இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, January 31, 2015

சம்பங்கி... சாமானியனின் வங்கி



'பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. 'பசுமை விகடன்’, கடந்த எட்டு ஆண்டு காலமாக இதைத்தான் செய்து வருகிறது! பசுமை விகடன் மூலமாக சம்பங்கி விவசாயத்தில் கால்பதித்த ஒரு விவசாயி, 'மீன்பிடிக்கக் கற்றுக்கொடு’ எனும் ஒப்பற்ற கோட்பாட்டை தானும் கையில் எடுக்க, சக விவசாயிகள் சிலரும் தற்போது சம்பங்கி விவசாயிகளாக தெம்போடு நடைபோடுகின்றனர்!
மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் சம்பங்கியையும் சிறிது இடத்தில் நடவு செய்வார்கள். பெரும்பாலும் ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சம்பங்கியை, இயற்கை முறையில் விளைவித்து அதிக வருமானம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர், திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து.
மென்பொருள் பொறியாளரான மருதமுத்து, பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். நவம்பர் 25, 2011-ம் தேதியிட்ட இதழில் 'சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி’ என்ற தலைப்பில் இவரைப் பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இவரது தோட்டத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இப்படி வந்தவர்களில் பலர், இன்றைக்கு வெற்றிகரமான சம்பங்கி சாகுபடியாளர்களாக விளங்குகிறார்கள். இயற்கை வழி சம்பங்கி சாகுபடிப் பரப்பு, பல நூறு ஏக்கர்களுக்கு விரிவடைந்திருக்கிறது.
கட்டுரை வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில்... 'இப்போது எப்படி இருக்கிறது மருதமுத்துவின் சம்பங்கி சாகுபடி?’ என்ற கேள்வியோடு மீண்டும் அவரைச் சந்தித்தோம். நாம் முதலில் சென்றபோது, இருந்ததை விட அதிகப்பரப்பில் பூத்துக்குலுங்கி வரவேற்றது, சம்பங்கி.
''சாஃப்ட்வேர் இன்ஜினீயர்ங்கிறதைவிட, 'சம்பங்கி விவசாயி’னுதான் பெருமையா சொல்வேன். இயற்கை மேலயும், விவசாயத்துலயும் இருந்த ஆர்வம் காரணமா, நல்ல லாபம் தந்துக்கிட்டு இருந்த தொழிலை விட்டு, சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்தேன். 'நிரந்தர வருமானத்துக்கு என்ன பண்றது?’னு யோசிச்சப்ப, கை பிடிச்சு வழிகாட்டுனது, பசுமை விகடன்தான். சம்பங்கி சாகுபடி தொடர்பான ஒரு கட்டுரையை வாசிச்சிட்டு, அந்த விவசாயியை நேர்ல பார்த்து பேசுறவரைக்கும் சம்பங்கி பத்தி எனக்கு எதுவும் தெரியாது.
விவசாயிகளுக்கு இலவச ஆலோசனை!
அதுக்குப்பிறகு, தமிழ்நாட்டுல இருக்கற பல சம்பங்கி விவசாயிகளைச் சந்திச்சு என்னோட பல சந்தேகங் களைத் தீர்த்துக்கிட்டேன். விவசாயத்துல இறங்கும்போது, எதுவுமே தெரியாது. நானும், என் மனைவியும் பசுமை விகடன்ல படிச்ச தொழில்நுட்பங்கள் இருக்கற தைரியத்துலதான் இதுல இறங்கினோம். ஆரம்பத்துல 60 சென்ட்ல ஆண்டுக்கு ரெண்டரை லட்சம் லாபம் கிடைச்சதை எங்களாலயே நம்ப முடியல.
2011-ம் வருஷம் எங்களப் பத்தின கட்டுரை பசுமை விகடன்ல வெளியான பிறகு தினமும் நிறைய விவசாயிகள் தோட்டம் தேடி வந்து சந்தேகம் கேட்க ஆரம்பிச்சாங்க. 'நாம ஒவ்வொரு தகவலுக்காக எப்படி அலைஞ்சிருக்கோம்... அது மாதிரி எந்த விவசாயியும் கஷ்டப்படக் கூடாது’னு முடிவு செஞ்சு, அத்தனை விவசாயிகளுக்கும் விளக்கம் சொல்றதோட, பொருளாதார வசதியில்லாத சில விவசாயிகளுக்கு விதைக்கிழங்குகளை இலவசமாகவே கொடுத்து விட்டோம். இன்னிக்குவரைக்கும் விவசாயிகள் தோட்டத்துக்கு வந்துக்கிட்டுதான் இருக்காங்க'' என்று பூரிப்புடன் சொன்ன மருதமுத்துவை இடைமறித்துப் பேசினார், அவருடைய மனைவி வாசுகி.  
பலர் வாழ்வை மாற்றிய சம்பங்கி!
''சம்பங்கியில நாங்க செஞ்ச சின்னச்சின்ன தவறுகளை அனுபவத்துல உணர்ந்து சரி செஞ்சுக்கிட்டதால, இப்ப சம்பங்கி விவசாயத்தைப் பத்தின முழுமையான புரிதல் வந்திருக்கு. பல்வேறு சோதனைகளை செஞ்சு பார்த்ததுல, மகசூல் இழப்பு, பொருளாதார நஷ்டம் எல்லாத்தையும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டோம். நாங்க தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை விவசாயிகளுக்குச் சொல்றப்ப அவங்க அடையுற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எங்களோட ஆலோசனையோட சம்பங்கி விவசாயம் செஞ்சு, மாசா மாசம் கணிசமான வருமானம் பாத்துட்டு இருக்கற விவசாயிகள் நூத்துக்கும் மேல இருப்பாங்க'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
இந்தத் தம்பதியின் ஆலோசனை பெற்று, வெற்றி நடைபோடும் சில விவசாயிகளைத் தேடிப் பயணித்தோம்.  
தினமும் பணம்!
நத்தம் அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன்...
''பரம்பரையா விவசாயம்தான். மா, மிளகாய், கொய்யானு வருஷம் முழுக்க விவசாயம் நடந்துட்டே இருக்கும். அப்பதான் மருதுமுத்து தோட்டத்தைப் பாத்துட்டு வந்து, நாங்களும் அரை ஏக்கர்ல இயற்கை முறையில சம்பங்கி நடவு செஞ்சோம். பெருசா பண்டுதம் இல்ல. பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம தினமும் வருமானம் கொடுத்துக்கிட்டிருக்கு சம்பங்கி. சராசரியா மாசம் 15 ஆயிரம் ரூபாயில இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சுடும். எங்க வீட்டு ஆளுங்களே வேலையைப் பாத்துக்கிறதால பெருசா செலவு இல்லை. பூவை பறித்து மதுரை மார்க்கெட்டுக்குத்தான் அனுப்புறோம். கொய்யா, மா எல்லாம் வருஷ வெள்ளாமையா இருந்த நேரத்துல, தினமும் வருமானம் கொடுத்த சம்பங்கி பொருளாதார ரீதியா ரொம்பவே உதவியா இருக்கு. மத்த எந்த வெள்ளாமை செஞ்சாலும், அரை ஏக்கர்ல மட்டுமாவது சம்பங்கி சாகுபடி செஞ்சிட்டா... அந்த விவசாயி எதைப் பத்தியும் கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார், வீரப்பன் அனுபவம் பொங்க.
பாதை காட்டிய பசுமை விகடன்!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள விஜயநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்விழி பவுன்ராஜ்...
''நான் பசுமை விகடனோட தீவிர வாசகி. என்னோட கணவர் மருத்துவரா இருந்தாலும், விவசாயத்துல ரொம்ப ஆர்வமா இருப்பாரு. இது மொத்தம் 14 ஏக்கர் தோட்டம். காடா இருந்த இந்த இடத்தை என் கணவர்தான் தென்னை, நெல்லி, எலுமிச்சைனு வெச்சு தோப்பா மாத்தினாரு. திடீர்னு அவரு இறந்துட்டாரு. ஆஸ்பத்திரியை வேற டாக்டரை வெச்சு பாத்துட்டு இருக்கோம். ஆனா, அவரு நேசிச்ச விவசாயத்தை நானே தொடர்ந்து செய்யணும்ங்கிற எண்ணத்துல விவசாயத்துல இறங்கினேன். இங்க இருக்கற ஒவ்வொரு மரத்துலயும், செடிகொடிகள்லயும், மண்ணுலயும் என் கணவர் உலாவுறதா நினைக்கிறேன். அந்த உணர்வு எனக்கு ஊக்கத்தைக் கொடுக்குது. அதனால, விவசாயத்தை விடக்கூடாதுனு நினைச்சு செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
எனக்கு துணையா விவசாய ஆலோசனை சொல்றது பசுமை விகடன்தான். ஒரு வேகத்துல விவசாயத்துக்கு வந்துட்டாலும், இங்க வேலை செய்றவங்களுக்கு கூலி மாதிரியான செலவுகளை, தோட்டத்து வருமானத்துல இருந்து கொடுக்க முடியாம திணறினேன். இதை எப்படி சரி செய்யலாம்னு யோசிச்சப்பதான், மருதமுத்து சாரோட சம்பங்கி கட்டுரையைப் படிச்சேன். உடனே அவங்க தோட்டத்துக்குப் போய், அதைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, கையோட சம்பங்கி நடவைத் தொடங்கிட்டேன். ஆரம்பத்துல பக்கத்துல கிடைச்ச நாட்டுச் சம்பங்கி விதையை வாங்கி, 60 சென்ட் இடத்துல நடவு செஞ்சேன். மருதமுத்துவாசுகி தம்பதி வழிகாட்டுதலோட சாகுபடி செஞ்சதுல நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம்.  
இப்ப, 40 சென்ட் இடத்துல வீரிய ரகமான பிரஜ்வல் ரகத்தை நடவு செஞ்சிருக்கேன். ஒரு வருஷம் ஆச்சு. ரெண்டும் மகசூல் கொடுத்துக்கிட்டிருக்கு. சராசரியா ஒரு ஏக்கர்ல இருந்து தினமும் 10 கிலோ அளவுக்கு பூ கிடைச்சிடுது. ஒரு கிலோ குறைஞ்சபட்சம் 50 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 300 ரூபாய் வரைக்கும் பூ போட்டுக்கிட்டிருக்கோம். சராசரியா மாசத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைச்சிடுது. இந்த வருமானத்தை வெச்சு, செலவுகளை சமாளிச்சு தோட்டத்தைப் பராமரிச்சிக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கற எல்லா விவசாயமும் என் கணவர் பண்ணியிருந்தாலும், நான் சுயமா செஞ்சது சம்பங்கி சாகுபடிதான். அதுக்கான ஊக்கத்தைக் கொடுத்த பசுமை விகடனுக்கும், மருதமுத்து தம்பதிக்கும் என்னோட நன்றி'' என்று நெகிழ்கிறார், வேல்விழி.
வெற்றி பெற்ற கன்னி முயற்சி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்த காமினி கிரிதரன்...
''எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ஆர்வம் அதிகம். என்னோட கணவர் சிவகாசியில பிரிண்டிங் பிரஸ் வெக்சிருக்காரு. நான் வீட்டுலதான் இருக்கேன். பசுமை விகடனை வரிவிடாம படிச்சிடுவேன். அதுல வர்ற கட்டுரைகள் விவசாய ஆர்வத்துக்கு தூபம் போட்டுகிட்டே இருந்துச்சு. எங்களுக்குச் சொந்தமான இந்த நிலம் தரிசாத்தான் கிடந்துச்சு. இதுல விவசாயம் செய்யலாம்ங்கிற எண்ணம் வந்தப்ப, பசுமை விகடன் மூலமா மருதமுத்து அண்ணாவைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு... கணவரோட போய் அவரு நிலத்தைப் பாத்து ஆலோசனைக் கேட்டுட்டு வந்தோம். வந்ததும் இந்த இடத்தை சுத்தம் பண்ணி விவசாயத்தை ஆரம்பிச்சோம்.
இது மணல் கலந்த களிநிலம். ரொம்பப் பேரு, 'இந்த மண்ணுல சம்பங்கி வராது’னு சொன்னாங்க. ஆனா, அண்ணன் கொடுத்த தைரியத்துல துணிஞ்சு இறங்கி... ஒரு ஏக்கர்ல சம்பங்கியை நடவு செஞ்சோம். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வந்தவங்க கூட, 'இங்க சம்பங்கி வராது’னு சொன்னாங்க. ஆனாலும், இயற்கை முறையில சாகுபடி செஞ்சதால சம்பங்கி வளர்ந்து மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. தினமும் ஒன்றரை கிலோ அளவுக்கு பூ வருது. இனிமேதான் மகசூல் அதிகரிக்கும். இப்ப செடியைப் பாக்குறவங்க ஆச்சரியமா பாக்குறாங்க. சம்பங்கி வயலை சுத்தியும் அகத்தியையும்  ஊடுபயிரா அங்கங்க கொத்தமல்லியையும் நடவு செஞ்சிருக்கோம். இது விவசாயத்துல எங்க கன்னி முயற்சி... நிச்சயம் பாஸாயிடுவோம்ங்கிற நம்பிக்கை நிறைய இருக்கு.
ரெண்டு ஏக்கர்ல குதிரைவாலி சாகுபடி செஞ்சிருக்கோம். உழுது விதைச்சதோட சரி, வேறெந்த இடுபொருளும் போடல... பயிர் அருமையா விளைஞ்சு நிக்குது. பக்கத்து விவசாயிங்க எல்லாம் ஆச்சர்யமா பாத்துட்டுப் போறாங்க. குதிரைவாலியை சாப்பிடுறதுக்காக ஏகப்பட்ட தேன்சிட்டுகள் இங்க வருது. இதையெல்லாம் பாக்குறதுக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்த பசுமை விகடனுக்கும், மருதமுத்து அண்ணாவுக்கும், என்னோட அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையா இருக்கற என் கணவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்'' என்கிறார், காமினி கிரிதரன்.
இது ஒரு சோறு பதம்தான். வாழையடி வாழையாக இவர்களைப் பின்பற்றி இன்னும் பல வெற்றி விவசாயிகள் அணிவகுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

நானும் பசுமைவிகடனும்
குடும்பத்தலைவி விவசாயி!
சசிகலா, பவானி, குடும்பத்தலைவி:
''நாங்க விவசாயக் குடும்பம் கிடையாது. இரும்புக்கடை வெச்சுருக்கோம். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பெட்டிக்கடைக்கு சாமான் வாங்கப்போகும்போது அங்கு தொங்குற புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். அப்படித்தான் பசுமை விகடனையும் படிச்சேன். அதுல இருந்த கட்டுரைகள் உபயோகமாக இருந்தது. குறிப்பா, சிறுதானியங்களைப் பத்தி முழுமையா தெரிஞ்சிக்கிட்டேன். தொடர்ந்து மூலிகை பத்தின தகவல்கள் எல்லாம் எங்களை போன்ற நகரவாசிகளுக்கும் பயனுள்ளதா இருந்துச்சு. அப்புறம் என்ன? 'இந்த இதழ் பசுமை விகடன் வந்தாச்சு’னு கடைக்காரரே கூப்பிட்டு சொல்றாருனா பாருங்களேன் என்னோட பசுமை ஆர்வத்தை.''

பூஜைக்கு ஏற்ற பூவன்...மகசூல்


பழத்தில்  1 லட்சத்து 12 ஆயிரம்...  இலையில்  1 லட்சத்து 98 ஆயிரம்!
வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம்.
பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலூகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும் அடக்கம்.
இயற்கையிலேயே விளையும்!
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்தபோது, ''காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால வாழை நல்லா வேர் பிடிச்சு செழிப்பா வளருது. மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளந்துடும். இந்தப் பகுதியில குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்'' என்ற ராஜ்குமாரின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''2007-ம் வருஷத்திலிருந்தே 'பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை முறையில 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தமா ரசாயன பூச்சிக்கொல்லியைக் கைவிட்டுட்டோம்' என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!

'ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு, நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம்,  மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...
3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராஜ்குமார், 'ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும். ஒரு தார் சராசரியா 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்ந்தா, சராசரியா 700 தார்கள் நல்ல முறையில வளர்ந்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராத்தான் இருக்கும். அந்த வகையில சுமாரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். இதுக்கு விலையும் குறைவாத்தான் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ... ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.
இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!
தார் அறுத்து முடிச்ச பிறகு, மட்டை களை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தரமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துக்கு குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்' என்ற ராஜ்குமார் நிறைவாக, ''இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்த டிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறியறதில்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்கறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,
ராஜ்குமார், செல்போன்: 87604-72815.

ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்

கிராஃப்ட் பொருட்கள் செய்யறதுக்கான மெட்டீரியல்களை வாங்கக்கூட கணவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு”
- எங்கிட்ட கிராஃப்ட் வகுப்புகளுக்கு வரும் பெண்கள் பலரும் இப்படி சொல்லக் கேட்டிருக்கேன். ஒரு காலத்துல இந்த நிலையில் இருந்தவதான் நானும். இன்னிக்கு மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால, நம்பி கத்துக்கோங்க, நம்பிக்கையோட களத்துல இறங்குங்க, நாளைக்கு நம் தேவைகளை மட்டும் இல்ல… குழந்தைகள், வீட்டுச் செலவுனு எல்லாத்தையும் நாமே பார்த்துக்கலாம்னு கிராஃப்ட் வகுப்புகளுக்கு வர்ற பெண்களுக்கெல்லாம் சொல்வேன். இதுதான் உண்மை!”
- சிரித்த முகத்தோடு ஆரம்பித்தார் சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன்.
”சின்ன வயசுல என்னோட கிராஃப்ட் ஆர்வத்தைப் பார்த்து, ‘இவளை ஏதாவது ஆர்ட் கிளாஸில் விடுங்க’னு பலரும் சொன்னாங்க. ஆனா, எங்கப்பா, அம்மாவுக்கு அது பெருசா தெரியாம போயிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம், ‘இப்போவாச்சும் உன் விருப்பப்படி கிராஃப்ட் கிளாஸ் போயேன்’னு தம்பி தூண்டுகோலா இருக்க,  கணவரும் சந்தோஷமா அனுப்பி வெச்சார். தஞ்சாவூர் பெயின்ட்டிங், மியூரல் வொர்க், குஷன் மேக்கிங், கேண்டில் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ரிட்டர்ன் கிஃப்ட்னு ஏகப்பட்ட கிராஃப்ட் அயிட்டங்களை முழுமையா கத்துக்கிட்டேன்.
பொருட்களைத் தயாரிச்சு விற்பனைக்கு கொடுத்ததோட, 15 வருஷ அனுபவம் மூலமா… ஏரியா பெண்கள், கல்லூரிப் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள்னு பலருக்கு பயிற்சிகளையும் கொடுக்கிறேன். ராமேஸ்வரம், கோவை, துபாய்னு அழைப்புகள் வந்துட்டே இருக்கு!” என்றபோது, பெருமிதம் சாந்தி குரலில்.
”நான் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், என்னை மீட்டதே… இந்த கைவினைக் கலைதான். வேலைக்குப் போற பெண்களானாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களானாலும் சரி… சுற்றம் எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துறதுல குறை வைக்கிறதில்ல. இது தொடரும்போது, மனதளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, அந்த நேரங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை செய்து பாருங்க… மனசுக்கு புத்துணர்வு கிடைக்கும். இதுவே கைவினைப் பொருட்களா இருந்தா, மனசும் லேசாயிடும், வருமானத்துக்கும் வழி கிடைக்கும். பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சுட்டா, நாலு மனுஷங்களை பார்த்துப் பழகுற அந்த அனுபவம், சுவாரஸ்யமா நம்மை அழைச்சுட்டுப் போகும்!”
- ரசித்து அனுபவித்துப் பேசுகிறார் சாந்தி.
”எனக்கு ரொம்ப பிடிச்சது, கேண்டில் மேக்கிங்தான். நான் செய்யும் கேண்டில்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமா இருக்கும். தண்ணீரில் மிதக்கும் தீபம், ரோஜா, ஆட்டின் ஷேப், ரிட்டர்ன் கிஃப்ட் விளக்குகள், கேண்டில் ஜுவல் பாக்ஸ்னு பார்க்கிறவங்களை வாங்க வைக்கும். நியூ இயர், கார்த்திகை, கிறிஸ்துமஸ் விழா காலங்கள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கும். மே, ஜூன் தவிர, மற்ற மாதங்கள்ல ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும். சர்ச் ஆர்டர்கள் கிடைச்சுட்டா, எப்பவும் பிஸியா வைக்கும். ஆர்டர்களைப் பிடிக்கறதுலதான் நம்மோட சாமர்த்தியமும், வருமானத்துக்கான வழியும் அடங்கியிருக்கு.
கேண்டில் பிசினஸில் மட்டுமே மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். மற்ற கிராஃப்ட் பொருட்களையும் சேர்த்து செய்தா, கிட்டத்தட்ட 20 ஆயிரம் வரை கிடைக்கும். நான் வகுப்புகளும் எடுக்கிறதால, 25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சீரியஸ் படங்கள், மெகா சீரியல்கள் எல்லாம் எனக்குப் பார்க்கப் பிடிக்காது. அதனால போரடிக்கிற நேரத்தை கிராஃப்ட்டில் செலவழிக்க ஆரம்பிச்சேன். இப்போ இதுவே எனக்கு முழுநேர தொழிலா ஆகிடுச்சு!” என்ற சாந்தி, தன் அருகில் இருந்த வேக்ஸ் டெடிபியரை இதமாக வருடினார்.

நிரந்தர லாபம்… நிகரில்லா கிராஃப்ட்!
”எம்ப்ராய்டரி தொடங்கி, பெயின்ட்டிங் வரை கிராஃப்ட்டில் உங்களுக்கு இருக்கிற ஏ டு இஸட் கேள்விகள் என்னென்ன? மார்க்கெட்டிங், விளம்பரம், வருமானம், லாபம் இதிலெல்லாம் என்னென்ன சந்தேகங்கள் இருக்கு? குறிப்பா, கேண்டில் மேக்கிங்கில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான சூட்சுமம் என்னென்ன? எல்லாத்துக்கும் பதில் தர தயாரா இருக்கேன். தினமும் மூணு நிமிஷத்துக்கு கீழ இருக்கற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க” என்று வாசக, வாசகிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் கிராஃப்ட் பயிற்சியாளர், சாந்தி.
+(91)-44-66802912
இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன… உங்கள் செல்போனில் ‘அவள் விகடன் வழிகாட்டும் ஒலி’ என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!
நன்றி விகடன்

பிஸ்தா ஓட்டில் கலைப்பொருட்கள்

உபயோகமில்லை எனத் தூக்கி எரிகிற பொருட்களில் கூட கண்களைக் கவரும் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கல்பனாஸ்ரீ. பிஸ்தா பருப்பின் ஓடுகளை வைத்து இவர் உருவாக்கும் ஒவ்வொரு கை வினைப் பொருளும் கொள்ளை அழகு!

‘‘சின்ன வயசுல ஸ்கூல்ல கைவினைக்கலை கிளாஸ்ல நிறைய கத்துக்கிட்டேன். கல்யாணமாகி, குழந்தைங்க, குடும்பம்னு வந்ததும் எல்லாத்தையும் தற்காலிகமா மறக்க வேண்டியிருந்தது. குழந்தைங்க பெரிசாகி, பொறுப்புகளை முடிச்சு, நிறைய நேரம் கிடைச்சப்ப, மறுபடி பழைய ஆர்வங்களை தூசி தட்டி செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு கைவினைக் கலைஞர்களை அடிக்கடி சந்திச்சேன். புதுசு புதுசா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒவ்வொருத்தரோட கற்பனையும் கைத்திறனும் பிரமிக்க வச்சது. 

ஒருமுறை தீபாவளிக்கு நிறைய பிஸ்தா பருப்பு அன்பளிப்பா வந்தது. பருப்பை சாப்பிட்டு, அதோட ஓட்டை தூக்கி எறிவோம். அப்படி இறைஞ்சு கிடந்த ஓடுகளைப் பார்த்தப்ப அதை வச்சு கலைப்பொருட்கள் பண்ற ஐடியா எனக்கு வந்தது. சும்மா சின்னச் சின்ன அயிட்டங்களா ட்ரை பண்ணிப் பார்த்ததுல எல்லாமே நல்லா வந்தது. நான் பண்ணினதை வீட்டுக்குள்ள அலங்காரமா வச்சிருக்கிறதைப் பார்த்துட்டு பரவலா எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் அதையே ஒரு பிசினஸா பண்ணினா என்னனு யோசிச்சேன். 

இன்னிக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி வாழணும்கிற விழிப்புணர்வை நிறைய பேர்கிட்ட பார்க்க முடியுது. பர்சனலா உபயோகிக்கிற பொருட்கள்லேருந்து, அடுத்தவங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு வரை, எல்லாமே இகோ ஃப்ரெண்ட்லியா இருக்கணும்னு விரும்பறவங்க இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு என்னோட பிஸ்தா கிராஃப்ட் அயிட்டங்கள் ரொம்பப் பிடிக்குது’’ என்கிற கல்பனாஸ்ரீ, பிஸ்தா ஓட்டில் ஹேர் கிளிப், மாலை, தோடு, பெண்டென்ட், பேனா ஸ்டாண்ட், போட்டோ ஃப்ரேம், ட்ரே, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் எனப் பலதையும் வடிவமைக்கிறார்.

‘‘பெரிய முதலீடு தேவையில்லை. வீட்டு உபயோகத்துக்கு பிஸ்தா வாங்கிக்கலாம். கால் கிலோ பிஸ்தா 250 ரூபாய். ஒட்டறதுக்கு பசை, பிவிசி பைப், மேக்ரமி திரெட், அலங்காரத்துக்கான முத்து, மணிகள்னு 350 ரூபாய் முதலீடு போதும். மாலை, ஹேர்கிளிப், தோடு ஆகியவை சேர்ந்த ஒரு செட் 250 ரூபாய்லேருந்து 300 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஒரு நாளைக்கு 20 அயிட்டங்கள் வரை பண்ணலாம். விருப்பப்படறவங்க இதுக்கே கலர் கொடுத்து இன்னும் அழகாக்கலாம். குறைஞ்ச உழைப்புல 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிறவரிடம், ஒரே நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் 10 வகை பிஸ்தா கலைப் பொருட்களைக் கற்றுக் கொள்ளலாம் ( 9003218459).

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!பனிக்காலம் பக்கத்தில் இருக்கிறது. சென்ற வருடம் வாங்கிய குழந்தைகளின் குல்லாவும் பூட்டிஸும் சிறியதாகிப் போயிருக்கும். ‘‘அதனால என்ன? நீங்களே உங்க கைப்பட புதுசா பின்னிட்டா போச்சு...’’ என்கிறார் சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜலஜா. ‘குல்லாவும் சாக்ஸும் பின்றதென்ன அவ்ளோ ஈஸியான விஷயமா?’ எனக் கேட்பவர்களுக்கு ஜலஜாவின் பதில் ஆச்சரியம் தரலாம்!

‘‘நிட்டிங்னு சொல்ற அடிப்படை பின்னல் வேலை தெரிஞ்சா போதும். குல்லாவும் பூட்டிஸும் பின்றது ரொம்பவே ஈஸி. நிட்டிங் தெரியணும்னு சொன்னதும் பயப்பட வேண்டியதில்லை. வெறும் அரை மணி நேரத்துலயே அதையும் கத்துக்கலாம்...’’ என்கிறவர், நிட்டிங் தெரிந்தால், உல்லன் நூல் கொண்டு குல்லா, குழந்தைகளுக்கான பூட்டிஸ், ஸ்கார்ப், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தொப்பி உள்ளிட்ட எல்லாம் பின்னி விடலாம் என 
உத்தரவாதம் தருகிறார்.

‘‘உல்லன் நூல், நிட்டிங் ஊசினு ரெண்டு பொருட்கள்தான் தேவை. இது தவிர, லூம் நிட்டிங்னு ஒண்ணு இருக்கு. வேலையை ரொம்பவே சுலபமாக்கிற இது பார்க்கிறதுக்கு பிளாஸ்டிக்ல, விளையாட்டுப் பொம்மை மாதிரி இருக்கும். இதுல வேற வேற அளவுகள் இருக்கு. இது இல்லாமலும் நிட்டிங் பண்ணலாம். இன்னும் சீக்கிரமா பின்ன நினைக்கிறவங்க நிட்டிங் லூம் வாங்கிக்கலாம். லூம் இல்லாம 500 ரூபாயும் அதோட சேர்த்து 1,000 முதல் 1,500 ரூபாயும் முதலீடு தேவைப்படும். குழந்தைங்களோட குல்லாவை 30 ரூபாய்க்கு விற்கலாம். சைஸையும் டிசைனையும் பொறுத்தது விலை. 50 சதவிகிதத்துக்கு மேலயே லாபம் பார்க்கலாம்...’’ என்கிற ஜலஜாவிடம் 2 நாள் பயிற்சியில் 5 வகையான உல்லன் கிராஃப்ட்டை கற்றுக் கொள்ள (தேவையான பொருட்களுடன் சேர்த்து) கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் ( 80562 22923).

ஜடை மாலை கொண்டை

சீவி முடிச்சு சிங்காரிச்சு.... சிவந்த நெற்றியிலே பொட்டும் வச்சு...’ என்றெல்லாம் இந்தக் காலத்து மணப்பெண்களைப் பார்த்துப் பாட முடியாது.  பின்னலை மறந்து, தலைவிரி கோலமாகத் திரிகிற அவர்கள், திருமண நாளன்றும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எத்தனை குட்டி கூந்தலையும்  பின்னி, ஜடை வைத்துத் தைத்து அலங்காரம் செய்த அந்த நாட்கள் மறைந்து கொண்டிருக்க முக்கிய காரணம் நேரமின்மை... பொறுமையின்மை...

‘உண்மைதான்... ஆசை இருந்தாலும் இன்னிக்கு ஜடை தைக்கவோ, கொண்டை அலங்காரம் பண்ணவோ யாருக்குமே நேரமும் பொறுமையும்  இருக்கிறதில்லை. பியூட்டி பார்லருக்கு போய் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு வந்துடறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா, ஜடை தைக்கிற கலாசாரமே  நம்மை விட்டு மறைஞ்சாலும் ஆச்சரியமில்லை’’ என்கிறார் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த நளினி.

‘‘முன்னல்லாம் ரிசப்ஷனுக்கு மட்டும்தான் மாடர்ன் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப கல்யாணங்களுக்கே கூட தலைவிரி கோலமா நிற்கற  ஃபேஷன் பரவிட்டு வருது. கல்யாணப் பெண்ணுக்கு, தலை சீவி, ஜடை தச்சு, அதை விதம் விதமா அலங்காரம் பண்ணிப் பார்க்கிற கொடுப்பினை,  இன்றைய அம்மாக்களுக்குக் கிடைக்கிறதே இல்லை. நேரமில்லைனு சொல்ற வங்களுக்காகத்தான் ரெடிமேட் ஜடைகளும், கொண்டைகளும் பண்றேன்.  முன்னல்லாம் அவங்கவங்க ஒரிஜினல் முடியிலயே விதம் விதமா ஜடை தைச்சு அலங்காரம் பண்ணுவாங்க. 

இன்னிக்கு பல பெண்களுக்கு நீளமான முடியும் இருக்கிறதில்லை. அவங்களுக்கு இந்த ரெடிமேட் ஜடையும், கொண்டையும் உதவியா இருக்கும்.  எவ்வளவு சின்ன முடி உள்ளவங்களுக்கும் இந்த ரெடிமேட் ஜடையை இணைச்சிடலாம்’’ என்கிற நளினி, 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஜடை,  கொண்டை மற்றும் மாலைத் தயாரிப்புத் தொழிலைத் தொடங்க உத்தரவாதம் தருகிறார். ‘‘சவுரி முடி, இயற்கை மற்றும் செயற்கை பூக்கள், வளையம்  அல்லது வளையல், ரிப்பன், பீட்ஸ்... இவ்வளவுதான் தேவை. 

சவுரியோட தரம், சீசனைப் பொறுத்து பூக்களோட விலைனு ஒவ்வொருத்தரோட பட்ஜெட்டும் கொஞ்சம் மாறலாம். சிம்பிளான ஒரு ஜடையை 100  ரூபாய்லேருந்து விற்கலாம். ஆண்டாள் கொண்டையை 75 ரூபாய்க்கும், மாலையை 150 ரூபாய்க்கும் விற்க முடியும். கல்யாண சீசன்ல ஆர்டர்  அதிகமாகும். ரொம்ப சுலபமா 50 சதவிகித லாபம் சம்பாதிக்கிற தொழில் இது’’ என்கிற நளினியிடம், 500 ரூபாய் கட்டணத்தில் ஜடை, கொண்டை,  மாலை உள்ளிட்ட 7 வகைகளைக் கற்றுக் கொள்ளலாம். (ரூ 96008 07887)

பட்டு நூல் நகைகள்




திருமணம் என்றாலே பட்டுக்குத்தான் முதலிடம். புடவையும் ஜாக்கெட்டும் மட்டும்தான் பட்டாக இருக்க வேண்டுமா என்ன? அணிகிற நகைகளிலும் அதன் பிரதிபலிப்பு தெரிய வேண்டாமா? பகட்டாகவும் பாந்தமாகவும் காட்டக் கூடிய பட்டுநூல் நகைகள் பற்றிச் சொல்கிற ஷர்மிளா, அவற்றை உருவாக்குவதில் நிபுணி!

‘‘ஐம்பதாயிரம் கலர்ல பட்டுப்புடவை வாங்கி உடுத்தணும்னு ஆசைப்பட்டீங்கன்னாலும், அத்தனை கலர்களுக்கும் மேட்ச்சா நகை வேணும்னா, பட்டுநூல் ஜுவல்லரியில மட்டும்தான் சாத்தியம். பட்டுநூலை வச்சு, வளையல், தோடு, ஜிமிக்கி, ஆரம், பிரேஸ்லெட், நெக்லஸ்னு எது வேணாலும் பண்ணலாம். வேற எந்த கவரிங் நகைகள்லயும் புடவையோட உடல் மற்றும் பார்டர் கலரோட அச்சு அசலா மேட்ச்சாகிற மாதிரி கிடைக்காது. பட்டுநூல் நகைகள்ல ஒரு ஷேடு கூட மாறாம அவ்வளவு மேட்ச்சா நகைகள் பண்ணலாம். 


இதை பண்றதும் சுலபம். செலவும் குறைவு...’’ என்கிற ஷர்மிளா, 200 முதல் 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை துணிந்து தொடங்க நம்பிக்கை தருகிறார். ‘‘பிளாஸ்டிக் வளையல், மீட்டர் செயின், பட்டு நூல், கோல்டன் பீட்ஸ்னு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. 2 வளையல் பண்ண 2 நூல்கண்டு தேவைப்படும். ஒரு மொத்த செட்டும் செய்யறதுக்கு 4 நூல் கண்டு போதும். இப்ப மெலிசான 15 வளையல் கொண்ட செட்டை கல்யாணப் பெண்கள் விரும்பி போட்டுக்கிறாங்க. 

இதுக்கிடையில தங்க வளையல் போடறதுதான் இப்ப ஃபேஷன். வளையல், தோடு, நெக்லஸ்னு ஒரு நாளைக்கு 4 முழு செட் நகைகள் பண்ணிடலாம். அளவையும் டிசைனையும் பொறுத்து 40 ரூபாய்லேருந்து விற்கலாம். சிம்பிளான செட் 400 ரூபாய்க்கும் கிராண்டா கேட்கறவங்களுக்கு 1,000 ரூபாய்க்கும் பண்ணித் தரலாம். 

இதை கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்கு பட்டுப்புடவைக்கு மட்டும்தான் போட்டுக்க முடியும்னு நினைக்க வேண்டாம். வுட்டன் மணியும், கயிறும் வச்ச சிம்பிள் செட், காலேஜ் பொண்ணுங்களுக்கும், காட்டன் சேலை விரும்பிகளுக்கும் பிடிக்கும். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம்’’ என்கிற ஷர்மிளாவிடம், ஒரே நாள் பயிற்சியில் இதைக் கற்றுக் கொள்ளலாம். 8 வகையான வளையல்கள், ஒரு ஆரம், தோடு, பிரேஸ்லெட், ரோப் ஜுவல்லரி அனைத்தையும் தேவை யான பொருட்களுடன் சேர்த்துக் கற்றுக் கொள்ள கட்டணம் 1,500 ரூபாய். ( 86083 30246)

நைஸ்... நல்ல நைட்டி

வசதியான உடையாக மட்டுமின்றி, அவசிய உடையாகவும் மாறிவிட்டது நைட்டி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணிகிற உடையாகவும் மாறிவிட்ட நைட்டியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. சல்வாரோ, சேலையோ வாங்கிவிடலாம் என்கிற அளவுக்கு நைட்டியின் விலை அதிகரித்திருக்கிறது. ‘‘தையல் மெஷின் மிதிக்கத் தெரிஞ்சா போதும். நைட்டி தைக்கக் கத்துக்கலாம். அதையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்’’ என்கிறார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா.

‘‘பி.காம் முடிச்சிட்டு, எம்.பி.ஏ. பண்ணியிருக்கேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். வீட்ல வயசானவங்களைப் பார்த்துக்கறதுக்காக வேலையை விட வேண்டி வந்தது. டெய்லரிங் தெரியும். எனக்கான பிளவுஸ், சுடிதார், நைட்டியெல்லாம் பல வருஷமா நானாதான் தச்சுப் போடறேன். வேலையை விட்டதும், கிடைக்கிற நேரத்துல வேற ஏதாவது உபயோகமா பண்ணணும்னு யோசிச்ச போது, டெய்லரிங் ஐடியா வந்தது. சுடிதார், பிளவுஸ் தைக்க நிறைய ஆட்கள் இருக்காங்க. 

நைட்டி தைக்கத்தான் சரியான ஆட்கள் இல்லை. கடைகள்ல வாங்கற நைட்டி பெரும்பாலும் சரியான அளவுகள்ல கிடைக்கிறதில்லை. காஸ்ட்லியாவும் இருக்கு. ரெண்டு முறை துவைச்சதுமே தையல் விட்டுப் போகுது. இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாதபடி எல்லாருக்கும் பொருந்தற அளவுகள்ல, தையல் விட்டுப் போகாத நைட்டிகள்தான் என்னோட ஸ்பெஷல்’’ என்கிற வித்யா, காலர் வைத்தது, ஓபன் நெக், ஜிப் வைத்தது, எலாஸ்டிக் வைத்தது, கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கானது என 5 மாடல்களில் நைட்டி தைக்கிறார்.Nice ... nice nightgown!

‘‘எக்ஸ் எல், டபுள் எக்ஸ் எல், ட்ரிபுள் எக்ஸ் எல்னு மூணு சைஸ்லயும் தைக்கிறேன். தரமான காட்டன் துணியில மட்டும்தான் தைக்கிறேன். அதனால தண்ணியில நனைச்சதும் சுருங்காது. ஓவர்லாக் பண்ணிக் கொடுக்கறேன். மேல் தையல் போட வேண்டிய அவசியமில்லை. கடையைவிட விலையும் கம்மி...’’ என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை அடுக்குகிற வித்யா, தையல் மெஷினுடன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம் என்கிறார்.

‘‘ஒரு நாளைக்கு 20 முதல் 25 நைட்டி தைக்கலாம். கடை விலையை விட கம்மியா கொடுத்தா, பெரிய லாபம் பார்க்கலாம்...’’ & நம்பிக்கையாகச் சொல்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் நைட்டி தைக்கப் பயிற்சி எடுக்கலாம். ஒரு நைட்டிக்கான மெட்டீரியலுடன் சேர்த்துக் கட்டணம் 750 ரூபாய். (99626 44351)

கடவுள் உடை கச்சித மாலை

அம்மனுக்கு சிவப்புல ஜரிகை வச்ச புடவையும், அன்னப்பூரணிக்கு தங்க நிறத்துல தகதகனு மின்னும் சேலையும், பாபாவுக்கு ஆரஞ்சு கலர் அங்கியும், கிருஷ்ணருக்கு வெண்பட்டுல பஞ்சகச்சமும் எவ்வளவு அழகு தெரியுமா? உங்க வீட்டு பூஜை ரூம் எவ்வளவு சின்னதா வேணா இருக்கட்டும். காஸ்ட்லியான சாமி சிலைகள் இல்லாம இருக்கட்டும். அதனால என்ன? இருக்கிற சாமி உருவங்களுக்கு நீங்க விதம் விதமா தச்சு அணிவிக்கிற உடையும் மாலைகளும் உங்க பூஜை ரூமையே அட்டகாசமாக்கிடும்’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. சாமி உருவங்களுக்கான உடைகள் மற்றும் மாலைகள் தயாரிப்பதில் நிபுணி இவர்!


‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு கணவர், பிள்ளைகள், வீட்டு வேலை, சமையல்னு காலம் போச்சு. பிள்ளைங்க வளர்ந்த பிறகு நிறைய நேரம் கிடைச்சது. என் கடமைகளை எல்லாம் தவறாமப் பண்ணிட்டேன். என் சந்தோஷத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சு சின்னச் சின்ன கைத்தொழில்கள் கத்துக்க ஆரம்பிச்சேன். பெயின்ட்டிங், அலங்காரத்தட்டுனு எல்லாம் செய்வேன். அடிப்படையில எனக்கு கொஞ்சம் பக்தி அதிகம். 

அதனால என் வீட்டு பூஜை ரூம்ல உள்ள சாமி உருவங்களுக்கு அடிக்கடி புதுசு புதுசா டிரெஸ் தச்சு போட்டு அழகு பார்ப்பேன். அதைப் பார்க்கிறவங்க எல்லாம் கேட்பாங்க. நானே தைக்கிறதுனு சொன்னா ஆச்சரியமா பார்ப்பாங்க. கடையில நிறைய விலை கொடுத்து வாங்கறதைச் சொல்லி, என்கிட்ட தச்சுக் கொடுக்க ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. எந்த சாமிக்கு எந்த அளவுல என்ன மாதிரி டிரெஸ் வேணும்னு சொல்லிட்டாங்கன்னா, அதுக்கேத்தபடி தச்சுக் கொடுத்துடுவேன். 

அம்மன் பாவாடை, பஞ்சகச்சம், பாபா அங்கி, குத்துவிளக்கைச் சுத்தி அலங்கரிக்கிற துணி, சாமி சிலை வைக்கிற தாமரைப்பூனு நிறைய செய்வேன். கூடவே பட்டுநூல் மாலையும் சாட்டின் ரிப்பன் மாலையும் பண்ணுவேன்’’ என்கிற திலகவதி வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸை ஆரம்பிக்க தைரியம் தருகிறார்.‘‘துணிக்கடைகள்ல சாமிக்கு தைக்கிறதுக்குன்னு துணிகளைப் பார்த்து வாங்கணும். 1 மீட்டர்ல சின்ன டிரெஸ் 5 தைக்கலாம். தையல் மெஷின் இருந்தா நல்லது. இல்லாதவங்க கையாலயும் தைக்கலாம். ஊசி, நூல்னு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. 30 ரூபாய்லேருந்து கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்...’’ என்கிறவரிடம் 3 விதமான சாமி உடைகளையும் 2 விதமான மாலைகளையும் ஒரே நாள் பயிற்சியில கற்றுக்கொள்ள கட்டணம் 500 ரூபாய். ( 97908 12598)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites