இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, June 2, 2013

மரவள்ளியும் ஜவ்வரிசித் தொழிலும்


இரா. வேணுகோபாலகிருஷ்ணன்

வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலேயே வேளாண்மைத் தொழிலில் மிகுந்த இழப்புகள் ஏற்பட்டு, இத்தொழிலைப் பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் செல்கின்றனர்.
ஆனால் கரும்பு, நெல் முதலிய பயிர்களுக்கு விலை நிர்ணயிக்கப் படுவதால் ஓரளவு விலை கிடைக்கின்றன. பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தாததாகவும், அதிகம் முதலீடு அற்றதாகவும் உள்ள ஒரு பயிர் மரவள்ளி ஆகும். இது தேவைகளின் அடிப்படையில் சில நேரங்களில் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை அளிக்கக் கூடியது. இதற்கான வேளாண்மைச் செலவு குறைவானது என்பது விவசாயிகள் கருத்து.
இந்த மரவள்ளி அப்படியே உண்ணும் உணவாகப் பயன்படுவதோடு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றப்பட்டு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து உண்பர். இது போக மரவள்ளிக் கிழங்கை மாவாகவும், ஜவ்வரிசியாகவும் உருமாற்றிப் பயன்படுத்துவோரே மிகுதி.
தமிழ்நாட்டில் சேலத்தை மையமாகக் கொண்ட சுற்றுவட்டப் பகுதிகளில் மரவள்ளி மிகுதியாக விளைவிக்கப் படுகின்றது. இதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை, மண்வளம் இருப்பதோடு இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசித் தொழிற்சாலைகள் மிகுந்திருப்பதும் இதற்குக் காரணங்களாகும்.
மரவள்ளி வேளாண்மை மற்றும் மரவள்ளியிலிருந்து பிற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி ஓம் சக்தி வாசகர்களுக்குத் தெரியப்படுத்த சேலம் சேகோசர்வ் அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திரு. கே.கே. கௌஷல் அவர்களை அணுகினோம்.
சேகோசர்வ் அமைப்பு என்பது சேலம் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கமாகும். சேலம் பகுதியில் உற்பத்தியாகும் மாவு மற்றும் ஜவ்வரிசி முதலியவை பெருமளவில் இந்த சேகோசர்வ் கூட்டுறவு அமைப்பின் மூலமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. அதன் இயக்குநர் அளித்த பேட்டி:
கேள்வி: மரவள்ளிக் கிழங்கிலிருந்து என்னென்ன பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன?
பதில்: மரவள்ளியிலிருந்து இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
கேள்வி: இத்தொழில் சேலம் பகுதியில் எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகின்றது?
பதில் : நீண்ட காலமாக இப்பகுதியில் இத்தொழில் செய்யப்பட்டு வருகிறது. இதனை விற்பனை செய்வதற்கான எங்கள் கூட்டுறவு அமைப்பு 1981-இல் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
கேள்வி: சேலம் பகுதியில் இத்தொழில் அதிகமாக நடைபெறக் காரணம் என்ன?
பதில் : சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட இப்பகுதியைச் சேர்ந்த 8 மாவட்டங்களில் தரமான மரவள்ளி நன்கு விளைகிறது. தற்போது தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பயிரிடுகிறார்கள். சேலம் மண்டலத்தில் ஏக்கருக்கு 38 டன்கள் மகசூல் கிடைக்கிறது. இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட (ஹெக்டேருக்கு 27.92 டன்கள்) அதிகமாகும். இந்த அளவிற்கு உலகில் வேறு எங்கும் விளைவதில்லை.
சேலம் மண்டலத்தில் ஆண்டு முழுவதும் அதிக நாட்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இது மரவள்ளிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. மரவள்ளியிலிருந்து கிடைக்கும் உப தயாரிப்புகளுக்கும் இந்தச் சூழ்நிலை ஏற்றதாக உள்ளது. குறைந்த ஊதியத்தில் வேலையாட்களும் இங்கு கிடைக்கின்றனர்.
எனவே, இந்த விளைச்சலையொட்டி இப்பகுதியில் மாவு மற்றும் ஜவ்வரிசித் தொழிற்சாலைகள் சுமார் 450&-க்கும் மேற்பட்டவை உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஜவ்வரிசி மற்றும் மாவுப் பொருள்களுக்கு நாட்டின் தேவையில் 80 விழுக்காடு சேலம் பகுதியிலிருந்தே கிடைக்கிறது.
கேள்வி: இந்தியாவில் வேறு எந்தெந்த மாநிலங்களில் மரவள்ளி அதிகமாக விளைகிறது?
பதில்: தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளத்தில் விளைவிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப் படுவதில்லை.
கேள்வி: இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றனவா?
பதில்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா முதலிய மாநிலங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜவ்வரிசியினால் உப்புமாவும், கஞ்சியும் தயாரித்து உண்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அளவில் பயன்படுத்துகின்றனர். கேரளத்திலும் ஜவ்வரிசியை சாதம்போல் செய்து உண்கிறார்கள். எனவே இந்த மாநிலங்களுக்கு அதிகமாக அனுப்பப்படுகின்றன.
கேள்வி: மரவள்ளிப் பயிர் விவசாயிகளுக்கு இலாபகரமானதா? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
பதில்: மரவள்ளி, மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இருவகை வேளாண்மைகளிலும் பயிராகக் கூடியது. மானாவாரியைவிட நீர்ப்பாசனத்தில் அதிக உற்பத்தி கிடைக்கும். இதன் விளைச்சலில் செலவு குறைவாகவும், இலாபம் மிகுதியாகவும் இருப்பதால்தான் இதைத் தொடர்ந்து அதிகமாகப் பயிரிடுகின்றனர். விளைச்சலைப் பொறுத்து லாப அளவு மாறுபடும். இந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் விலை கிடைக்கிறது. சென்ற ஆண்டு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை விலை கிடைத்தது.
கேள்வி: தமிழ்நாட்டில் எத்தனை ஏக்கர்களில் மரவள்ளி விளைவிக்கப் படுகிறது?
பதில்: தமிழ்நாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விளைவிக்கப் படுகிறது.
கேள்வி: இத்தொழிலில் எத்தனைபேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்?
பதில்: இங்குள்ள தொழிற்சாலைகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இத்தொழிலாளர்களோடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் சேர்த்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
கேள்வி: ஒரு ஜவ்வரிசித் தொழிற்சாலை தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
பதில்: ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு சுமார் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை முதலீடாகத் தேவைப்படும்.
கேள்வி: உற்பத்திப் பொருள்களை மொத்தமாக யார் வாங்கிக் கொள்கிறார்கள்?
பதில்: மொத்தமாகக் குறிப்பிட்ட சிலர் மட்டும் வாங்குவதில்லை. நாடு முழுவதிலுமிருந்து இங்கே வியாபாரிகள் வருகிறார்கள். இங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும் விற்பனை மாதிரிகள் அனைத்தையும் பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்து வாங்குகிறார்கள்.
கேள்வி: தொழிற்சாலையில் வெளியாகும் கழிவுகள் என்ன செய்யப் படுகின்றன? அவை சுற்றுச் சூழலைப் பாதிக்குமா?
பதில்: தொழிற்சாலையின் கழிவுகள் எவையும் வீணே கொட்டப் படுவதில்லை. கழிவுகளனைத்தும் கால்நடைத் தீவனங்களாக மாற்றப் படுகின்றன. எனவே சுற்றுச் சூழலுக்குக் கேடு எதுவும் விளைவதில்லை.
கேள்வி: உங்கள் சேகோசர்வின் பணி என்ன?
பதில்: சேகோசர்வ் தொடங்குவதற்கு முன்னர் உற்பத்தியாளர்களுக்குக் கடன் வசதி, கிடங்கு வசதி இல்லாததால் ஜவ்வரிசி மற்றும் மாவு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்களால் மிகவும் ஏமாற்றப் பட்டனர்.
இந்த இடையூறுகளிலிருந்து ஜவ்வரிசி மற்றும் மாவு உற்பத்தியாளர்களைக் காப்பாற்றும் பொருட்டு சேலம் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1981-ஆம் ஆண்டில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்படி தொடங்கப் பட்டது. இது சேகோசர்வ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இச்சங்கமானது, சென்னையிலுள்ள தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், தொழில் வணிகத்துறை, அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
சேகோசர்வ் அமைக்கப்பட்ட பிறகு மரவள்ளித் தொழிலுக்கு எட்டாமலிருந்த சந்தை வாய்ப்புக் கிடைத்தது. அனைத்து இடைத்தரகர்களும் நீக்கப் பட்டனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் 60 சதவீதத்திற்கு மேல் சேகோசர்வ் கூட்டுறவு விற்பனை அமைப்பின் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.
இச்சங்கத்தின் மூலம் விற்பனையாகும் பொருள்களுக்கு வாட் வரி 4 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய விற்பனை வரிச்சட்டத்திலிருந்து விலக்களிக்கப் படுகிறது. தொழிற்சாலைகளில் அடிப்படை மாற்றங்களுக்கான மானியங்களும் வழங்கப்படுகின்றன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites