இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, November 17, 2014

சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம்

நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி.

நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பிரதானமாகக் கொண்டு அர்க், ஷாம்பு, ஹேர் ஆயில், சோப்பு, சாம்பிராணி, ஃபேஷியல் பவுடர், பல்பொடி, டிஸ்வாஷ் பவுடர், விபூதி, வலி நிவாரணி என ஈஸ்வரி தயாரிக்கும் சிறுதொழில் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்ல வாடிக்கையாளர் பலர் இருக்கின்றனர். “விவசாயம்தான் எங்களுக்கு முக்கியத்தொழில், இந்தப் பொருட்களையெல்லாம் ஆரம்பத்துல எங்க பயன்பாட்டுக்குத்தான் தயாரிச்சேன். எந்த கெமிக்கலும் இல்லாம இயற்கை முறையில தயாரிக்கிறதால, நிறைய பேர் எங்களுக்கும் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க, அப்புறம்தான் தொழிலை விரிவுபடுத்தினேன்” என்று 
தொடங்குகிறார் ஈஸ்வரி. 

“11 ஏக்கர் நிலத்துல குமுளு, காயா, வேம்பு, மலை வேம்பு, ஈட்டி, தீ மரம், வாகை, சப்போட்டா, நெல்லி மரங்களை நட்டிருக்கோம். விவசாயத்துக்காக 11 நாட்டு மாடுகளை வளர்த்துட்டு வர்றோம். நானும் என் கணவர் முத்துச்சாமியும்தான்  இதையெல்லாம் கவனிச்சுக்குறோம். உப்பு உரம் பயன்படுத்துறதில்லை, ஜீவாமிர்தம் தயாரிச்சு ஊத்தி இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டிருக்கோம். ஒரு முறை இங்கே வந்த நம்மாழ்வார் அய்யா, எங்க விவசாய முறையை பார்த்துட்டு பாராட்டினார். சேலம் பக்கத்துல நாகமலைல சுனில் மான்சிங்னு நாக்பூரை சேர்ந்த வேளாண் அறிஞரோட பயிற்சி முகாம்ல கலந்துகிட்டப்பதான் இந்தத் தயாரிப்பு முறைகளை கத்துக்கிட்டேன். எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி இருந்துச்சு, நானே ‘அர்க்’ தயாரிச்சு குடிச்ச பிறகு நல்லாயிடுச்சு. 

அதுக்கப்புறம்தான் இதோட மகத்துவம் எனக்கு புரிய ஆரம்பிச்சுது” என்றவர் இப்பொருட்களின் செய்முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் பேசுகிறார். “காலையில மூன்றரை மணிக்கு கோமியம் பிடிச்சு, பானையில ஊத்தி காய்ச்சினோம்னா, அது கொதிச்சு ஆவியா மேலெழும்பும். அந்த ஆவி குளிர்ந்து நீரா மாறுவதுதான் அர்க். இதைக் குடிச்சா சளியிலிருந்து பல நோய்கள் குணமாகுது.  சீவக்காய், ஊச்சக்கொட்டையை ஊறவெச்சு அரைச்சு அதை கோமியத்துல கலந்து காய்ச்சினா ஷாம்பு தயாராகிடும். இதைப் பயன்படுத்தினா இளநரை, முடி உதிர்வு, பொடுகு இருக்காது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயோட நாட்டு மாட்டுப்பால், வேம்பாலம்பட்டை, கார்போகரிசல், செடாமனஸ் சேர்த்து 4 மணி நேரம் காய்ச்சி ஹேர் ஆயில் தயாரிக்கிறேன். 

இது முடியை நல்லா கருப்பாக்கிடும். பஞ்சகாவ்யா சோப் பயன்படுத்தினா தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முல்தானிமெட்டி, சாணப்பவுடர், நல்லெண்ணெய், வேப்பிலையை காய்ச்சி அச்சில் ஊத்தி  காய வெச்சு பஞ்சகாவ்யா சோப் தயாரிக்கிறேன். சாணப்பவுடர், குங்கிலியம், கம்ப்யூட்டர் சாம்பிராணி, நெய், பச்சரிசி மாவை அச்சில் ஊத்தி எடுத்து காய வெச்சு சாம்பிராணி தயாரிக்கிறேன். கொசுவர்த்திகளால் அதன் புகையை சுவாசிக்கும் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுது. அதுக்காக மூலிகை கொசு விரட்டி தயாரிக்கிறேன். சாணப் பவுடர், நொச்சி இலை, வேப்பிலை, துளசியை பொடிப்பண்ணி காய்ச்சி அச்சில் ஊத்தி எடுக்கணும். 

மாசு, மருக்கள் போய் முகம் பளபளப்பாகுறதுக்காக ஃபேஷியல் பண்றாங்க. முல்தானிமெட்டி, கோரக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வசம்பு, பூங்காதியை அரைச்சா ஃபேஷியல் பவுடர் தயாராகிடும். இதைப் பன்னீர் அல்லது பாலில் கலந்து முகத்தில் பூசிக்கலாம். பல்பொடிக்கு மாட்டுச் சாணத்தை எரிச்சு, தைமால், கற்பூரம் கலந்து ஒரு வாரம் உலர வைச்சு பேக் பண்ணிடறேன். இதைப் பயன்படுத்தும்போது பல் சொத்தை, நாற்றம் எதுவும் இருக்காது. பாத்திரம் துலக்க முன்னால ஓடை மண், சாம்பலைப் பயன்படுத்துனாங்க. இப்ப ரசாயனம் கலந்த டிஸ்வாஷ் பவுடர்! இதுக்கு மாற்றா வரட்டியை எரிச்சு சாம்பல் பண்ணி, அதுக்குள்ள இலுப்பைத்தூள், ஆரஞ்சுத் தோலைப் போட்டு அரைச்சு டிஸ்வாஷ் தயாரிக்கிறேன்.

மூட்டுவலி, தசைப்பிடிப்பு வலிகளுக்கு நிவாரணியா மாலிஷ் ஆயில் தயார் பண்றேன். நல்லெண்ணெய், சாணிப்பால், கோமியத்தை காய்ச்சி எடுக்குற எண்ணெயில் தைமால், கற்பூரத்தை கலந்தா அதுதான் மூலிகை மாலிஷ் ஆயில்” என்கிறவர், விற்பனை குறித்துப் பேசுகிறார்...

“அர்க் ஒரு லிட்டர் 205 ரூபாய், ஷாம்பு 110 மில்லி 85 ரூபாய், 60 கிராம் சோப் 30 ரூபாய், 18 சாம்பிராணி, கொசுவர்த்தி துண்டுகள் 25 ரூபாய், 60 கிராம் ஃபேஷியல் பவுடர் 50 ரூபாய், 60 கிராம் பல்பொடி 40 ரூபாய், டிஸ்வாஷ் பவுடர் கிலோ 40 ரூபாய், 100 மில்லி மாலிஷ் ஆயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். வெள்ளக்கோவில், பொள்ளாச்சி, காரைக்கால், பெருந்துறை, ஈரோடுல இயற்கை அங்காடிகளுக்கு விற்பனைக்கு அனுப்புறேன்.  முத்தூர் சுத்துவட்டாரத்துல பல ஊர்கள்ல இருந்து எங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க. 

நான் விவசாய வேலைகளைக் கவனிக்கிறதோட, இந்தத் தயாரிப்பிலும் ஈடுபடுறதால கூடுதல் வருவாய் கிடைக்குது. ரசாயனங்களே இல்லாம எல்லாப் பொருட்களையும் இயற்கை வழியிலேயே தயாரிக்க முடியும். இயற்கை முறையிலான தயாரிப்புப் பொருட்களை தேடி வர்றவங்க இப்ப அதிகரிச்சுட்டு வர்றாங்க. சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம். வருவாய் கிடைக்குதுங்கிறது மட்டுமில்லாம, எந்தக் கேடும் இல்லாத பொருட்களை மத்தவங்களுக்குக் கொடுக்கிறோம்கிற மனநிறைவும் இருக்கு” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஈஸ்வரி!(9965929098)

நீங்க தான் முதலாளியம்மா!

‘அதிகம் படிக்கலை. பொழுதுபோக்கா ஆரி ஒர்க் கத்துக்கிட்டேன். 15 வயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன். பிசினஸா எடுத்துப் பண்ண ஆரம்பிச்ச பிறகு கல்பனாவும் என்கூட சேர்ந்தாங்க. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முழு நேரத் தொழிலே இதுதான்’’ என்கிறார் பவானி. ‘‘எம்பிராய்டரில எத்தனையோ வகை உண்டு. அதுல ஆரி ரொம்பவே ஸ்பெஷல். சில்க் காட்டன், சிந்தெடிக், நெட் துணினு எல்லா மெட்டீரியல்லயும் இந்த ஒர்க்கை பண்ண முடியும். பிளவுஸ், சுடிதார், லெஹங்கா, சேலைனு எதுல வேணாலும் போடலாம். இதுல 21 வகை  தையல் இருக்கு. 


அவங்கவங்க தேவைக்கேத்தபடி காம்பினேஷனை மாத்திப் பண்ணலாம். அடிப்படை தையலோ,எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு 
அவசியமில்லை. ஆர்வமும் உழைக்கிற தைரியமும் இருந்தால் போதும்...’’ என்கிறவர்கள், இந்தத் தொழிலைத் தொடங்க வெறும் 300 ரூபாய் முதலீடு போதும் என ஆர்வம் கிளப்புகிறார்கள். ‘‘ஆரி ஸ்டாண்டு, துணி, நூல், நாலு வகையான ஊசினு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. ஒரு ஜாக்கெட்டுக்கு ஆரி ஒர்க் பண்ண 1 நாள் போதும். கலர் காம்பினேஷன், கிரியேட்டிவிட்டியை பொறுத்துதான் உங்களுக்கு ஆர்டர் வரும். 

உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பொட்டிக், தையல் கடைகளோட பேசி, ஆரி ஒர்க் மட்டும் பண்ணிக் கொடுக்க ஆர்டர் வாங்கலாம். கல்யாணப் பெண்ணுக்கான பிரைடல் பிளவுஸுக்கெல்லாம் 5 ஆயிரம் கூட வாங்கலாம். உழைப்பு எவ்வளவு அதிகமோ, அதே மாதிரி இதுல லாபமும் அதிகம்...’’ என்கிற பவானி மற்றும் கல்பனாவிடம் 2 நாள் பயிற்சியில் ஆரி ஒர்க் செய்வதற்கான பயிற்சி களைக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.( 97898 90446)

தோரணம்!


அளவில் சின்ன வீடு முதல், ஆடம்பர பங்களா வரை வாசலுக்குத் தோரணம் கட்டி அழகுப்படுத்தும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. தோரணங்கள்  கட்டும் பழக்கமில்லாதவர்கள், அதையே சுவர்களை அலங்கரிக்கும் வால் ஹேங்கிங்காக உபயோகிக்கலாம். பெரிய முதலீடோ, உடலை வருத்தும்  உழைப்போ தேவையில்லாமல் சின்ன முதலீட்டில் தோரணம் தயாரிக்கும் பிசினஸை தொடங்கலாம் என்கிறார் சுதா செல்வக்குமார்.

‘‘சாதாரண பேப்பர், ஹேண்ட் மேட் பேப்பர், சணல், ஓ.ஹெச்.பி ஃஷீட், பிளாஸ்டிக் பூக்கள், மணிகள், கிரிஸ்டல், மரம்னு எந்த மெட்டீரியல்ல  வேணாலும் தோரணம் பண்ணலாம். மரத்துல பண்றதானா, டிசைன் கொடுத்து வெளியில கட்பண்ணி வாங்கணும். மற்ற எல்லா மெட்டீரியல்களையும்  நாமளே வெட்டி டிசைன் பண்ணிடலாம். சின்னதா ஒரு பெட்டிக் கடை திறப்பு விழாவுல தொடங்கி, கார்ப்பரேட் ஆபீஸ் திறப்புவிழா வரைக்கும்  அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏத்தபடி தோரணங்கள் பண்ண முடியும். குறைஞ்ச பட்ஜெட்ல கேட்கறவங்களுக்கு பேப்பர், பிளாஸ்டிக் மணி, பூக்கள்  வச்சும், மீடியம் பட்ஜெட்ல கேட்கறவங்களுக்கு ஹேண்ட்மேட் பேப்பர், ஓ.ஹெச்.பி. ஷீட்லயும், காஸ்ட்லியா கேட்கறவங்களுக்கு மரத்துலயும் பண்ணித்  தரலாம். 

100 ரூபாய்லேருந்து. 1,000 ரூபாய் வரைக்கும் விற்க முடியும். பேப்பர்லயும் ஹேண்ட்மேட் பேப்பர்லயும் பண்றதை தோரணங்கள் தவிர, மற்ற  எல்லாத்தையும் தூசு படிஞ்சா அலசி உபயோகிக்கலாம். மரத் தோரணங்களை ஈரத்துணி வச்சுத் துடைச்சா போதும்’’ என்கிறார் சுதா.
பேப்பர் முதல் மரம் வரை எல்லா மெட்டீரியலிலும் தோரணம் செய்ய 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவையாம். ஒரு நாளைக்கு 10  தோரணங்கள் வரை செய்யலாம். 50 சதவிகிதம் லாபம் தருகிற இந்தத் தொழிலுக்கான பயிற்சியை ஒரே நாளில் கற்றுத் தரக் காத்திருக்கிறார் சுதா.  கட்டணம் 500 முதல் 2 ஆயிரம் ரூபாய். (93823 32600)









பனீர் தயாரிக்கும் முறை

பனீர் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். நொறுக்குத்தீனி முதல் டிபன், சாப்பாடு, சூப், ஸ்வீட் என எல்லாவற்றோடும் பொருந்திப் போகும்  பனீர். பால் பிடிக்காதவர்களுக்கும் பனீர் பிடித்துப் போவது ஆச்சரியம். பாலில் இருந்து பெறப்பட்டாலும், பனீரில் கொழுப்பு அறவே கிடையாது.  மனிதர்களின் புரதம் மற்றும் கால்சியம் தேவையை ஈடுகட்டுவதில் பனீருக்கு முக்கிய இடமுண்டு. இத்தனை நல்ல விஷயங்களை உள்ளடக்கிய  பனீர், கொஞ்சம் காஸ்ட்லியானது. அதோடு, கடைகளில் வாங்கும் பனீரை குறிப்பிட்ட நாட்களுக்குள் உபயோகித்துத் தீர்த்து விட வேண்டும்.  இதற்கெல்லாம் மாற்று வழி வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சுஜாதா.

‘‘எம்.எஸ்.சி., பி.எட். படிச்சிருக்கேன். ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்திட்டிருந்தேன். குடும்ப சூழ்நிலைக்காக வேலையை விட்டேன். கூட்டுக்குடும்பம்... ஒவ்வொருத்தருக்கும் பார்த்துப் பார்த்து, விதம் விதமா, புதுசு புதுசா சமைக்கப் பிடிக்கும். பனீர் சமையல் அடிக்கடி இருக்கும். கடைகள்ல  பனீர் வாங்கறது கட்டுப்படியாகலை. அப்பதான் வீட்ல நானே பனீர் தயாரிக்கக் கத்துக்கிட்டேன். வெளியில வாங்கற பனீர்ல கெட்டுப் போகாம இருக்க  ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கறாங்க. குறிப்பிட்ட அளவு பாக்கெட்தான் கிடைக்கும். அதைக் குறிப்பிட்ட நாட்களுக்குள்ள யூஸ் பண்ணிடணும். வீட்ல  தயாரிக்கிறப்ப இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லை. 

ஃப்ரெஷ்ஷான பாலோ, திரிஞ்ச பாலோ... எதுல வேணாலும் பனீர் பண்ணலாம். ‘வீட்ல செய்யற போது, திரிதிரியா வருது, சாஃப்டா இல்லை, அளவு  பத்தலை’னு நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கேன். அது எல்லாத்தையும் சரி செய்ய சில டெக்னிக்ஸ் இருக்கு. அதன்படி செய்தா, கடையில  வாங்கறதை விட சாஃப்டான பனீர் கிடைக்கும். அளவும் கூடக் கிடைக்கும். ஒரு லிட்டர் பால்ல 200 கிராம் பனீர் எடுக்கலாம். 3 நாள் வரை வச்சிருந்து  உபயோகிக்கலாம். பனீர் பண்றதையே ஒரு பிசினஸா செய்ய நினைக்கிறவங்க, வெறும் 500 ரூபாய் முதலீட்டுல தொடங்கலாம். 5 லிட்டர் பால்  வாங்கினா, 1 கிலோ பனீர் கிடைக்கும். 100 கிராம் பனீர் 35 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்...’’ என்கிற சுஜாதா, ஒரே நாள்  பயிற்சியில், பனீர் தயாரிப்பு முறையையும் பனீரை வைத்துச் செய்யக்கூடிய சுவையான 5 உணவுகளையும் செய்து காட்டக் காத்திருக்கிறார். கட்டணம்  500 ரூபாய் (98401 40420).


பால் ? தேவையான அளவு

எலுமிச்சை ? 1
(அல்லது)
வினிகர் ? 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

➹ தேவையான அளவு பாலை ஒரு பாத்திரத்தில் காய்ச்சவும்.

➹ பால் பொங்கிவரும்போது வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.

➹ பால் திரிந்து கட்டியும் தண்ணீருமாகப் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

➹ ஒரு தூய்மையான மஸ்லின் துணியில் அல்லது பனீர் ஸ்ட்ரெய்னரில் கலவையைக் கொட்டி, வாயைக் கட்டி, வடிகட்டுவது போல் தொங்கவிட வேண்டும்.

➹ இரண்டு மூன்று மணிநேரத்தில் மொத்த நீரும் வடிந்து, உள்ளே இருக்கும் திடப்பொருளே பனீர். தேவைப்பட்டால், கையால் அழுத்திப் பிழிந்தால் மிச்சமிருக்கும் நீரும் வெளியேறிவிடும்.

➹ பனீர் உதிரியாக உபயோகிக்கவிருக்கும் இடங்களில் இப்படியே உபயோகிக்கலாம்.

➹ துண்டுகளாகப் பொரிக்க வேண்டிய உணவுப் பொருள்களுக்கு, வடிக்கப்பட்ட பனீரை மேலும் ஒரு மணி நேரம் கனமான பாத்திரத்திற்கு அடியில் வைத்திருந்து எடுக்கவேண்டும். [குக்கரில் நீர் நிரப்பி அதை பனீர் சுற்றியிருக்கும் துணியின் மேல் அழுத்தி வைப்பது சுலபமான முறை. ]

➹ இந்த இறுகிய பனீரை தேவையான அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.

* பனீர் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.
விட்டு தேவைக்கு பயன் படுத்தலாம் மற்றும் வியாபாரம் செய்யலாம் 

பக்கெட் பால்
'பால் வித்து கிடைக்கற காசு, தீவனத்துக்கே சரியாப் போகுது. பாலுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கிறதில்ல. இதுல சம்சாரிக எங்க நாலு காசு சம்பாதிக்கிறது?'' என பால் மாடு வளர்க்கும் விவசாயிகள் புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், ''வழக்கமான முறையில இல்லாம, வேற மாதிரி யோசனை பண்ணினா.... இந்தப் புலம்பலைப் புறமுதுகிட்டு ஓட வெச்சுடலாம். இதுக்கு நானே உதாரணம்'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் பேசுகிறார் 'செங்கல்பட்டு' முகுந்தன்.

''மற்றவர்களுக்கெல்லாம் பெரிதாகப் பலன் கொடுக்காத பால், இவருக்கு மட்டும் எப்படி வருமானத்தைக் கொண்டு வருகிறது..?'' என்ற கேள்வியோடு முகுந்தனைச் சந்தித்தோம்.
''இதுல பெரிய சூட்சமம் எதுவுமே இல்லை. பால் மாடு வச்சிருக்கற விவசாயிக பால் உற்பத்தி செய்றதுல கெட்டிக்காரத்தனமா இருக்கறாங்க. ஆனா, அதை விக்கிறதுல அக்கறைக் காட்டுறதில்ல. 'கறந்தப் பாலை வீட்டுலயே வந்து யாராவது வாங்கிட்டுப் போனா போதும்'கிற மனநிலையிலதான் இருக்காங்க. இந்த சோம்பலை சாக்கா வச்சு வியாபாரிகளும், நிறுவனங்களும் லிட்டர் 12 ரூபாயிலிருந்து 15 ரூபா வரைக்கும் வாங்கி, வெளிச்சந்தையில லிட்டர் 20 ரூபாயிலிருந்து 25 ரூபா வரைக்கும் விக்குறாங்க. உற்பத்தி செய்றவங்களுக்குக் கிடைக்கிறதைவிட, இடையில வாங்கி விக்குறவங்களுக்கு அதிக லாபம் கிடைக்குது. இதெல்லாம் பாத்த பின்னாடி, கறந்தப் பாலை அப்படியே சொஸைட்டிக்குக் கொடுத்துட்டு, 'அப்பாடா'னு உட்கார எனக்குப் பிடிக்கல. ஒரு லிட்டர் பாலுக்கு சொஸைட்டியில 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, அதிகபட்சமா 15 ரூபாய் வரைக்கும் கொழுப்புச் சத்துக்கு ஏற்ப பணம் கொடுப்பாங்க.
இந்தப் பணமும் 15 நாள் கழிச்சுதான் கிடைக்கும். பல ஊர்கள்ல 30 நாள் கழிச்சுதான் கிடைக்குது. 'இந்தப் பிரச்னைக்கெல்லாம் ஒரே தீர்வு... நாம உற்பத்தி செய்ற பாலை நாமே விக்குறதுதான்'னு முடிவு செஞ்சேன். 'கிராமத்திலகூட பால் பாக்கெட் வந்துவிட்ட இந்தக் காலத்துல நம்மால பாலை நேரடியா விற்க முடியுமா'னு ஆரம்பத்துல சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனா, ஒரு சொட்டு கூட தண்ணி ஊத்தாம, கறந்தவுடனே பாக்கெட்ல அடைச்சு, அடுத்த ஒரு மணி நேரத்துல கொடுத்ததும்... விற்பனை பிரச்னையில்லாமப் போயிடுச்சி. ஒரு லிட்டர் பாலை 24 ரூபாய்க்கு விற்கிறேன். ஆனா, கடையில் ஒரு லிட்டர் பால், 25 முதல் 28 ரூபாய் வரை விக்கிறாங்க.
மாதம் 14 ஆயிரம் கூடுதல் வருமானம்!
ஒரு நாளைக்கு 50 லிட்டர் பாலை நான் சொஸைட்டிக்குக் கொடுத்தா... அதிகபட்சம் 750 ரூபாய் கிடைக்கும். அதே பாலை நேரடியாக விற்கும்போது 1,200 ரூபாய் கிடைக்குது. ஆக, ஒரு மாசத்துல கூடுதலா 14 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இன்னொரு பெரிய நன்மை... உடனுக்குடன் நமக்குப் பணம் கிடைக்குறதுதான். 
பால் வாங்குறவங்களுக்கும் நிறைய நன்மை. அதாவது, கடையில வாங்குறதைவிட குறைஞ்ச விலை. பாலும் புதுசா இருக்கும். கடையில நாம வாங்கற பாலெல்லாம்... புதுப் பால் கிடையாது. பல நாளைக்கு முன்னயே கறந்து, பதப்படுத்தி, பால் பவுடராக மாத்தி, தேவைப்படுறப்ப தண்ணியை ஊத்தி, பாலாக மாத்தி கொடுக்குற பால். இப்படிப் பதப்படுத்தின பால்ல இயற்கையான சுவை இருக்காது. ஆனா, நீங்க கறந்து கொடுக்கற புதுப் பாலைக் குடிச்சு பழகுனவங்க, பாக்கெட் பால் பக்கம் போகவே மாட்டாங்க'' என்றவர், பாலை நேரடியாக விற்பனை செய்யும்போது சந்திக்கவேண்டிய சிரமங்களைப் பற்றியும் சொல்லத் தவறவில்லை. 



''சிலர், 'கடையில வாங்குற பால்ல நிறைய தண்ணி சேர்க்கலாம். வீட்டில வந்து ஊத்துற பால்ல அது முடியாது'னு சொல்வாங்க. பொதுவா... எந்தப் பாலா இருந்தாலும், அதுல அதிகம் தண்ணி சேர்த்தா... சத்துக் குறைஞ்சு போயிடும். குழந்தைகளுக்குப் பால்ல தண்ணி கலக்காம காய்ச்சிக் கொடுக்குறதுதான் நல்லது. இதை எல்லாம் நாமதான் பொறுமையா எடுத்துச் சொல்லணும். கடையில் விக்கிற பால்ல கொழுப்புச் சத்து அதிகம்னு நினைக்கிறாங்க. இது உண்மையில்ல. எல்லா மாட்டுப் பால்லயும் 4% முதல் 6 % வரை கொழுப்புச் சத்து இருக்கும். இதையும் நாம தெளிவுப் படுத்தணும்.
அலையத் தேவையில்லை..!  
பிறகு, 'கறந்ததும் கொடுத்தோமா.. காசு வாங்கினோமா'னு இல்லாம, வீடு வீடா போய் யார் பால் ஊத்துறது?'னு ஒரு கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனா, சுத்தமானக் கறவை மூலம் கிடைக்கற புதுப் பாலைக் கொடுக்குறப்ப... தேவையிருக்கறவங்க தேடி வந்து வாங்கிட்டுப் போவாங்க. இது என் அனுபவத்துல நான் பார்த்த உண்மை. அதுவுமில்லாம அங்க இங்க அலையாம... ஒரே ரோடு, ஒரு காலனி, அடுக்குமாடி குடியிருப்புனு ஒரே இடத்தில நிறைய பாலை விக்கலாம். இந்தப் பாலை பாக்கெட்ல அடைச்சி கொடுத்தா... வாடிக்கையாளர்களை சுலபமா ஈர்க்கலாம். பாக்கெட் போடுற இயந்திரம் எல்லா ஊர்கள்லயும் எளிதா கிடைக்குது. இதுக்கு அதிகமா செலவாகாது. பாக்கெட்ல போட்டுக் கடைகள்லயும் கொடுக்கலாம். குறைஞ்ச விலையில பாட்டிலை வாங்கி அதுலயும் அடைச்சுக் கொடுக்கலாம். 


நாம் செய்யவேண்டிய ஒரே பெரிய செலவு, எந்நேரமும் ஓடக்கூடிய ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குறதுதான். சில நேரங்கள்ல விக்காம தேங்குற பாலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு, மறுநாள் காலையில வித்துடலாம். கறக்குற பாலை அப்பப்ப விற்கமுடியும்னு நினைக்கறவங்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியும் தேவையில்லை. 
 

இந்த முயற்சியில ஜெயிக்கணும்னா... இதை ஒரு வேலையா எடுத்து செய்றதுக்கு நமக்கு அக்கறை இருக்கணும். பாலை பாக்கெட் போட, அதைக் கொண்டு போய் கடைகளில் போட, பணம் வசூலிக்க, தயாராயிருக்கணும். ஆரம்பத்துல 50 லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்றப்ப... அதிக முதலீடோ, அலைச்சலோ இருக்காது. உங்கப் பாலுக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து, அளவைக் கூட்டிக்கலாம்'' என்று ஆக்கப்பூர்வமான யோசனைகளோடு முடித்தார் முகுந்தன்.

Saturday, November 8, 2014

பஞ்சகவ்யாவில் பளீரிடும் பன்னீர் திராட்சை...!


'இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள்.
சிறுவாணிக் காற்று சிலுசிலுக்கும் இளமாலைப் பொழுதொன்றில், மேற்குத்தொடர்ச்சிமலைச் சாரலில் இருக்கும் உடன்பிறப்புக்களின் பண்ணையில் நுழைந்தோம். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் கல்பந்தலுக்குள் கருநீல நிறத்தில் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன, பன்னீர் திராட்சைகள். கைக்கு அடக்கமான கத்தரிக்கோலில் லாகவமாக அறு வடை செய்து கொண்டிருந்தனர் சில பெண்கள். பாங்காய் வெட்டிய பழக்குலைகளை உதிராமல் அட்டைப் பெட்டியில் அடைத்து எடைபோட்டு அடுக்கிக்கொண்டிருந் தனர், சில பணியாளர்கள். இதை யெல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களைச் சந்தித்தோம்.
சோதனையான சாதனை!
முதலில் பேசியவர், சதாசிவம். ''பரம்பரை விவசாயக் குடும்பம். 60 ஏக்கருக்கு மேல நிலம் இருக்கு. எல்லாமே கிணத்துப்பாசனம்தான். வாழை, தக்காளி, வெங்காயம், திராட்சைனு பணப்பயிர் சாகுபடிதான் அதிகம். இதுல திராட்சைப் பந்தல் மட்டும் 40 ஏக்கர்ல இருக்கு. திராட்சையைப் பொருத்தமட்டில் சுழற்சி முறை விவசாயம்தான். வருஷமெல்லாம் திராட்சை அறுவடை நடக்கிற மாதிரி திட்டம் போட்டு பந்தலைப் படர விட்டிருக்கோம். அதனால, நாள் தவறாம இங்க அறுவடை நடந்துட்டே இருக்கும். பந்தல் வேலைக்கு மட்டும் 50 ஆட்களை நிரந்தரமாக வெச்சிருக்கோம்.
நாங்க திராட்சை விவசாயம் பக்கம் வந்து 30 வருஷமாச்சு. முன்னயெல்லாம் தீவிர ரசாயன விவசாயிங்கதான் நாங்க. பூச்சிக்கொல்லி கம்பெனிக்காரங்க, ரசாயன உர கம்பெனிக்காரங்கஎல்லாருக்கும் பரிசோதனை வயலே எங்க தோட்டம்தான்.
23 வருஷமா திராட்சைக்கு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை லிட்டர் கணக்குல ஊத்தியிருக்கோம். டன் கணக்குல வீரியமான ரசாயன உரங்களைக் கொட்டியிருக்கோம். அந்த சாதனையைப் பாராட்டி பல கம்பெனிக்காரங்க 'சாதனை விவசாயி’ விருதெல்லாம் கொடுத்திருக்காங்க. உண்மையில இதெல்லாம் சாதனையில்ல... வேதனைங்கிறதை நம்மாழ்வார் ஐயா மூலமாவும், 'பசுமை விகடன்’ மூலமாவும் தெரிஞ்சிக்கிட்டோம். பசுமை விகடன்ல வர்ற கட்டுரைளைப் படிச்சுட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை நேர்ல போய் பார்த்து தெரிஞ்சிட்ட விஷயங்கள் மூலமா, நாங்களும் இயற்கை விவசாயிகளா மாறிட்டோம்.
7 வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் திராட்சை சாகுபடி செய்றோம்'' என்ற சதாசிவம், ஒரு கொத்து திராட்சைப் பழங்களைப் பறித்து நம் கையில் திணித்து, ''சாப்பிட்டுப் பாருங்க பஞ்சகவ்யாவில் வெளைஞ்ச பன்னீர் திராட்சை... பஞ்சாமிர்தமாக இனிக்கும்'' என்றார்.
அவர் சொன்னது உண்மை என்பதை, அடுத்த நொடியே நம் நாக்கு ஆமோதித்தது!
அள்ளிக் கொடுக்கும் ஆட்டு எரு!
அண்ணனைத் தொடர்ந்த தம்பி மாறன், ''களிமண், களர்மண் நிலத்தைத் தவிர மத்த எல்லா மண்ணிலும் திராட்சை நல்லா வரும். அதுவும் செம்மண் நிலத்துல பிரமாதமா வரும். எங்க பகுதி முச்சூடும் அருமையான செம்மண்ணுங்க. அதேசமயம் திராட்சை வெள்ளாமைக்குப் பொருத்தமான சீதோஷ்ண நிலையும் இருக்கறதால மத்த பகுதிகளைவிட இங்க கெட்டியான மகசூல்தான். திராட்சையில் பல ரகங்கள் இருந்தாலும், நாங்க போட்டுருக்கிறது, பன்னீர் திராட்சைங்கிற நாட்டு ரகம்தான்.
மாடு, கன்னுக போக 250 செம்மறி ஆடுகளும் வெச்சிருக்கோம். அதுகள தோட்டத்தை ஒட்டி இருக்கிற மலைக்கு பகல்ல மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். ராத்திரியில நிலத்துல கிடை போட்டுடுவோம். மாசக்கணக்கில அதுகளோட புழுக்கை, தோட்டம் முழுக்க மண்டிக் கிடக்கிறதால, கொடிகளுக்கு ஊட்டம் கிடைச்சுட்டே இருக்கும். ஆடுகள் வளர்க்கிறதுக்கான சூழல் எங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். அடி உரமா தொழுவுரமும், ஆட்டு எருவும் சேர்ந்து செய்ற மாயாஜாலம்... இடுபொருள் செலவைக் குறைக்கிறதோட, அதிக மகசூலையும் அள்ளிக்கொடுக்குது'' என்றார்.
இயற்கை முறையில் திராட்சை சாகுபடி செய்யும் நுட்பங்கள் பற்றி, சதாசிவம் தந்த தகவல்களை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது!
'நிலத்தில் சில மாதங்கள் ஆட்டுக்கிடை போட்டு... நன்றாக உழ வேண்டும். பிறகு, வழக்கமான முறையில் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு குழியெடுத்து... ஒவ்வொரு குழிக்குள்ளும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம், ஆட்டு எரு 3 கிலோ, கோழி உரம் ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். திடமான, நன்கு விளைந்த கணுக்கள் உள்ள திராட்சைக்கொடித் தண்டுகளை வெட்டி எடுத்து, பஞ்சகவ்யா மற்றும் சூடோமோனஸ் கரைசலில் நனைத்தெடுத்து, நடவுசெய்து பாசனம் செய்யவேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திராட்சைக்கு சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. நீர் சிக்கனம், களைக் கட்டுப்பாடு, திரவ உரப் பயன்பாடு போன்ற பல நன்மைகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் உண்டு.  
15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்குச் செடி 750 மில்லி பஞ்சகவ்யா கரைசலை நேரடியாகக் கொடுக்க வேண்டும். நடவு செய்த ஒரு ஆண்டில் வளர்ந்து நிற்கும் கொடிகளை எடுத்து பந்தலில் படரவிட வேண்டும். தொடர்ந்து கிளைகளை கவாத்து செய்து வந்தால், பூ எடுத்து குலைகளில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் பிஞ்சுக்குலைகளை கீழே தொங்கும்படி எடுத்துக் கட்டவேண்டும். இடையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை
10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கொடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். பூக்கள் அனைத்தும் பிஞ்சாக மாற இது அவசியம். பழஅழுகல் சேதாரத்தையும் இது கட்டுப்படுத்தும்.
சாம்பல் நோய்க்கு வேப்பங்கொட்டை, சுண்ணாம்புக் கரைசல்!
திராட்சையை அதிகம் தாக்குவது, சாம்பல் நோய். இதில் அடிச்சாம்பல் நோய், மேல்சாம்பல் நோய் என இரண்டு வகைகள் உண்டு. இந்த வகை சாம்பல் நோய், இலைகள் மற்றும் பழங்களில் படர்ந்து, குலைகளின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதைப்போக்க, ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சணக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டை சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும், துத்தநாகம் சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் நோயின் அறிகுறி தெரிந்தால், தேவையான பராமரிப்புச் செய்தால் போதுமானது.
காய்ந்த வேப்பங்கொட்டையை ஒரு கிலோ எடுத்து, அரைத்துப் பொடியாக்கி, 2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் வீதம் கலந்து, கைதெளிப்பான் மூலம் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இலைகள் மீது புகைபோல் தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும். பழஈக்கள் மற்றும் பொன்வண்டுகளையும் இது விரட்டிவிடும். இதற்கு, சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படாவிடில், துத்தநாகக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு கிலோ துத்தநாகத்தை துணியில் முடிந்து, 200 லிட்டர் தண்ணிரில் மூழ்குமாறு 24 மணிநேரம் வைக்க வேண்டும். 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை ஊற வைத்து வடிகட்டி, அதை துத்தநாகம் ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் கலந்து அப்படியே தெளித்தால்... சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படும்.
90 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை!
நடவு செய்த 16-ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். 90 நாட்களுக்கு ஓர் அறுவடை. இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை அறுவடை செய்யலாம். முதல் முறை ஏக்கருக்கு 5 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். அறுவடைக்குப் பிறகு, பவர் டில்லர் மூலம் பந்தலுக்குள் களை எடுத்து, ஆட்டுக்கிடை போட வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் தலா 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டவேண்டும். தொடர்ந்து நீர் பாய்ச்சி முறையாகப் பாரமரித்தால், அடுத்த 90-ம் நாளில் இரண்டாவது அறுவடை. இதில் 4 டன் வரை மகசூல் கிடைக்கும். மூன்றாவது அறுவடையில் 4 டன் கிடைக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், தொடர்ந்து ஊட்டம் கொடுத்து வந்தால், 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிதாக செடிகளை நடவு செய்யவேண்டும்.'
மனதிருப்திக்கு ஈடே இல்லை!
சாகுபடிப் பாடம் முடித்த சதாசிவம், ''வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல சராசரியா 10 டன் மகசூல் கிடைக்கிது. இப்போதைக்கு ரசாயன விவசாயத்துல கிடைக்கிற மகசூலைவிட இது குறைவுதான். இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல ரசாயனத்துல கிடைக்கிறதைவிட அதிக மகசூலை எடுத்துக் காட்டுவோம். எங்க தோட்டத்துக்கு அங்ககச் சான்றிதழ் வாங்கிட்டோம். நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ திராட்சைக்கு 45 ரூபாய் விலை கிடைக்கிது. ஒரு ஏக்கர்ல, ஒரு வருஷத்துல 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் சேர்த்து, 2 லட்சம் ரூபாய் போக... 2 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதைவிட பெரிய லாபம், ரசாயனங்களைக் கொட்டிக்கொட்டி மலடாகிப் போன எங்க மண், மறுபடியும் உயிர்ச்சத்துள்ளதாக மாறியிருக்கிறதுதான். இதையெல்லாத்தையும்விட மக்களுக்கு விஷமில்லாத திராட்சையைக் கொடுக்கிறோம்கிற மனதிருப்திக்கு ஈடே இல்லை'' என்று நெகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.ஆர். சதாசிவம், செல்போன்: 97866-44424
கே.ஆர். மாறன், செல்போன்: 97866-22424.

 பந்தல் அமைக்க பட்டியல்!
 ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க குறைந்தபட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 8 அடி உயரத்தில் 280 கல்தூண்கள் தேவைப்படும். ஓரக்கால்களுக்கு முட்டுக்கொடுக்க,
20 தூண்கள் தேவைப்படும். ஆக, ஏக்கருக்கு மொத்தம் 300 கல்தூண்கள் தேவை. தூண்களை நடும்போது மண்ணுக்குள் இரண்டரை அடியும், மேலே ஐந்தரை அடியும் இருக்குமாறு 15 அடி இடைவெளியில் நடவேண்டும். ஒரு ஏக்கர் பந்தலுக்குள் வலை பின்ன 750 கிலோ கம்பி தேவை. பந்தல் கம்பிகளை இறுக்கமாக இழுத்துக்கட்டுவது மிக அவசியம். இந்த வகைப் பந்தல் 25 வருடங்கள் வரை தாங்கி நிற்கும்.
 மதிப்புக்கூட்டல் மந்திரம்!
சதாசிவத்தின் மனைவி ராஜாமணியும், மாறனின் மனைவி துளசிமணியும் திராட்சையில் ஜூஸ், ஜாம் எனத் தயாரிக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசும் ராஜாமணி, ''பசுமை விகடன்ல் வர்ற தண்டோரா பகுதி தகவலைப் பார்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல நடந்த மதிப்புக்கூட்டுதல் பயிற்சியில கலந்துகிட்டு, திராட்சையை மதிப்புக்கூட்டுறது பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். இதைத் தொடர்ந்து நாங்க தயாரிக்குற பொருட்களை கோயம்புத்தூர்ல இருக்கிற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறோம். வாரம் 100 பாட்டில் வரைக்கும் விற்பனையாகுது'' என்று குஷி பொங்கச் சொன்னவர்,
''திராட்சை ரசத்தோட, கேரட் சாறு சமஅளவு கலந்து தினமும் ஒரு நேரம் குடிச்சா, சிறுநீரக கல்லெல்லாம் கரைஞ்சுடும். திராட்சைப் பழங்களை விதையோட சேர்த்துச் சாப்பிட்டா, வாதம் மட்டுப்படும். புற்றுநோய் வராது. திராட்சை ரசத்தோடு தேன் கலந்து சாப்பிட்டா, ரத்தம் விருத்தியாகும்'' என்று மருத்துவ ஆலோசனைகளையும் தந்தார்.
இல்லை, இடைத்தரகு!
தோட்டத்தில் விளையும் திராட்சையை நேரடி விற்பனை செய்து வருகிறார், சதாசிவம். இதைப் பற்றிப் பேசியவர், ''இங்க விளையுற திராட்சையை, எங்க பண்ணை பெயர் அச்சடிக்கப்பட்ட 2 கிலோ அட்டைப் பெட்டிகள்ல அடைச்சு சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு பகுதிகள்ல இருக்கிற இயற்கை வேளாண்மை உணவுப்பொருள் விற்பனை அங்காடிகளுக்கு அனுப்புறோம். அதோட சிறுவாணி மெயின்ரோடு பகுதியில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், நவீன குடியிருப்புக்கள், கோயில், தியான மடங்கள் இருக்கறதால... மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்.
அதை மனசுல வெச்சு அங்க ஒரு திராட்சை விற்பனை மையம் நடத்துறோம். கோயம்புத்தூர்ல இருக்கற உழவர் சந்தைகளுக்கும் கொண்டுபோய் நேரடியா விற்பனை செய்றோம். அதனால எங்களுக்கு தரகர் கமிஷன் செலவே கிடையாது'' என்றார்.

ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!


'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார்.
பணம் கொட்டும் பரம்பரைத் தொழில்!
'பக்...பக்...பக்...' என்று மைதீஷ்குமார் குரல்கொடுக்க, கூண்டுக்குள் இருந்து வெளிப்பட்ட புறாக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் வீசிய தீனியைக் கொத்திக்கொண்டிருந்த காட்சி ரம்யமாக இருந்தது.
''எங்களுக்கு இங்க 20 ஏக்கர் நிலம் இருக்கு. பண்ணை வீட்டுலதான் குடியிருக்கோம். 10 ஏக்கர்ல தென்னையும், மூணு ஏக்கர்ல நெல்லியும் போட்டிருக்கோம். மீதமுள்ள நிலத்துல வெங்காயம், மிளகாய், கத்திரி, கொத்தமல்லினு தண்ணீர் வசதிக்குத் தகுந்தாப்பல மாத்தி மாத்தி வெள்ளாமை வெச்சுடுவோம். எல்லாமே கிணத்துப்பாசனம்தான்.
நான் படிச்சு முடிச்சதும், திருப்பூர்ல ஒரு பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன். எங்க தோட்டத்துல 10 ஜோடிப் புறாக்களை மரக்கூண்டு வெச்சு அப்பா வளர்த்துட்டு இருந்தார். சின்னவயசுல இருந்தே அதைப் பார்த்து பழகினதால, எனக்கும் புறா வளர்ப்புல ஈடுபாடு வந்துடுச்சு. எங்க தோட்டத்துல புறா இருக்கிற விஷயம் தெரிஞ்சு, நிறையபேரு அதை வாங்கிட்டுப் போவாங்க. அதுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது தெரிஞ்சதும், 'இதையே பண்ணையா மாத்தினா என்ன?’னு யோசிச்சேன். வீட்ல சொன்னதும், பரம்பரையா வீட்ல வளர்ந்துட்டு வந்த 10 ஜோடிப்புறாக்களை என்கிட்ட கொடுத்திட்டாங்க. படிப்படியா பெருக்கி, இப்ப 250 ஜோடிகள் கையில இருக்கு. வெள்ளை, சாம்பல், நீலம், அடர் ஊதானு பல நிறங்கள்ல புறாக்கள் இருக்கு. இந்த 250 ஜோடிகளை தாய்ப்பறவைகளா வெச்சு, கிடைக்கிற குஞ்சுகளை விற்பனை செய்றேன்' என்ற மைதீஷ்குமார், நிழல்வலைத் திடலின் கதவைத் திறந்துவிட ஒன்றன்பின் ஒன்றாக வானில் சிறகடிக்கத் தொடங்கின, புறாக்கள். அவை கண்ணை விட்டு மறையும் வரை, அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
கூண்டுக்குள் வளர்க்க முடியாது!
'இதெல்லாம், நாட்டுப்புறா வகையைச் சேர்ந்தவை. அதனால, கூண்டுல அடைச்சு வளர்க்க முடியாது. சுதந்திரமா பறந்து ரொம்ப தூரம் போய், மேஞ்சுட்டு வர்றதுதான் இதுகளுக்குப் பிடிக்கும். அதன் இயல்பும் அதுதான். நாம அதை மாத்த முயற்சி பண்ணக்கூடாது.
புறாக்கள் தங்குறதுக்காக, 60 அடி நீளம், 10 அடி அகலம் 20 அடி உயரத்துல ஓட்டு வீடு அமைச்சிருக்கேன். உள்ளே இருக்கிற இரண்டு சுவர்கள்லயும், ஹாலோ பிரிக்ஸ் மூலமா இரண்டு புறாக்கள் தங்குவதற்கு, ஏத்த மாதிரி 1,100 சின்னச்சின்ன அறைகளை அமைச்சு... அதுக்குள்ள மெது மணலைக் கொட்டி வெச்சிருக்கேன். எங்கிட்ட, இப்ப இருக்கிற புறாக்களுக்கு 250 அறைகள் மட்டுமே போதுமானதா இருந்தாலும், எதிர்காலத்தை மனசுல வெச்சு, அறைகளை அதிகப்படுத்தியிருக்கேன்.
புறாக்களோட வீட்டு மேல, ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் டேங்க் வெச்சு, 24 மணி நேரமும் புறாக்களுக்கு தண்ணி கிடைக்கிற மாதிரி, ஏற்பாடு பண்ணிருக்கேன். வளரும் குஞ்சுகள் மட்டும்தான் எப்பவும் அறைக்குள்ள இருக்கும். பெரிய புறாக்கள் பகல் நேரத்துல வெளியில போயிடும். புறாவுக்கான கூண்டு வீட்டைச் சுத்தி நிழல் வலை கட்டி வெச்சிருக்கேன்.
பராமரிப்புக் குறைவு!
புறாக்களுக்கு தினமும் ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீனி போட்டா போதுமானது. காலை 6 மணிக்குத் திறந்துவிட்டா, 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பறந்து திரிஞ்சு இரை எடுக்கும். சிலசமயங்கள்ல 40 கிலோ மீட்டர் வரைக்கும்கூட போகும். காலை பத்து மணிக்கு எல்லா புறாவும் வீட்டுக்குத் திரும்பிடும். நாட்டு ரக ஜோடிப்புறாக்கள் சுத்த சைவம். நிலத்திலுள்ள புல், பூண்டு, சிறுதானியங்கள், களிமண் உருண்டைகளை உணவா எடுத்துக்கும். ஈரக்களிமண்ணை அலகாலேயே சின்ன உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டுக்கும். இரை எடுத்துட்டு வந்ததும், எல்லா புறாக்களும் தொட்டிகள்ல உள்ள தண்ணியைக் குடிக்கும். கலங்கி அழுக்கா இருக்குற தண்ணியை, பெரும்பாலும் இதுங்க குடிக்கிறதில்லை. அதனால சுத்தமான தண்ணி அவசியம். ஒரு நாளைக்கு நாலு தடவையாவது புறாக்கள் தண்ணீர் குடிக்கும். திரும்பவும், சாயங்காலம் 3 மணிக்கு புறா வீட்டைத் திறந்து சுத்தி அடைச்சிருக்குற நிழல் வலைக்குள்ள விட்டு தானியங்களைத் தூவுனா சாப்பிட்டு, தண்ணி குடிச்சுட்டு இருட்டுற நேரத்துல, அறைகளுக்குள்ள அடைஞ்சிடும். 250 ஜோடிகளுக்கு ஒரு நாளைக்கு 15 கிலோ தானியமும், 10 லிட்டர் தண்ணியும் தேவைப்படுது'' என்ற மைதீஷ்குமார், விற்பனை வாய்ப்புப் பற்றி சொன்னார்.
விற்பனையில் பிரச்னையில்லை!
''தாய்ப்புறா 8 வருஷம் வரைக்கும் முட்டை வைக்கும். அதுக்குப் பிறகு, தாய்ப்புறாவை மாத்திடணும். அப்பதான் முட்டை உற்பத்தி குறையாம இருக்கும். ஒரு ஜோடிப்புறா மூலமா, வருஷத்துக்கு 14 முட்டைகள் கிடைக்கும். இதுல சேதாரம் போக, சராசரியா
10 முட்டைகள் தேறும். பொறிக்கற குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கிற நிலை வரைக்கும், வளத்து வித்துடணும். நம்மகிட்ட பழகிட்டா... எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டாலும், திரும்ப நம்மகிட்டயே வந்துடும். அதனால, பறக்குறதுக்கு முன்னயே கண்டிப்பா வித்துடணும்.
கோயம்புத்தூர், பெங்களூரு, கேரளாவுல இருந்து வியாபாரிகள் தேடிவந்து புறாக்குஞ்சுகளை வாங்கிட்டுப் போறாங்க. புறா இறைச்சியை நிறைய நோய்களுக்கு மருந்தா சாப்பிடுற பழக்கம் இருக்கிறதால, எப்பவும் நல்ல கிராக்கி இருக்கு.
இப்போதைக்கு ஒரு ஜோடி, 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. 250 ஜோடி தாய்ப்புறாக்கள்ல இருந்து வருஷத்துக்கு சராசரியா 1,200 ஜோடி குஞ்சுகள் கிடைக்குது. விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனம், வேலையாள் செலவு எல்லாம் போக வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது.  
 2 லட்சம் நிச்சயம்!  10 லட்சம் லட்சியம்!
இடவசதி இல்லாதவங்க புறக்கடையிலகூட புறாவை வளக்கலாம். அதிக முதலீடு தேவையில்ல. நாம வளக்கப்போற புறாக்களோட எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி கூண்டு அமைக்கறது மட்டும்தான் செலவு. பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யறதுக்கு ஏற்ற தொழில் இது. இப்போதைக்கு
2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. படிப்படியா ஆயிரம் ஜோடி தாய்ப்புறாக்களை உருவாக்கி, வருஷத்துக்கு 10  லட்ச ரூபாய் லாபம் எடுக்கணும்கிறதுதான் என் லட்சியம்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
ஆர்.கே. மைதீஷ்குமார்,
செல்போன்: 98431-80009

நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு!

சிப்பிப்பாறை... கன்னி... கேரவன்...

செல்லப்பிராணி என்றாலே 'சட்’டென நினைவுக்கு வருவது, நாய்தான். ரகம் ரகமாக வெளிநாட்டு நாய்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும், எப்போதுமே நம்நாட்டு ரக  நாய்களுக்கு தனி மவுசு உண்டு. காரணம், அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு, கொஞ்சம் பழக்கினால், வேட்டை, காவல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை,   கன்னி போன்ற நாட்டு ரக நாய்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு ரக நாய்களை வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார், ஜான் ஆர்தர்.
திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள மாறாந்தை எனும் ஊரில் 'டேவிட் ஃபார்ம்’ என்ற பெயரில் நாட்டு நாய்கள் பண்ணையை வைத்திருக்கிறார் ஜான் ஆர்தர். இந்தப் பண்ணையில் மேலாளராக இருப்பவர் அந்தோணி ஷெட்டி. ஒரு மாலைவேளையில், பண்ணையில் நாய்களோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த  அந்தோணி ஷெட்டியைச் சந்தித்தோம். ''நாட்டு நாய்கள், நம்ம மண்ணோட சொத்து. அதை அழிஞ்சி போகாம பாதுகாக்கத்தான், இந்த பண்ணையை ஜான் ஆர்தர் தொடங்கினாரு. அவர், நினைச்சது போலவே, பண்ணைய சிறப்பா நடத்திக்கிட்டு வர்றோம்...'' என்று அறிமுகம் சொன்ன அந்தோணி ஷெட்டி விரிவாகப் பேசத் தொடங்கினார்.
''சின்னவயசுலயே எனக்குப் பிராணிகள் வளர்ப்புல ஆர்வம் அதிகம். மிட்டாய் வாங்க கொடுக்குற காசை சேர்த்து வெச்சு, கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்துடுவேன். குறிப்பா, நாய்கள் மேல ரொம்ப பிரியம். நாட்டு நாய்ல இருந்து, பல ரக நாய்களையும் வாங்கி வளர்த்திருக்கேன். கோவாவுல தனியார் கப்பல் கம்பெனியில சூப்பர்வைசரா இருந்தேன். அங்க இருந்து போபாலுக்கு மாத்தினாங்க. 'வேலை பார்த்தது போதும் ஊரைப் பார்க்க வந்துடுங்க’னு வீட்டுல சொன்னதால, திருநெல்வேலிக்கே திரும்பி, எஸ்.டி.டி பூத், ஜெராக்ஸ் கடை வெச்சேன். கூடவே நாய் வளர்ப்பையும் தொடர ஆரம்பிச்சேன்.
ஒரு நண்பர் மூலமா நாட்டு ரக நாய்கள் பத்தியும், அதுங்கள்லாம் அழியற நிலையில இருக்கறதையும் கேள்விப்பட்டேன். இதையெல்லாம் பாதுகாக்கிற வகையில, 'தமிழ்நாட்டுப் பாரம்பரிய ரகங்களை மட்டும்தான் வளர்க்கணும்'னு முடிவு பண்ணினேன். பள்ளி, கல்லூரி நண்பர்களைவிட... நாய்கள் வளர்ப்பு மூலமா கிடைச்ச நண்பர்கள்தான் அதிகம். அப்படி அறிமுகமானவர்தான், இந்தப் பண்ணையோட உரிமையாளர் ஜான் ஆர்தர். அவருக்கும் நாய் வளர்ப்புல ரொம்ப ஈடுபாடு. எனக்கு நாட்டு ரக நாய்கள் மேல இருந்த ஈடுபாட்டை பாத்துட்டு, இந்தப் பண்ணையிலேயே இடம் கொடுத்து நாய்களை வளர்க்கச் சொல்லிட்டார். தன்னோட பண்ணைக்கு என்னை மேலாளராவும் ஆக்கிட்டார். இப்போவரைக்கும் நாய் வளர்ப்புக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். இப்போ, 9 சிப்பிப்பாறை (5 பெண் 4 ஆண்), 4 கன்னி (3 பெண் 1 ஆண்) மற்றும் 3 கேரவன் பெண் நாய்கள் (மகாராஷ்டிர இனம்) என மொத்தம் 16 நாய்கள் இருக்கு'' என்ற அந்தோணி ஷெட்டி, தனது வளர்ப்பு முறைகள் பற்றிச் சொன்னதைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
காலை பால்... மாலை உணவு!
'தினமும் காலையில் 8 மணிக்கு ஒவ்வொரு நாய்க்கும் அரை லிட்டர் பாலை (அரை லிட்டர் பாலுக்கு 100 மில்லி தண்ணீர் கலந்து) காய்ச்சி, ஆறவைத்து கொடுக்கவேண்டும். தண்ணீர் கலக்காவிட்டால், வயிற்றுப்போக்கு வரும். மாலை 3 மணிக்கு 300 கிராம் சாதம், 300 கிராம் கோழிக்கறி. கொதிக்கும் உலையில் அரிசி போடும்போதே, கோழி இறைச்சியையும் சேர்த்துப் போட்டு சமைக்கலாம். சாதத்தில் உப்பு சேர்த்தால், தோல் நோய் வரும். எலும்பு கலந்த கறியாக இருந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு மூன்று வேளையும் சுத்தமான தண்ணீரைக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
நோய்கள் கவனம்!
இந்த ரக நாய்களை 'பார்வோ’, 'டிஸ்டம்பர்’ என்கிற இரண்டுவிதமான நோய்கள் அதிகமாகத் தாக்கும். கண்ணில் பீளை வடியும், உடல் சூடு அதிகரிக்கும். சுறுசுறுப் பில்லாமல், சாப்பிடாமல் சோம்பலாகவே படுத்துக் கிடக்கும். உள்ளங்கால் சொரசொரப் பாக இருக்கும். இப்படி இருந்தால் அது, 'பார்வோ’ நோயின் அறிகுறி. உடனே கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஊசி போட வேண்டும். நாய் நிற்கும்போது தலையைத் தூக்கிப் பார்க்காமல், தொங்க போட்ட நிலையில் தலை ஆடிக் கொண்டே இருந்தால், டிஸ்டம்பர் நோய்க்கான அறிகுறி. லேசாக தலை ஆடும்போதே அதற்குரிய ஊசியைப் போட வேண்டும். இல்லாவிட்டால், உயிரிழப்பு ஏற்படக்கூடும். உண்ணிகள் வராமல் இருக்க, நாய்க் குடிலைச் சுற்றி தடுப்பு மருந்தைத் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுக்கு ஒரு தடவை ரேபிஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போடவேண்டும். நாய்களை வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பாட்ட வேண்டும்.    
60 நாள் குட்டிகள் விற்பனை!
நாய்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை பருவத்துக்கு வரும். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஆண் நாயோடு சேர்த்து, இனப்பெருக்கம் செய்தால், தரமான குட்டிகள் கிடைக்கும். ஆண் நாயோடு சேர்ந்த நாளிலேயே, பெண் நாயை தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். 63 நாளில் குட்டிப் போடும். சராசரியாக ஒரு நாய் வருடத்திற்கு 6 முதல் 8 குட்டிகள் வரை போடும். 11 நாளில் இருந்து 13 நாட்களுக்குள் குட்டிகள் கண் திறக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைதான் பால் சுரக்கும். குறைவாக குட்டி போட்டிருந்தால், கொஞ்சம் கூடுதல் நாட்கள் பால் சுரக்கும். தாயிடம் பால் சுரப்பு நின்றுவிட்டால், மாட்டுப்பாலை வாங்கி, காய்ச்சி ஆற வைத்து, 100 மில்லி பாலுக்கு ஒரு ஸ்பூன் என்கிற விகிதத்தில் கேழ்வரகு மாவு கலந்தும் நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை குட்டிகளுக்குக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 45-ம் நாளிலும், 60-ம் நாளிலும் தடுப்பூசி போட வேண்டும். 60 நாளைக்கு மேல் குட்டிகளை விற்பனை செய்யலாம்.'
ஆண்டுக்கு  2 லட்சம்!
நிறைவாக விற்பனை வாய்ப்புப் பற்றிப் பேசிய அந்தோணி ஷெட்டி, ''பண்ணையில இருக்குற 11 பெட்டைகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 30 குட்டிகள். கிடைக்குது.  சராசரியா ஒரு குட்டி 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுது. அதே சமயம், ஒரு வருஷம் வைச்சிருந்து வித்தா குட்டி ஒண்ணு ரூ. 50 ஆயிரத்துக்கு கூட விலை போகும். எப்படி பார்த்தாலும், வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் கிடைக்கும்.   இதுல, உணவு, மருந்து, பராமரிப்புனு 2 லட்ச ரூபாய் செலவு போக, 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இந்தப் பண்ணையை லாப நோக்கத்துல நடத்தல. நம்ம நாய்கள் இனத்தைக் காப்பாத்ததான் பண்ணையை வைச்சிருக்கோம். இதையே, தொழில்முறையா நாட்டு நாய் பண்ணையை நடத்துனா, இன்னும் பல மடங்கு லாபம் கிடைக்கும்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

  நாய்களுக்கு மரியாதை!
உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன. ஆனால், 350 வகை நாய் இனங்களுக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. அதில் ஆறு வகை இந்திய நாய்கள். இந்த ஆறில் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம் நாய்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற இடத்தில் உள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை ஆகிய இன நாய்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்தவகை பாரம்பரிய ரக நாய்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு,
அந்தோணி ஷெட்டி,
செல்போன்: 93459-56565

ஆண்டு முழுவதும் ஒரே விலை!.


தக்காளியைத் தகதகக்க வைக்கும்...மதிப்புக் கூட்டல் மகாத்மியம்..
மதிப்புக் கூட்டல்
 எஸ். ராஜாசெல்லம்
 பளிச்... பளிச்...
விலை குறையும் நேரங்களில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். 
ஆண்டு முழுவதும் கிலோவுக்கு 30 ரூபாய்.
 ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாய் வரை அதிகரிப்பதும்... அடுத்த சில வாரங்களிலேயே 'தரை ரேட்' எனும் அளவுக்கு சடாரென சரிந்து, கிலோ 50 பைசாவுக்குகூட கொள்முதல் செய்ய ஆள் இல்லாத நிலை ஏற்படுவதும்... தக்காளி விவசாயத்தில் பல ஆண்டுகளாகவே வாடிக்கையான விஷயமாகிவிட்டது!
பறிப்புக் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலையில், தக்காளியைக் கூடை கூடையாகக் குப்பையில் கொட்டுவதும், தக்காளித் தோட்டங்களில் அப்படி அப்படியே ஆடு, மாடுகளை மேய விடுவதும் ஆண்டுதோறும் நடந்து வரும் அவலம்!
''இதற்குத் தீர்வே இல்லையா?'' என்று புலம்பும் விவசாயிகள்,
''குளிர்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும்... குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைப்பதும் ஆண்டுக் கணக்காக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இதற்கு நடுவே... ''ஆதார விலையும் வேண்டாம்... கிட்டங்கியும் வேண்டாம். விவசாயிகள் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். மதிப்புக்கூட்டல் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தைக் கூட்டலாம்'' என்று நம்பிக்கை ஊட்டுகின்றனர் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மையத்தினர்.
இந்த மையமும், தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர் ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், ஊறுகாய், கெச்சப், ஸ்குவாஷ், சாஸ், ஜூஸ், வடகம், தக்காளி பவுடர்... மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார்.
இனி பயிற்சியில் இருந்து...
''தக்காளிக்கு வருஷம் முழுசும் கட்டுப்படியான விலை கிடைக்கறதில்லை. கணக்குப் பாத்தா, பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமா இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைஞ்சதை அப்படியே சந்தையில வித்துடணும்னுதான் நினைக்கறாங்க. அதுக்கு மேல யோசிக்கறதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்துக்குக் காரணம். விலை குறையறப்ப சாலையில கொட்டி வீணாக்குறதுக்குப் பதிலா... கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ... மாத்தினா நஷ்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை.
கிலோவுக்கு 30 ரூபாய்!
உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரிச்சா, 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்னிக்குச் சந்தையில 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரைக்கும் விக்குது. குறைஞ்சபட்சம் 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதுக்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழிச்சிட்டாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வெச்சுக்கிட்டா, தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்'' என்று நிறுத்திய ஜான்சிராணி,
''இப்ப சொல்லுங்க, கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்குதேனு கீழ கொட்டாம... கொஞ்சம் யோசிச்சா ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபா கிடைக்குமில்ல!'' எனக் கேட்க... வியப்பில் விழிகள் விரித்தனர் எதிரே அமர்ந்திருந்த விவசாயிகள்.
தொடர்ந்து, தக்காளி மட்டுமல்லாமல்... மிளகாய், கொய்யா போன்றவற்றிலும் மதிப்புக்கூட்டுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட, ஆர்வத்தோடு அவற்றில் பங்கெடுத்தனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட விஷயங்களில் இருந்து தக்காளி ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கே இடம்பிடிக்கின்றன.  
தக்காளி ஊறுகாய்!  
தேவையான பொருட்கள்:
நன்றாகப் பழுத்தத் தக்காளி  - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.
பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி  தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
தக்காளி ஜாம்!
தேவையான பொருட்கள்:
தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.
தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.
விற்பனைக்கு அணுகலாம்!
மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள்  பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்ன மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், ''தக்காளி மட்டுமன்றி... மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களுமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்.
நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார்.
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தொலைபேசி: 04342-245860. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் அலைபேசி: 94435 -63977.
''நம்பிக்கை வந்திருக்கு!''
பயிற்சியில் கலந்துகொண்ட குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, ''தக்காளியைக் கொண்டு இத்தனை விதமானப் பொருட்களைத் தயாரிக்க முடியும்கிறதே இப்போதான் தெரியுது. அடிமாட்டு விலைக்கு வந்துடுச்சுனு முடங்காம, முயற்சி எடுத்தா... தக்காளிக்கு சோதனை வர்ற காலத்துலயும் லாபம் பார்க்க முடியுங்கிற எண்ணம் இப்போ எனக்கு வந்திருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்.
மதகேரி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, ''தக்காளியைத் தவிர வேற பயிர்களுக்கு ஏத்ததா எங்க பகுதியோட மண்வளமும், நீர்வளமும் இல்ல. அதனாலதான்... நஷ்டப்படப் போறோம்னு தெரிஞ்சே வேற வழியில்லாம தக்காளியையே பயிர் செய்றோம். ஆனா, இந்தப் பயிற்சி மூலமா எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு. தக்காளி விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து இதுபத்தி பேசி ஒரு முடிவெடுக்கப் போறோம்'' என்றார் உற்சாகமாக.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites