொடுத்த ஊக்கமும், உழைப்பும்தான் விருது வாங்கிக் கொடுத்திருக்கு'' என்று பெருமையோடு மனைவியை அறிமுகப்படுத்தி வைத்த பரமேஸ்வரன், தொடர்ந்தார்.  
கொட்டிக் கொடுக்கும் கோடை உழவு!
''ஒரு போகம் முடிஞ்சவுடனேயே கோடையில ரெண்டு உழவு ஓட்டி நிலத்தை நல்லா ஆறப்போடணும். அப்பதான் களைகள் வீரியம் இல்லாம போகும். மழை சரியா இல்லாததால் போன வருஷம் கோடை உழவு ஓட்டி ஆறப் போட்டேன். கிட்டத் தட்ட ஒரு வருஷம் நிலம் சும்மா கிடந்துச்சு. ஏழு ஏக்கருக்கும் சேர்த்து பத்து டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைச்சு, உழுது நடவு செஞ்சேன். சம்பா மசூரி-5204 ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுருந்தேன். விதை நெல்லை அக்ரி ஆபீஸ்லதான் வாங்கி னேன். சரியான நேரத்துல களையெடுக்குறது, சரியான அளவுல தண்ணி பாய்ச்சுறது, சரியான நேரத்துல தேவையான அளவு உரம் கொடுக்குற துனு பராமரிச்சதுலதான் இந்த விளைச்சல் எடுக்க முடிஞ்சது. நான் விதைச்ச நேரத்துல சீதோஷ்ண நிலையும் நல்லா இருந்ததால பூச்சித் தாக்குதலும் இல்லை. அப்பப்போ வேளாண் அதிகாரிகளும் வந்து ஊக்கம் கொடுத்தாங்க.
அறுவடை சமயத்துல, வேளாண் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ரெண்டு வெளியூர் விவசாயிகள் வந்திருந்தாங்க. அவங்க முன்னாடி அறுவடை செஞ்சு 'ரேண்டம்’ முறை யில கணக்கீடு செஞ்சாங்க. ஒற்றை நாற்று நடவு முறையில ஏழு ஏக்கர்ல நான் நெல் நடவு செய்திருந்தாலும், 50 சென்ட் நிலத்துக்கான மகசூலை வெச்சுத்தான் கணக்குப் போட்டாங்க. அந்த வகையில, ஒரு ஏக்கர்ல நான் எடுத்த விளைச்சல் 6 ஆயிரத்து 110 கிலோ. இதை வெச்சுதான்... அதிக விளைச்சல் எடுத்ததுக்கான விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க. இந்த விருது ஒட்டுமொத்த விவசாயி களுக்கும் கிடைச்சதா நினைச்சு சந்தோஷப்படுறேன்'' என்றார், மகிழ்ச்சியாக.
விருதில் இருக்கு வில்லங்கம்!
மாநில அளவில் விருது வழங்கு வதில் உள்ள சில குறைகளை நம்மிடம் சுட்டிக்காட்டினர், சில முன்னோடி விவசாயிகள். அவை இங்கே இடம்பிடிக் கின்றன.
'அறச்சலூர்’ செல்வம் முன்னோடி இயற்கை விவசாயி: 'வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களால் கண்டுபிடிக்கப் பட்ட உயர் விளைச்சல் நெல் ரகங்களைப் பயிர் செய்யும் விவசாயிகளுக்குள்தான் போட்டி வைக்கப் படுகிறது. பவானி, பொன்னி உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பயிர் செய்யும் விவசாயிகளை வேளாண்துறை கண்டு கொள்வதில்லை. அதேபோல், முழுக்க முழுக்க வளம் குன்றா வேளாண்மையை மேற்கொண்டுவரும் பாரம்பரிய சாகுபடி முறை நெல் விவசாயி களையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. வருங்காலங்களில் இது மாற்றப்பட வேண்டும்.''
சுப்பு, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர்: 'இது போன்ற போட்டிகளை அனைத்து நெல் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதில்லை. குறிப்பிட்ட சில விவசாயி களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படுகிறது. விருது பெற்ற விவ சாயி, பயிர் செய்துள்ள 7 ஏக்கர் விளைச் சலையும் கணக்கில் எடுக்காமல், 'ரேண்டம்’ முறையில் 50 சென்ட் மட்டுமே கணக்கிடப்படுவது சரியாக இருக்காது. தவிர, வேளாண்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. விருதுபெற்ற விவசாயிகளின் வயலுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முன்னோடி விவசாயிகளை அழைத்துப்போய் பார்வையிட ஏற்பாடுகள் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட விவசாயி மேற்கொண்ட தொழில்நுட்பங்களைக் கேட்டறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் மற்ற விவசாயி களுக்கு உபயோகமாக இருக்கும். வரும் ஆண்டுகளில், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட முக்கிய பயிர்களையும் விளைச்சல் போட்டியில் சேர்க்க வேண்டும்.'
இது குறித்து,   தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் நெல் மட்டும் சிறுதானியப் பிரிவு துணை இயக்குநர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ''தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் இந்த மாநில விருது தொழில் நுட்பத்துக்கானது. திருந்திய நெல் சாகுபடியை, அனைத்து நெல் விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில், தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான பரிசுகள் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது'' என்பதோடு முடித்துக்கொண்டார்.
தொடர்புக்கு, என். பரமேஸ்வரன், செல்போன்: 99941-39988.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites