இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 18, 2012

மூங்கில் மற்றும் மூங்கில்தொழில்

மதுரை செல்லூர் பகுதியில் அமைந்த புதிய மேம்பாலத்தை கடந்து செல்பவர்களின் கண்ணில் அன்றாடம் படும் காட்சி ஒன்று. ரோட்டின் இரைச்சலை பொருட்படுத்தாமல் சிலர் மும்முரமாக மூங்கில் கூடைகளையும், பஞ்சாரத்தையும் பின்னிக் கொண்டிருப்பார்கள். சுமார் 3 தலைமுறைகளை கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த மூங்கில் பின்னுதல் வேலை அவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று. இயற்கையில் பச்சை தங்கம் என்று கருதப்படும் மூங்கிலின் விலை தங்கத்தை போல் எகிறுவதும், முன்பு போல் மூங்கிலால் ஆன பொருட்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தாலும் இந்த மூங்கில் தொழில் முடக்கத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.

திருமலைநாயக்கர் காலத்திலிருந்து இந்த குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இந்த தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அரசும், பிறநிறுவனங்களும் முன்வர வேண்டும் என்கிறார்கள் இந்த கைவினை கலைஞர்கள். இந்த தொழிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் பேசினோம்.

" நாங்கள் கம்பளத்து நாயக்கர் இனத்தின் ஒரு பிரிவான மகேந்திர மேதிரா என்ற பிரிவை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சமூக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஊரிலும் ஓடும் நதியின் வடகரையில் தான் குடியிருப்புகளை அமைத்திருப்பது வழக்கம். இது என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அனைவரும் மூங்கில் பின்னுவதை நம்பித்தான் பல தலைமுறைகளாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மூங்கில் பரவலாக விளைவதில்லை. வீடுகட்டுவது, வியாபாரத்திற்கு, விலங்குகளை அடைக்க என்று மூங்கில் தான் ஒரு காலத்தில் பரவலாக அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவியிருக்கிறது. அதனால் செழிப்பாக இருந்த மூங்கில் தொழிலில் எங்களது சமூகத்தினர் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கூட்டுமாறு, கோழி பஞ்சாரம், தக்காளி கூடை, பழக்கூடை, சோறுபாய், முத்துகூடை போன்ற பொருட்களை பின்னி விற்று வருகிறோம். இதில் பெரிய அளவு வருமானம் என்று எதுவும் இல்லை.

ஆனாலும் எங்களது முன்னோர்கள் விட்டு போன இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாத காரணத்தால், இதை விட்டால் எங்களுக்கு வேறு பிழைப்பும் இல்லை. தற்போது எங்களது இனத்தில் இளைய தலைமுறையினர் நசிந்து வரும் இந்த தொழிலில் இறங்க விரும்பாமல் திருப்பூருக்கு போய் சாயப்பட்டறையிலும், கட்டிட வேலைகளையும் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். வயதாகிவிட்ட எங்களை போன்றவர்கள் தான் வேறு எங்கும் சென்று பிழைக்க முடியாமல், இயன்ற வரை எங்களால் ஆன பொருட்களை உற்பத்தி செய்து அன்றாட வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறோம்" என்றவர் மேலும் தொடர்ந்தார்.

" இப்போது எங்களது அன்றாட பிழைப்புக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எங்களின் தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் மூங்கில் கேரளாவின் மூணாறு, புனலூர், பாலக்காடு ஆகிய இடங்களில் தான் அதிகமாக விளைகிறது. அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கு அனுப்பப்படும் மூங்கில்களின் விலையும் அதிகம். வரத்தும் குறைவு. குறிப்பாக மூங்கிலில் சிட்டு மூங்கில், கல் மூங்கில், கோமூங்கில் என்று வித்தியாசம் இருக்கிறது. இதில் சிட்டு மூங்கிலில் அந்த காலத்தில் மன்னர்களும், ஜமீன்களும் கட்டில் செய்து பயன்படுத்தியாக சொல்வார்கள். இந்த மூங்கில் கிடைப்பது அபூர்வம்.

மூங்கில் நீண்ட காலம் உழைப்பதாக இருக்க வேண்டுமென்றால், மூங்கிலை செடியிலிருந்து வளர்பிறை நேரத்தில் வெட்டி எடுக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் தற்போது இதை எல்லாம் கடைபிடிப்பவர்கள் குறைவு. மேலும் இப்போது செயற்கை உரங்களை இட்டு மூங்கிலை வளர்ப்பதால் முன்பு போல் திடமான மூங்கில்களும் கிடைப்பது குறைவு. மூங்கிலை வாங்கி வந்தவுடன் அப்படியே உடைத்து வேலைக்கு பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட ஈரப்பதத்தில் வைத்து உடைத்து, நார்நாராக சரியான அளவில் கிழித்து எடுக்க வேண்டும். மிகவும் நுணுக்கமான வேலை இது.

தற்போது அதிக வெயில் காலம் என்பதால் பலர் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்படும் வெயில் ஸ்கிரீன் செய்ய சொல்லி கேட்கிறார்கள். இந்த ஸ்கிரீனுக்கு சதுர அடிக்கு 22 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்கிறோம். இதில் இருக்கும் கடும் உழைப்புக்கு இந்த விலை குறைவு தான் என்றாலும், சாதாரண மூங்கிலுக்கு இவ்வளவு விலையா என்று கேட்டு பேரம் பேசுகிறார்கள்.

ஜன்னல்களில் வெயிலின் தாக்கத்தை மறைக்க பயன்படுத்தும் மூங்கில் ஸ்கிரீன் 70 ஆண்டுகள் வரை உழைக்க கூடியது. முன்பெல்லாம் பெரிய அரண்மனைகளில் கூட இந்த மூங்கில் திரையை தான் பயன்படுத்துவார்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் தற்போது இதன் பயன்பாடும் குறைந்து போய் விட்டது.

இப்போது வீட்டில் மேஜைகளில் வைக்கப்படும் மலர் கூடைகள், பொக்கே கூடைகள், சிறிய பூத்தட்டுகள், சாமி பூஜை பெட்டிகள், பஞ்சாரம், கூட்டுமாறுகள் தான் பெரும்பாலும் விற்பனையாகிறது. அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதற்காக கோபுரங்கள் கேட்பார்கள்.

தற்போது ஊட்டி மலர்கண்காட்சியில் பழங்களால் ஆன கோபுரம் ஒன்றை செய்து கண்காட்சிக்கு வைத்தார்கள். அதை நாங்கள் தான் செய்து கொடுத்தோம். எங்களில் எம்.ஏ படித்த சிலர் கூட இந்த தொழிலை விட மனமில்லாமல் தற்போதும் மூங்கில் பின்னுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

மரத்தாலும், இரும்பாலும் செய்யும் பல பொருட்களை மூங்கிலாலும் செய்ய முடியும். எங்களிடம் ஒரு பொருள் செய்ய விரும்பி அதன் வடிவத்தை கொடுத்தால் போதும். பின்னிக் கொடுத்து விடுவோம். அரசாங்கமும், தனியார்களும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம் என்று எப்போதும் சொல்லி வருகிறார்கள்.

இதில் எங்களை பயன்படுத்திக் கொண்டால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செயற்கையான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளுக்கு மாற்றாக மூங்கிலால் ஆன பொருட்களை செய்து கொடுப்போம்" என்று இன்றைய சூழலின் அவசியத்தோடு பேசி முடித்தார்.

ரோட்டோரம் நடக்கும் இவர்களது பிழைப்பு கடுமையானதாக இருந்தாலும், தங்களது குலதெய்வமான மல்லம்மாள்(காமாட்சியம்மனை தான் இப்படி சொல்கிறார்கள்) தங்களுக்கு குறைவைக்காது காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பொழுது புலர்ந்தவுடம் மூங்கிலை பின்னத்தொடங்கும் இவர்களின் நம்பிக்கை வீண்போவதில்லை.

உழைப்பின் வியர்வை காயும் முன் இவர்களின் பொருட்களுக்கான விலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் அது வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமே இந்த காலத்தில் உதவும் என்பது தான் உண்மை. அரசு மனது வைத்தால் இவர்களின் பொருட்கள் அமெரிக்காவுக்கு கூட பயணப்படும் என்பது உறுதி.


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites