இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 19, 2012

தலைநிமிர வைத்த தலைச்சேரி ஆடுகள்

தலைநிமிர வைத்த தலைச்சேரி ஆடுகள்..!
ஆண்டுக்கு 30 லட்சம் லாபம்...

'சின்ன விஷயமாக இருந்தாலும், அதில் பூரண கவனம் செலுத்தினால்...

அந்த விஷயம் பிரமாண்டமானதாக மாறி விடும்’

-ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாயின் வரிகள் இவை.

இந்த வரிகளை தனது ஆட்டுப் பண்ணையின் மூலம் மெய்ப்பித்திருக்கிறார், நாமக்கல் மாவட்டம், பொன்நகர் கொந்தளம் கிராமத்தைச் சேர்ந்த மணி.''வேலைக்கு ஆள் இல்லை, விளைஞ்சதுக்கு சரியான விலையும் இல்லை... இப்படி பல இல்லைகளைச் சொல்லி புலம்பிக்கிட்டு இருக்கறதவிட, விவசாயத்தைவிட்டே ஒதுங்கறதுதான் உத்தமம்னு நினைச்சுக்கிட்டு, அந்த முடிவை செயல்படுத்தறதுக்கான வேலைகள்ல இறங்கினேன். ஆனா, திடீர் திருப்பமா ஆடு வளர்ப்புல கவனம் போக... இப்போ அதுல வெற்றிக் கொடி பறக்குது'' என்று சந்தோஷம் பொங்கச் சொல்லும் மணி, பரமத்தியில் இருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கும் பொன்நகர் கொந்தளத்தில் தன்னுடைய ஆட்டுப் பண்ணையை பிரமாண்டமான பண்ணையாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

நீள நீளமானக் கொட்டில்கள்; தீவனப்புல் நறுக்கும் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பணியாளர்கள்; கலவைத் தீவனம் தயாரிக்கும் இயந்திரத்தில் வேலை செய்யும் பணியாளர்கள்... என ஏதோ ஒரு பெரிய தொழிற்சாலைக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது பண்ணை!

சாதனைக்குத் தூண்டிய சோதனை!

''எனக்குச் சொந்தமா 10 ஏக்கர் இருக்குதுங்க. கரும்பு, மஞ்சள், பருத்தி, நெல்லுனு எல்லா வெள்ளாமையும் செய்துகிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல, 'நிலத்தை வித்துப்புட்டு டவுன் பக்கம் போய் தொழில் செஞ்சு பொழைச்சுக்கலாம்’ங்கிற முடிவுக்கு வந்தேன். வேண்டப்பட்டவங்க சிலர் 'நிலத்தை விக்க வேணாம், மரங்களையாவது வெச்சு விடுங்க. பிற்காலத்துல உபயோகப்படும்’னு யோசனை சொன்னாங்க. என்ன முடிவு எடுக்குறதுனு குழம்பிக் கிடந்த சமயத்துலதான், கால்நடை டாக்டரா இருக்கற எங்க சொந்தக்காரர் துரைசாமி, கொட்டில் முறை ஆடு வளர்ப்பை முயற்சி பண்ணச் சொல்லி ஊக்கம் கொடுத்தார்.அவர் சொன்ன விஷயங்களை யோசிச்சுப் பாத்தப்போ, 'அதுதான் நமக்கான தொழில்'னு தீர்க்கமா முடிவெடுத்து, 2005-ம் வருஷம் கேரளாவுல இருந்து 50 தலைச்சேரி குட்டிகளை வாங்கிட்டு வந்து ஆட்டுப் பண்ணையை ஆரம்பிச்சேன்.

டாக்டருங்க சொல்லிக் கொடுத்த விஷயங்கள்ல இருந்து கொஞ்சம்கூட பிசகாம, கண்ணும் கருத்துமா வளர்த்ததுல... இன்னிக்கு வகை வகையா 600 ஆடுகளுக்கு மேல பட்டியில நிக்குது. எனக்கும், என் மனைவி ருக்மணிக்கும் இந்தப் பண்ணைதான் உலகமே. காலையில எந்திரிச்சதுல இருந்து, படுக்கப் போறது வரைக்கும் பண்ணையைப் பராமரிக்கறதத் தவிர வேற வேலையே இல்ல'' என்று உற்சாகமாகச் சொன்ன மணி, இதை சாதிப்பதற்காக எடுத்த முயற்சிகள் பற்றி தொடர்ந்து சொன்னார்.

கருத்தா கவனிச்சா... கட்டாயம் வெற்றி!

''ஆரம்பத்துல செலவைப் பத்திக் கவலைப்படவேயில்லை. எப்படியும் சம்பாதிச்சுடணும்னு ஒரு வெறி. அதே அளவுக்கு நம்பிக்கையும் இருந்துச்சு. பேங்குல கேட்டுப் பார்த்து, பெரியளவுல கடன் கிடைக்கல. கையில இருந்த சேமிப்பு, நகை நட்டை அடகு வெச்சு, சொந்தக்காரங்கிட்ட கடன் வாங்கினு கிடைச்ச பணத்தையெல்லாம் கொட்டித்தான் பண்ணையை ஆரம்பிச்சோம்.கேரளாவுல வாங்கிட்டு வந்த தலைச்சேரிக் குட்டி ஒவ்வொண்ணும் நாலாயிரம் ரூபாய். அதை வாங்கிட்டு வந்து ரெண்டு மூணு மாசம் கழிச்சு, மகாராஷ்டிர மாநிலம், புனே பக்கத்துல இருக்குற 'நிமிக்கர்’ ஆட்டுப்பண்ணையில் (மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்குச் சொந்தமானது) இருந்து, ஒரு குட்டி இருபத்தஞ்சாயிரம் ரூபாய்னு 15 'போயர்’ ரகக் குட்டிகளை வாங்கினேன். அப்புறம் ராஜஸ்தான்ல இருந்து 'சிரோஹி’ ரகக் குட்டிகள் கொஞ்சத்தை வரவழைச்சோம்.

குட்டிகள வளர்த்துப் பெருக்கி, நாலாவது வருஷத்துல இருந்து விற்பனையை ஆரம்பிச்சோம். பண்ணை ஆரம்பிச்சு அஞ்சரை வருஷத்துக்குள்ளயே வாங்கினக் கடன்ல முக்கால் பங்கு அடைச்சாச்சு. நாங்களே இந்தளவுக்கு எதிர்பாக்கல. கண்ணும்கருத்துமா கவனிச்சா... கண்டிப்பா வெற்றியை அடைய முடியும்கறத அனுபவத்துலயே புரிஞ்சுக்கிட்டோம்'' என்ற மணி, பண்ணையின் அமைப்பு மற்றும் பராமரிப்பு பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

செலவில்லாமல் தீவனம்!

''80 அடி நீளம், 20 அடி அகலத்துல நாலு கொட்டில் இருக்கு. 64 அடி நீளம், 20 அடி அகலத்துல மூணு கொட்டில் இருக்கு. எல்லாக் கொட்டிலுமே தரையை விட்டு நாலடி உயரத்துலதான் அமைச்சிருக்கோம். கொட்டிலோட தரைத்தளத்தை இடைவெளி விட்டு விட்டு அமைச்சுருக்கதால, கழிவுகள் எல்லாமே தரையில வந்து விழுந்துடும். அப்படியே ஆடுக இறங்கி நடக்குறதுக்கு கொஞ்சம் இடம் விட்டு அதுக்கு வேலி போட்டுருக்கோம். கொட்டிலுக்கு வெளியில தீவனம் வைக்கிறதுக்கான ஏற்பாடுகள் இருக்கு.பத்து ஏக்கர் நிலத்திலும் தென்னை நட்டுட்டு, அதுக்கு இடையில ஊடுபயிரா கோ4, வேலிமசால், கிளரிசீடியா, சூபாபுல், கோ.எஃப்.எஸ்... இப்படி தீவனப் பயிர்களைப் போட்டிருக்கோம். இது எதுக்கும் ரசாயன உரங்கள போடுறது கிடையாது. ஆட்டுப்புழுக்கை மட்டும்தான்! அதனால தீவனப் பயிரெல்லாம் நல்லா வளருது, செலவும் குறைஞ்சுடுது.

இப்போ... தலைச்சேரி ரகத்துல 350, சிரோஹியில 100, போயர்ல 20 உருப்படி, மூணும் கலந்த கலப்பினத்துல 150னு மொத்தம் 620 ஆடுக இருக்கு'' என்று மணி நிறுத்த, தொடர்ந்து பராமரிப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தார், அவருடைய மனைவி ருக்மணி.

தீவனத்தைப் பிரிச்சு கொடுங்க!

''ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு அஞ்சு கிலோ பசுந்தீவனம் கொடுக்குறோம். பசுந்தீவனத்தை ரெண்டா பிரிச்சு காலையில எட்டு மணிக்குள்ள ஒரு தடவையும், சாயங்காலம் நாலு மணிக்கு மேல ஒரு தடவையும் கொடுப்போம். மதிய நேரத்துல ஒரு ஆட்டுக்கு கால் கிலோங்கிற கணக்குல புழுக்கைத் தீவனம் (அடர்தீவனம்) கொடுப்போம். மக்காச்சோளம், கோதுமை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, அரிசித் தவிடு, உப்பு, மினரல் பவுடர்... எல்லாத்தையும் அரைச்சு இந்தத் தீவனத்தை நாங்களே தயாரிச்சுக்குறோம். இதுக்குத் தனி மெஷின் இருக்கு.

நறுக்கிப் போட்டால்... வீணாவதில்லை!

எல்லா வகையான தீவனப் புல்லையும் கலவையா அறுத்துக்கிட்டு வந்து, கட்டிங் மெஷினில் கொடுத்துப் பொடிப்பொடியா நறுக்கித்தான் கொடுக்குறோம். அதனால தீவனத்தை வீணாக்காம முழுசா ஆடுக சாப்பிட்டுடும். ரசாயன உரம் போடாம தீவனத்தை விளைவிக்கிறதால விரும்பிச் சாப்பிடுதுக. கொட்டில்ல குடிக்கறதுக்கு எப்பவும் தண்ணி வெச்சுடுவோம். பசுந்தீவனம் அறுத்துட்டு வந்து நறுக்குறது, தீவனம் தயாரிக்கிறது, பராமரிப்பு எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தம் எட்டு பேர் (4 ஆண்கள், 4 பெண்கள்) தினசரி வேலைக்கு வர்றாங்க.

எல்லா ரக ஆட்டுலயும் இனவிருத்திக்காகத் தனியா கிடாக்களை வெச்சுருக்கோம். இருபது பெட்டைக்கு ஒரு கிடாங்கிற கணக்குல பராமரிக்கிறோம். வருஷத்துக்கு ரெண்டு தடவை தடுப்பூசி போட்டுடுவோம். தவணை தப்பாம குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம்'' என்றார் ருக்மணி.

ரெண்டு வருஷத்துல மூணு ஈத்து!

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய மணி, ''மூணு ரக ஆடுகளுமே ரெண்டு வருஷத்துல மூணு ஈத்து எடுக்கும். தலைச்சேரி ரகத்துல ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிக கிடைக்கும். குட்டிக நாலு மாசத்துல 20 கிலோ எடை வந்துடும். ஒரு குட்டி, ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகும்.

போயர் ரகத்துலயும் ஈத்துக்கு ரெண்டு குட்டி கிடைக்கும். நாலு மாசத்துல 25 கிலோ எடை வரைக்கும் வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 750 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகுது. எப்படிப் பாத்தாலும் நாலு மாசக்குட்டி 20,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. பெரும்பாலும் வளப்புக்காகத்தான் இந்த ஆடுகளை வாங்கிட்டுப் போறாங்க.

சிரோஹி ரகத்துல ஈத்துக்கு ஒரு குட்டிதான் கிடைக்கும். இதுவும் நாலு மாசத்துல 20 கிலோ வரை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 200 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை விற்பனையாகுது.

எங்களோட தேவைக்குப்போக மிச்சம் இருக்குற ஆட்டுக் கழிவுகளை ஒரு டன் 2,500 ரூபாய்னு உரத்துக்காக விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கோம். மாசத்துக்கு பத்து டன் வரைக்கும் விற்பனையாகுது.

முதலீடு ஐம்பது லட்சம்... வருட லாபம் முப்பது லட்சம்!

ஆடுகளுக்கு அமைச்சப் பெரியக் கொட்டில் ஒவ்வொண்ணுக்கும் அஞ்சு லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு. சின்னக் கொட்டில்களுக்கு மூன்றரை லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு. அந்த வகையில கொட்டில்களுக்கே முப்பது லட்சம் வரை செலவாகிடுச்சு. தீவனம் தயாரிக்கிற மெஷின் பத்து லட்ச ரூபாய். இதுபோக ஆடுகளுக்கான முதலீடு, நடைமுறைச் செலவுனு பண்ணையோட மொத்த முதலீடு... அம்பது லட்சத்தை தாண்டிடுச்சு.

ஆரம்ப காலங்கள்ல ஆட்டுப்புழுக்கை விக்கிறது மூலமா கிடைக்கிற பணம் மட்டும்தான் வருமானமே. மூணு வருஷத்துக்கப்பறம்தான் ஆடுகள் மூலமா வருமானம். இப்போ வரைக்கும் ரெண்டாயிரம் குட்டிகளை வித்திருக்கோம். சராசரியா குட்டி நாலாயிரம் ரூபாய்க்கு வித்துருக்கு. அதன் மூலமா எண்பது லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சது. அது போக கழிவுகள் வித்த பணம், எல்லாமே இதுவரைக்கும் ஆன செலவுகளுக்கு சரியாப் போயிடுச்சு. இப்போ கையில இருக்குற 620 ஆடுகள்தான் இந்த அஞ்சரை வருஷத்துல கிடைச்ச லாபம். இனிமேதான் இதுல இருந்து நிரந்தர வருமானத்தைப் பாக்கப் போறோம். எப்படியும் வருஷத்துக்கு குறைஞ்சது முப்பது லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம். இது இறங்குமுகம் இல்லாத தொழில்ங்கிறதால கண்டிப்பா இதை விடக் கூடுதலாத்தான் லாபம் கிடைக்கும்.

தனித்தனியா ரகங்களைக் கலக்காம பராமரிக்கிறதால ஆடுகளோட விந்தணுக்களை எடுத்து விற்பனை பண்ற யோசனையும் இருக்குது. அதுக்கான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. அதுக்கான ஒப்பந்தம் கிடைச்சுதுனா... இன்னமும் கூடுதலா லாபம் கிடைக்கும்'' என்ற மணி,

''ஊரைவிட்டே போகலாம்னு இருந்த எங்கள, இன்னிக்கு இந்தளவுக்கு தலை நிமிர்ந்து நடக்க வெச்சது இந்த ஆடுகதான்'' என்று வாஞ்சையோடு ஆடுகளைத் தடவிக் கொடுத்தபடி நமக்கு விடை கொடுத்தார்.
தொடர்புக்கு: மணி, அலைபேசி: 94875-92353.

2 comments:

நல்ல நாட்டுக் கோழிக்குஞ்சுகள் (பண்ணை அமைக்க),ஆட்டு பண்ணை(aattu pannai) ஒன்றை அமைக்க விரும்புகிறார் தேவை விவரங்களைச் சொல்லவும்..
9865277213
gsaravanancse@gmail.com

தாங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites