இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 28, 2012

மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் – அறிவியல்


மூளையானது, நமது உடம்பின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் திகழ்கிறது. சிந்தனைக்கும் செயலிற்கும் அடிப்படையாக அமைவது மூளையேயாகும். அதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு படைத்தவன் அதனை எழிதில் சிதைவுறாவண்ணம் கபாலக் குழியில், மிகப் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்துள்ளான், 
மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், முதுகுத் தண்டு நீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும்; குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகின்றது. 
ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களும், சேதங்கங்களும் பல தீங்குகளை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது உள்ளது.
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. 
மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. 
இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே இதற்கு காரணமாகும். 
தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.மனித மூளையின் எடை சுமார் 1.4 கிலோ. நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை சுமார் 2 கிலோவாகவும்இருப்பதாக கணிக்கப்பெற்றுள்ளன. 
மூளையின் பணிகள்
மூளையின் முக்கியமான பணிகளாக நாம் மூன்றைக் கொள்ளலாம்.
1 செய்திகளை மூளை ஏற்றுக் கொள்கிறது.
2 கட்டளைகளை அனுப்புகிறது.
3 செய்திகளை சேகரித்து, வைத்துக்கொண்டு அறிவுப் பணிகளை தொடர்கிறது. 

மூளையின் பாகங்கள்
மூன்று பாகங்களாக, மூளை பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை முறையே
1 பெரு மூளை
2 சிறு மூளை
3 முகுளம் 

பெரு மூளை
இது மூளையிம் மற்றைய பாகங்ளை விடப்பெரியது. பெரு மூளையானது, கபாலப் பெட்டியின் மேற்புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக்கொண்டு அமைந்துள்ளது.
இதில் நெளிவுகளும், மடிப்புக்களும் இருப்பதனால், இதன் பரப்பளவு அதிகமாக இருக்கிறது.

மிருகங்ளை விட மனித மூளையில் நெளிவும் மடிப்புக்களும் இருப்பதனால்தான், மனிதன் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவனாக விளங்குகின்றான். பெரு மூளையின் பகுதியானது, உட்பகுதியில் வெண்மையாகவும் வெளிப்பகுதியில் சாம்பல் நிறமும் கொண்டதாக தோற்றமளிக்கிறது. 
நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனைத்திற்கும் பெருமூளையே காரணமாக இருந்து உதவுகிறது. முக்கியமான ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
பார்வை நரம்புகள் பெருமூளையின் பின்புறத்திலும், சுவை, வாசனை, ஒலி அறியும் நரம்புகள், இதன் பக்கவாட்டிலும் அமைந்திருக்கின்றன. 
சிறு மூளை
முகுளத்திற்குப் பின்புறமாக, பெருமூளைக்குக் கீழே, கபாலத்தின் அடிப்பாகத்தில், சிறுமூளை அமைந்திருக்கிறது. இது மூன்று பிரிவுகளை உடையது. சிறு மூளையின் மேற்பரப்பில், பல மேடுபள்ளங்கள் இருக்கின்றன. மூளையின் மற்றைய பகுதிகளுடன், நரம்பு இழைகள் மூலம் சிறு மூளை தொடர்பு கொண்டுள்ளது. 

உடல் உறுப்புக்களும், தசைகளும், அசைந்து , இயங்குகிற ஒருங்கிணைப்பு, அவற்றின் தெளிவான பண்பு, எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றிற்கு சிறு மூளை பொறுப்பாகும். தேகம் இயங்குகிற சமநிலையைப் பாதுகாக்கிறது. தசைகளின் விறைப்புத் தன்மையை இது கட்டுப்படுத்துகிறது. மது குடிப்பவர்கள், தடுமாறி தள்ளாடி நடப்பதன் காரணம், அந்த மதுவின் போதைத் தன்மையானது சிறு மூளையை தாக்கிவிடுவதாலேயேயாகும். 
முகுளம்
மூளையின் கீழ்ப் பகுதியிலே அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிகளிலே, சிறியதாகவு இருக்கிறது. இந்த இடத்தில்தான் தண்டுவடமானது (முண்ணாண்) மூளையுடன் இணைகின்றது. இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்திருக்கின்றன. 

முகுளத்தில் சாம்பல், மற்றும் வெள்ளைப் பொருட்கள் உண்டு. வெள்ளைப்பொருளின் உள்ளேயுள்ள சாம்பல்பொருளில், ஏராளமான கருக்கள் (நூக்கியஸ்கள்) திரண்டுள்ளன. 
தண்டுவடத்திலிருந்து மூளைக்குச் செல்கின்ற நரம்புகள், முகுளத்தின் வழியாகச் செல்வதால், அங்கே ஒரு புதிய விளைவு இடம்பெறுகிறது. அதாவது, வலது புற மூளைப் பகுதியானது தேகத்தின் இடப்புற செயல்பாடுகளையும், இடப்புற மூளைப்பகுதியானது, தேகத்தின் வலப்புறச் செயல்பாடுளையும் கட்டுப்படுத்துகின்றது. 
முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு.
* அனிச்சைச் செயல்
* நரம்பு உந்துதல்ளை கடத்துதல் 

சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல்லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே இடம்பெறுகின்ற தன்னிச்சைச் செயல்களாகும். இப்படிப்பட்ட தன்னிச்சையாக இயங்குகிற தானியங்கும் தசைகளுக்கு, முகுளத்திலிருந்துதான் கட்டளைகள் கிடைக்கின்றன. 
முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும்.
முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சு விடலும், இதயத்துடிப்பும் தடைப்பட்டுப்போய், மரணமே நிகழலாம். 

தண்டுவடம்
தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும்பின் நடுவிலுள்ள முள்ளெலும்புக் கால்வாய் வழியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. நன்றாக நெகிழக்கூடிய 33 முள்ளெலும்புகளால் தண்டுவடம் காக்கப்படுகிறது. தண்டுவடமானது, ஒரு நீண்ட உருளையைப் போலிருக்கும். அதன் கடைசிப் பகுதியோ, குதிரை வாலைப் போலிருக்கும். 

31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டுவடத்திலிருந்து கிளம்பி, தேகத்திலுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றன. இந்த நரம்புகள், தண்டுவடத்திலிருந்து வெளிவந்த பிறகு, சிற்சில இடங்களில் ஒன்றோடொன்று பின்னிக் கொள்கின்றன. இந்த பின்னல் நிலையே வலை என்று அழைக்கப்படுகிறது. உ-ம் – கழுத்து வலை, இடுப்பு வலை 
ஒவ்வொரு முதுகுத்தண்டு நரம்பிற்கும், இரண்டுவேர்கள் உள்ளன.
I. செய்கை வேர் - முன்புறம் இருக்கும் இந்த செய்கை வேர்கள் வழியாக, மூளையின் உத்தரவுகள் மற்ற உறுப்புக்களுக்கும் தசைப் பகுதிகளுக்கும் செல்கின்றன. 

II. உணர்ச்சி வேர் - பின்புறம் இருக்கிற உணர்ச்சிவேரின் வழியாக, உடலின் பல உறுப்புக்களில் இருந்தும் செய்திகள், மூளையை நோக்கிச் செல்கின்றன. 
தேகத்தின் இடப்புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் வலது பக்கத்திற்குச் செல்கின்றன. தேகத்தின் வலது புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் இடது பக்கத்தை அடைகின்றன. 
தண்டுவடத்தின் பணிகள் இரண்டு வகைப்படும்.
1. உணர்ச்சி நரம்பின் உந்துதல்களால் ஏற்படும் கிளர்த்தல்ளைக் கடத்துதல்
தேகத்தின் பல பாகங்களிலிருந்தும், மூளைக்குச் செல்கின்ற உணர்ச்சி நரம்புகளும், மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புகளும், தண்டுவடத்தின் வழியாகவே செல்கின்றன. 

செய்திகளை நரம்புகள் மூலம் பெற்றுக்கொண்ட மூளையானது, உத்தரவுகளைப் பிறப்பித்துத் தருகின்றது. இதனைத் தாங்கிச் செல்கின்ற ஒரு குழாயாகவே தண்டுவடம் பணியாற்றுகிறது. 
தண்டுவடம், தன்மையோடு செயல்படுகின்ற போதுதான், தகுந்த செயல்களை, உகந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய முடிகிறது. தண்டுவடம் சிலசமயங்களில், தானாகவே சில கட்டளைகளைக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களுக்கு ஆளாகி விடுகிறது. அதற்கு உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும் தண்டுவடத்துடன் இணைந்திருப்பதும் ஒரு காரணமாகும். 
உதாரணமாக நாம் தெரியாமல் ஒரு சூடான பொருளின் மீது கையை வைத்தவுடன், நம்மை அறியாமலே வெடுக்கென்று கையை எடுத்துக்கொள்கின்றோம். இவ்வாறு கையை எடுத்துக் கொள்ள உத்தரவு தந்தது மூளையா? இல்லை. தண்டுவடம் தான்.
இவ்விதம் மூளையின் உத்தரவின்றி, தானாகவே தண்டுவடம் உத்தரவைத் தந்து, சூழ்நிலையைச் சமாளித்து விடுகிறது. இந்தச் செயல்களை அனிச்சைச் செயல்கள் எனக் கூறுவர். 

அனிச்சைச் செயல்
தண்டுவடத்தில், தசை நடவடிக்கையை எடுக்கின்ற கேந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு தண்டுவடப் பகுதியும், உடலின் ஒவ்வொரு பாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. 

தசைகளில் ஒரு சூடான பொருள் படும்போது, அந்த உணர்ச்சியை, உணர்ச்சி நரம்பு தண்டுவடத்திற்கு எடுத்துச்செல்கிறது. உடனே, அத்துடன் இணைந்திருக்கும் செய்கை நரம்பானது ஒரு தசையைத் தூண்டி, இயங்கும்படி செய்துவிடுகிறது. தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள குறுக்கு இணைப்புக்களினால், மேலும் கீழும் இயங்கி, பல்வேறு தசைப் பகுதிகளையும் தூண்டி விடுகிறது. இதனால், பாதிக்கப்படுகிற உறுப்பு, பாதிப்பிலிருந்து வெளியேறுகிறது. இதையே அனிச்சைச்செயல் என்கிறோம். அனிச்சைச்செயல் முடிந்த பிறகு, என்ன காரியம் நடந்தது என்பதை மட்டும், மூளை தெரிந்து கொள்கிறது. ஆயினும், தண்டுவடத்தின் பணிகள், மூளையினாலே கட்டுப்படுத்தப்படுகின்றன. 
மூளையின்
வெளிப்புற நரம்பு மண்டலம்
தண்டுவடமும், நரம்பு மண்டலத்தின் மத்திய பகுதியில் இருப்பதால், இதை மத்திய நரம்பு மண்டலம் எனலாம்.
12 ஜோடி கபால நரம்புகள் மூளையிலிருந்தும், 31 ஜோடி தண்டுவட நரம்புகள் தண்டுவடத்திலிருந்தும், வெளியே வருகின்றன. இந்த நரம்புகளிலிருந்து பல்வேறு உறுப்புக்களுக்கும் திசுக்களுக்கும், பலவும் கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன. அவற்றின் கிளைகளையும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று நாம் அழைக்கலாம். 

உள்ளுறுப்புக்கள், சுரப்பிகள், மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கு, நரம்பூட்டம் அளிக்கும் பகுதிக்கு, தன்னிச்சை நரம்பு மண்டலம் என்று பெயர். நரம்பு செல்கள், அவற்றின் துணுக்குகள், நரம்பு இழை ஆகியவை தன்னிச்சை நரம்பு மண்டலத்தில் அடங்குகின்றன. தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை கபால நரம்புகள், மற்றும் தண்டுவட நரம்புகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைந்து, தன்னிச்சை நரம்பு முடிச்சு செல்களுக்குள் செல்கின்றன. 
அங்கேயுள்ள நரம்பு முடிச்சு, பின் இழைகளென்று அழைக்கப்படுகின்ற நரம்பு இழைகள், உள்ளுறுப்புகளுக்குச் செல்கின்றன.
இந்த தன்னிச்சை மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன.
1. பரிவு நரம்புகள்
2. துணைப் பரிவு நரம்புகள் 


பரிவு நரம்புகள்
தண்டுவடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டுவடத்திலிருந்து, அதனதன் தண்டுவட நரம்புகளாக வெளிவந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன. 

வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும்புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப்படுகின்றன. 
பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்றும் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்கங்களில் பங்கு பெறுவதாக அமைந்துள்ளன. 
பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப்பகுதியின் உள்ளுறுப்புக்களும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன்தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணீர்ச் சுரப்பிகள், கண்பார்வையை விரிவடைச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன. 
மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் ஆகியவற்றிற்கு கிளைகளை அனுப்புகின்றன. 
துணைப்பிரிவு பரிவு நரம்புகள்
மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப் பிரிவிலும் இவை காணப்படுகின்றன. பரிவு நரம்புகளும், உள்ளுறுப்புக்களில் பலவிதமான ஆதிக்கம் செலுத்திக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலைகளைச் செய்கின்றன. 

உதாரணமாக, பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பாருங்கள். உமிழ்நீர், கண்ணீர் சுரப்பிகளின் சுரப்பு குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங்குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. குடலின் அலைகின்ற அசைவு தாமதமாகின்றது. இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள் தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது. 
ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலையைப் பாருங்கள். கண்பார்வை சுருங்குகிறது. உமிழ்நீர், மற்றும் கண்ணீர் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலாகிறது. இரைப்பைச் சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்குகின்றன. உடலில் உஷ்ண இழப்பு அதிகரிக்கிறது. 
இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள்மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத்தினாலும், எல்லாம் நன்மையாகவே முடிகின்றன. 
அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பெற்று, ஒரே அமைப்பாக மாறி, ஒழுங்காகவும் சிறப்பாகவும் பணியாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது. அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டல சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகின்றன. 
நியூரோன்
நரம்பு மண்டலத்தின், அடிப்படையான ஆதார சக்தியாக விளங்குபவை நியூரோன்களாகும். நியூரோன்கள் என்பது ஒரு நரம்பு செல்லும், அதன் கிளைகளுமாகும்.
நரம்பு செல்கள் எல்லாம் அமைப்பிலும், அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டவைகளாகவே விளங்குகின்றன. 

ஒரு நியூரோன் மூன்று பாகமாகப் பிரிந்திருக்கிறது.
1. நியூக்கிலியஸ்
2. ஆக்ஸன்
3. டென்ட்ரைட்ஸ் 

ஆக்ஸான்கள் நீளமானதாகவும், மெல்லியதாகவும் உள்ள அமைப்பைப் பெற்று, செல்கள் பகுதியிலிருந்து உணர்வுகளைக் கடத்துகின்றன. டென்ரைட்டுகள் பொதுவாகக் குட்டையாகவும், கிளை விட்டும் இருந்தும், செல்களுக்கு உணர்வுகளைக் கடத்துகின்றன. 
நரம்புத் திசு
நரம்பு செல்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து கொண்டு, நரம்புத் திசுக்கள் என்ற அமைப்பை உண்டாக்கி விடுகின்றன. ஒரு நரம்பு செல்லிருந்து மற்றொரு நரம்பு செல்லுக்கு, இந்த உணர்வுகள் கடத்தப்படுகின்றன. இந்த வேகம் மின்சாரம் செல்கின்ற வேகத்தைக் காட்டிலும், வேகம் குறைவாகவே விளங்குகிறது. 

நரம்புத்திசு வழியாகக் கிளர்த்தல் கடத்தப்படுவதுடன், அதன் வேகம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். மனிதனில் இந்தக் கிளர்த்தல், நொடிக்கு 90 மீட்டர் வேகம் எனக் கூறுவர். 

நரம்புத் திசுவின் செயல் தன்மையை, கடத்தும் தன்மை என்றும் கூறுவர். உணர்ச்சிகளைக் கடத்துகின்ற ஆற்றல் நிறைவாக இருக்க வேண்டுமென்றால், முழுமையாக செயல்பட வேண்டும். இதன் முழுமை சேதாரமடைந்தால், பாதிக்கப்பட்ட நரம்பு, சரியாகப் பணிபுரிய முடியாது. 
இயக்க நரம்புகள் சேதமடைந்து போனால், இந்த நரம்புகள் இணையப் பெற்றிருக்கும் தசைகளின் பகுதிகள், சக்தியற்றதாகி 


விடுகின்றன. உணர்வு நரம்புகள் சேதமடைந்து போனால் தோல் பாதிக்கப்படுகிறது. தோலின் தொடு உணர்வும் பாதிக்கப்பட்டு, சுரணையற்றுப் போகிறது.  

குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது. 


உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும். 

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.
நன்றி: பனிப்புலம்.காம்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites